Advertisement

இவானுக்கு காலைஉணவு கொடுத்து அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த ருஹானாவிற்கு நேற்றிரவு உணவு மேசையில் ஆர்யன் அவளை முதுகில் குத்தும் துரோகி என்று சொன்னது அப்போதும் வலித்தது. ‘நான் அத்தனை கேவலமானவளா? அப்படியா என்னை நினைச்சீங்க?’

பின் அதை துடைத்து எறிந்தவள் ‘அல்லாஹ்! இவானை மட்டும் என்கிட்டே இருந்து பிரிச்சிடாதீங்க! நீங்க தான் எல்லாத்துக்கும் சாட்சி! நீங்களே குற்றமற்றவரை காப்பாத்துங்க!’ என்று மனதில் பிரார்த்தனை செய்தாள்.

அவளின் வாடிய முகத்தை கண்ட இவான் “சித்தி என் கையில இருந்த தடிப்புலாம் மறைஞ்சிடுச்சி, பாருங்க! நீங்க இனிமேல் வருத்தப்படாதீங்க” என்று தேற்ற, அவனை அணைத்து முத்தமிட்டாள்.

அவன் கேட்ட சூப் செய்ய வெங்காயம் வெட்டிக்கொண்டு இருந்த ருஹானாவின் அருகே வந்து அமர்ந்த ஆர்யன் அவளை கண்கொட்டாமல் பார்க்க ஆரம்பித்தான்.

“சித்தப்பா! நாங்க உருளைக்கிழங்கு வச்சி பெயின்ட் செய்யப் போறோம் சித்தி எனக்கு சொல்லி தருவாங்க!” என்று சொல்ல, அவனிடம் தலையாட்டிய ஆர்யன் பார்வையை அவளிடமிருந்து திருப்பவில்லை.

அடுத்து காய்கறிகளை வெட்டிய ருஹானா ஆர்யனை முறைத்துக்கொண்டே, “அன்பே! உனக்கு கேரட் வேணுமா?” என்று கேட்டு இவானுக்கு தோல்சீவிக் கொடுத்தாள். அப்போதும் அவன் பார்வை மாறவில்லை.

“இப்படித்தான் ரொம்ப அழுத்தாதே!” என உருளைக்கிழங்கை இவான் கையோடு பிடித்து ருஹானா கற்றுக்கொடுக்க, வரவேற்பறை சோபாவில் அவர்களோடு அமர்ந்திருந்த ஆர்யன் கண்சிமிட்டாமல் அவள் முகத்தை பார்த்திருந்தான். ருஹானா அவனை கேள்வியாக முறைக்க, ஆர்யன் சிறிதும் அசந்தான் இல்லை.

“சித்தி! நான் தண்ணீ குடிச்சிட்டு வரேன்!” என்று இவான் எழுந்து செல்ல, “எதுக்கு என்னை உத்து பார்த்துட்டு இருக்கீங்க?” என்று அவள் கேட்க, “உன்னோட சுயரூபத்தை பார்க்க முயற்சி செய்றேன்!” என்று பதிலளித்தான் ஆர்யன்.

“இன்னும் அது உங்களுக்கு தெரியலயா? நல்லா பாருங்க! நீங்க எனக்கு தந்த ஏமாற்றம் நல்லா தெரியுதா? அங்க அதை தவிர வேற எதுவும் இருக்காது” என்று கத்திவிட்டு எழுந்த ருஹானா உள்ளே சென்றாள், அவனை திட்டியபடி. ‘உண்மையை தேடுறாராம்… எனக்கு தான் நீங்க யாருன்னு தெரியல. நான் எங்க போய் தேட?’

சோபாவில் அமர்ந்திருந்த ஆர்யனும் ‘உன் கண்ணுல எனக்கு ஒரு பொய்யும் தெரியலயே! நான் என்ன குருடனா? இல்ல, நீ உண்மையிலயே நல்லவளா? யார் நீ?’ என்று கேட்டுக்கொண்டான்.

இருவரும் ‘யார் நீ? யார் நீ?’ என்று குழம்பினார்கள். குழப்பம் தீர்வை கொண்டு வருமா?

ஆர்யன் அவளின் சுயரூபத்தை தெரிந்துகொள்ளும் நேரம் ருஹானாவை விட அவன் தான் பலமடங்கு துன்பம் கொள்வானோ?

———-

“சொல்லு ரஷீத்!”

“நான் லாயர்ஸ்ட்ட பேசிட்டேன். அவங்க இது நமக்கு கிடைத்த நல்ல வாய்ப்புன்னு சொல்றாங்க இவான் கஸ்டடி உங்களுக்கு வர சாத்தியம் அதிகம்ன்றது இவங்க அபிப்பிராயம். கேஸ் பைல் செய்ய சொல்லவா, ஆர்யன்?”

‘உன்னோட இதயம் சொல்வதை கேள்!’ அம்ஜத் ஆர்யனின் காதில் பேசினான்.

“ஆர்யன்! லைன்ல இருக்கீங்களா?”

“நான் அப்புறம் உன்னை கூப்பிடுறேன், ரஷீத்!” என்று உள்ளே வந்த ஆர்யன் அலமாரியை அடுக்கிக்கொண்டு இருந்த ருஹானாவை பார்த்தான். அவளது கள்ளமில்லா முகம் அவனை நெகிழ்த்தியது. அவன் இப்போது என்ன சொல்வானோ என பயந்து அவள் உடையை இறுக்கமாக பிடித்திருப்பதை கண்டு அவள் மேல் இரக்கம் கொண்டான்.

அவன் போன் ஒலிக்க அதில் மொய்தீனின் தீனமான குரல் கேட்டது. “மிஸ்டர் ஆர்யன்! அவ என்னை கொல்ல பார்த்தா! சல்மா….! உங்களுக்கு உண்மை தெரியக்கூடாதுன்னு என்னை ஆளை வச்சி சுட்டுட்டா! என்னை காப்பாத்துங்க! என்கிட்டே உங்களுக்கு தேவையானது இருக்கு.”

விட்டு விட்டு மொய்தீன் பேச, “நீ எங்க இருக்கே, சொல்லு?” என்று ஆர்யன் பதட்டப்பட, ருஹானா “என்ன?” என்று அவன் அருகே வந்தாள். அவனை கைநீட்டி தடுத்த ஆர்யன் “பேசு! பேசு!” என கத்திக்கொண்டே வெளியே சென்றான்.

“எனக்கு நடக்க முடியல. என்னை தேடி சுத்திட்டு இருக்காங்க. என்னால வெளிய வர முடியாது.”

“நீ இருக்கிற இடம் பத்தி எதாவது ஒரு குறிப்பு கொடு. நான் உடனே வந்து உன்னை காப்பாத்துறேன்” என்று ஆர்யன் கேட்கும்போதே தொடர்பு அறுந்தது. ஆர்யன் அந்த எண்ணுக்கு அழைக்க, மறுபக்கம் பதிலில்லை.

‘ஏதோ தப்பா நடந்திருக்கு’ என்று அறையில் இருந்த ருஹானா கவலையில் ஆழ்ந்தாள்.

———–

“சல்மா!” என்று கத்திக்கொண்டே ஆர்யன் அவளது அறைக்கு செல்ல அங்கே அவள் இல்லை. துப்பு எதும் கிடைக்கிறதா என்று ஆர்யன் அவள் அலமாரியில் மேசையில் தேடினான்.

இவன் அவளை அவ்வளவு எளிதாக எடைபோட்டுவிட்டானா? அவள் எவ்வளவு பெரிய பாதகி என அவனுக்கு தெரியவில்லை. சிறுவயதில் இருந்து அவளை பார்ப்பதால் அவளது அபாயகரமான கொடூரத்தனம் அவனுக்கு புரியவில்லை.

சத்தம் கேட்டு பயந்துக்கொண்டே கரீமா உள்ளே வர, ஆர்யன் அவளிடம் இரைந்தான். “சல்மா எங்க? எங்க போய்ட்டா அவ?”

“’ஏன் ஆர்யன்? அவ அழகு நிலையம் போயிருக்கா. என்ன விஷயம்?”

“அவளுக்கு கால் செய்ங்க. இப்பவே வர சொல்லுங்க!”

‘சல்மா! போனை எடுக்காதே!’ என்று மனதில் சொல்லிக்கொண்டே கரீமா தங்கைக்கு அழைப்பெடுத்தாள்.

“போனை ஸ்பீக்கர்ல போடுங்க!”

முழு மணிசத்தமும் முடிய, சல்மா போனை எடுக்கவில்லை.

“என்ன நடக்குது ஆர்யன்? ஏன் நீ கோபமா இருக்கே?”

“சல்மா ஆளை அனுப்பி டிடெக்டிவ்வை கொல்ல முயற்சி செய்திருக்கா! அவனே எனக்கு போன் செய்து சொன்னான்.”

இப்படியா இவளிடம் நடந்தது எல்லாம் சொல்வான்? சல்மாவை பற்றியே தெரிந்து கொள்ளாதவன் நடிப்பு அரசி கரீமாவை பற்றி எப்படி அறிவான்? உயிரான அண்ணனை காப்பாற்றிய கரீமாவை எப்படி தப்பாக நினைப்பான்?

“என்ன சொல்றே? சல்மாவா?”

“ஆமா, அவளை உடனே வர சொல்லுங்க! அவ எங்க போய் ஒளிஞ்சி இருந்தாலும் நான் அவளை கண்டுபிடிச்சிடுவேன்” என்று சொல்லி அவன் வெளியே செல்ல, கதவை மூடிக்கொண்ட கரீமா தங்கையின் அலைபேசி எண்ணை தட்டினாள்.

வெளியே வந்த ஆர்யன் ரஷீத்தை அழைத்தான். எடுத்தவுடன் ரஷீத் “ஆர்யன்! உங்க உத்தரவுக்காக காத்திருக்கேன். நீதிமன்றத்துக்கு கஸ்டடி கேஸ் கொண்டு போய்டலாமா?” என்று நேரம் காலம் புரியாமல் கேட்டான்.

“ரஷீத்! நான் சொல்றதை கேளு. டிடெக்டிவ் போன் செய்தான். அவனுக்கு அடிபட்டு இருக்கு. அவனை உடனே கண்டுபிடிக்கணும். உனக்கு கேட்டுச்சா? உடனடியா!”

“அவன் உயிரோட இருக்கானா?”

படிக்கட்டில் இறங்கிக்கொண்டே “ஆமா, நீ டிடெக்டிவை கண்டுபிடிச்சா எல்லாமே மாறிடும். நான் இழந்த எல்லாம் எனக்கு திரும்ப கிடைச்சிடும்” என்று ஆர்யன் பேச, அவன் பின்னால் வந்த ருஹானா அதை கேட்டாள்.

‘டிடெக்டிவா? அவன் என்ன திருப்பி கொடுப்பான்? என்ன என்கிட்டே இருந்து மறைக்கிறீங்க?’ என்று யோசித்துக்கொண்டு நின்ற ருஹானாவை இவான் அழைத்தான். “சித்தி! என் சிண்டுபொம்மை ஜன்னல் வழியா வெளிய விழுந்துடுச்சி. நாம தோட்டத்தில போய் எடுப்போமா?” என்று அவளை கைப்பிடித்து வெளியே அழைத்து சென்றான்.

————

“இடியட்! போனை எடு. நாம தொலைஞ்சோம். ஆர்யன் நம்மை கொன்னு புதைக்கப் போறான்!”

சல்மா எடுக்காததால் பல்லைக் கடித்துக்கொண்டு உறுமிய கரீமா அழகுநிலையத்துக்கு அழைத்து சல்மா சென்றுவிட்டாள் என தெரிந்துகொண்டபின் சல்மாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

‘மொய்தீன் உயிரோட இருக்கான். ஆர்யனுக்கு போன் செய்து நீ தான் அவனை கொலை செய்ய சொல்லியிருக்கேன்னு சொல்லிட்டான். நான் சொல்றவரை மாளிகைக்கு திரும்பி வராதே!’

———–

“சித்தி! நீங்க இந்த பக்கம் தேடுங்க. நான் அப்படி பார்க்கறேன்” என்ற இவான் “சிண்டு! நீ எங்க போயிட்டே?” என்று அழைத்துக்கொண்டே சென்றான்.

ருஹானா நகராமல் ஆர்யனின் பதட்டம் பற்றி யோசித்துக்கொண்டு நிற்க, மேன்மாடத்தில் நின்ற ஆர்யன் அவளை பார்த்தான்.

தோட்டக்காரன் அவளுக்கு வெள்ளை ரோஜாவை கொண்டு வந்து கொடுக்க, அவள் புன்னகையுடன் நன்றி சொல்லி பெற்றுக்கொண்டாள்.

ஆர்யன் பின்னால் வந்து அவன் தோளை தொட்ட அம்ஜத் “வெள்ளை ரோஜா பவித்ரமானது, ருஹானாவைப் போல. அவளுக்கு டெய்சி மலர் தான் பிடிக்கும். ஆனா வெள்ளை ரோஜா தான் அவளுக்கு பொருத்தமானது. அப்படித்தானே ஆர்யன்?” எனக் கேட்க, ஆர்யன் தலையாட்டினான்.

“எனக்கு நிறைய வேலை இருக்கு. நானும் தோட்டக்காரனும் சேர்ந்து அந்த விஷச்செடி தோட்டத்தில வேற எங்கயாவது இருக்கான்னு தேடி எடுத்து புதைக்கணும். இல்லனா நம்ம தோட்டமே அழிஞ்சி போய்டும்” என்று சொல்லிவிட்டு அம்ஜத் செல்ல, ஆர்யனுக்கு தோட்டக்காரன் நஞ்சு செடியை கொண்டுவந்து வைத்துவிட்டு சல்மாவை பார்த்தது ஞாபகம் வந்தது.

ரஷீத் போனில் அழைக்க, “கிடைச்சானா?” என்று ஆர்யன் ஆவலோடு கேட்டான்.

‘தேடிட்டே இருக்கோம், ஆர்யன்! முயற்சி செய்திட்டே இருக்கோம்.”

“முயற்சிலாம் இல்ல. கண்டுபிடி! எனக்கு உண்மை தெரியணும்” என்று ஆர்யன் சத்தமாக பேசும்போது ருஹானாவும் இவானும் தோட்டத்திலிருந்து உள்ளே வந்தனர்.

“அவன் எல்லாத்தையும் மாத்திடுவான். எனக்காக… இவானுக்காக.. அவனோட சித்திக்காக… எல்லாம் மாறும். ரஷீத்! தீவிரமா வேலை செய்” என்று ஆர்யன் சொன்னதை கேட்ட ருஹானா ‘திரும்ப இவானை என்கிட்டே இருந்து பிரிக்கப் போறாரா?’ என விக்கித்து நின்றாள்.

உள்ளே சென்ற ருஹானாவின் எதிரே கரீமா வர அவளிடம் அது பற்றி விசாரித்தாள். “அவர் தேடிட்டு இருக்கிற டிடெக்டிவ் பற்றி எதும் உங்களுக்கு தெரியுமா, கரீமா மேம்? அது நான் சம்பந்தப்பட்டதுன்னு எனக்கு தோணுது.”

வேறு எதுவும் ருஹானாவிற்கு தெரியாது என விசாரித்து அறிந்துக்கொண்ட சல்மா “இல்ல ருஹானா டியர்! ஆர்யன் வாழ்க்கை மர்மம் நிறைந்தது. ஒருசமயம் அவன் திருடனை தேடுவான், சிலசமயம் போலீஸ்ஸ.. அதனால நீ கவலைப்படாதே! உனக்காக இல்ல, அது அவன் வேலையில இருக்கற பிரச்சனை” என்று சொல்ல, ருஹானா சந்தேகம் தீராமலேயே சென்றாள்.

அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த அம்ஜத் “எல்லாம் அந்த ஃபைலால தான். ஆர்யன் அதுக்காக தான் தேடிட்டு இருக்கான். எல்லார் அமைதியும் கெட்டுப் போச்சி” என்று தலையை பிய்த்துக்கொண்டான்.

———

Advertisement