Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                               அத்தியாயம் – 131

வாசற்கதவை திறந்த ருஹானா அங்கே நின்ற ஆர்யனின் தோழி சமீராவை பார்த்து திகைத்தாள். “சர்ப்ரைஸ்!” என்று கத்திய சமீரா, சத்தம் கேட்டு அங்கே வந்த ஆர்யனோடு சேர்த்து ருஹானாவையும் இருகைகளாலும் கட்டிக்கொண்டாள். “நான் உங்களை ரொம்ப மிஸ் செய்தேன்!”

ருஹானாவின் அண்மையில் ஆர்யன் தடுமாற, ருஹானா “அழகான சர்ப்ரைஸ்! நாங்களும் உங்களை மிஸ் செய்தோம்” என்று அவளை வரவேற்று அமர வைத்தாள்.

“இன்னைக்கு காலைல தான் வந்தேன். உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்லணும். அதும் உங்க ரெண்டுபேர் முகத்தையும் பார்த்து சொல்லணும். அதான் உடனே ஓடி வந்துட்டேன்” என்று சொன்ன சமீரா தான் காதல்வயப்பட்டதை ஆனந்தமாக விவரித்தாள்.

“எனக்கு அதிக மகிழ்ச்சி!” என்று ஆர்யன் புன்னகைக்க, “உங்களுக்கு தான் அதிகம் இருக்கணும், ஆர்யன்! ஏன்னா உங்களை பார்த்து தான் எனக்கு காதல் மேல நம்பிக்கை வந்தது. ஆசையும் வந்தது. உங்க மேல பொறாமையும் பட்டேன். இது போல ஒரு உறவு கிடைக்க வேண்டினேன்” என்று சமீரா சொல்ல, இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“ஹசனை உங்களுக்கு அறிமுகப்படுத்த அகாபாவுக்கு கூட்டிட்டு வந்திருக்கேன். இன்னைக்கு நம்ம நாலு பேருக்கு தாஜ் ஹோட்டல்ல மேசை முன்பதிவு செய்திட்டேன்” என்று சொன்ன சமீராவை ஆர்யன் இடைமறித்தான். எப்படியும் அன்று ருஹானாவிடம் உண்மையை சொல்ல நேரம் பார்த்திருந்தானே!

“சமீரா! இன்னைக்கு இரவு…”

“இல்ல, நான் இல்லன்னு கேட்க விரும்பல. நீங்க மட்டும் தான் இங்க என்னோட குடும்பம். உங்களை அவருக்கு அறிமுகப்படுத்த அத்தனை ஆசையா இருக்கேன். எனக்கு ஏமாற்றம் தராதீங்க. நான் வரேன். இரவு தாஜ் ஹோட்டல்ல சந்திப்போம்” என படபடவென பொரிந்துவிட்டு சமீரா விடைபெற்று சென்றுவிட்டாள்.

“உனக்கு போக வேண்டாம்னா ஓகே தான். நான் எதாவது சாக்கு சொல்லிக்கறேன்” என்று ஆர்யன் ருஹானாவிடம் சொல்ல, “இல்ல, சமீரா ரொம்ப ஆர்வமா இருக்காங்க. அவங்களுக்கு ஏமாற்றம் தரவேண்டாம். கொஞ்ச நேரம் நடிக்கணும். பரவால்ல. சமாளிக்கறேன்” என்று அவள் அவன் நெஞ்சில் ஒரு அம்பை செருகிவிட்டு சென்றாள்.

———

குறிப்பிட்ட நேரத்தில் சமீரா சொன்ன உணவுவிடுதியை அடைந்தவர்களுக்கு சமீராவும், ஹசனும் சற்று தாமதமாக வரும் செய்தி கிடைத்தது.

இருவரும் உணவுமேசையில் அமர, குளிரால் கைகளை தேய்த்த ருஹானாவை பார்த்த ஆர்யன் தன் கோட்டை கழற்றி அவள் தோள்களை சுற்றி போர்த்திவிட்டான். அவனது கரிசனையில் அவள் புருவம் உயர்த்த, அவன் தலையை குனிந்துகொண்டான்.

“நாம டின்னருக்கு வெளிய வந்து அதிக நாளாகுது” என்று தொடங்கிய ஆர்யனின் வாயில் “கடைசியா தேனிலவு…” என்ற உண்மை வெளியே வந்து விழ, அவன் அப்படியே பேச்சை நிறுத்திக்கொண்டான்.

“ஆமா, நீங்க பாதியில போய்ட்டீங்க. திரும்பி வரல” என்று கண்ணீருடன் சொன்ன ருஹானா “நான் நினைக்கறேன், இன்னும் நீங்க திரும்பி வரவேயில்ல” என்றவள் அவன் கோட்டை எடுத்து அவனிடம் கொடுத்துவிட, ஆர்யனின் முகம் வாடியது.

அவன் ஒன்றும் தினையை விதைக்கவில்லையே, வினையைத் தானே தூவினான்? பின் அதைத்தானே அறுவடை செய்யவேண்டும்?

சமீரா வரும்வரை ஆர்யன் ருஹானாவிடம் பேச முயற்சிக்க, அவள் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அவன் பாவமாக பார்க்க, அவள் கோபமாக முகம் திருப்பிக்கொண்டாள்.

“சமீரா உங்க ரெண்டு பேரை பத்தியும், உங்க காதலை பத்தியும் தான் அதிகம் பேசிட்டு இருப்பா. உங்களை சந்திக்க நான் ஆவலா இருந்தேன்” என்று பரஸ்பர அறிமுகத்திற்கு பின் ஹசன் சொல்ல, ருஹானா இயந்திரகதியில் புன்னகைத்தாள்.

“ஏன்னா இவங்களது போல ஒரு ஆழமான பலமான காதலை நான் எங்கயும் பார்த்தது இல்ல. ஒருத்தருக்காக மற்றொருத்தர் உருவாக்கப்பட்டவங்க இவங்க” என்று சமீரா சொல்ல, சாப்பிட்டுக்கொண்டு இருந்த ருஹானா நிமிர்ந்து பார்த்து நன்றி சொன்னாள். ஆர்யனின் பார்வை ருஹானாவிடம் தவிர வேறெங்கும் இல்லை.

“ஆர்யன்ட்ட ஏதோ குறைவா இருந்தது. வேலைலயும் அவர் ஆமான்னா ஆமா. இல்லனா இல்ல. இது ரெண்டும் தான் அவர். இதுக்கு நடுவுல உள்ள வேற எதுவும் அவர்கிட்டே இல்ல. அவர் எப்பவும் கருப்பும் வெள்ளையும் தான். ருஹானா அவங்களோட வண்ணங்களால இட்டு அவரை முழுவதுமா நிரப்பினாங்க. அவருக்காகவே படைக்கப்பட்டவங்க ருஹானான்னு தான் எனக்கு தோணும்.”

சமீராவிற்கு என்ன பதில் சொல்வது என ருஹானா விழிக்க, மேசையில் மேல் இருந்த அவள் கையை பற்றிய ஆர்யன் “அவளால மட்டும் தான் என்னோட மனக்கதவை திறக்க முடிந்தது” என்று சொல்ல, ருஹானா அவனை திரும்பிப்பார்த்தாள்.

“இந்த பார்வை தான். இதே காந்த பார்வை தான். சோசியல் மீடியாலயே தெளிவா தெரிஞ்சதே! அவங்க திருமணத்துல, அவங்க நடனம் ஆடும்போது இதை தான் நான் ரசித்து பார்த்தேன். அவங்க தேனிலவு போட்டோ தான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது” என சமீரா சொல்லிக்கொண்டே போக, ருஹானா ஆர்யனிடமிருந்து தன் கையை உருவிக்கொண்டாள்.

சமீராவின் காதலை பற்றி சொல்லும்படி ருஹானா திசைதிருப்ப, அவள் ஹசனை சந்தித்தது முதல் அவன் காதல் சொன்னதுவரை இன்பமாக விவரித்தாள் என்றாலும் இறுதியில் ருஹானாவிடம் வந்து தான் முடித்தாள்.

“என் வாழ்வில் நான் சந்தித்த ஏமாற்றங்கள் எனக்கு நம்பிக்கையின்மையை விளைவித்து இருந்தது. ஆனா நான் ருஹானாவுக்கு தான் கடன்பட்டு இருக்கேன். அவங்க தான் அன்னைக்கு சமையலறையில் என் மனதை மாற்றினாங்க. காதலை பற்றியும் ஒரு ஆண் மேல் வைக்கும் நம்பிக்கையை பற்றியும் எடுத்து சொன்னாங்க” என்று சொல்ல, ஆர்யன் ருஹானாவை ஆச்சரியமாக பார்த்தான்.

ருஹானா சங்கடத்தில் தடுமாற, “சொல்லுங்க ருஹானா! அன்னைக்கு ஆர்யனை பற்றி என்ன சொன்னீங்க? சிலசமயம் சூறாவளி போல காயங்களையும் அழிவையும் ஏற்படுத்தினாலும், பலசமயம் வலிமையான மரம் போல நிம்மதியான நிழலையும் தருவார், அதானே?” என்று சமீரா சொல்ல, ஆர்யன் உள்ளுக்குள்ளே கதறினான். ‘இவளையா நான் சந்தேகப்பட்டேன்?’

“சரிதான் சமீரா, ஆனாலும் நாம கவனமாவும் இருக்கணும். சிலசமயம் அதோட கிளைகள் முறிந்து நம்ம தலையிலயும் விழலாம்” என்றவள் சுதாரித்துக்கொண்டு “ஆனா இவர் அப்படி இல்ல. அவரோட மரத்தின் வேர்கள் எப்பவும் ஆழமானது. அது எப்பவும் என்னை கைவிடாது” என்றாள்.

ஸ்தம்பித்து பார்த்திருந்த ஆர்யனை சமீரா உணர்வுக்கு கொண்டுவந்தாள். “சரி சொல்லுங்க ஆர்யன்? உங்க திருமண வாழ்வின் வெற்றியின் ரகசியம் என்ன?”

“நம்பிக்கை! அவளோட நல்ல இதயத்தின் மீதான நம்பிக்கை!” என்று ஆர்யன் சொல்ல, ருஹானா அவனை கோபமாக திரும்பிப் பார்த்தாள்.

——–

சாப்பிட்டுவிட்டு ருஹானாவும் சமீராவும் ஓய்வறைக்கு செல்ல, ஆர்யன் அவளை தேடி திரும்பி பார்த்தான்.

“நானும் உங்களைப் போல தான். சமீராவை கொஞ்ச நேரம் பார்க்க முடியலனாலும் தவித்து போறேன். எப்போ வருவான்னு கதவை பார்த்துட்டே இருப்பேன்!”

வெட்கத்துடன் தலையாட்டிய ஆர்யன் “சமீரா ரொம்ப நல்லவ. அவளோட நலன்ல எனக்கு அக்கறை இருக்கு. அவளோட அப்பா அவளை என்கிட்டே ஒப்படைச்சிருக்கார். நீங்க அவளை மகிழ்ச்சியா வச்சிருக்கணும்” என்று அறிவுறுத்தினான்.

“கண்டிப்பா! அவ எல்லாம் சொல்லியிருக்கா” என்ற ஹசன் “எங்களோட உறவு எப்பவும் வலிமையா இருக்கணும்னா நான் என்ன செய்யணும்?” என்று யோசனை கேட்டான், சந்தேகத்தால் வாழ்க்கையை நழுவவிட்ட ஆர்யனிடம்.

மரண அடிபட்டு புத்தி தெளிந்திருந்த ஆர்யன் மற்றவர்களுக்கு எடுத்து சொல்ல தகுதி படைத்தவன் தானே?

“நேர்மை, ஹசன்! காதல் உங்க ரெண்டு பேரையும் இணைத்திருக்கலாம். ஆனா அதுவே உங்க பலவீனமும் கூட. சின்னதா சந்தேகம், கருத்துவேறுபாடு வந்தாலும் ரெண்டுபேரும் வெளிப்படையா பேசி சரிசெய்துக்கங்க. அவளிடம் உண்மையா இருங்க!”

“இதை நான் எப்பவும் நினைவு வச்சிப்பேன், ஆர்யன்!” என்று சொன்ன ஹசன், இரு பெண்களும் திரும்பி வந்ததும் அதை பற்றி பிரஸ்தாபித்தான்.

“ஆமா, நம்பிக்கையும், வாய்மையும் இல்லனா அங்க நாம் என்ற சொல்லே அர்த்தம் இழந்து போய்டும்” என்று ருஹானா கசப்பாக சொல்ல, ஆர்யன் மிகுந்த தலையிறக்கமாக உணர்ந்தான்.

ஹசன் அவர்கள் முன்னிலையிலேயே சமீராவுக்கு மோதிரம் அணிவித்து காதலை சொல்ல, சமீராவும் பதிலுக்கு தன் காதலை பரவசமாக பறைசாற்ற, இருவரும் கட்டிக்கொண்டனர்.

ருஹானா அவர்களை ஏக்கமாக பார்க்க, ஆர்யன் ‘தான் எத்தனை செல்வந்தனாக இருந்தும் தன் மனைவிக்கு இத்தகைய மகிழ்ச்சியை தரமுடியவில்லையே!’ என துன்பம் கொண்டான்.

தம்பதியர் காதலர்களின் கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்க, ஆர்யன் “உங்களோட மகிழ்ச்சியை மத்தவங்க குலைக்க அனுமதிக்காதீங்க. ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுக்காதீங்க!” என்றான்.

நால்வரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள சமீரா விரும்ப, ருஹானாவின் இடையை அணைத்து அவளை ஆர்யன் நெருக்கமாக இழுக்க, ருஹானா திகைத்துப் போய் அவனை பார்த்தாள்.

——–

Advertisement