Advertisement

படுக்கையறையிலிருந்து ஆடையை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பும் ருஹானாவை வழிமறித்த ஆர்யன் “எனக்கு தெரியும், நீ என்மேல கோபமா இருக்கே! நான் உன்னை புண்படுத்திட்டேன். ஆனா நாம பேசணும்!” என்றான் உறுதியாக.

“சரி, பேசலாம்!” என அவள் அனுமதி கொடுக்க, மிகுந்த தயக்கத்துடன் ஆர்யன் “நான்….” என தொடங்க, கோபத்துடன் ருஹானா இடைமறித்தாள்.

“இல்ல, இந்த முறை நீங்க இல்ல! நான் பேசப்போறேன்! இப்போ என்கிட்டே பேச வந்தீங்கல? எப்போ பேசுறதுன்னு நீங்க தான் எப்பவும் முடிவு செய்றீங்க! நான் உங்க கிட்டே பேச எத்தனையோ நாள் காத்திருந்தேன். உங்க கார் பின்னாடியே ஓடிவந்தேன். ஆனா நீங்க காது கொடுத்து கேட்கல. நான் விளக்கம் கொடுக்கறதை பத்தி நீங்க லட்சியமும் செய்யல. ஏன்னா நீங்க ஏற்கனவே என்னை குற்றவாளியா முடிவு செய்திட்டீங்க!”

“ஏன் எனக்கு இந்த தண்டனைன்னு தெரியாமலயே நான் இத்தனை நாட்களா தண்டிக்கப் பட்டேன். இப்போ நீங்க விளக்கம் சொல்லப் போறீங்களா? என்ன விளக்கப் போறீங்க? நான் அந்த ஃபைலை நம்பினேன், இவானை உன்கிட்டே இருந்து பிரிச்சேன், உன்னை  அவமானப்படுத்தினேன்,  உன்னை அறையில அடைச்சி வச்சேன்… இதுக்கு எல்லாம் காரணம் சொல்லப் போறீங்களா?”

“இதெல்லாம் எனக்கு ஏத்த தண்டனை தானா? என் சுயமரியாதையை நசுக்கறதும் அந்த ஃபைலை நம்பறதும் உங்களுக்கு அத்தனை எளிதா இருந்ததுல? எல்லாம் எனக்கு தெரிஞ்சி போச்சி! இனி பேசுறதுக்கு ஒன்னும் இல்ல.”

அவளின் ஒவ்வொரு வார்த்தையும் அவனின் கன்னத்தில் அறைந்தது.

“ஆரம்பத்துலயே என்ன காரணம்ன்னு எனக்கு சொல்லிட்டு நீங்க தண்டனை கொடுத்திருந்திருக்கலாம். ஆனா இப்போ எல்லாம் கடந்திடுச்சி. இப்போ நீங்க எது சொன்னாலும் முன்ன நீங்க பேசாம  இருந்தது தான் எனக்கு ஞாபகம் வரும். பேசறதுக்கான சரியான நேரத்தை தேர்ந்தெடுக்க உங்களுக்கு தெரியல. விலகறதுக்கான சரியான நேரத்தையாவது தேர்ந்தெடுங்க!”

அவனைப் போல கத்தவில்லை, கூச்சலிடவில்லை. சுவரில் சாய்த்து தள்ளிவிடவில்லை. மென்மையாக அவன் நெஞ்சில் கத்தியை இறக்கிவிட்டாள்.

———–

“சல்மா! நான் நிறைய வக்கீல்களை பார்த்துட்டு வந்திருக்கேன். அவங்க சொல்றாங்க, கொலை முயற்சியை போலீஸால நிருபிக்க முடியாது, மோசடி குற்றத்தையும் எதையாவது காரணம் காட்டி ஒன்னும் இல்லாம செய்திடலாம்னு. அதனால நான் சீக்கிரமே உன்னை வெளிய எடுத்துடுவேன். கவலைப்படாதே!”

கம்பிகளுக்கு அந்தப்புறம் சல்மா மௌனமாக நிற்க, கரீமா “ஏன் அப்படி பார்க்கறே, சல்மா?” எனக் கேட்டாள்.

“ஏன்னா நான் யோசிக்கிறேன்! இங்க சும்மா தானே இருக்கேன்! அதனால யோசிக்க நிறைய நேரம் கிடைக்குது. அப்படி யோசிக்கும்போது என்ன புரிஞ்சிக்கிட்டேன் தெரியுமா? நீ எப்பவும் பிளான் பி ன்னு ஒன்னு வச்சிருக்கே! நான் உண்மையில உன் தங்கை இல்ல! உன்னோட பிளான் பி! என்னை தூண்டில் புழுவா தான் ஆரம்பத்துல இருந்தே நீ பயன்படுத்தி இருக்கே! உன்னோட பங்கு வெளிய தெரியக்கூடாதுன்னு நீ உன்னிப்பா வேலை செய்திருக்கே! அதனால இது எல்லாமே நான் செய்த குற்றமா மாறிடுச்சி.”

“சல்மா! என்ன சொல்றே? நான் உன்னோட அக்கா!”

“நான் உன்னை பார்த்துட்டே தானே இருக்கேன், மத்தவங்களை எப்படி ஏமாத்துவேன்னு? பாசமான அக்காவா நடிச்சி என்னையும் ஏமாத்தி இருக்கே! ஆனா இப்போ தான் அது எனக்கு புரியுது. என்னோட நலன் உனக்கு எப்பவுமே முக்கியம் இல்ல. ஆர்யன் மேல் நான் வச்சிருக்கற காதலை பத்தி உனக்கு அக்கறை இல்ல. உன்னோட சுயலாபத்துக்காக என்னை நீ ஆர்யனை மயக்க சொன்னே! உன்னோட சொத்துக்காக.. உன் பேராசைக்காக… உன் அதிகாரத்துக்காக…”

ஆவேசமாக கம்பி கதவை அடித்த சல்மா “இப்போ இங்க இருந்து போய்டு! போய் ருஹானாவையும் ஆர்யனையும் ஏமாத்து! உன்னோட பொய்கள் எனக்கு சலிச்சிடுச்சி. வெளியே போ!” என்று கத்தினாள்.

“சல்மா கண்ணே!”

“என்னை அப்படி கூப்பிடாதே! வெளியே போ!”

கரீமா வெளியே சென்றவுடன் “ஆனா இதுக்கு நீ அனுபவிப்பே! இதோட இது முடியாது! சீக்கிரமே உனக்கான நாள் வரும், என் அன்பு அக்கா!” என்று சல்மா வெறுப்புடன் கூறினாள்.

———-

ருஹானாவின் பேச்சுகளை நினைத்தபடி தோட்டத்தில் வேகநடை நடந்து கொண்டிருந்த ஆர்யன் அங்கே இருந்த பூத்தொட்டியை தூக்கி தரையில் போட்டான். ஜாஃபர் வந்து அதை எடுத்து வைக்க, அவனிடம் பொருமினான்.

“இதான் நான்! எனக்கு அழிக்கவும் உடைக்கவும் தான் தெரியும். எங்க போனாலும் என்னோட இடிபாடுகளை தான் விட்டுட்டு வருவேன். அவ சொன்ன எல்லாமே சரி தான்! அவளை நான் பேசவே விடல. என்னோட கோபத்தை அவ மேல கொட்டினேன். இப்போ அவ கேட்க மாட்றா, ஜாஃபர்! நான் சொல்றதை எப்பவும் கேட்க மாட்டா!”

“ஏன்னா அவங்க புண்பட்டு இருக்காங்க, ஆர்யன் சார்! உடைந்த துண்டு எடுக்கப் போறவங்களையும் காயப்படுத்தும். சமாதானம் செய்ய யார் போனாலும் அவங்க காயப்படுத்துவாங்க. ஆனா வேற வழி இல்ல, ரிஸ்க் எடுத்து தான் ஆகணும். உடைந்த துண்டுகளை எடுத்து ஒட்டி சரிசெய்ய வேணாமா? அப்படியே விட்டுட முடியுமா?”

———

கதவை பூட்டி தாழிட்ட ஆர்யன் “நீ எங்கயும் போக முடியாது. நான் சொல்றதை கொஞ்சம் கேள்! நீ சொன்னது சரிதான். நீ பேச வரும்போது நான் கேட்கல. ஆமா, உன்னை துன்புறுத்திட்டேன். நான் அந்த ஃபைலை நம்பியிருக்க கூடாது. ஆனா நீயும் அதை பார்த்தே தானே? நீ அதை நம்பாம இருந்திருப்பியா? ஒரு நிமிடமாவது உனக்கு சந்தேகம் வந்திருக்கும் தானே?” என்றபோது ருஹானா பதில் சொல்லவில்லை.

“நான் அந்த போட்டோக்களை, கடிதங்களை பார்த்தபோது எனக்கு காலடியில உலகம் நழுவிடுச்சி!”

“நீ ஒருதடவை சொன்னே, உங்களை தெரியும், இப்போ உங்களை எனக்கு புரியும்ன்னு! ஞாபகம் இருக்கா? என்னை உனக்கு தெரியும்னா என்னோட நிலைமை உனக்கு கொஞ்சமாவது புரியும் தானே?”

“எல்லாரையும் போல நான் கிடையாது. பெரிய சேதாரம் தாண்டி வந்தவன் நான்! நீயும் அதை பார்த்திருக்கே, நான் வளர்ந்த வீட்டை! எப்படி போராடி இந்த இடத்துக்கு நான் வந்திருக்கேன்னு உனக்கு தெரியும்!”

“அந்த வீட்டை விட்டு வரும்போது என்னோட குழந்தைத்தனத்தை அங்க புதைச்சிட்டுத்தான் வந்தேன். யாரையும் நம்பக்கூடாதுன்னு சத்தியம் செய்துட்டுத்தான் வந்தேன். ஏன்னா நான் உயிர் வாழணும். என் அண்ணன்களை காப்பாத்தணும். சந்தேகம், வெறுப்பு, கோபம் இதை தான் என்னை சுத்தி நான் போட்டுக்கிட்டேன்.”

“நான் உன்னை போல இல்ல! வெளிச்சத்தை நான் பார்த்தது இல்ல! இருட்டுல தான் வாழ்ந்தேன். அந்த ஃபைல்ல நான் பார்த்தது என்னை இன்னும் இருட்டுல தள்ளிடுச்சி.”

ருஹானா கண்ணீரோடு வெறுப்பாக சிரித்தாள்.

“ஆனா நான் வெளிய வர முயற்சி செய்தேன். உனக்காக செய்தேன்! வேற யாருக்காக செய்ததை விடவும் உனக்காக செய்தேன். ஆனா அது அந்தகார இருட்டா இருந்தது. என்னோட இளமைப்பருவத்துல இருந்து தொடர்ந்து வந்த அடர்ந்த இருட்டு. என்னால முடியல!”

“என்னை புரிஞ்சிக்கோ. நீயும் நானும் ஒரே மாதிரி செயலாற்ற முடியாது. ஏன்னா நான் கேடுகெட்ட ஆர்யன் அர்ஸ்லான்!”

கையில் இருந்த இரவு உடையை கீழே தூக்கி போட்ட ருஹானா கோபமாக இரைந்தாள். “போதும்! இன்னும் நீங்க சரின்னு தான் சொல்லப் போறீங்களா? இது உங்களை பத்தி தான்னு நினைச்சிட்டு இருக்கீங்களா? இது உண்மையான்னு என்கிட்டே ஒரு வார்த்தை உங்களால கேட்டுருக்க முடியாதா? அந்த கேள்வி கேட்க எனக்கு தகுதி இல்லயா?”

“என்ன கேட்டீங்க நான் நம்பியிருப்பேனான்னு தானே? நான் நம்பியிருக்க மாட்டேன்! உங்களை பத்தி யார் எத்தனை அவதூறு சொன்னாலும் நான் நிச்சயமா நம்பியிருக்க மாட்டேன்! மோசமான உங்க பக்கத்தை பத்தி தெரிஞ்சிருந்தாலும் கண்டிப்பா நான் நம்பியிருக்க மாட்டேன்! ஏன்னா நான் உங்க மேல அசைக்கமுடியாத நம்பிக்கை வச்சிருந்தேன்!”

ஆர்யனின் கண்களில் நீர் துளிர்த்தது.

“ஆனா நீங்க என்கிட்டே எந்த விளக்கமும் கேட்கல, தப்பு செய்திட்டோம்னு தெரிஞ்ச பின்னாடி மன்னிப்பும் கேட்கல! ஏன்? ஏன்னா உங்களால மன்னிப்பு கேட்க முடியாது!”

வேகமாக சென்று இதய தலையணையை எடுத்தவள் அதை கோபாவேசமாக பிய்த்தாள். உள்ளே இருந்த பஞ்சு வெளியே சிதறியது. “இப்படித்தானே என் மனசை உடைச்சீங்க? பாருங்க, என்னோட இதயம் ஆயிரம் துண்டுகளா நொறுங்கிப் போச்சி.”

கதறி அழும் அவளின் அருகே செல்லமுடியாமல் ஆர்யன் பரிதவித்தான். அவளே அவன் அருகே வந்தாள். “யாராலும் உடைந்ததை ஒட்டவைக்க முடியாது! கிரேட் ஆர்யன் அர்ஸ்லானாலும் முடியாது!”

கதவை திறந்து வெளியே செல்லும் அவளை தடுத்து நிறுத்தாமல் ஆர்யன் இடது முழங்கையை பிடித்துக்கொண்டு கண்மூடி நின்றான். கண்ணில் நீர்வடிய சிதறிக்கிடந்த பஞ்சுகளை திரட்டி சிகப்பு துணிக்குள் பொதிந்து வைத்தான்.

“உன் அப்பாவைப் போல இருக்காதே!” என்று அவனை உதறிவிட்டுப்போன தாயின் குரல் ஒலித்தது.

———-

“சித்தி! நீங்க ஏன் சித்தப்பா அறையில தூங்காம இங்க இருக்கீங்க?”

“உன் சித்தப்பாவோட சின்ன சண்டை, கண்ணே!”

“சித்தப்பா உங்களை திட்டிட்டாரா? நீங்க வருத்தப்படாதீங்க! அவர் உங்களை ரொம்ப நேசிக்கிறார்!”

“நீ கவலைப்படாதே அன்பே! பெரியவங்களுக்குள்ள இதெல்லாம் சகஜம் தான்.”

“ஆனா நீங்க சீக்கிரம் பழம் விட்டுக்கணும். சரியா சித்தி!”

“சரி தான் தேனே! வா, உன்னை நான் தூங்க வைக்கறேன்.”

“இல்ல சித்தி! இப்போ நானே  தூங்கிப்பேன்.”

———

அலமாரியில் ருஹானாவின் உடைகளை ஒவ்வொன்றாக தடவி பார்த்த ஆர்யன் அவள் அந்தந்த உடைகளை போட்டிருந்தபோது நடந்த இனிய சம்பவங்களை நினைத்துப் பார்த்தான்.

ருஹானா பனிபடர்ந்த ஜன்னலில் முடிவீலி சின்னத்தை வரைந்து அழித்துக் கொண்டிருந்தாள்.

கட்டிலில் வந்து அமர்ந்த ஆர்யன் ‘தூரம் அதிகமானால்’ புத்தகத்தை திறந்து படிக்கலானான்.

‘ஓய்வெடுக்காமல் நாடு நாடாக சுற்றினாலும் சின்னப்பெண்ணிற்கு அவளின் இதயத்தின் நடுப்பகுதி கிடைக்கவேயில்லை. அவள் சக்தியிழந்து மண்ணில் விழுகின்ற நேரம், அவள் இதயத்தை உடைத்தவன் அவளின் இதயப்பகுதியை எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தான். அப்பெண்ணால் அதை நம்பவே முடியவில்லை. அவனுக்கு எங்கிருந்து அது கிடைத்தது என ஆச்சரியமாகக் கேட்டாள்.

குற்ற உணர்வுடன் இளைஞன் சோகமாக தலைகுனிந்து கொண்டான். அவன் யுவதியின் இதயத்தை அடித்தப்போது அதன் மையப்பகுதி அவன் இதயத்தில் பாய்ந்துவிட்டது. அதனால் அவன் இதயமும் காயப்பட்டது. இப்போது அவன் அவளின் மன்னிப்பை இறைய்ந்து அவளிடம் சேர்ப்பித்தான். அவன் மனப்பூர்வமாக வேண்டிய மன்னிப்பு அவளின் இதயத்தை சரியாக பொருத்திவிட்டது.’

புத்தகத்தை மூடிவைத்த ஆர்யன் “என்னை மன்னித்துவிடு…. என்னை மன்னித்துக்கொள்…. நான் உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்…. தயவுசெய்து என்னை மன்னி…. மன்னிப்பாயா?” என பலவிதமாக சொல்லிப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

———-

Advertisement