Advertisement

“என்ன சல்மா? பிரமாதமா டிரஸ் செய்திருக்கே! எங்கயாவது வெளியே போறியா?”

“இல்ல அக்கா! மகாராணியை வழியனுப்ப தான்!”

“இத்தனை சீக்கிரம் நாம இதை கொண்டாடக்கூடாதுன்னு எனக்கு தோணுது. ஆனா என்னாலயும் மகிழ்ச்சியை அடக்க முடியல!”

“ஆமா அக்கா! அந்த குப்பை தன் தலையில தானே குப்பையை அள்ளிப் போட்டுக்கிட்டா. நமக்கும் தொல்லை விட்டது.”

“நீ சொன்னபடி பார்த்தா ஆர்யன் மொய்தீனை தேடுறதை கைவிட்டுட்டான். தாதி சித்தியையும் சீக்கிரமே அர்ஸ்லான் மாளிகையை விட்டு துரத்தப் போறான்.”

“நல்லவேளையா மொய்தீனும் செத்து ஒழிஞ்சிட்டான், அக்கா! எல்லா பக்கமும் நமக்கு வெற்றி தான்!”

“அதுமட்டுமா? அவனுக்கு உண்மையை உணர வச்சதுக்கு ஆர்யன் உனக்கு நன்றி சொல்வான். இனி நீ எது சொன்னாலும் நம்புவான்.”

“வா அக்கா! சீக்கிரம் கீழே போய் அவங்க முகங்களை பார்க்கலாம்!”

——–

“சாப்பிடும்முன்ன இவ்வளவு தண்ணி குடிக்காதே, ஆர்யன்! நல்லது இல்ல.”

“எனக்கு பழக்கமாகிடுச்சி, அண்ணா!”

“சிலபேர் உண்மையை ஏத்துக்க மாட்டாங்க, அம்ஜத் அண்ணா! அவங்க பழக்கத்தையும் மாத்திக்க மாட்டாங்க. அவங்க செய்றது தான் சரின்னு சொல்வாங்க” என்று ருஹானா சொன்னவுடன், ஆர்யன் வீம்புக்காக மீண்டும் தண்ணீர் எடுத்து குடித்தான்.

“அதிக தண்ணீர் கிட்னிக்கும் நல்லது இல்ல. அது இதயத்தையும் பாதிக்கும்.” அவள் மறுபடியும் சொல்லிப் பார்த்தாள். “ஆனா தண்ணியை விட இதயத்துக்கு கெடுதல் செய்றது வேற இருக்கு” என்று சொன்னவன் இன்னும் எடுத்து குடிக்க, சகோதரிகளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

“என்னவோ ஆச்சு உனக்கு! ருஹானா கூட சண்டை போட்டியா? உங்க அமைதியை யாராவது கெடுத்துட்டாங்களா, என்ன? ஏன் ஆர்யன்?”

“இப்படிலாம் கணவன் மனைவிக்கு நடுவுல வர்றது சகஜம்தான், அண்ணா! நீங்க பதட்டப்படாதீங்க!”

“ஆர்யன் டியர்! கேள்விப்பட்டியா? ஜியா குடும்பத்துல அவங்க மேனேஜரே கோடிக்கணக்கான பணத்தை சுருட்டிட்டு ஓடிட்டான்” என்று கரீமா, ஆர்யனின் கோபத்திற்கு மேலும் மசாலா சேர்த்தாள்.

“ஆமா அண்ணி! இப்படியும் சில துரோகிங்க இருக்காங்க. முதல்ல படிப்படியா நம்மோட நம்பிக்கையை பெறுவாங்க. அப்புறம் மறைச்சி வச்சிருக்கற அவங்க கத்தியால நம்ம முதுகுல குத்திடுவாங்க” என்று ஆர்யன் ருஹானாவை பார்த்துக்கொண்டே சொல்ல, உடன்பிறந்த நச்சுகள் இரண்டும் மேசைக்கு அடியில் கைகுலுக்கிக் கொண்டன.

“நீங்க சொல்றதும் சரி தான். நாம கவனமா இருக்கணும். ஏன்னா அவங்க நம்ம கூடவே தான் இருப்பாங்க” என ருஹானாவும் அவன் பாடத்தை அவனுக்கே படிக்க, கோபத்தில் அவன் கண்கள் சிவந்தன.

                              ————-

“எத்தனை முறை உனக்கு சொல்லியிருக்கேன், மத்தவங்க முன்ன ஒழுங்கா நடந்துக்கோன்னு!”

“நீங்க என் மேல பழி போட்டா நான் மௌனமா இருப்பேனா? ஏன் என் வாழ்க்கையை இப்படி நரகமாக்கறீங்க? பட்டாம்பூச்சி சிறகடிக்கும், எல்லாம் சரியாகிடும்னு நீங்க சொன்னதை நம்பி இருந்தேனே! இப்போ என்ன பட்டாம்பூச்சி மாத்தி பறந்திடுச்சா? எல்லாம் தலைகீழாக மாறுது!”

“எந்த பட்டாம்பூச்சின்னு யாருக்கு தெரியும்?” அவன் இகழ்ச்சியாக சொன்னான்.

“உங்களோட ஒரே அறையில இருக்கறது எனக்கு மூச்சு முட்டுது!” என்ற ருஹானா படுக்கையறையிலிருந்து வெளியேறப்போக, அவள் கையை பிடித்து தடுத்த ஆர்யன் “நீ இரு, நான் போறேன்!” என்று கதவருகே சென்றவன் அவளை திரும்பி முறைத்துவிட்டு கதவை மூடினான்.

ருஹானா தளர்ந்து போய் கட்டிலில் அமர்ந்தாள்.

தொடர்பின் எல்லையில் நின்றுகொண்டு

திரும்பி பார்க்கிறாய், சென்றுவிடு!

உன் கண்ணில் இல்லாத ஈரத்தைவிட

பிரிவு ஒன்றும் எனக்கு துயரில்லை. 

————

“அவங்க அமைதியை இழந்துட்டாங்க! ஏதோ நடந்திருக்கு” என சொல்லிக்கொண்டே இருந்த அம்ஜத்திற்கு, சட்டென நினைப்பு வர மேல்மாடி தோட்டத்திற்கு ஓடினான். அங்கே அவன் கோப்பை மறைத்து வைத்திருந்த தொட்டியில் தேடினான்.

“அது இங்க இல்ல! அதால தான் எல்லாம் இப்படி! ஆர்யனுக்கு கிடைச்சிருக்கு! ஆனா ருஹானா அப்படி செய்ய மாட்டா! ஏன்னா அவ நல்லவ! ஆர்யனுக்கு அது புரியணும்! அவன் புரிஞ்சிப்பான்! ருஹானா நல்லவ!” என சொன்னதையே சொல்லிக்கொண்ட அம்ஜத் கீழே எட்டிப்பார்க்க, அங்கே அம்புகளை விடுத்துக் கொண்டிருந்த ஆர்யன் கண்ணில் பட்டான்.

தம்பியை நோக்கி வந்த தமையன் “நீ உன் அமைதியை இழந்திட்டே!” என்று கண்ணீருடன் சொல்ல “இல்ல அண்ணா! நான் ஓகே தான்!” என்று ஆர்யன் சொல்லியும், “நீ ஏன் ருஹானாவை இப்படி நடத்துறேன்னு எனக்கு தெரியும்! அந்த நீலநிற ஃபைல்!” என்று சொல்ல, ஆர்யன் பேரதிர்ச்சி அடைந்தான்.

“அதுல இருந்தது உண்மை இல்ல! அதை நான் மறைச்சி வச்சேன்! ஏன்னா அதெல்லாம் பொய்! நான் எதையும் நம்பல! உன் கண்ணுல படக்கூடாதுன்னு புதைச்சி வச்சேன். ஆனா சல்மா உன்கிட்டே கொடுத்திட்டாளா? அவ தான் அதை வச்சிருந்தா! ஏன் அப்படி செய்தா? அவ நம்ம நிம்மதியை கெடுத்திட்டா!”

“ஒன்னுமில்ல அண்ணா! நீங்க கவலைப்படாதீங்க! எல்லாரும் நல்லா தான் இருக்கோம். நீங்க அமைதியா இருங்க!” என்று ஆர்யன் அவன் கையை பிடித்தான்.

“அதை நம்பாதே ஆர்யன்! அது பொய்! ருஹானா இப்படி செய்யமாட்டா! அவ நல்லவ!”

உடல்வலிமையில் குறையிருந்தாலும் தம்பியை விட அண்ணனே அறிவாளி!

“அண்ணா! நாம அமைதியை இழக்கல. ஆனா அந்த பைல்ல இருந்தது உண்மை” என்று ஆர்யன் சொன்ன வினாடி “இல்ல, இல்ல, இல்ல…………..” என நூறு முறைக்கு மேல் அம்ஜத் கத்தினான்.

“அண்ணா!” என ஆர்யன் அவனை அணைத்துக்கொள்ள, தம்பியை உதறினான்.

“எனக்கு நினைவு வருது…. நீ என்கிட்டே சொல்லுவியே, நீங்க உணர்ந்து சொன்னா அது உண்மையா தான் இருக்கும் அண்ணா அப்படின்னு. இப்போ நான் சத்தியத்தை உணர்றேன்! நீ பொய்க்கு பலியாகிட்டே! ருஹானா உண்மை! அவ தப்பு செய்யமாட்டா! நான் அமைதியாகிட்டேன்! என் அறைக்கு போறேன்! ஆனா நீ உணர், ஆர்யன்! உணர்ந்து பார்! உன் இதயம் சொல்றதை கேள்! தனியா யோசி! ருஹானா எப்படின்னு உனக்கு புரியும்!”

“சரி அண்ணா!” என்ற ஆர்யன் “அண்ணா! அவளுக்கு இந்த ஃபைல் பற்றி எதுவும் தெரியாது. தெரியவும் கூடாது!” என எச்சரித்தான்.

“நான் சொல்லமாட்டேன்! அவ துயரப்படுவா! நான் அவளுக்கு சொல்லமாட்டேன்! ஏற்கனவே நீ அவளுக்கு அதிக துன்பம் தந்திட்டே! நான் அப்படி செய்யமாட்டேன்!” என்று சொன்ன அம்ஜத், ஆர்யனை நெஞ்சை தொட்டு “இங்க இருந்து யோசி! அப்போ தான் அவளை பற்றி உனக்கு தெரியும்!” என்று சொல்லி சென்றான்.

முன்பு ருஹானாவின் முகபாவனைகளிலும், குரல் பேதத்திலும் அவளின் எண்ணங்களை தெரிந்துகொள்ள முடிந்த ஆர்யனால், இப்போது அம்ஜத் புரிந்துகொண்ட அளவுக்கு கூட அவள் மேல் நம்பிக்கை வரவில்லையா?

———-

அதிகாலையில் வில்லோடு உள்ளே வந்த ஆர்யன் சோபாவில் அசந்து உறங்கும் ருஹானாவின் முகத்தை பார்த்தப்படி நின்றான். அவள் அடிபட்ட பறவைக்கு உதவியது முதல் அம்ஜத்தை பரிவோடு கவனித்த செயல் வரை அவளது எல்லா நல்ல குணங்களையும் நினைவுப்படுத்திக் கொண்டான்.

பின் அலுவல் அறைக்கு வந்தவன் வில்லை மாட்டிவிட்டு அவனை புழுவாய் அரிக்கும் நீலவண்ண கோப்பை எடுத்துக் கொண்டு அமர்ந்தான். மிஷாலும் ருஹானாவும் சேர்ந்து இருக்கும் அத்தனை படங்களையும் வெறுப்போடு பார்த்தவனுக்கு அவளை மிஷால் அணைத்திருக்கும் படத்தை கண் கொண்டு நோக்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டான்.

அவற்றை தூக்கிப் போட்டவன் ருஹானா தஸ்லீமுக்கு எழுதிய கடிதங்களை படித்துப் பார்த்தான். ஒரு கடிதத்தில் இருந்த தேதியை கவனித்தவனுக்கு அதே தேதியில் அவள் நோய்வாய்ப்பட்டு இருந்ததை மருத்துவமனையில் வைத்து ருஹானா அம்ஜத்திடம் சொன்னது நினைவுக்கு வந்தது.

“அவளுக்கு அவ்வளவு உடம்பு சரியில்லன்னா அவ அக்காட்ட சொல்லியிருப்பாளே! அந்த நேரம் வந்த கடிதம் தானே இது?” என்று யோசனையில் ஆழ்ந்தான். அதே நேரம் படுக்கையறை கதவு திறக்கப்பட, வேறொரு கோப்பை கொண்டு அவசரமாக எல்லாவற்றையும் மூடினான்.

ருஹானா அவனை கண்டுகொள்ளாமல் வெளியே செல்ல நடக்க, “நான் உன்கிட்டே ஒன்னு கேட்கணும். ஹாஸ்பிடல்ல இருக்கும்போது நீ அண்ணன்ட்ட ஏதோ சொன்னியே!” என்று அவளை நிறுத்த, “அது பொய்யா இருக்கலாம். நான் சொல்ற எல்லாமே பொய் தானே?” என்றாள் முகத்தில் அடித்தது போல.

அவளின் பதிலடியில் அவன் கோபமாக பார்க்க “காலைலயே எனக்கு ஒரு புது சண்டை ஆரம்பிக்கவேணாம். இவானை தவிர வேற எதைப்பற்றியும் என்கிட்டே பேசாதீங்க! அதான் ரெண்டு பேருக்கும் நல்லது” என்று கடுப்பாக சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

ஏமாற்றத்துடன் திரும்ப எல்லாவற்றையும் ஆராய்ந்தவனுக்கு ஜாஃபர் காபி கொண்டுவந்து தர, அவனிடமும் அதை சொல்லி அதே சந்தேகத்தை கேட்டான். “எனக்கு உண்மை வேணும், ஜாஃபர்!” என்றவனுக்கு ஜாஃபர் எளிமையான தீர்வு ஒன்றை சொன்னான்.

“அவங்க கண்ணை பாருங்க, சார்! வேற எது பொய் சொன்னாலும் கண்கள் உண்மையை தான் சொல்லும்!”

———

Advertisement