Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                அத்தியாயம் – 129

கட்டிலில் அமர்ந்திருந்த ருஹானா அவர்களது திருமணப் புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொண்டு “நான் எப்படியும் உங்ககிட்டே சொல்லித்தான் ஆகணும்” என்று போலி அடையாள அட்டையைப் பற்றி ஆர்யனிடம் பேச தைரியத்தை திரட்டிக்கொண்டு காத்திருந்தாள்.

அவள் எதிர்பாராத நேரத்தில் ஆர்யன் கதவை திறந்துகொண்டு உள்ளே வரவும், அவள் வேகமாக எழுந்துகொள்ள மடியில் இருந்த புகைப்படம் கீழே விழுந்தது.

கனிவுடன் அதை பார்த்த ஆர்யன் அதை மேசையில் வைத்துக்கொண்டே “என்கிட்டே நீ ஏதோ சொல்லத் துடிக்கறே! அதுக்கு முன்ன நான் ஒன்னு சொல்லிடறேன். உனக்கு நான் நன்றிக்கடன்பட்டுருக்கேன். என் அண்ணனோட அமைதியான மனநிலைக்கு காரணம் நீதான். இப்போலாம் அவருக்கு அதிகமா மனப்பிறழ்வு தாக்குறது இல்ல. அவரோட பயமும் குறைஞ்சிருக்கு. உன்மேல அவர் நம்பிக்கை வச்சிருக்கார்” என்றான்.

“நீங்க எனக்கு எந்தக் கடனும் படல. என் மனசு என்ன சொல்லுதோ அதைத்தான் நான் செய்தேன்.”

“சரிதான். இப்போ நீ சொல்லு!” என்று ஆர்யன் கேட்க, அவன் நல்ல மனநிலையில் இருக்கும்போதே சொல்லிவிட துணிந்த ருஹானா, “நான்.. இவானுக்காக…” என சொல்லும்போது “சித்தி!” எனும் இவானின் அலறல் கேட்க, இருவரும் வெளியே ஓடினர்.

கீழே இவான் விழுந்து கிடக்க, ருஹானா சென்று அவனை தூக்கி மடியில் வைத்துக்கொண்டாள். “அன்பே! கீழே விழுந்திட்டியா?”

“நான் உங்களை பார்க்க ஓடிவந்தேன். இந்த பொம்மை தடுக்கி கீழ விழுந்திட்டேன். முட்டியில அடிபட்டுடுச்சி, சித்தி!”

“எங்க, காட்டு பார்க்கலாம்?”

கால்சட்டையை முட்டிவரை ஏற்றி காயத்தை காட்டிய இவான், அவன் முன்னே மண்டியிட்டு அமர்ந்திருந்த ஆர்யனை பார்த்து, “நான் பேண்டேஜ் போட்டுக்கறேன் சித்தப்பா!” என்றவன் ருஹானாவிடம் “சித்தப்பா சொன்னது போல நானே என் காயத்துக்கு மருந்து போட்டுக்குவேன்” என்றான்.

இருவரையும் விசித்திரமாக பார்த்த ருஹானா “எதுக்காக அன்பே? நான் தான் உன்கூட இருக்கேனே! நாம சேர்ந்தே செய்யலாம்” என காயத்தை ஊதிவிட்டவள் “பிரியமானவங்களுக்கு காயம்பட்டா நாம உதவி செய்யலாம்” என்றும் சொன்னாள்.

“அப்படியா சித்தப்பா? சித்தி மருந்து போடட்டுமா?”

ஆர்யன் தலையாட்டிவிட்டு எழுந்து கொண்டான்.

“நம்ம காயத்தை யாருக்கும் காட்டக்கூடாது. நாமே தான் மருந்து போட்டு ஆத்திக்கணும். முக்கியமா பெண்களை நம்பக் கூடாதுன்னு முன்னாடி சித்தப்பா சொல்லியிருக்காங்க, சித்தி! ஆனா இப்போ நீங்க மருந்து தடவ சரின்னு சொல்றார். என் சித்தப்பா உங்களை நம்புறார். அப்படித்தானே சித்தி?” என்று இவான் ருஹானாவிடம் கேட்க, அவள் அப்படியா என்பதுபோல ஆர்யனை திரும்பி பார்த்தாள்.

——–

அடையாள அட்டையை கொண்டுவந்தவனிடம் ‘அவள் தான் ருஹானா’ என்று ஏமாற்றி பார்சலை பெற்றுக்கொண்ட கரீமா, ஆர்யனை தேடி வந்தாள்.

ருஹானாவின் மேல் அவன் கொண்ட நம்பிக்கையைப் பற்றி இவான் சொன்னதை யோசித்துக்கொண்டு அமர்ந்திருந்த ஆர்யன், கரீமாவை கேள்வியாக நோக்கினான்.

“ஆர்யன் வேலையா இருக்கியா? இது ருஹானாவுக்காக ஒரு பையன் கொண்டுவந்தான். ரொம்ப முக்கியம், ருஹானாட்ட தான் கொடுக்கணும்னு சொல்லிக் கொடுத்துட்டு போனான். அவளை காணோமே! நீ அவட்ட கொடுத்துடுறியா?” என அதை நீட்டிய கரீமா, அவன் அதை உடனே பிரிப்பான் என ஆவல் கொண்டு அங்கேயே நின்றாள்.

ஆர்யன் அதை மேசையில் வைக்கவும், கரீமா “உனக்கு காபி கொண்டு வர சொல்லவா?” எனக் கேட்டாள். அவன் வேண்டாம் என சொல்ல, அவனை திரும்பிப் பார்த்துக்கொண்டே அறையை விட்டு வெளியேறினாள்.

———

இவானின் காயத்திற்கு மருந்திட்டு அவனை தூங்கவைத்த ருஹானா, ஒரே முடிவாக இவானின் டாலரை பிடித்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள். “நீங்க பிஸியா இல்லனா நான் உங்ககிட்டே ஒன்னு சொல்லணும். நான்…”

“என்ன? என்ன சொல்லப்போறீங்க மும்தாஜ் பேகம் மேடம்? இப்போ என்ன புது கதை ஜோடிச்சிருக்கீங்க?” ஆங்காரமாக கத்திய ஆர்யன் அடையாள அட்டைகளை அவள் முன்னே வீசினான்.

திடுக்கிட்ட ருஹானாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. “நான் சொல்றதை கேளுங்க!”

“இவானோட எங்க தப்பிச்சி போறேன்னு சொல்லப்போறியா? ஆஹ்! உன்னோட ரகசியம் இது தானே? என்மேல வச்ச நம்பிக்கை இல்ல” என்று ரௌத்திரத்துடன் அவன் முன்னேற, அவள் பின்னடைந்து கொண்டே சென்று சுவரில் சாய்ந்து நின்றாள்.

“இல்ல, ப்ளீஸ் கேளுங்க!” பதைப்புடன் கெஞ்சினாள்.

“நீ ஒரு பொய் சொல்லி! துரோகி! உன்னோட நம்பிக்கையும் உன்னைப்போல பொய்தான்! என்னோட அண்ணன் பையனை என்கிட்டே இருந்து தூக்கிட்டு உன்னால ஓடிட முடியும்னா நினைச்சே? இது பலகாலமா நீ போடுற திட்டம்தானே?” என கையை ஓங்கிய ஆர்யன், அவள் அருகே சுவற்றில் பலமாக குத்தினான்.

“இல்ல, இன்னைக்கு பூரா இதை உங்ககிட்டே சொல்லத்தான் நான் முயற்சி செய்தேன். ஆமா, நான் ஓடிப்போகத்தான் பார்த்தேன். உங்களோட கொடுமை பொறுக்க முடியாம இந்த திட்டம் போட்டேன்தான். ஆனா…”

“என்ன ஆனா? மாட்டிக்கிட்டவுடனே உன் ஏமாற்றுவேலைக்கு சால்ஜாப்பு சொல்றியா? இன்னும் உன்னை நிரபராதின்னு நம்பசொல்றியா? உன்னோட பொய்புரட்டுக்களை இன்னும் கேட்க நான் தயாரா இல்ல” என்று ஆர்யன் விலகிச்செல்ல, கோபமாக அவன் கையை பிடித்து இழுத்து நிறுத்தினாள்.

“நீங்க கேட்டுத்தான் ஆகணும். நீங்க திடீர்ன்னு தலைகீழா மாறிட்டீங்க. நீங்க என்னை துன்பப்படுத்தினது எல்லாம் பொறுத்துக்கிட்டேன். ஆனா இவானை பார்க்கவிடாம என்னை அறையில அடைச்சி போட்டீங்க. அப்போதான் என்னால பொறுக்க முடியல.”

குற்ற உணர்வில் ஆர்யன் தலை குனிய “அதுக்கு இவானை கடத்திடுவியா நீ?” என்று வேகம் குறைந்து கேட்டான்.

“வேற என்ன தான் நான் செய்யமுடியும்? என் இடத்துல நீங்க இருந்தா என்ன செய்திருப்பீங்க? எனக்கு வேற வழி தெரியல. அதுக்கு அப்புறம் இவானோட உடல்நலக்குறைவால நீங்க திரும்ப பழையபடி மாறிட்டீங்க. இவான் நீங்க இல்லாம இருக்கமாட்டான்னு நானும் தெளிவா புரிஞ்சிகிட்டேன். அவனுக்கு நாம ரெண்டுபேருமே தேவை. அதனாலதான் மனசை மாத்திகிட்டேன். இந்த அடையாள அட்டை தேவையில்லன்னு சொன்னேன். ஆனா அதுக்குள்ள அது இங்க வந்துடுச்சி.”

அவளின் பேச்சின் உருக்கத்தில் அதில் இருந்த உண்மையில் ஆர்யனின் மனது அவள் பக்கம் சாயப்பார்க்க, அவனை ஏமாற்ற ருஹானா அமைத்த நாடகங்கள் பற்றி சல்மா சொன்னது அவனுக்கு நினைவு வர, மீண்டும் அவனது குரங்கு புத்தி வேலை செய்தது.

“நான் உன்னை திட்டினதால நீ தப்பிச்சி போக பார்க்கல. ஆரம்பத்துல இருந்தே அதான் உன்னோட திட்டம். உன்னோட அன்பு, பாசம், பரிவு, அக்கறை எல்லாமே நாடகம் தான்!”

“நீங்க கற்பனையா எதையோ மனசுல வச்சிக்கிட்டு, மத்த எதையும் நம்பக்கூடாதுன்னு இருக்கீங்க, காதுலயும் போட்டுக்க மாட்றீங்க! ஆனா உங்க குற்றச்சாட்டுக்குலாம் நான் ஆள் இல்ல! எதை நம்பணுமோ நம்பிக்கோங்க, உங்க இஷ்டம்!” என்று வெறுப்பாக பேசிய ருஹானா வெளியே சென்றுவிட்டாள்.

அவளது அடையாள அட்டையை பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆத்திரம் பொங்கியது. மேசையில் இருந்த கண்ணாடி குடுவையை ஓங்கி தரையில் அடித்தான். “உன்னை போய் நம்ப இருந்தேனே!” என்று அவனுக்கு அவனே திட்டிக்கொண்டான்.

அறைக்குள் வந்த ஜாஃபர், ரஷீத் வந்திருப்பதை அவனுக்கு தெரிவிக்க, அடையாள அட்டைகளை கையில் எடுத்துக்கொண்டு வேகமாக வெளியே நடந்தான்.

வெளியே நின்று அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த சல்மா “பாவம் ருஹானா! எனக்கே உன்னை பார்த்தா பாவமா இருக்கு” என்று உச்சு கொட்டியவள் ஆர்யனை பின் தொடர்ந்து கீழே இறங்கினாள். ஆர்யனும் ரஷீத்தும் பேசுவதை கேட்கும் தூரத்தில் மறைந்து நின்றுகொண்டாள்.

“ஆர்யன்! மொய்தீனை எங்க தேடியும் கண்டுபிடிக்க முடியல.. நாங்க…”

“அதெல்லாம் நிறுத்து ரஷீத்! நமக்கு தேவையும் இல்ல. இந்தா, இந்த போலி அடையாள அட்டையை வக்கீல்ட்ட கொடுத்து கேஸை தொடங்க சொல்லு!”

“ருஹானாவா? அவளா இப்படி செய்தா? ஏன்?”

“ஏன்னா அந்த சூப்மேன் ஓடிப்போய்ட்டான். இவ அவன் பின்னாடியே இவானோட ஓடிப்போக திட்டம் போட்டா. என்கிட்டே மாட்டிக்கிட்டா. இந்த போட்டோவை எனக்கு அனுப்பி என்னை ஏமாத்த பார்த்தா. அதும் நடக்கல” என்று விரக்தியாக சொன்ன ஆர்யன், கோட் பையிலிருந்து ருஹானாவிடம் மிஷால் அடிவாங்கும் படத்தையும் ரஷீத்திடம் கொடுத்தான்.

“இப்போ நான் என்ன செய்யணும், ஆர்யன்?”

“மொய்தீனை தேடுறதை விட்டுடு. போலி அட்டை, ஏமாற்று வேலை.. இதல்லாம் காரணம் காட்டி இவானோட உரிமையை எனக்கு வாங்கமுடியுமான்னு பாரு!”

———-

“இது எனக்கு தேவையே இல்லாதது. மனிதர்கள் மாறவே மாட்டாங்க! நீ முட்டாள், ருஹானா!” என்று தோட்டத்தில் நின்று ருஹானா புலம்பிக்கொண்டு இருக்க, அம்ஜத் அவளை பார்த்ததும் ஆவலாக பக்கம் வந்தான்.

“ருஹானா! இங்க பாரு! நான் இது வாங்கினேன்” என்று ஒரு செடியை காட்ட, “அழகா இருக்கு, அம்ஜத் அண்ணா! உங்க புது மருந்து நல்லா வேலை செய்யுதா?” என அவள் கேட்டாள்.

“ஆமா ருஹானா! ரெண்டுவேளை சாப்பிடுறேன். இப்போ எனக்கு மறந்த விஷயங்கள் நிறைய நினைவுக்கு வருது.”

“மகிழ்ச்சி, அம்ஜத் அண்ணா! உங்களுக்காவது நல்லது நடக்குதே!”

“ஏன் அப்படி சொல்றே? நீ கவலையா இருக்கியா? ஆர்யன் திட்டினானா உன்னை?”

“அதெல்லாம் இல்ல, அம்ஜத் அண்ணா! கவலைப்படாதீங்க! நான் என்ன சொன்னேன்னா கொஞ்ச நாளா எதும் நல்லதா நடக்கல இல்லயா? ஆனா அல்லாஹ் கருணையால இப்போ இவான் உடம்பு சரியாகிட்டு வரான்” என்று சமாளித்தவள் “நான் போய் அவனை பார்க்கறேன்” என்று மாளிகைக்குள் செல்ல, கலங்கிப்போய் இருக்கும் அவளை அம்ஜத் யோசனையாக பார்த்தான்.

———-

Advertisement