Advertisement

அவன் சென்ற சிலநிமிடங்களில் அங்கே இருந்த இருவருக்குள் வாக்குவாதம் முற்றி அடிதடி ரகளையானது. அதைக் கண்ட அம்ஜத் அவன் அமைதியை இழந்துவிட்டான். “சண்டை போடாதீங்க!” என்று பலமுறை சொன்னபடியே அங்கிருந்து எழுந்து வேறு திசையில் நடந்தான்.

“என்னோட அமைதி தொலைந்தது! ஆர்யன்! ருஹானா! நான் போறேன்” என அவன் புலம்பியபடியே நடக்க, அவனின் குரல் நல்லவேளையாக கடையில் நின்றிருந்த ருஹானாவிற்கு கேட்டது.

“அம்ஜத் அண்ணா!” என்று அவள் அவனை நோக்கி வர, அவன் அவளை பாய்ந்து சென்று கட்டிக்கொண்டான்.

“ருஹானா! நல்லவேளை நீ வந்தே! அங்க சண்டை…” என்று அவன் பேச்சு வராமல் தவிக்க, “சரி அண்ணா! நீங்க பயப்படாதீங்க! நான் வந்துட்டேனே!” என்று ருஹானா அவனை தட்டிக்கொடுத்து ஆதரவாக பேச, ஆர்யனும் அவர்களை நோக்கி வந்தான்.

“நான் பயந்துட்டேன்! என்னை இனிமேல தனியா விட்டு போகாதே!”

“இல்ல, போக மாட்டேன்!”

“உங்களுக்கு திராட்சை பழ ஜூஸ் வாங்கிட்டு வந்திருக்கேன். இது ரத்தத்தை வேகமாக உற்பத்தி செய்யும். வாங்க, உட்கார்ந்து இதை குடிங்க!” என ருஹானா அம்ஜத்தை அமர வைக்க, நிம்மதியான ஆர்யனும் அவன் அருகே அமர்ந்து அண்ணனை தோளோடு அணைத்துக்கொண்டான்.

“ஆர்யனும் வந்துட்டான்! ஆர்யன்! நீயும் எங்கயும் போகாதே! ருஹானா எனக்கு ஜூஸ் வாங்கிட்டு வந்தா! எனக்கு பீச் பழம் பிடிக்காதுல? அதான் இது வாங்கிட்டு வந்தா! எனக்கு திராட்சை பிடிக்கும். நான் குடிக்கறேன்” என்று அம்ஜத் அமைதியடைய, அண்ணன்பேரில் ருஹானாவின் பரிவு ஆர்யனுக்கு சந்தோசம் தந்தது.

“இப்போ உங்களுக்கு பரவாயில்லயா?” என்று கேட்டபடி வாங்கி வந்திருந்த மிட்டாயை ஆர்யனுக்கு தந்தாள். “ஆனா இது உனக்கு பிடிச்ச சாக்லேட் ஆச்சே?” என அம்ஜத் கேட்க, ஆர்யன் அதில் பாதியை ருஹானாவிற்கு திருப்பி தந்தான்.

“வாங்கிக்கோ ருஹானா! இனிப்பு சாப்பிடறது சந்தோசம் தரும். ஹாஸ்பிடல் வரும்போது எல்லாம் எனக்கு ஆர்யன் மிட்டாய் வாங்கி தருவான். ஏன்னா எனக்கு ஹாஸ்பிடல் பிடிக்காது.”

“ஏன் அப்படி சொல்றீங்க அம்ஜத் அண்ணா? ஹாஸ்பிடலும் நமக்கு மகிழ்ச்சி தருமே!”

“இல்ல, இல்ல!”

“ஏன் இல்ல? இங்க டாக்டர்ஸ் நம்ம நோயை குணமாக்குறாங்க. நாமளும் நாம நேசிக்கறவங்களும் சந்தோசப்படுறோம்” என்று மிட்டாயை சாப்பிட்டுக்கொண்டே சொன்னவள், அம்ஜத்திற்கு வாயை துடைக்க துணி எடுத்து கொடுக்க, ஆர்யன் அவளை அதிசயமாக பார்த்தான்.

“நீ சொல்றது சரிதான் ருஹானா! இருந்தாலும் நான் அடிக்கடி இங்க வர மாட்டேன். எனக்கு பிடிக்காது. போனவாரம் வந்தோம். முன்ன ஒருமுறை வந்தோம்” என்று கண்களை மூடி யோசித்த அம்ஜத்திற்கு தஸ்லீம் மாடியில் இருந்து கீழே விழுந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட தினம் நினைவிற்கு வந்து பயமுறுத்தியது. “இல்ல, அது இல்ல!” என்று தலையை உதறிக்கொண்டான்.

ஆர்யனும் ருஹானாவும் அவனை கவலையோடு நோக்க “அப்போ இவானோட மூணாவது பிறந்த நாள். நான் நிறைய கேக் சாப்பிட்டேன். என்னோட சர்க்கரை அளவு அதிகமாகிடுச்சி. ரெண்டு நாள் இங்க இருந்தேன்” என்று அம்ஜத் சொல்ல, ருஹானாவின் முகத்தில் வியப்புக்குறி.

“அம்ஜத் அண்ணா! நானும் அந்த நேரம் ஒரு வாரம் ஹாஸ்பிடல்ல இருந்தேன். சிறுநீரக தொற்றால கஷ்டப்பட்டேன். டாக்டர்ஸ் உடனே என்னை குணமாக்கினாங்க. அதான் சொல்றேன், இனிப்பு மாதிரி  ஹாஸ்பிடலும் நல்லது தான்.”

“சரி தான் ருஹானா! இப்போ எனக்கு ஹாஸ்பிடல் பிடிக்குது. அவங்க உன்னை சரிசெய்திருக்காங்க. அதனால தான் நீயும் எங்களுக்கு கிடைச்சே, ஆமா தானே ஆர்யன்?” என்று திரும்பி ஆர்யனிடம் கேட்டான். அவனும் தலையாட்ட ருஹானா வியப்புடன் பார்த்தாள்.

“நீ இல்லனா நாங்க என்ன செய்திருப்போம்? இவான் என்ன ஆகியிருப்பான்? நீ என்ன ஆகியிருப்பே?” என்று அம்ஜத் திரும்பவும் ஆர்யனிடம் கேட்க, அவன் எதுவும் சொல்வதற்கு முன், செவிலிப்பெண் மருந்து சீட்டுடன் வந்தாள்.

“நாம வீட்டுக்கு போகலாமா?” என்று அம்ஜத் கேட்க, ஆர்யன் அதற்கு தலையசைத்தான். ருஹானா அம்ஜத்தை கைப்பிடித்து எழுப்ப “வீடு தான் அழகு! நாம போகலாம், வா ருஹானா!” என்று அவளுடன் நடந்தான்.

ஆர்யன் அவர்களை பார்த்தபடியே பின்தொடர்ந்தான்.

————

ருஹானா அம்ஜத்தை உள்ளே அழைத்துவர அவள் அலைபேசி ஒலி எழுப்பியது.

“நீ போனை பாரு! நான் கூட்டிட்டு போறேன்” என்று அம்ஜத்தின் கை பற்றிய ஆர்யன் “நீங்க ஓய்வெடுங்க அண்ணா!” என்று அவனை மேலே கூட்டி சென்றான்.

“ஹல்லோ!”

“நான் ஷதாப்கான்!”

ருஹானாவிற்கு அடையாளம் தெரியவில்லை. “யாரு?”

“ஷதாப்கான் பேசுறேன். உங்க அடையாள அட்டை ரெடி!”

அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது. “என்னை மன்னிச்சிடுங்க! அது இப்போ எனக்கு தேவையில்ல. பொய்யான அடையாள அட்டை பயன்படுத்தி வெளியேற என் முடிவை நான் மாத்திக்கிட்டேன். அதை நீங்க அழிச்சிடுங்க” என்று அவள் மெல்ல சொல்ல, எதிர்முனை கோபப்பட்டது.

“எதுக்கோ நீ காசு கொடுத்தே, நான் செஞ்சேன். நீயும் அவசரமா கேட்டே! உன் போட்டோ பின்னாடி இருந்த முகவரிக்கு அதை நான் அனுப்பிட்டேன்” என்று அவன் பெரிய கல்லாக அவள் தலையில் தூக்கிப் போட்டான்.

“என்ன முகவரி? அச்சோ! அது நான் வேற காரணத்துக்காக எழுதினது.”

“என்னமோ! நான் ஆள் அனுப்பிட்டேன். கொஞ்ச நேரத்துல உனக்கு கிடைச்சிடும்.”

“இல்ல, நிறுத்துங்க! உங்க ஆளை திருப்பி கூப்பிடுங்க.”

“என்ன விளையாடுறியா? நான் என்ன கொரியர் கம்பெனியா வச்சிருக்கேன்? அதெல்லாம் முடியாது. அது ஒட்டின கவர் தான். அவனுக்கு உள்ள என்ன இருக்குன்னு கூட தெரியாது. நீ வாங்கி கிழிச்சி போட்ரு!”

“தயவு செய்து எதாவது செய்ங்க. இது ஆபத்துல போய் முடியும்” என்று அவள் கெஞ்ச, “சரி, சரி! என்ன செய்ய முடியும்னு நான் பார்க்கறேன்” என்று அவனும் ஒத்துக்கொண்டான்.

“நன்றி! நீங்க நிறுத்திடுவீங்கன்னு நம்புறேன்.”

அவள் போனை வைத்த இரு நிமிடங்களில் திரும்ப ஷதாப்கான் அழைத்தான். “என்ன? முடியாதா? ரெண்டு மணி நேரத்துல வந்துடுவாரா? நான் என்ன செய்யறது? ஹல்லோ! ஹல்லோ..!”

ஷதாப்கான் அலைபேசியை அணைத்து வைத்திட, ருஹானா திரும்பவும் அவனுக்கு அழைக்க, தொடர்பு கிடைக்கவில்லை.

“நான் என்ன செய்யப்போறேன்?” என்று பயந்த ருஹானா கையால் வாயை பொத்திக்கொள்ள, எல்லாவற்றையும் மறைந்திருந்து கேட்ட கரீமா சந்தோசம் தாங்காமல் சத்தம் வராமல் சிரித்தாள்.

ருஹானா ஜாஃபரிடம் சென்று உதவி கேட்டாள். தனக்கு ஒரு முக்கியமான பார்சல் வரப்போவதாகவும் அது வந்தால் தன்னை அழைக்கும்படியும் சொல்ல, அவனும் சரி என்றான்.

“என்னால இதை செய்ய முடியாது. என்னால மறைக்க முடியாது” என்று தனக்குள் சொல்லிக்கொண்ட ருஹானா ஆர்யனிடம் உண்மையை சொல்லிவிடுவது என்று அவனை நாடி சென்றாள்.

“நான் உங்ககிட்டே பேசணும்” என்று வேகமாக வந்த ருஹானா ஆர்யனிடம் சொல்ல, அவள் பதட்டத்தையும், கவலையையும் பார்த்த ஆர்யன் “சொல்லு!” என்றான்.

“நான்… எனக்கு எப்படி சொல்றதுன்னு….” என்று அவள் தயங்கியபடி தொடங்க, ஆர்யனின் போன் அடித்தது.

“இரு, நான் இந்த போன் பேசிக்கிறேன். நீ சொல்ல வந்ததை மறந்திடாதே!” என்று சொல்லி போனை எடுத்த ஆர்யன் “என்ன விஷயம் ரஷீத்?” என்று கேட்டான்.

“டிடெக்டிவ் இருந்த கிராமத்தை கண்டுபிடிச்சிட்டேன். நம்ம ஆளுங்களை அங்க அனுப்பி இருக்கேன்” என்று அவன் சொல்ல, ஆர்யன் வேகமாக எழுந்தவன் பேசிக்கொண்டே வெளியே சென்றுவிட்டான்.

“அல்லாஹ்! எனக்கு வலிமையையும் தைரியத்தையும் கொடுங்க!” என்று வேண்டியபடியே படுக்கையறைக்குள் சென்றாள்.

———-

மாளிகை முழுவதும் கரீமாவை காணாமல் தேடிய சல்மா கேட் அருகே அவள் அமர்ந்திருப்பதை பார்த்து அருகே சென்றாள். “அக்கா! என்ன செய்றே இங்க?”

“சல்மா! இப்போ வரப்போற ஆளு ஒரு பெரிய அணுகுண்டை கொண்டு வரப்போறான்” என்று கரீமா சந்தோசமாக சொல்ல சல்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன? யாரு?”

“இவானோடு தப்பிச்சி போக நம்ம கதாநாயகி பொய்யான அடையாள அட்டை தயாரிக்க சொல்லியிருக்கா. இப்போ அதை ஒருத்தன் கொண்டு வரான். அவளுக்கு முன்ன அதை நான் வாங்கத்தான் இங்க இருக்கேன்.”

“ஆஹா! அற்புதமான விஷயம். நம்ம சிக்கலுக்கு தீர்வு வானத்துல தேடிட்டு இருந்தோம். அது பூமியிலயே நம்ம கைக்கு தானா வருது!”

“ஆமா, நாம மொய்தீனை கண்டுபிடிக்கறவரை இந்த விஷயத்துலயே ஆர்யனை பிசியா வச்சிருக்கலாம்.”

“கிரேட்! நானும் உன்கூட இருக்கேன் அக்கா!”

“வேணாம், அதிகமா பிறர் கவனத்தை கவர வேண்டாம், சல்மா! நீ உள்ள போ. நரகத்துல இருந்து நாம தப்பிக்க நமக்கு கிடைச்ச டிக்கெட் இந்த ஐடி கார்டு. நான் இறந்து போனாலும் போவேனே தவிர அந்த ருஹானா கிட்ட ஒருநாளும் தோற்க மாட்டேன். இந்த பாம் வெடிக்கும்போது அவளோட ஒரு துகள் கூட இந்த மாளிகைல மிஞ்சி இருக்காது!”

(தொடரும்)

Advertisement