Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                               அத்தியாயம் – 132

ருஹானாவிற்கு பிடித்ததை செய்து அவளது துயரத்தை மறக்கடிக்கமுடியும் என தப்புக்கணக்கு போட்டு ஆர்யன் செயல்பட, விதி வேறுவிதமாக விளையாடியது.

ருஹானா உள்ளே வரவும் புன்னகையோடு அவளை பார்த்த ஆர்யன், மாலையில் பார்த்த அவளின் முகமலர்ச்சி இப்போது அடியோடு காணாததை கண்டு திகைத்தான். தளர்ந்த நடையுடன் அவள் நெருங்க, அவளின் கண்ணீர் கோடுகள் அவனுக்கு தெளிவாக தெரிய, உள்ளம் பதைத்தான்.

கட்டிலை நெருங்கிய ருஹானா தேனிலவில் செய்தது போல இருந்த அதன் அலங்காரத்தை பார்த்து விரக்தியாக சிரித்தாள். “நீங்க என்ன செய்தாலும் அன்னைக்கு செய்ததுபோல எதுவும் மணம் வீசாது. நீங்க என்ன செய்தாலும் இழந்த காலத்தை திரும்ப பெற இயலாது” என அவள் கண்கலங்கி பேச, ஆர்யனும் கலங்கி நின்றான்.

“உங்களுக்கு நினைவு இருக்கா? என் அப்பாவைப் போல தான் உங்களை நம்புறேன்னு அன்னைக்கு நான் சொன்னேனே!” ஆர்யன் அவளின் சொல்லின் வீச்சு தாங்காமல் தரையை பார்த்தான்.

“முகத்தை திருப்பாதீங்க! நான் சொல்ல நினைக்கறதை சுவரை பார்த்து என்னால பேச முடியாது” என்று அவள் காட்டமாக சொல்ல, மெல்ல அவள் முகத்தில் பார்வையை பதித்தான். “இந்த உலகத்துல உங்ககூட இருக்கும்போது பாதுகாப்பா உணர்றேன்னு சொன்னேன் தானே? ஆனா நீங்க…”

கையிலிருந்த கிழிந்த புகைப்படங்களையும், காகிதங்களையும் அவள் காட்ட, அவனின் இதயம் அதிர்ந்தது. “மாதக்கணக்கா நான் நரகத்துல கஷ்டப்பட்டதுக்கு காரணம் இதானா? இதான் எல்லாத்துக்கும் காரணமா? இதனாலயா என்னை நீங்க துன்பப்படுத்தினீங்க? இந்த போலி போட்டோஸ், உருவாக்கப்பட்ட கடிதங்கள், போலி ரசீதுகள்… இதானா?”

“நான் உங்களை நம்பினேனே! நீங்க சாக சொன்னா காரணம் கேட்காம உங்களோட இறக்கவும் தயாரா இருந்தேனே! என்னோட வாழ்க்கையை உங்களோட வாழ்க்கையா நினைச்சேனே! ஆனா நீங்க…” என்று கேட்க, அவன் மீதான அவளின் நம்பிக்கையை எதிர்கொள்ளமுடியாமல் ஆர்யனின் முகம் தன்னால் திரும்பியது.

“கண்ணை திருப்பாதீங்க! என்னோட உண்மை முகம் தெரியணும்னு இத்தனை நாளா என்னை பார்த்திட்டே இருந்தீங்களே, இப்பவும் பாருங்க! இதுல வெட்கப்பட என்ன இருக்கு? நீங்க என்ன செய்றீங்கன்னு தெரிஞ்சி தானே செய்தீங்க?”

வலுக்கட்டாயமாக தலையை திருப்பி கண்ணீர் வடியும் அவளின் முகத்தை பார்த்த ஆர்யனின் நெஞ்சில் இரத்தம் வடிந்தது.

“நம்பிக்கைன்னா என்னன்னு என்னை கேட்டுருந்தா, நான் வினாடி கூட யோசிக்காம உங்க பேரை சொல்லி இருப்பேன். என் முதுகுல குத்துப்பட்டு  நான் திரும்பும்போது கைல கத்தியோட உங்களை பார்த்தாலும் குத்தினது நீங்க தான்னு நான் சந்தேகப்பட்டிருக்க மாட்டேன். நீங்க அதை செய்திருக்க மாட்டீங்கன்ற நினைப்போடவே செத்துப் போயிருப்பேன். ஆனா நீங்க….?”

கோபத்தில், மிகுந்த வருத்தத்தில் அவன் மேல் வைத்த காதலை தன்னையறியாமல் வெளிப்படுத்துகிறாள்.

“நமக்குள்ள எவ்வளவோ நடந்தபின்னும் நான் இந்த கீழ்த்தரமான வேலையை செய்திருப்பேன்னு எப்படி நீங்க நினைச்சீங்க? என்னை துண்டு துண்டா உடைச்சி போட்டுட்டீங்க! ஏன்? ஏன்னா நீங்க என்னை எப்பவுமே நம்பல, இந்த காகிதங்களை நம்பின அளவுக்குக்கூட..! இதை நம்பிட்டீங்க, இந்த அசிங்கமான பொய்யை!”  என எல்லாவற்றையும் அவன் முன்னால் போட்டாள்.

தன்னை எந்த அவளுக்கு அவள் மனதில் வைத்திருந்தாள் என்பதை தெரிந்து கொண்ட ஆர்யனுக்கு தான் செய்தது வெகுகீழான ஈன செயல் என சம்மட்டியால் அடித்தது போல புரிய, அவன் இதயம் கதறி அழுதது.

“நமக்குள்ள எல்லாம் முடிந்தது! நான் ஓய்ந்து போயிட்டேன்!” என்று அவள் சொல்ல, அவனுக்கு தூக்கிவாரிப்போட்டது. உடலை விட்டு அவனின் உயிர் விலகியது போல துடித்தான்.

இளகிய மனம் கொண்டவளின்

இதயம் முழுதாய் உடைந்திட

இளையவளின் உண்மை நேசத்தின் 

நம்பிக்கை பொய்க்கையில்

எளிதாய் கடந்திட முடியாது

நேர்மை கோபம் தலைதூக்க 

தன்னியல்பாக பிரிவை முடிவு 

செய்கிறது நொறுங்கிய நெஞ்சம்!

ருஹானா வெளியே செல்ல, ஆர்யன் அவள் பின்னாலேயே ஓடினான். “இரு! நான் சொல்றதை கேளு! நான் உனக்கு விளக்கி சொல்றேன்!” என்று அவள் கையை அவன் பற்ற, “இல்ல, என்னை விடுங்க!” என்று அவன் கையை வேகமாக உதறியவள் அவளது பழைய அறையில் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.

அவள் பின்னால் ஓடிவந்த ஆர்யன் கதவைத் தட்டினான். “என் பேச்சை கேளு! கதவை திற! நாம பேசுவோம்! எனக்கு தெரியும், நீ கோபமா இருக்கே! அது நியாயம் தான்! கதவை திறந்து நான் பேசுறதை கேளு! ஒரு நிமிஷம் கேளு!”

“போங்க இங்கிருந்து! கெஞ்சி கேட்கறேன்! போங்க!” என அவள் அழுகையுடன் கத்தினாள். கதவில் சாய்ந்து தரையில் அமர்ந்தவள் இவானின் டாலரை பிடித்துக்கொண்டு தேம்பி சத்தம் போட்டு அழுதாள்.

அதற்குமேல் கதவை தட்டாமல் அறைக்கு திரும்பிய ஆர்யன் காயம் படாத இடதுகை முஷ்டி கொண்டு சுவரில் மோதினான். “என்னால அழுறா! என்னால! என்னால! என்னால தான்! நான் தான் காரணம்! அழறா!”

கிடைத்தற்கரிய பொக்கிஷம் தன்னை விரும்பியே தன் வசம் இருந்தும், அதன் அருமை தெரியாமல் தனது மூர்க்கத்தனமான பொறாமையால், அதை ஆழ்கடலின் அடியில் தூக்கி எறிந்த தனது மடத்தனத்திற்கு என்ன தண்டனை தருவது என அவனுக்கு புரியவில்லை.

———–

இரவெல்லாம் அழுதுகொண்டே ருஹானா படுத்திருக்க, ஆர்யன் இரத்தம் சொட்டும் கையை தலையில் வைத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தான்.

எழுந்ததிலிருந்து சித்தியைக் காணாது தேடிய இவான் கரீமாவிடம் வந்து விசாரிக்க, அவள் அவனை சாப்பிட கீழே அனுப்பிவிட்டு ருஹானாவின் பழைய அறைக்கதவை தட்டினாள். அவள் குரல் கேட்டு வெளியே வந்த ருஹானா “ஏன் என்கிட்டே நீங்க சல்மா செய்தது பற்றி சொல்லல?” எனக் கேட்டாள்.

“நான் சொல்லத்தான் வந்தேன், ஆனா ஆர்யன் தடுத்துட்டான். சல்மா இப்படி செய்வான்னு நான் நினைக்கல. அவளை கவனிக்காம நான் தவற விட்டுட்டேன். என்னை மன்னிச்சிடு, ருஹானா டியர்! ஆர்யனை மன்னிக்க முயற்சி செய்! அவன் எப்பவும் இப்படிதானே? இவான் உனக்காக காத்திருக்கான். அவனுக்காக கீழே வா!” என்று கரீமா அவளை சமாதானப்படுத்தி உணவு மேசைக்கு அழைத்து வந்தாள்.

அவள் ஆட்டின் தோல் போர்த்திய ஓநாய் என்று ருஹானாவிற்கும் தெரியவில்லை. எல்லாம் அறிந்த ஆர்யனுக்கும் புரியவில்லை.

ஆர்யன் ருஹானாவின் இடத்தில் நின்றபடி அவள் தட்டில் உணவு எடுத்து வைத்துக்கொண்டிருக்க, ருஹானாவை பார்த்ததும் அவளுக்கு நாற்காலியை நகர்த்தினான். அவள் அவனை ஏறெடுத்தும் பாராமல் இவான், அம்ஜத்தை தாண்டி வந்து வேறு இடத்தில் அமர்ந்தாள்.

ஆர்யன் முகம் சுருங்க தன் இடத்தில் வந்து அமர, அம்ஜத் இருவரையும் யோசனையாக பார்த்தான்.

இவான் “சித்தி! நான் உங்களை தேடினேன்!” என்று சொன்னவன் அவள் கலங்கிய முகத்தை பார்த்து “நீங்க அழுதீங்களா?” எனக் கேட்டான்.

“இல்ல, அன்பே! எனக்கு சளி பிடிச்சிருக்கு.”

“பெரியப்பா! சித்தப்பா எனக்கு என்ன வாங்கி தந்தார்ன்னு பாருங்க” என்று தனது விளையாட்டு பொருளை அம்ஜத்திற்கு காட்டிய இவான் “சித்திக்கு கூட சித்தப்பா ஒரு இதயம் வாங்கி தந்தார். நஸ்ரியா அக்கா சொன்னாங்க, சிவப்பு இதயம் காதலை சொல்லும்னு. சித்தி! அதை பெரியப்பாட்ட காட்டுங்க” என்றான்.

“அதை நான் தொலைத்திட்டேன், கண்ணே! அதோட பொம்மை வச்சி விளையாடுற வயசு எல்லாம் எனக்கு கடந்து போச்சி” என்றாள் வெறுப்புடன்.

ருஹானாவையும் ஆர்யனையும் பார்த்திருந்த அம்ஜத்தை மருந்து சாப்பிட என்று கரீமா அழைத்து செல்ல, இவான் குக்கீஸ் எடுக்க சமையலறைக்கு ஓடிவிட்டான்.

ருஹானா ஆர்யனுடனான தனிமையில் முள்மேல் அமர்ந்திருப்பது போல சாப்பிடாமல் இருக்க, ஆர்யன் “நாம இப்போ பேசலாமா?” என்று கேட்கவும், பட்டென எழுந்து சமையலறைக்கு சென்றுவிட்டாள். ஆர்யன் செய்வதறியாது தவித்தான்.

இவான் ஆரஞ்சு பழசாறு கேட்க அதை ஊற்றி கொடுக்கும்போது ருஹானா சட்டையில் கொட்டிவிட்டாள். ஒரு துணி கொண்டு அதை அவள் துடைத்துக்கொண்டே “என்ன செய்தாலும் இது போக மாட்டேங்குதே!” என்று ஆவேசமாக மாற, அங்கே வந்த ஜாஃபர் கண்ணை காட்டவும் சாரா இவானை வெளியே அழைத்து சென்றார்.

“இத்தனை நாளா நெற்றியில கறையோட நான் அலைஞ்சிட்டு இருந்திருக்கேன். அதை எல்லாரும் பார்த்திருக்காங்க. எனக்கு மட்டும் தெரியல. உங்களுக்கும் தெரியும் தானே ஜாஃபர் அண்ணா? நீங்களும் அதை நம்புனிங்களா?”

“இல்ல, ஆனா ஆதாரங்கள் தெளிவா இருந்தது. ஆர்யன் சார்….”

“அவர் நம்பிட்டார். யாரைனாலும் மன்னிச்சிடுவேன், ஆனா அவரை மட்டும் இல்ல”

———-

Advertisement