மாளிகைக்கு வந்து ஜாஃபரிடம் விவரம் சொன்ன ஆர்யன் “மொய்தீனும் கிடைக்கல. மிஷாலும் தப்பிச்சிட்டான். உண்மை என்கைல இருந்து நழுவிட்டே இருக்கு. என்ன செய்யன்னு எனக்கு புரியல” என்று வருத்தப்பட்டான்.
“விடை உங்ககிட்டேயே இருக்கு. ஏன் நீங்க ருஹானா மேடமை கேட்கக்கூடாது?” என அவன் சொல்ல, இரகசியம் காக்கும் ருஹானாவை தேடி சென்றான்.
பர்வீன் சொன்ன ஆர்யனின் கண்ணில் காதலை நினைத்து பார்த்த ருஹானா “அது உண்மையாக இருக்கலாம்!” என ஆசைப்பட்டாள்.
துணி மடித்துக்கொண்டிருந்த ருஹானாவிடம் வேகமாக வந்த ஆர்யன் “என்ன உன்னோட ரகசியம்? எதை மறைக்கறே? மழுப்பாம உண்மையை சொல்லு!” என்று அதட்டி கேட்க, ருஹானா பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்து கொண்டாள்.
அவள் நாடியை பிடித்து தலையை நிமிர்த்திய ஆர்யன் “என்னை பாரு! எனக்கு அது என்னன்னு தெரியணும்” என்றான் பிடிவாதமாக.
‘என்னால சொல்ல முடியாது. என்னோட இரகசியம் என் காதல்! இல்ல… என்னால முடியாது’ என்று மனதில் பேசியவள் “நான்…” என்று தொடங்க, அவசரக்கார ஆர்யன் “நான்.. என்ன?” என அவளை சொல்ல ஊக்கினான்.
‘என்னை வற்புறுத்தாதீங்க. என்னை சொல்ல வைக்காதீங்க!’ என நினைத்த ருஹானா தலையை திருப்பி கண்ணீர் வடித்தாள்.
இரகசியமாகபுன்னகைக்கவில்லை
காதல்கொண்டபெண்மைக்குஇங்கே
அதைசொல்லகூச்சமும்இல்லை!
காதலைதெரிவிக்கசுயகௌரவம்
முன்னின்றுதடைசெய்கிறது!
முட்டாளிடம்உரைப்பதும்வீணே!
அவள் மௌனம் அவனுக்கு பதட்டத்தை தந்தது. அவள் கண்ணீர் வடிக்க, அவன் என்ன என்ன என்று கேட்டுக்கொண்டே இருந்தான்.
“உங்களுக்கு உண்மை வேணும் தானே? என்னோட ரகசியம்…” என்று அவள் தொடங்க, ஆர்யன் அவளையே கவனமாக நோக்கினான்.
“நான் உங்களை அதிகமா நம்பினேன். உங்க இந்த விளையாட்டை எல்லாரும் நம்பினாங்க, அதுல நானும் ஒருத்தின்னு சொன்னீங்க! அது உண்மை. ஏன்னா உங்களுக்கு மரணக் காயம்பட்டிருந்தபோதும் நீங்க என் உயிரை காப்பாத்தினீங்க!” என அவள் உருக்கமாக சொல்ல, அவனின் மனம் அவர்களின் வாழ்வின் நிகழ்வுகளுக்கு சென்றது.
“உங்களுக்கு தெரியுமா நான் யாரை நம்பினேன்னு? என்னால மூச்சு எடுக்க முடியாதபோது என்கூட சேர்த்து சுவாசம் செய்தவரை… தூக்கத்துலயும் நான் பரிசு கொடுத்த பேனாவை இறுக்கி பிடிச்சிட்டு இருந்தவரை.. ஆனா நீங்க அந்த பேனாவை உடைச்சிட்டீங்க! அதை மட்டுமில்ல எல்லாத்தையும் நொறுக்கிட்டீங்க!” என்ற அவளின் பேச்சு அவனை ஆழமாக தாக்கியது.
“நீங்க என்னை அவமானப்படுத்தலாம், கிண்டல் செய்யலாம். ஆனா உண்மையில நான் உங்க மேல நம்பிக்கை வச்சிட்டேன். அதனால தான் நீங்க என்னை பாதாளத்துல தள்ளிவிட்டப்போ என்னால தாங்கிக்க முடியல. இதான் என்னோட ரகசியம்! இப்போ உங்களுக்கு திருப்தியா?” என அவள் கேட்க, அவன் முகம் சுண்டிவிட்டது.
கண்ணீரை துடைத்துக்கொண்டவள் “இனிமேல் அந்த ரகசியத்துக்குலாம் அவசியம் இல்ல. இவான் மட்டும் தான் முக்கியம். அவனுக்காக நமக்கு இடையே அமைதி நிலைக்கட்டும்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.
அவளது துக்கம் அவனையும் கண்கலங்க வைக்க “நானும் உன் கண்ணீர் உண்மைன்னு நம்புறேன். நீ குற்றம் இல்லாதவள்னு நம்பத்தான் நினைக்கறேன்” என்றவன் மேல்மாடத்தில் நின்ற ருஹானாவை பார்த்துக்கொண்டு நின்றான்.
———-
இரவில் உறங்க இருவரும் ஆயத்தமாக, ஆர்யன், “நான் இவானுக்கு மருந்து கொடுத்துட்டு வரேன்” என்று கிளம்ப, அவன் பக்கம் திரும்பாது ருஹானா “நான் கொடுத்துட்டேன். அவனும் தூங்கிட்டான்” என்றாள்.
“நீ சொன்னது சரிதான்” என ஆர்யன் தலைகால் இல்லாமல் தொடங்க, ருஹானா அவனை திரும்பி பார்த்தாள்.
“இவானுக்காக நாம அமைதியா இருப்போம்” என்று சொல்லி பேச்சை முடித்துக்கொண்டான்.
———
காலையில் ஆர்யன் என்ன செய்வது என புரியாமல் வரவேற்பறையில் உலவிக்கொண்டிருக்க, அவனை வேவு பார்ப்பதற்காக சல்மா அலைபேசியில் பேசுவதுபோல பின்பக்க தோட்டத்தில் நடை பயின்று கொண்டு இருந்தாள்.
தோட்டக்காரன் வீட்டினுள் வந்து சாப்பிட்டு விட்டு சிந்தியது சிதறியதான உணவுகளை பறவைகளுக்கு போடுவதற்காக எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். ஆர்யனையும், சல்மாவையும் பார்த்தவன் ஆர்யனை நெருங்கினான்.
ஆர்யன் என்ன எனக் கேட்க, தோட்டக்காரன் சட்டைப்பையில் இருந்து ஒரு செடியை எடுத்து ஆர்யன் அருகே மேசை மீது வைத்தான். “என்ன இது?” என்று ஆர்யன் கேட்க, உள்ளே வரும் சல்மாவை முறைத்துப் பார்த்தான்.
தோட்டக்காரன் பார்வை போன திசையை நோக்கி திரும்பிய ஆர்யன் அங்கே சல்மா நடந்து வருவதை பார்க்க, அவள் அவனை நோக்கி மோனகரமான புன்னகை ஒன்றை சிந்திவிட்டு மேலே சென்றாள்.
அறையில் இருந்த கரீமா “ஆர்யன் ஏதாவது சொன்னானா, சல்மா?” என்று கேட்க, “இல்ல அக்கா! மணிக்கணக்கா அதே இடத்துல தான் உட்கார்ந்து இருக்கான். மொய்தீனுக்கும் பேசல. ரஷீத்துக்கும் பேசல” என்ற சொல்ல, கரீமா தலையில் கைவைத்துக் கொண்டாள்.
“அக்கா! மிஷால் என்ன ஆனான்?”
“அந்த முட்டாள் கடைசி நொடில ஆர்யன் கிட்டே இருந்து தப்பிச்சி இருக்கான். எப்படியோ மிஷால் அத்தியாயம் முடிந்தது! இனி மொய்தீன் தான்! ரஷீத் அவனை கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடி நாம அவன பிடிக்கணும். அதே சமயம் ஆர்யனையும் வேற விஷயத்துல திசைதிருப்பணும். அதான் எப்படின்னு யோசனை செய்திட்டு இருக்கேன், சல்மா!”
———
தோட்டக்காரன் வைத்துவிட்டு சென்ற செடியை எடுத்து பார்க்க ஆர்யன் முனைய, அம்ஜத் தூரத்தில் இருந்து கத்திக்கொண்டே வந்தான்.
“ஆர்யன்! அதை தொடாதே! இது விஷம்! சுத்தி இருக்கற எல்லாத்தையும் கொன்னுடும். பூக்கள் பூக்கறதையும் தடுத்திடும். நஞ்சு செடி இது! எங்க இருந்து வந்தது?”
அம்ஜத்தின் படபடப்பும் அவன் சொன்ன சேதியும் ஆர்யனை திகைப்பில் ஆழ்த்த, அவன் திரும்பி தூரத்தில் மண்ணை கொத்திக்கொண்டிருந்த தோட்டக்காரனை பார்த்தான்.
“சரி, ஆர்யன்! நான் இதை புதைச்சிட்டு வரேன். நம்ம தோட்டத்துக்கு இது வரவே கூடாதே!” என்ற அம்ஜத், அந்த செடியை ஒரு காகிதம் கொண்டு எடுத்து சென்றான்.
அண்ணனை யோசனையுடன் பார்த்து நின்ற ஆர்யன் வேகமான காலடியோசை கேட்டு திரும்பினான். அவன் அருகே வந்த ருஹானா, அவன் போனை நீட்டியவள் “ஹாஸ்பிடல்ல இருந்து கூப்பிட்டு இருக்காங்க. நான் எடுக்கறதுக்குள்ள சத்தம் நின்னுடுச்சி. இவானுக்கு எதுவுமா?” என கவலையாக கேட்டாள்.
ஆர்யன் மருத்துவமனைக்கு திரும்ப அழைத்து பேசியவன் அவளுக்கு விவரம் சொன்னான். அம்ஜத்திற்கு செய்த இரத்தப் பரிசோதனையில் வந்த முடிவுகளின்படி அவனை மற்றுமொரு ஆய்வு செய்ய அழைத்துவருமாறு அழைத்திருந்தார்கள்.
அவன் அலைபேசியில் பேசும்போது தோட்டத்தை பார்த்துக்கொண்டிருந்த ருஹானா “முதல் முறையா அம்ஜத் அண்ணா ஒரு செடியை கையால தொடாம இருக்கார்” என்று ஆச்சரியமாக சொல்ல, “அது விஷ செடி!” என்று தெரிந்தவன் போல சொன்ன ஆர்யன், அம்ஜத்தும், தோட்டக்காரனும் அதை மண்ணில் ஆழப் புதைப்பதை பார்த்தான்.
என்ன பார்த்து என்ன? ‘சல்மா விஷம் நிறைந்தவள், அவளை அருகில் வைப்பது அபாயம்’ என வாய்பேச முடியாத தோட்டக்காரன் சொன்னது பொறாமை பிடித்த ஆத்திரக்காரனுக்கு புரியுமா என்ன?
“நான் அண்ணனை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன். நீயும் வந்தா … அண்ணன் அமைதியா உணர்வார்” என ஆர்யன் தயக்கமாக அவளை அழைக்க, எந்தவித தயக்கமும் இல்லாமல் ருஹானா “கண்டிப்பா வரேன்!” என்றாள்.
———
“சீக்கிரம் பரிசோதனை முடிவுகள் வந்துடும் தானே? நாம வீட்டுக்கு போயிடலாம் தானே?” அம்ஜத் பதட்டமாக வினவ, ருஹானா ஆதரவாக அவன் கையை பிடித்து, இரத்தம் எடுத்த இடத்தில் மென்மையாக பட்டியை ஒட்டிவிட்டாள்.
“நான் போய் தண்ணீர் எடுத்துட்டு வரேன்” என ருஹானா செல்ல, சகோதரர்கள் இருவரும் செல்லும் அவளை புன்னகையுடன் பார்த்து அமர்ந்திருந்தனர்.
அம்ஜத் “அவ நம்மை தொடும்போது அவளோட நல்லதையும் நமக்கு கடத்திடுறா தானே? நமக்கும் அமைதி கிடைக்குது. நாமும் சீக்கிரம் குணமாகறோம். உனக்கும் அப்படித்தானே தோணுது?” என ஆர்யனிடம் கேட்டான்.
ருஹானா அவனின் காயத்தை ஆற்றிய சம்பவங்களை நினைத்து பார்த்துக்கொண்டிருந்த ஆர்யனை பரிசோதனை முடிவுகளை வாங்க வருமாறு செவிலிப்பெண் அழைத்தாள்.
“அண்ணா! நீங்க இங்கயே இருங்க. நான் போய் வாங்கிட்டு வரேன்” என்று ஆர்யன் எழுந்து கொள்ள, அம்ஜத் “சீக்கிரம் வந்துடு ஆர்யன். எனக்கு இங்க பிடிக்காது” என்று சொல்ல, ஆர்யன் தலையாட்டி சென்றான்.