Advertisement

“பர்வீன் அம்மா உடம்பு சரியில்லாத பெரியம்மாவை பார்த்துக்க ஊருக்கு போறாங்க. சிலமாதம் அங்க தங்கியிருந்து அவங்களை பார்த்துக்குவாங்க” என்று தன்வீர் வந்து சொல்ல, ருஹானா கண்களில் கண்ணீர். “என்ன! மடாபாக்கு போறாங்களா?”

“ருஹானா! தயவுசெய்து அழாதே! நீ அழுதா நானும் அழுதுடுவேன்” என்று தன்வீர் ருஹானா அன்பாக அணைத்துக்கொண்டான்.

“நீங்க தான் என் குடும்பம். இப்போ பர்வீன் அம்மா ஊருக்கு போறாங்கன்னா நீ மட்டும் தான் எனக்கு இருக்கே!”

“அம்மா சீக்கிரம் திரும்பி வந்துடுவாங்க. வருத்தப்படாதே! உன்னோட அண்ணன் நான் உன்கூட தான் இருக்கேன். ஆனா நாங்க மட்டும் தான் உன் வாழ்க்கைன்னு நீ சொல்லக்கூடாது” என்ற தன்வீர் எதிரே நிற்கும் ஆர்யனை பார்த்து சிரித்தான்.

“நாங்களும் இருக்கோம்தானே? அவளுக்கும் அது தெரியுமே!” என்று அவளை ஆழ்ந்து பார்த்து ஆர்யன் சொல்ல, ருஹானா அப்படியா என்பது போல அவனை பார்த்தாள்.

தன்வீர் விடைபெற்று பணிக்கு செல்ல, பர்வீனுக்கு விடை கொடுக்க கிளம்பிய ருஹானாவை அங்கே விடுவதாக ஆர்யன் சொன்னான். காரில் அவனோடு அமர்ந்தவள் “என்னோட அம்மாவை நான் பார்த்தது இல்ல. பர்வீன் அம்மா மடியில தான் நான் வளர்ந்தேன். இப்போ அவங்க என்னை பிரியப் போறாங்கன்னு தெரிஞ்சதும் என்னால தாங்கமுடியல. அதும் அவங்க எப்போ திரும்பி வரப்போறாங்கன்னும் தெரியாது” என்று கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.

“வந்திருவாங்க தான். ஆனா அன்பு வைத்திருக்கறவங்களை பிரியறது என்னால முடியாது” என்றவள் கைப்பையிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து ஆர்யனிடம் காட்டினாள். “இங்க பாருங்க! நான் ஆறு மாத குழந்தையா இருந்தப்ப எடுத்தது. பர்வீன் அம்மா எவ்வளவு அன்பா என்னை பிடிச்சிருக்காங்க, பாருங்க!”

அதை பார்த்த ஆர்யன் “இதை உன் பர்ஸ்லயே வச்சிருப்பியா?” என்று கேட்க, அவள் “நேசிக்கறவங்க படத்தை கூடவே வச்சிருக்க மாட்டாங்களா?” என்று பதில் கேள்வி கேட்டாள்.

நேசிக்கும் பர்வீன் படத்தை அவளோடு வைத்திருப்பது போல தன் படத்தையும் வைத்திருக்கிறாளா என்ற சந்தோஷ சந்தேகம் ஆர்யனுக்கு எழுந்தபோதும், ‘பர்வீனை மட்டும் கையில்; தன்னை மட்டும் அலமாரியில்’ எனும் வினோத ஆதங்கம் எழுவதையும் அவனால் தடுக்க முடியவில்லை.

அவள் காரிலிருந்து இறங்கும்வேளையில் போனில் அழைத்த இவான் “சித்தி! சீக்கிரம் வந்துடுங்க. நாம மறுபடியும் விளையாடலாம்னு சொன்னீங்களே!” என்று நினைவூட்ட, “கண்டிப்பா அன்பே! ஒரு மணி நேரத்துல அங்க இருப்பேன்” என்று போனை வைத்தாள்.

“என்ன அவ்வளவு சீக்கிரமாவா?” என ஆர்யன் கேட்க, “ஆமா, இவானை காத்திருக்க வைக்கக்கூடாது. உடனே வந்துருவேன்” என்று அவள் சொல்ல, அவனோ “அப்போ நான் இங்கயே காத்திருக்கேன். நானே உன்னை கூட்டிட்டு போறேன். இவானை அதிக நேரம் காக்க வைக்கக்கூடாது இல்லயா?” என்று அதையே திருப்பி சொன்னான். அவனை விசித்திரமாக பார்த்தபடியே அவள் இறங்கி சென்றாள்.

———

“பாரு, நம்ம ஹீரோ போன் எடுக்க மாட்றார்” என்று கரீமா எரிச்சலோடு மிஷாலை கிண்டல் செய்ய, சல்மா “அந்த காதல்பைத்தியம் காதலியை காப்பாத்த ஆர்யன் முன்னாடி குதிச்சிடப் போறான், அக்கா!” என்றாள்.

“நீ வேற என்னை பயமுறுத்தாதே, சல்மா! அவன் ஆர்யன்கிட்டே மாட்டினான்னா நாம தொலைஞ்சோம். ஆர்யன் எல்லா உண்மையையும் கக்க வச்சிடுவான்.”

———

பர்வீனுக்காக வாங்கியதை ருஹானா காரிலேயே வைத்துவிட்டு போனதை அப்போதுதான் கவனித்த ஆர்யன் அதை எடுத்துக்கொண்டு கேட்டை திறந்து உள்ளே சென்றான். கதவை தட்டும்முன் ருஹானா பர்வீனிடம் பேசிக்கொண்டிருப்பதை கேட்டு அப்படியே நின்றான்.

“மாதக்கணக்கா என்கிட்டே பொய் சொல்லியிருக்கார், பர்வீன் அம்மா! நான் அவரை முழுசா நம்பினேன். ஆனா அவர் மேலிருந்து என்னை தள்ளிவிட்டுட்டார். நான் நொறுங்கி போயிட்டேன். அவர் என்னை பேசியது, பயமுறுத்தியது எல்லாம் என்னால இன்னும் மறக்க முடியல.  ஆனா சில சமயம் என் மனசு பழைய மாதிரி எல்லாம் மாறிடாதான்னும் ஏங்குது.”

“தேனே! நீ உனக்கும் ஆர்யனுக்கும் எப்பவும் உணமையானவள். எல்லாமே மாறிடும் பாரேன். நான் திரும்பவும் சொல்றேன். எது நடந்திருந்தாலும் ஆர்யனோட கண்ணுல உனக்கான நேசம் இருக்கு. அவருக்கு மட்டும் இல்ல, உன்கிட்டேயும்! நீ அவரை பார்க்கற பார்வையில பலமுறை அது எனக்கு தெரிஞ்சிருக்கு. அவர் உன்னை விரும்பற அளவுக்கு நீயும் அவரை விரும்பறே, சரிதானே?” என்று பர்வீன் கேட்க, ருஹானா பதில் சொல்லவில்லை.

‘என்னை நிஜமா நேசிக்கிறாளா?’ என்று கேட்டுக்கொண்ட ஆர்யன் நெடுநேரமாக நிற்க, அவர்களே கதவை திறந்துகொண்டு வெளியே வந்தனர்.

அதே கேள்வியோடு ஆர்யன் அவளை பார்க்க, அவன் கண்ணில் தெரியும் அன்பு உண்மை தானா என ருஹானா அவனை பார்க்க, இருவரும் அவர்களை பார்த்தபடி நிற்கும் பர்வீனை மறந்துவிட்டனர்.

“இது நீ கார்லயே மறந்திட்டே!” என்று ருஹானாவிடம் சொன்ன ஆர்யன், அதை பர்வீனிடம் கொடுத்தான்.

“உங்களுக்கு ஏன் சிரமம்?”

“உங்க அக்கா சீக்கிரம் குணமாக என்னோட பிரார்த்தனைகள்!”

நன்றி சொன்ன பர்வீன் ருஹானாவை கட்டிக்கொண்டு “என்னை நினைச்சி வருத்தப்படாதே. நான் உனக்கு அடிக்கடி போன் செய்றேன். உன்னோட புன்னகை எப்பவும் வாடக் கூடாது” என்று அவள் கண்ணீரை துடைத்துவிட்டார்.

“மகனே ஆர்யன்! அவளோட அப்பா அவளை அழவிட்டதே இல்ல. நானும்தான்! எனக்கு தன்வீரும் அவளும் ஒன்னு தான். அவ அம்மா என்னை நம்பி அவளை என்கிட்டே ஒப்படைச்சாங்க. நான் இப்போ உங்களை நம்பி அவளை உங்க கிட்டே ஒப்படைக்கறேன். அவளை தனியா விடாதீங்க. அவ கண்கலங்காம பார்த்துக்கங்க. ரெண்டுபேரும் ஒருத்தரையொருத்தர் கவனிச்சிக்கங்க” என்று ஆர்யனிடம் பர்வீன் சொல்ல, கலங்கி நிற்கும் ருஹானாவை பாவமாக பார்த்த ஆர்யன் பர்வீனிடம் தலையசைத்தான்.

——–

காரிலிருந்து இறங்கப்போன ருஹானாவை தடுத்து நிறுத்திய ஆர்யன் ‘பர்வீன் சொன்னதுபோல அவள் உண்மையாக அவனை நேசிக்கிறாளா?’ என கேட்க வாயெடுத்தவன், “நீயும் பர்வீன் அம்மாவும் பேசினது…” என தொடங்கி “நீ அவங்களை வழியனுப்ப வந்தது அவங்களுக்கு நல்லா இருக்கும்” என்று முடித்தான்.

“ஆமா, இனிமேல நான் அவங்களை எப்போ பார்க்க போறேனோ? இந்த காலத்துல தூரம் ஒன்னும் பிரச்சனை இல்ல தான். ஆனாலும் அவங்க பக்கத்துல இல்லன்ற உணர்வு எனக்கு கஷ்டம்தான்” என்றவள் அவனுக்கு நன்றியுரைத்தாள்.

“உங்களால தான் நான் சீக்கிரம் வந்தேன். அதான் அம்மாக்கு குட்பை சொல்ல முடிந்தது. உங்களுக்கு என்னோட நன்றி” என்று சொல்லி இறங்கியவள், அவன் இன்னும் அமர்ந்திருப்பது கண்டு “நீங்க வரலயா?” எனக் கேட்டாள்.

“இல்ல, ஒரு வேலை இருக்கு. பெரிய சிக்கல் ஒன்னை தீர்க்க போராடிட்டு இருக்கேன்!”

“இன்ஷா அல்லாஹ்! எதுவா இருந்தாலும் அது சீக்கிரம் நல்லபடியா முடியட்டும்!” என்று சொல்லி சென்றாள்.

செல்லும் அவளையே பார்த்திருந்த ஆர்யன், ரஷீத்திற்கு போன் செய்து மொய்தீனை கண்டுபிடிக்கும் வேலை என்னவாயிற்று என கேட்டு அதை துரிதப்படுத்தினான். எப்போதும் கோட் பையில் வைத்துக்கொண்டு அடை காக்கும் போட்டோவை மீண்டும் எடுத்து பார்த்தான்.

அறை வாங்கும் மிஷாலை இரு வினாடி அதிகமாக பார்த்தவன் காரை திருப்பிக்கொண்டு வேகமாக சென்றான்.

———

துணிகள் அடங்கிய ஒரு பையுடன் உணவு விடுதிக்கு வந்த மிஷால் அங்கிருந்த பணத்தை எல்லாம் எடுத்துக்கொண்டான். ஒரு கட்டு பணத்தை மட்டும் எடுத்து உதவிப்பையன் சதாமை அழைத்து அவனிடம் கொடுத்தான்.

“நீயும் வாகிதாவும் உணவு விடுதியை பார்த்துக்கங்க. எதும் தேவைன்னா எனக்கு போன் செய். யாரும் என்னை கேட்டா எங்க போயிருக்கேன்னு தெரியாதுன்னு சொல்லணும்” என அவன் அவசரமாக பேச, சதாம் “எதும் பிரச்சனையா அண்ணா?” என்று கேட்டான்.

“அதெல்லாம் இல்ல. நான் கொஞ்சம் ஓய்வெடுக்க விரும்பறேன். நான் உனக்கு அப்புறம் பேசுறேன்” என்று பையுடன் வேகமாக வெளியே வந்த மிஷால், எதிரே ஆர்யனின் கார் வருவதை பார்த்து குறுக்கு சந்தில் பாய்ந்தான்.

ஆர்யனும் இறங்கி அவனை விரட்ட, உயிரை காப்பாற்றிக்கொள்ள மிஷால் தலைதெறிக்க ஓடினான். இடையில் ஒரு அம்மாவும் பெண்ணும் குறுக்கிட அவர்களை தள்ளிவிட்டு மிஷால் ஓட, அந்த சிறுமி சாலையின் நடுவே சென்று விழுந்தாள்.

கார் ஒன்று அவளை மோதுவது போல வர, அவளின் அம்மா கூச்சலிட, ஆர்யன் பாய்ந்து சென்று அந்த சிறுமியை காப்பாற்றி தாயிடம் சேர்த்தான். இந்த களேபரத்தில் மிஷால் கண்ணுக்கு எட்டாமல் மறைந்தான்.

போனை எடுத்த ஆர்யன் ரஷீத்திற்கு அழைத்து மூச்சுவாங்க பேசினான். “ரஷீத்! மொய்தீனை மட்டுமில்ல, அந்த மிஷால் ராஸ்கலையும் தேடு! நம்ம ஆட்களை எல்லா பக்கமும் அனுப்பு!”

——–

Advertisement