Advertisement

“ருஹானா! உன்னோட புத்தகம் எத்தனை தேடியும் கிடைக்கவே இல்ல.”

“அடடா! அதோட பதிப்பும் நிறுத்திட்டாங்களே தன்வீர்! புது புத்தகமும் வெளிவராதே!”

“சித்தி! அது கதை புத்தகமா?”

“ஆமா அன்பே! அதிலிருந்து உனக்கு கதை படிச்சி சொல்லணும்னு நான் ஆசைப்பட்டேன்.”

“அது என்ன கதை சித்தி?”

“ஒரு சின்னப்பொண்ணு தன்னோட உடைந்த இதயத்தின் பாகங்களை தேடி உலகம் பூரா சுத்தி வருவா, கண்ணே!”

“எல்லா பாகங்களும் அவளுக்கு கிடைச்சிடுமா, சித்தி?”

“இல்ல செல்லம், அவ இதயத்தின் நடுப்பாகம் மட்டும் கிடைக்காது.”

“ஏன் சித்தி? அதை யாராவது எடுத்து வச்சிக்கிட்டாங்களா? அதை அப்புறமா அவளுக்கு கொடுத்துடுவாங்க தானே?”

“தெரியல மானே! கிடைத்தாலும் கிடைக்கலாம்.”

“அந்த புத்தகத்தின் பேர் என்ன சித்தி?”

“தூரம் அதிகமாகும்போது!” என்று ருஹானா தன்வீர் இருவரும் சேர்ந்து சொல்ல, புன்னகைத்த தன்வீர் “நானும் அது படிச்சி இருக்கேன். நல்லா இருக்கும். ஆனா சோகமான கதை. ஆனா அது ருஹானாவுக்கு ரொம்ப பிடிச்ச புக். நிறைய முறை படிச்சிருக்கா. எப்போ அதை படிச்சாலும் கண்ணீர் விட்டு அழுவா. அம்மா தான் அவளை சமாதானப்படுத்தி சிரிக்க வைப்பாங்க. கதைல வர்றவங்க கஷ்டப்பட்டாக்கூட அவளுக்கு தாங்காது. உன் சித்திக்கு கருணை மனது” என்றான்.

“ஆமா, அவ வளர்ந்தாலும் அவ மனசு இப்பவும் அப்படியே தான் இருக்கு” என்று ஆர்யன் சொல்ல, ருஹானா அவனை உற்றுப் பார்த்தாள்.

இருவரின் இணைந்த பார்வையை பார்த்து சிரித்தபடி தன்வீர் எழுந்து கொள்ள, அடிக்கடி வரவேண்டும் என ஆர்யன் அவனுக்கு விடைகொடுத்தான். நன்றி சொன்ன தன்வீர், இவானிடம் “அடுத்த முறை உன் சித்தி எப்படி பாடுவாங்கன்னு நான் உனக்கு சொல்றேன்” என்றான்.

இவான் மகிழ்ச்சியாக தலையாட்டினான். ருஹானாவும் சிரிக்க ஆர்யன் மனது இலேசானது. இப்படியே அவன் முயற்சிகள் வெற்றி பெற்றால் ருஹானாவின் இதயத்தில் மீண்டும் இடம் பிடிக்கலாம் என நப்பாசை கொண்டான்.

———-

கமிஷனர் வாசிம் வாகிதாவின் மேல் தான் கொண்ட காதலை பற்றி சையத் பாபாவிடம் ஆலோசனை கேட்க, அவர் அதை வாகிதாவிடம் உடனே தெரிவிக்குமாறு அவனுக்கு அறிவுரை சொன்னார்.

அண்ணன் ஆர்யன் இதயக்காதலை மறைத்து ருஹானாவின் மேல் வீண்சந்தேகம் கொண்டு மனங்களை இரணகளமாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், தம்பி வாசிமிற்காவது அவனது காதல்வசப்பட்டதே என்று அவருக்கு நிம்மதி ஏற்பட்டது.

வீட்டிற்கு திரும்பிய வாசிம் அத்தை தௌலத்திடம் வாகிதாவிடம் எதையும் தெரிவிக்காமல் வெளியே அழைத்து சென்று தன் காதலை வெளிப்படுத்தி இன்ப அதிர்ச்சி அளிக்கப் போவதாக சொல்ல, இருவரின் காதலையும் வாகிதாவின் நற்பண்புகளையும் உணர்ந்து கொண்ட தௌலத் அகமகிழ்ந்து அவனுக்கு ஆசிகள் வழங்கினார்.

மறைவாக நின்று அவர்கள் பேசுவதை கேட்டுவிட்ட வாகிதா தன் ஆனந்தத்தை மறைக்க முடியாமல் தொலைபேசி மூலம் அதை ருஹானாவிடம் பகிர்ந்து கொண்டாள். உடன்பிறப்பு போல பாசம் கொண்ட வாகிதாவின் மகிழ்ச்சியில் தானும் பங்குகொண்ட ருஹானா அவளது வளமான வாழ்விற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தாள்.

———

மருத்துவமனையில் இருந்து மூவரும் காரில் திரும்பிக்கொண்டிருக்க, சிவப்பு விளக்கில் ஆர்யன் காரை நிறுத்தினான்.

“சித்தி! எனக்கு எல்லாம் சரியாகிடுச்சின்னு டாக்டர் சொன்னாரே!”

“ஆமா ஆருயிரே! இன்னும் கொஞ்ச நாளைக்கு மாத்திரை சாப்பிடணும். நோய்த்தொற்று ஏற்படாம கவனமா பார்த்துக்கணும்.”

“சித்தப்பா! அப்போன்னா நாம் மூணுபேரும் சேர்ந்து வெளிய போகலாம் தானே?”

“ஆமா, சிங்கப்பையா! ஆனா எப்பவாது தான்!”

“ஹே! ஜாலி! ஜாலி!”

அப்போது விளையாட்டு பொருட்கள் விற்கும் ஒரு பெண்மணி அங்கே வர, ஆர்யன் இவானுக்கு அதிலிருந்து ஒன்றை வாங்கிக் கொடுத்தான். பணம் வாங்கிக்கொண்டு அந்த பெண்மணி நகர, திரும்ப அழைத்த ஆர்யன் சிவப்பு நிற இதய வடிவில் சிறியதாக இருந்த ஒரு தலையணையை வாங்கி ருஹானாவிடம் நீட்டினான். “இது உனக்காக!”

அதை வாங்கிக்கொள்ளாமல் ருஹானா அதிர்ந்து பார்க்க, ஆர்யன் “உன் கதையில வர்ற இதயத்தை தேடின அந்த சின்னப் பொண்ணுக்காக” என்று சொல்லி அவளிடம் தந்தான்.

——–

கடற்கரையோரம் இறங்கி இருவரும் கல்லை தண்ணீரில் எறிந்து விளையாட, ருஹானா ஆர்யனை யோசனையாக பார்த்து நின்றாள்.

“இப்படி தட்டையான கல்லை எடுத்து மேலோட்டமா வேகமா வீசணும்” என்று சொல்லியபடி ஆர்யன் அடிக்க, அந்த கல் நீரில் மூழ்காமல் நான்கு முறை தண்ணீரை தட்டி தட்டி சென்றது.

இவான் எறிந்த கல் நீரில் மூழ்க, அவன் சலிக்காமல் மேலும் மேலும் முயன்று கொண்டே இருந்தான். கையில் ஒரு கல்லை எடுத்துக்கொண்டு ருஹானாவிடம் வந்த ஆர்யன் “நீயும் இவான் கூட சேர்ந்து வீசுறியா?” என புன்னகையுடன் கேட்டான்.

அதை வாங்கிக் கொள்ளாமல் ருஹானா கேட்ட கேள்வியில் அவன் புன்னகை மறைந்தது.

“என்ன நடக்குது? என்ன திடீர்னு மாறிடுச்சி? நேத்துல இருந்து உங்க பார்வை கூட மாறினது போல எனக்கு தெரியுது. இப்போ இந்த பரிசு…” கையில் இருந்த இதயத்தை காட்டினாள். “எப்பவும் போல எனக்கு மட்டும் எதுவும் தெரியலயா? என்னன்னு சொல்லுங்க!”

“என்ன நான் சொல்லணும் உனக்கு?”

“திரும்பவும் என்னை பாதாளத்தில தள்ளிவிடப் போறீங்களா? மறுபடியும் நல்லவிதமா நடந்துக்கிட்டு என்னை நம்ப வச்சி ஏமாத்தப் போறீங்களா? அப்படி இருந்தா தயவுசெய்து தெளிவாக சொல்லிடுங்க. நேரிடையா எனக்கான தண்டனையை கொடுத்துடுங்க. என்கூட விளையாடாதீங்க. இன்னொரு முறை ஏமாந்து கீழே விழுந்தா என்னால எழுந்துக்க முடியாது.”

“இல்ல, இது எல்லாமே உண்மை! இனிமேல் நான் உன்னை எப்பவும் காயப்படுத்த மாட்டேன். அந்த பட்டாம்பூச்சி எங்கயோ சிறகடிச்சிடுச்சின்னு நினைச்சிக்கோ. அது சிதறின எல்லாத்தையும் சேர்த்திடுச்சின்னு நம்பு! மத்த எதையும் யோசிக்காதே! நல்லதை மட்டும் நினை!”

ஆர்யன் இவானிடம் சென்று விளையாட, இதய தலையணையை அழுத்திய ருஹானா “இது கனவா? கெட்டக்கனவுலாம் முடிஞ்சிடுச்சா?” என புரியாது நின்றாள்.

சூடுபட்ட இதயம் காட்டப்படும் அன்பில்

குளிர்ந்திட குழப்பம் கொள்கிறது!

மற்றுமொரு ஏமாற்றமா அல்லது

கருமேகம் கலைந்து அன்பொளி

பிரகாசம் வெளிப்படுகிறதா?

தவிப்பு அச்சம் கொள்ளுமா

மனம் நிம்மதி அடையுமா?

———-

“பெரியப்பா! இங்க பாருங்க, நான் என்ன கொண்டு வந்திருக்கேன்னு!”

“அட! இந்த அழகான கற்கள் உனக்கு எங்க கிடைச்சது?”

“கடற்கரையில, பெரியப்பா! இதை நாம அழகா வைக்கலாமா?”

“வா இவான் செல்லம்! இதை மேல்மாடி தோட்டத்துல வைக்கலாம்!”

“சரி பெரியப்பா! நீங்களும் வாங்க, சித்தப்பா!”

மூவரும் செல்ல, ருஹானா புன்னகையுடன் படுக்கையறைக்குள் சென்றாள். உள்ளே கட்டிலில் இருந்த புத்தகத்தை பார்த்தவள் திகைப்பில் உறைந்தாள். “தூரம் அதிகமாகும்போது!”

“ஆனா எப்படி? எனக்காக தேடி வாங்கியிருக்கார்!” என்றவளின் கண்களில் ஆனந்த கண்ணீர்.

ஆர்யனை தேடி வெளியே வந்தவள் சகோதரன் மகனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் சகோதரர்களை பார்த்து சிரிப்புடன் நின்றாள்.

“நல்லா இருக்கா சித்தப்பா?”

“அழகா இருக்கு அக்னிசிறகே! அடுத்ததா நட்சத்திரம் செய்யேன்! உன் சித்திக்கு பிடிக்குமே!” என்று ஆர்யன் சொல்ல, ருஹானாவின் சிரிப்பு மேலும் விரிந்தது.

“சரி சித்தப்பா! அதுக்கு அப்புறம் பெரிய படகு செய்றேன்!” என்று இவான் கற்களை நட்சத்திர வடிவில் அமைத்தான். அம்ஜத் அவனுக்கு உதவி செய்ய, புன்னகையுடன் தன்னை பார்க்கும் ருஹானாவை பார்த்த ஆர்யன் சிறகில்லாமல் பறந்தான்.

அவன் வாங்கி வைத்த புத்தகத்தை பார்த்துவிட்டாள் என புரிந்து கொண்டவன், தன் முயற்சிகள் ஒவ்வொன்றும் பலனளிக்கவும், அவனை நோக்கி அவளை ஈர்த்து வருவதையும் அறிந்து நெடுநாட்களுக்குப் பின் ஆனந்தத்தின் வசப்பட்டான்.

“ருஹானா! காபி குடிக்க வா!” என்று சாரா அழைக்க, “நான் கொஞ்சம் வெளிக்காற்று வாங்கிட்டு வரேன், சாரா அக்கா!” என்ற ருஹானா கேட்டை தாண்டி சாலையில் இறங்கி நடந்தாள்.

“இப்போ என்ன? நீ அவரை மன்னிக்கப் போறியா, ருஹானா?” தனக்குள்ளாகவே பேசிக்கொண்டு நடந்த ருஹானா குப்பை வண்டியை தள்ளிக்கொண்டு வந்த ஒரு முதியவர் தடுமாறி விழுவதை கண்டு பதறி ஓடினாள்.

“என்ன தாத்தா? பார்த்து பிடிங்க!” என்று சொல்லி சாய்ந்த வண்டியை தூக்கி நிறுத்தி அவருக்கு உதவி செய்த ருஹானா, கீழே விழுந்த சில சிறிய குப்பைமூட்டைகளையும் எடுத்து வண்டியில் போட்டாள்.

கடைசியாக அவள் எடுத்த உறை கிழிந்து உள்ளே இருந்தவை கீழே விழ, அதில் போட்டோ துண்டு ஒன்றில் இருந்த இவள் முகம் இவளை கவர, ஒவ்வொன்றாக எடுத்து பார்க்க ஆரம்பித்தாள்.

“நன்றிம்மா!” என்று சொல்லி அவர் வண்டியுடன் நகர்ந்தது அவளுக்கு கேட்கவில்லை.

——–

“அண்ணா! நம்ம தோட்டத்தில் டெய்சி பூக்கள் இருக்குதா?”

இவானுடன் கற்களால் நட்சத்திரம் அமைத்துக் கொண்டிருந்த அம்ஜத் நிமிர்ந்து பார்க்க, ஆர்யன் அவசரமாக “இல்லன்னு மட்டும் சொல்லிடாதீங்க அண்ணா!” என்றான்.

சிரித்த அம்ஜத் “ஏன் இல்ல? நிறைய இருக்கே” என்று சொல்ல, நிம்மதியான ஆர்யன், அங்கே வந்த ஜாஃபரிடம் இவானின் சித்தி எங்கே என விசாரித்தான்.

ருஹானா நடைபயில வெளியே சென்றிருப்பதாக ஜாஃபர் சொல்ல, அவள் திரும்பி வருவதற்குள் செய்யவேண்டிய வேலைகளை விரைந்து செய்யுமாறு ஆர்யன் அவனை பணித்தான்.

———-

ருஹானா படுக்கும் கட்டில் டெய்சி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்க, அதன் நடுவே ருஹானாவிற்கு பிடித்த புத்தகமும், அதன் மேல் சிறிய இதய தலையணையும் வீற்றிருந்தது.

படபடக்கும் இதயத்தோடு ஆர்யன் கையில் அந்த புத்தகத்தை எடுத்து பார்க்க, அவனுக்கு ருஹானா சொன்ன கதை மனதில் ஓடியது. அப்போது கதவு திறக்க, ஆர்யன் ஆவலோடு திரும்பி பார்த்தான். அவனுக்கு ஏமாற்றம் அளிக்காமல் ருஹானா உள்ளே நுழைந்தாள்.

(தொடரும்)

Advertisement