Advertisement

மொய்தீன் எண்ணுக்கு எண்ணிலடங்கா முறை ஆர்யன் முயற்சி செய்துக்கொண்டே இருக்க ரஷீத் அவனை அழைத்தான். “ஹலோ ஆர்யன்! ஒரு சிக்கல். நீங்க கொடுத்த தொலைபேசி எண்ணை வச்சி மொய்தீனை கண்டுபிடிக்க முயற்சி செய்தேன். ஆனா அதுக்கு உதவி செய்ற நமக்கு தெரிந்த காவல் அதிகாரியை பிடிக்க முடியல. வெளிநாடு எங்கயோ போயிருக்கார் போல. இப்போ என்ன செய்ய?”

“எதாவது செய் ரஷீத்! நேரம் ஓடிட்டே இருக்கு. அவன் உயிரும் போயிட்டே இருக்கு” என்று சொன்ன ஆர்யனுக்கு ருஹானாவின் சகோதரன் காவல் அதிகாரி தன்வீரின் நினைவு வந்தது. இப்போது தான் ஆர்யனின் மூளை விழித்தெழுந்தது போல!

“ஹல்லோ தன்வீர்! எனக்கு உயிர் போற அவசரம். உன்கிட்டே இருந்து ஒரு உதவி வேணும். நான் உனக்கு அனுப்பி இருக்கற போன் நம்பரை வச்சி அதோட சொந்தக்காரன் எங்கிருக்கான்னு நீ தான் கண்டுபிடிச்சி சொல்லணும்.”

“என்ன ஆர்யன்! எனக்கு புரியல. என்ன விஷயம்?”

“நீ என்கிட்டே இப்போ எதுவும் கேட்காதே. இது எங்க குடும்பத்தை பாதிக்கற விஷயம். அவசரம்!”

“ருஹானாவை பற்றிய எதுவுமா?” என தன்வீர் பதறினான்.

“உனக்கு அப்புறம் நான் விவரமா சொல்றேன். ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சிக்கோ. இது அவளுக்காக தான். உனக்கே தெரியும் அவளுக்காக நான் என்னோட உயிரையும் கொடுப்பேன். இப்போ எதுவும் கேட்காதே என்னை நம்பு!”

“இதால ருஹானாவுக்கு எதும் துன்பம்…”

“இல்லல்ல! அவளையும் என் குடும்பத்தையும் காப்பாத்தத்தான் இந்த உதவியை கேட்கறேன்.”

“சரி ஆர்யன்! நான் செய்றேன். ஆனா இப்பவே உங்களை எச்சரிக்கறேன். ருஹானா கஷ்டப்பட்டா நான் உங்களை சும்மா விடமாட்டேன்.”

“அப்படி எதும் ஆகாது. நீ சீக்கிரம் பார்த்து சொல்லு!”

——–

“வாயை மூடு! நான் சொல்றதை செய்! மொய்தீனை மத்தவங்களுக்கு முன்ன கண்டுபிடி” என்று கரீமா போனில் கோபமாக பேசிக்கொண்டு இருக்க, “அவன்தான் செத்துட்டானே! அவனை எதுக்கு கண்டுபிடிக்கணும் அக்கா?” என்று சிரிப்போடு சல்மா உள்ளே வந்தாள்.

அழகிய புது சிகை அலங்காரத்தோடு கை நிறைய பைகளுடன் வந்தவளை பார்த்த கரீமாவிற்கு கோபம் உச்சியில் ஏறியது. அவளிடமிருந்து பைகளை பறித்து தூக்கிப்போட்டவள் அவள் மென்னியை பிடித்தாள்.

“போனை பார்க்க மாட்டியா நீ? எத்தனை தடவை கால் செய்தேன். மெசேஜ் அனுப்பினேன். உன்னை யாரு இப்போ இங்க வர சொன்னா?”

“அது சைலன்ட்ல இருந்தது. இப்போ என்ன?”

“என்னவா? மொய்தீன் உயிரோடு இருக்கான். நீ தான் அவனை கொல்ல சொன்னேன்னு ஆர்யனுக்கு போன் செய்து சொல்லிட்டான். யாரும் உன்னை பார்க்கறதுக்கு முன்ன ஓடிடு. உன் போனை கொடு” என்று வாங்கிய கரீமா அதிலிருந்த தடயங்களை வேகமாக அழித்தாள்.

சல்மா கிலிபிடித்து மூச்சுக்கு திணறி நிற்க, படாரென்று கதவை திறந்துகொண்டு ஆர்யன் உள்ளே நுழைந்தான்.

“ஆர்யன் டியர்! அவ இப்போ தான் வந்தா!”

“அவன் எங்க?  அவனை எந்த இடத்துல நீ சுட்டு தள்ளினே?” பாய்ந்து வரும் சிங்கத்தை போல வந்தவன் அவள் சட்டையை பிடித்து தூக்கினான்.

“யாரு? என்ன ஆர்யன்?” சல்மா திக்கி திணறினாள்.

“உன் சிறுமூளையை வச்சிக்கிட்டு என்னை முட்டாளாக்க பார்க்காதே! எல்லாத்தையும் சொல்லு! எங்க அவன்?”

அந்த சிறிய மூளையை வைத்துக்கொண்டு தான் அவள் இத்தனை நாள் அவனை ஏமாற்றி இருக்கிறாள் என்பது அவனுக்கு தெரியாதே!

“ஆர்யன்! எனக்கு எதுவும் தெரியாது!” என அவள் மறுக்க, அவள் செல்பேசியை பிடுங்கி தேடினான். அதில் எதும் அகப்படாமல் போக, “செய்த தப்பை மறைக்கவும் உனக்கு தெரிஞ்சிருக்கு. ஆனா நீ என்கூட விளையாடிட்டு இருக்கே! இந்த விஷயத்துல உன்னோட பங்கு இருக்குன்னு தெரிஞ்சிதுன்னா நீ இந்த உலகத்துலேயே இருக்க மாட்டே! கேட்குதா?” என இரைந்தான்.

“என்ன சொல்றீங்க? நான் எப்படி ஒருத்தனை கொல்ல சொல்லுவேன்? உங்களுக்கு புரியலையா? அவங்க திரும்ப உங்களை ஏமாத்த பார்க்கறாங்க! இந்த முறை அந்த டிடெக்டிவ்வும் அவங்களோட சேர்ந்துட்டான்” என்று அக்கா முன்பு கற்றுத்தந்த பாடத்தை சரியாக ஒப்புவித்தாள்.

“நான் எல்லா உண்மையும் கண்டுபிடிக்கறேன். வந்து உன்னை பேசிக்கறேன்” என்று ஆர்யன் வெளியே செல்ல, இருவரும் பீதியில் உறைந்தனர்.

“அக்கா! நான் செத்தேன்!”

———

போனை எடுக்க அறைக்குள் வந்து திரும்பிய ஆர்யனை ருஹானா வழிமறித்தாள். “நீங்க என்கிட்டே ஏதோ மறைக்கறீங்க! அந்த டிடெக்டிவ் விஷயம் என்னைப்பற்றி தானே? இவானை என்கிட்டே இருந்து பிரிக்கப் போறீங்களா? இங்க பாருங்க! நான் எங்கயும் ஓடிப் போகல, இங்க தான் இருக்கேன். என்ன விஷயம்ன்னு என்கிட்டே சொல்லுங்க!”

அவள் கண்ணீர் அவனை அசைத்தது என்றாலும் அவன் வாய் திறக்கவில்லை. ‘என்னால முடியாது. எனக்கு முழு உண்மை தெரியறவரை உனக்கு எதும் சொல்லமுடியாது!’

“ஏன் அமைதியா இருக்கீங்க? என்ன தப்பா நடந்தது? என்னால இப்படி பயந்திட்டே வாழ்க்கையை ஓட்ட முடியாது” என்றவள் மேலே எதும் கேட்கும்முன் ஆர்யன் அவளை நகர்த்திவிட்டு வெளியே சென்றான்.

——–

தன்வீரிடமிருந்து வரும் தகவலுக்காக தோட்டத்தில் காத்திருந்த ஆர்யன், “ஒரே ஒரு துண்டு தவறிப்போகுது. அது கிடைச்சிட்டா முழுசும் புரிஞ்சிடும்” என்றான் பக்கத்தில் நின்ற ஜாஃபரிடம்.

“உண்மையை கண்டுபிடிக்கறவரை போகும் பாதை கடினம் தான், சார்!”

தலையாட்டிய ஆர்யன் “எனக்கு தெரியும், நீங்க அவளை நிரபராதின்னு நம்புறீங்க. எனக்கும் அப்படி நம்பத்தான் ஆசை” என்று சொல்லும்போது தன்வீர் அழைத்தான்.

“ஆர்யன்! அவனோட போன் கடைசியா பெட்ரா காட்டுப்பகுதியில் அணைஞ்சி போயிருக்கு. அதுக்கு மேல சரியான இடம் இன்னும் தேடிட்டு இருக்காங்க.”

“சரி, தன்வீர்! நான் இப்பவே பெட்ரா போறேன்! நீ எனக்கு கிடைக்கிற மத்த தகவல்களை அனுப்பிட்டே இரு!” என்று சொன்ன ஆர்யன் விரைந்தோடி காரை எடுத்தான். பிஸ்மில்லாஹ் ரஹிம் ரஹ்மான் என்று ஜாஃபர் இறைவனை வேண்டினான்.

———

வெள்ளை ரோஜாவுடன் கவலையோடு அமர்ந்திருந்த ருஹானாவிடம் வந்த அம்ஜத் “ருஹானா! நீ இந்த ரோஜாவை போல வெண்மையானவள். கவலைப்படாதே. ஆர்யன் உனக்காக தான் போயிருக்கான். அவன் எல்லாத்தையும் கண்டுபிடிச்சிடுவான்” என்று தேற்றினான்.

“அம்ஜத் அண்ணா! உங்களுக்கு தெரியுமா, அவர் என்ன செய்றார்ன்னு?” என ருஹானா கேட்க, அம்ஜத் பதில் சொல்லவில்லை. “நீ களங்கமில்லாதவ! ஆர்யன் மேல நம்பிக்கை வை” என அவள் தோளை தட்டிக்கொடுத்துவிட்டு சென்றான்.

என்றாலும் சந்தேகம் தெளியாத ருஹானா, தயங்கினாலும் ஆர்யனின் உடைமைகளில் தேட ஆரம்பித்தாள். “இவானுக்காக.. அவனை விட்டுப்பிரிய என்னால முடியாது” என்றபடி படுக்கையறை மேசையில் ஆரம்பித்து முன்னறை மேசை முழுவதும் தேடினாள்.

“ஏன் இந்த டிராயர் மட்டும் மூடி இருக்கு? இதோட சாவி எங்கே?”

——–

பெட்ராவின் பெரிய காட்டுக்கு விரைந்து வந்து சேர்ந்த ஆர்யன், உறையவைக்கும் குளிரிலும் “நான் ஆர்யன் அர்ஸ்லான்! உன்னை தேடி வந்துட்டேன்” என்று கத்தியபடி ஓடி ஓடி அலைந்தான்.

“நீ எங்க இருக்கே? ஒரு குரல் கொடு” என்று பரிதவித்தான். வாயில் புகை வரும் குளிரிலும் சுற்றி அலைந்து ஓடியவன் இறுதியில் நடுக்காட்டில் நிராசையுடன் நின்றான். “யா அல்லாஹ்! நான் எந்த திசையில் போக? எனக்கு ஒரு வழி காட்டுங்க! ஒரே ஒரு குறிப்பு கொடுங்க!” என்று கண்மூடி இறைவனை வேண்டி நின்றான்.

அவன் கண் திறக்கவும் அவன் எதிரே இருந்த மரத்தின் மீது படிந்த இரத்தக்கறை அவன் கண்ணில் பட்டது. அதன் அருகே ஓடியவன் மண்ணிலும் மரங்களில் தெரிந்த தடயத்தை பின் தொடர்ந்தான்.

ஒருகட்டத்திற்கு பின் எந்த கறையும் தெரியாமல் போக “டிடெக்டிவ்! நீ எங்க இருக்கே? நான் பேசுறது கேட்குதா?” என்று ஆர்யன் இரைய, ஒரு பள்ளத்தில் விழுந்து கிடந்த மொய்தீனுக்கு அது நன்றாக கேட்டது. மயக்கம் தெளிந்து கண்விழித்த அவன் “நான் இங்க இருக்கேன்” என குரல் கொடுத்தான்.

குளிரில் விரைத்திருந்த அவன் தொண்டையில் இருந்து சத்தம் மெல்லவே வெளிவந்தது. அது ஆர்யனை சென்றடையவே இல்லை. ஆர்யன் திரும்பி நடக்க மொய்தீன் தன்னிடமிருந்த லைட்டரை கொண்டு நெருப்பு மூட்ட முயற்சி செய்தான்.

மிகுந்த சிரமத்திற்கு இடையே பனியில் நனைந்த உதிர்ந்த இலைகளை பற்ற வைக்க அவன் எடுத்த இமாலய பிரயத்தனம் இறுதியில் வெற்றிப்பெற்றது.

சருகுகள் பற்றி எரிந்து ஆர்யனை அழைக்க, தெய்வச்செயலாக திரும்பி பார்த்த அவன் குதித்தோடி வந்தான். பலவீனமாக கிடந்த மொய்தீனை தூக்கி அமர வைத்தான். “மொய்தீன்! கண் திற!” என்று தட்டி எழுப்பினான். தன் சால்வை கொண்டு அவனின் காயத்தின் உதிரப்போக்கை தடுத்து நிறுத்தினான்.

“இறந்து விடாதே! நான் வந்துட்டேன்! ஆர்யன் அர்ஸ்லான்! உன்னை காப்பாற்றுறேன்!” என்று ஆர்யன் அவனை உலுக்க, இருமியபடி எழுந்த மொய்தீன் “என் கதை முடிந்தது. நான் செய்த வேலைக்கு சரியான தண்டனை கிடைத்தது” என ஒவ்வொரு வார்த்தையாக பேசினான்.

“அந்த போட்டோல இருக்கற பொண்ணு… ருஹானா…”

“ஆமா.. அவளுக்கு என்ன? சொல்லு! அமைதியா இருக்காதே!”

“அவ.. அவ..” குரல் மெலினப்பட்டு தேய்ந்தது.

“சொல்லு, நிறுத்தாதே! அவ நிரபராதின்னு சொல்லு! அவ குற்றம் செய்யாதவன்னு சொல்லு! என்ன நடந்ததுன்னு சொல்லு!” என ஆர்யன் காதை கொண்டு போய் அவன் வாயருகே வைத்துக்கொண்டு துடித்தான்.

மூடிய கண்கள் திறக்கவே இல்லை. அவனின் உடல் இயக்கமற்று போக, ஆர்யன் அவன் இதயத்தில் காதை வைத்து பார்த்தான். அது வேலையை நிறுத்தி இருக்க வேகமாக முதலுதவி செய்தான். எந்த பயனும் இல்லை.

ஆர்யனும் செயலற்று அவன் அருகே அமர்ந்துவிட்டான். அவன் கண்கள் மொய்தீனின் தனியே கிடந்த வலது கையை பார்த்தது. அவனின் கைவிரல்கள் மடக்கப்பட்டு சுட்டுவிரல் மட்டும் ஒரு இடத்தை சுட்டிக் காட்டியது. உடலில் புது இரத்தம் பாய வேகமாக எழுந்த ஆர்யன் அவன் விரல் சுட்டிய இடத்தை பார்த்தான்.

அது ஒரு பாழடைந்த கிடங்கு. அதை நோக்கிய ஓடிய ஆர்யன் உள்ளே சென்று அங்குமிங்கும் தேடினான். இரத்தத்தால் நனைந்திருந்த துணிகள் கிடக்க, “இங்க தான் தங்கி இருந்திருக்கிறான்” என சொல்லிக்கொண்ட ஆர்யன் அந்த இடத்தையே தலைகீழாக புரட்டினான்.

ஒருமணிநேர போராட்டத்திற்கு பின்னும் அவன் விடாமல் நம்பிக்கையோடு தேட, அங்கே கிடந்த ஒற்றை சோபாவை புரட்டி பார்த்தான். அதன் பின்பாகம் கையால் நூல் கொண்டு தைக்கப்பட்டிருந்தது.

அதை கிழித்து எடுத்த ஆர்யனுக்கு அவன் வாழ்க்கையே கையில் வந்து விழுந்தது. பத்திரமாக மூடியிருந்த உறையில் அசல் ஆவணங்கள் அனைத்தும் இருந்தன. லண்டன் கையெழுத்து நிபுணரின் பெயர் அட்டையை பார்த்ததுமே அவன் நடுங்கிப் போனான்.

“அது எல்லாமே பொய்! என்ன செய்துவிட்டேன் நான்? ஒரு தப்பும் செய்யாதவளுக்கு மகாபாதகம் செய்துவிட்டேனே!”

மண்ணில் மண்டியிட்டவன் கண்களில் நீர்பொங்க தலையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.

(தொடரும்)

Advertisement