Advertisement

ஆர்யன் வீடு திரும்பவுமே சமீராவிடமிருந்து அவனுக்கு குறுஞ்செய்தி வந்தது. ‘ருஹானா கவலையா இருக்கறது போல எனக்கு தெரியுது. நீங்க தான் அவங்களை துன்பப்படுத்தி இருப்பீங்க. அவங்க மனசை மாத்தி சந்தோசமா வச்சிக்கோங்க!’

ஆர்யன் ருஹானாவிடம் சென்று “நான் உன்கிட்டே ஒன்னு சொல்லணும்” என்று தயக்கமாக சொன்னான்.

“இவானை பற்றி தானே?”

“இல்ல.. இது வேற” என்று சொன்ன ஆர்யனின் கையில் இருந்த உடைந்த பேனாவை பார்த்து இறுகிப்போன ருஹானா “வேற எதைப்பற்றியும் பேச நான் விரும்பல. அதை உங்ககிட்டயே வச்சிக்கோங்க” என்றாள் கடுமையாக.

இந்த முறை ருஹானா செருகிய அம்பு ஆழமாக சென்று அவன் இதயத்தை தைக்க, அவள் அகன்றபின்னும் அவன் செயலற்று சிறிது நேரம் நின்றுவிட்டான்.

அலமாரிக்கு சென்று மாற்றுடை எடுக்கும் ருஹானாவிடம் சென்றவன் “எல்லாரும் தப்பு செய்வாங்க” என்று தொடங்கினான்.

“நான் ஹோட்டல்ல சொன்னதை வச்சி சொல்றீங்களா? கவலைப்படாதீங்க! நான் சொன்னது அவங்களுக்கு புரிஞ்சிருக்காது” என்றவள் “ஆனா அங்க சொல்லாததை இப்போ சொல்றேன். நான் நம்பின மரம் அடியோட என் தலை மேல விழுந்திடுச்சி. உடைந்ததை வெறும் வார்த்தைகளால தூக்கி நிறுத்த முடியாது. அதனால அந்த மரத்தை அப்படியே விட்டுடலாம்” என்றாள் இறுதியாக.

‘இல்ல, நான் விட மாட்டேன். நான் செய்த தவறுகள் எல்லாத்தையும் நான் சரிசெய்வேன்’ என மனதில் சொல்லிக்கொண்ட ஆர்யன் “அத்தனை சச்சரவுகள் நமக்குள்ள இருந்தும் நீ சமீரா கிட்டே எதுவும் காட்டிக்காததுக்கு என்னோட நன்றி” என்று அவளிடம் சொல்ல, அவள் வெறுமென தலையாட்டினாள்.

வெளியே செல்ல கதவை திறந்த ஆர்யன் திரும்பி அவளை பார்த்து “நீ ரொம்ப நல்லவ!” என்று சொல்லி செல்ல, அதிர்ச்சியான ருஹானா ‘இப்போது என்ன மாற்றம் நிகழ்ந்தது?’ என புரியாது நின்றாள்.

——–

நீலநிற கோப்பை கீழே கொண்டு சென்ற ஆர்யன் “இத்தனை அருவெறுப்பானதை நான் எப்படி நம்பினேன்? அவளை புரிஞ்சிக்காம, அவகிட்ட எதுவும் கேட்காம எப்படி அவளை புதைகுழில தள்ளினேன்?” என்று வெறுப்பாக அதை உணவுமேசையில் விட்டெறிந்தான். உள்ளே இருந்த ஆவணங்களை கிழித்தவன், ஒலிப்பதிவு கருவியை காலணியால் மிதித்து உடைத்தான்.

சத்தம் கேட்டு ஜாஃபர் எட்டிப்பார்க்க, ஆர்யன் “இதுல இருக்கற எதுவும் அவளுக்கு தெரியக்கூடாது. நான் அவளை இழக்க மாட்டேன். என்னால அவகிட்டே சொல்லமுடியல” என்று சொல்லி இருகை முஷ்டியால் மேசையில் குத்தினான்.

“இந்த நொடியில இருந்து அவளை திரும்பிப் பெற என்னால முடிந்த எல்லாமும் செய்யப்போறேன். அவ கண்ணின் ஒளிக்கு, அவளோட புன்னகைக்கு என்ன விலையானாலும் தருவேன். புரியுதா ஜாஃபர்? என்னோட கல்லறையிலயே இந்த ரகசியம் புதைஞ்சி போகட்டும்” என்று சொல்லிவிட்டு மேலே சென்றான்.

ஜாஃபர் அனைத்து காகிதங்களையும் சேகரித்து குப்பைத்தொட்டியில் போட்டான்.

———-

தூங்கும் இவானை முத்தமிட்ட ருஹானா “உன் சித்தப்பாவை என்னால புரிஞ்சிக்கவே முடியல, அன்பே! ஒரு நேரம் இப்படி இருக்கார். மறுநேரம் வேற மாறி மாறிப்போறார்” என்றவள் அவன் போர்வையை சரியாக போர்த்திவிட்டு அறைக்கு திரும்பினாள்.

ஆர்யன் சோபாவில் படுத்திருப்பதை ஆச்சரியமாக அவள் பார்க்க, தலையை தூக்கி பார்த்தவன் “நான் இங்க படுத்துக்கறேன். இனிமே நீ கட்டில்ல படுத்துக்கோ!” என்றான்.

“இப்போ என்ன மாறிடுச்சி?”

“எதுவும் மாறல. உனக்கு இங்க வசதியா இல்ல. நீ நல்லா தூங்கணும்னு நான் விரும்பறேன்” என்று சொல்லி கண்களை மூடிக்கொண்டான்.

‘ஏன் இப்படி நடந்துக்கறார். அடுத்து என்ன வரப்போகுதோ?’ என்று பயந்த ருஹானா கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

———

இருமிக்கொண்டே எழுந்த ருஹானா ஆர்யன் சோபாவில் படுக்காமல் தன்னை பார்த்தபடி நின்றிருப்பதை கவனித்து விசித்திரமாக நோக்கினாள். அவனை பார்த்துக்கொண்டே அவள் நீர் அருந்த அது தொண்டையில் சிக்கிக்கொண்டது.

அவள் அருகே ஓடிவந்த ஆர்யன் அவள் முதுகை தடவிக்கொடுத்தான். அவள் நாடியை தூக்கிப் பிடித்து “மெல்ல மூச்சை இழுத்துவிடு” என்றான். அவளுக்கு சரியானதும் தான் படபடப்பு நீங்கி அவளை விட்டு அகன்று சென்று அவன் படுக்கையை எடுத்து மடித்தான்.

ருஹானா உதவிக்கு சென்றும் “நான் செய்றேன்” என்று போர்வையை வாங்கியவன் “நீ நல்லா தூங்கினியா?” என கேட்டான். அவள் அவனை யோசனையாக பார்க்க “இல்ல, புரண்டு புரண்டு படுத்துட்டு இருந்தே!” என்று கவலையாக சொன்னான்.

அவன் அக்கறையில் திகைத்த ருஹானா “நீங்க நல்லாத்தானே இருக்கீங்க?” என்று சந்தேகமாக கேட்க, “ஏதோ யோசனை” என்றான்.

“சல்மாவை பற்றியா?”

“அவ நமக்கு ரொம்ப கெடுதல் செய்திட்டா. அவ ஏற்படுத்தின பாதிப்பை எப்படி சரிசெய்யப் போறேன்னு எனக்கு தெரியல.”

“உங்களால முடியும். அதிக நேரம் வேலை செய்ங்க. அதிக உழைப்பை கொடுங்க. நீங்க தொலைத்த எல்லாம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். இழந்த பணத்தை சம்பாதிச்சிடலாம். ஆனா போன நம்பிக்கை போனது தான். வந்து.. நான் சல்மாவை சொல்றேன். இன்னொருமுறை அவளை நீங்க நம்ப மாட்டீங்க. உலகத்துல திரும்பி பெற முடியாததை சல்மா இழந்திட்டா!”

ருஹானாவின் பேச்சு ஆர்யனுக்கு இரட்டை தண்டனையாக இருந்தது. அவள் பேசும் பேச்சும், அவனின் குற்ற உணர்ச்சியும் அவனின் முகத்தை அழுவது போல மாற்ற, அவளின் பார்வையிலிருந்து தப்பிக்க அவன் குளியறைக்கு செல்ல விழைய, அவளும் அதை நோக்கியே நடக்க அவன் அவளுக்கு விட்டுக் கொடுத்தான்.

உள்ளே சென்ற ருஹானா “என்ன நடக்குது? மறுபடியும் ஒரு விளையாட்டா?” என்று கவலைப்பட்டாள்.

———

தன்வீரை ஆர்யன் காலை உணவுக்கு அழைத்திருக்க, அவன் ஆர்யன் ருஹானாவிடம் உண்மையை சொல்லிவிட்டானா என வினவினான். ஆர்யன் தான் ருஹானாவை இழக்க விரும்பவில்லை எனவும் சமயம் வாய்க்கும்போது மெதுவாக எல்லாவற்றையும்  சொல்வதாகவும் உறுதி அளித்தான்.

தன்வீரை பார்த்து ஆச்சரியப்பட்ட ருஹானா அன்னையின் நலம் விசாரித்தாள். ஆர்யனின் அழைப்பின் பேரில் தன்வீர் வந்திருப்பதை அறிந்தவள் ஆர்யனை அதிசயமாக பார்த்தாள். அவன் தன்வீரை அன்பாக உபசரிப்பதை பார்த்து மேலும் வியந்தாள்.

ஆர்யன் தருவித்த இனிப்பை நஸ்ரியா அனைவருக்கும் பரிமாற, இவான் அது என்னவென கேட்டான்.

“இதுக்கு பேர் கட்மிர், அன்பே! வெண்ணெய், பிஸ்தா கலந்து செய்த இனிப்பு. உனக்கு பிடிக்குதா, பாரு!”

“ம்ம்.. நல்லா இருக்கு, சித்தி!”

“ஒஹ்! உன் சித்தி போல உனக்கும் இது பிடிக்குதா? அம்மா அடிக்கடி ருஹானாவுக்காக இதை செய்வாங்க. நாங்க இதை நிறைய சாப்பிட்டு வயிறுவலியால கஷ்டப்படுவோம்” என்று தன்வீர் சிரிக்க, ஆர்யனும் ருஹானாவும் புன்னகைக்க, கரீமா கடுப்பாக பார்த்தாள்.

“உனக்கு பிடிச்ச பேக்கரில இருந்து வரவச்சேன். தன்வீர் முகவரி கொடுத்தான்” என்று ஆர்யன் சொல்ல, ருஹானாவின் வியப்பு எல்லையைக் கடந்தது.

“சித்தி! இன்னும் கொஞ்சம் சாப்பிடவா? எனக்கு இது பிடிச்சிருக்கு.”

“கொஞ்சம் தான். இப்போ தன்வீர் மாமா சொன்னது கேட்டே தானே? அதிகம் இனிப்பு சாப்பிட்டா நல்லது இல்ல” என்றவள் “இதைவிட பர்வீன் அம்மா செய்றது நல்லா இருக்கும்” என்றாள் சோகமாக.

அவள் பர்வீனை தேடுவதை உணர்ந்த ஆர்யன் “நீ வேணா அவங்களை போய் பார்த்துட்டு வாயேன்” என்றான். அகன்ற விழிகளை ஆர்யனிடம் திருப்பிய ருஹானா “மடாபாவுக்கா? அவ்வளவு தூரமா?” என்று கேட்க, அவன் ஆமென தலையாட்டினான்.

“இவானை விட்டுட்டு நான் எப்படி போறது?”

“ஏன் அவனை விட்டுட்டு போகணும்? அவனை கூட்டிட்டே போயிட்டு வா!”

ருஹானாவின் விழிகள் இன்னும் பெரிதாக, “நான் இவானை என்னோட கூட்டிட்டு போகலாம்னு நீங்க சொல்றீங்களா?” என திகைப்பாக கேட்டாள். இதற்கு தானே ஆதியிலிருந்து அத்தனை போராட்டங்கள், பிரச்சனைகள்? அவள் காதுகளை அவளாலேயே நம்பமுடியவில்லை.

“ஆமா, இவானை உன்கிட்டே இருந்து எப்படி நான் பிரிப்பேன்?” என்று ஆர்யன் சொல்ல, ருஹானா பேச்சிழந்து போனாள்.

கரீமாவிற்கு அதற்கு மேல் பொறுக்கமுடியவில்லை. இலேசாக உடம்பு சரியில்லை என்று மன்னிப்பு கேட்டு அவள் அங்கிருந்து அகன்றாள்.

அவள் பின்னால் அறைக்கு வந்த அம்ஜத் அவளை அணைத்து ஆறுதல் சொன்னான். “நீ சல்மாவை அதிகமா தேடுறே, எனக்கு புரியுது. ஆனா அவ தப்பு செய்தா, தண்டனை அனுபவிக்கறா. சிறையில இருந்து திரும்பும்போது அவ தவறை உணர்ந்து திருந்திடுவா. அவளோட அமைதி அவளுக்கு கிடைக்கும். கரீமா! நீ அவளுக்கு அக்கா இல்லயா, அதான் உனக்கு வருத்தமா இருக்கும்.”

“ஆமா அம்ஜத் டியர்! அவளுக்கு அந்த இடமெல்லாம் பழக்கமே இல்ல. அங்க ரொம்ப குளிரா இருக்கும்.”

”நீ அவளை பார்க்கப் போகும்போது கனமான போர்வைகள், குளிராடைகள் கொண்டு போ, கரீமா!”

இப்படிப்பட்ட இளகிய மனம் கொண்ட நல்லவனை கணவனாக கொண்ட கரீமா எப்படி இன்னமும் கொடுமையானவளாக இருக்கிறாள் என்பது புரியாத மர்மமே!

———

Advertisement