Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                அத்தியாயம் 128

திகிலோடும் மரண பயத்தோடும் ஒருவருக்கொருவர் ஆதரவாக கைகளை பிடித்திருந்த சகோதரிகள் இருவரும் அலைபேசி அழைக்கும் ஓசையில் அதிர்ந்தனர்.

“ஹல்லோ! என்ன ஆச்சு? மொய்தீனை கண்டுபிடிச்சிட்டீங்களா? இல்லன்னு மட்டும் சொல்லிடாதே!”

“அப்படி சொல்ல மாட்டேன். கண்டுபிடிச்சிட்டோம் மேடம். சந்திப்பு நடக்கல.”

அடக்கமுடியாமல் சல்மா “அவனை பிடிச்சிட்டாங்களா?” என்று இடையில் கேட்டாள்.

“எங்க இருக்கான் அவன்? உன்கூட தானா? சொல்லு! ஏன் பேசாம இருக்கே?”

“அவன் ஆர்யன் சாரை சந்திக்கல, மேடம்! ஆனா வேற ஒரு சிக்கலாகிடுச்சி. அவன் எங்ககிட்டே இருந்து தப்பிக்கப் பார்த்தான். அவனை சுட வேண்டியதாகிடுச்சி.”

“என்ன? சுட்டீங்களா? அவனை பிடிக்கத்தானே நான் சொன்னேன்? கொல்ல சொல்லலயே!”

கரீமாவின் பேச்சை கேட்ட சல்மா சந்தோசமானாள். “செத்துட்டானா? அப்பாடா! தொல்லை ஒழிஞ்சது. நாம தப்பிச்சோம்.”

“அவன் இறந்துட்டானான்னு தெரியல, மேடம்! ஆனா மாயமா மறைஞ்சிட்டான்.”

“அப்போ நமக்கு ஆபத்து இன்னும் தொடருது. அவன் உயிரோட இருந்தான்னா கண்டிப்பா ஆர்யன்ட்ட பேசுவான்.”

“அடிபட்டு அவ்வளவு ரத்தம் போய் ஒரு மனுஷன் பிழைக்க முடியாது, கரீமா மேம்! உங்களுக்கு இனி பிரச்சனை இருக்காதுன்னு நான் நினைக்கறேன்.”

“நீ நினைக்கறது பத்தி எனக்கு அக்கறை இல்ல. இப்பவே அவனை கண்டுபிடி. அவனை பிடிக்கறவரைக்கும் நமக்கு நிம்மதி இல்ல. அவன் ஒரு வெடிகுண்டு. எந்நேரமும் நமக்கு ஆபத்து தான்.”

———

கையில் பேருக்கு ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு இரவு முழுவதும் உறங்காமல் ருஹானா ஆர்யனுக்காக காத்திருந்தாள். ‘எங்கே போனீங்க?’

ஆர்யனும் துப்பறிவாளன் வருகைக்காக அவன் சொல்லிய இடத்தில் இரவெல்லாம் பனியில் நின்றிருந்தான்.

பொழுது விடிந்தபின்னர் கீழே வந்த ருஹானா, வாசல் கதவு திறந்து ஆர்யன் உள்ளே வரவும் நிம்மதியடைந்தாள். “நான் கவலைப்பட்டுட்டு இருந்தேன். நீங்க நல்லா இருக்கீங்க தானே? எதும் கெடுதலா நடக்கலயே?”

“என்னோட உலகத்தையே தலைகீழா மாத்தக்கூடிய ஒரு செயல் நடந்திருக்கணும். அது நடக்காம போயிடுச்சி” என சோர்வுடனும் ஏமாற்றத்துடனும் ஆர்யன் பதில் சொல்ல, மேலே நின்று ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த சகோதரிகள் சந்தோஷத்தில் குதித்தனர்.

“அது என்னன்னு எனக்கு தெரியல. இன்ஷா அல்லாஹ் நீங்க நினைச்ச மாதிரி எல்லாம் நடக்கட்டும்.”

“இன்ஷா அல்லாஹ்!” என்ற ஆர்யன் படிக்கட்டில் ஏற, சகோதரிகள் ஓடி மறைந்தனர்.

“பார்த்தியா அக்கா? ஆர்யன் எவ்வளவு டென்ஷனா இருக்கான்! உன் ஆளு சொன்னது சரிதான். மொய்தீன் இவனை பார்க்கல.”

“அவனுக்கு அதிகமா அடிபட்டு இருக்கணும்.”

“வேற எங்கயாவது போய் செத்திருப்பான், அக்கா!” சல்மா சந்தோசமாக சொல்ல, கரீமா அவளை முறைத்தாள்.

“அவனை ஆர்யன் கண்டுபிடிக்கறதுக்குள்ள நாம பிடிச்சாகணும், சல்மா! இல்லனா ருஹானாக்காக நாம தோண்டின குழில நாம தான் விழணும்.”

———-

அறைக்கு வந்த ஆர்யனுக்கு சல்மாவின் நினைவு வர வேகமாக அவள் அறைக்கு வந்தான்.

சோபாவில் போனை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த சல்மா திடுக்கிட்டு எழுந்தாள். “ஆர்யன்! என்ன?”

“நீ தான் மொய்தீனை தடுத்து நிறுத்தினியா?”

“என்ன சொல்றீங்க? நான் எதை தடுத்தேன்?”

“புரியாத மாதிரி பேசுறதை நிறுத்து! எங்க அவன்? ஏன் என்னை பார்க்க அவன் வரல? நீ என்ன செய்தே?”

“எனக்கு தெரியாது, நீங்க யாரை பார்க்க போனீங்கன்னு கூட எனக்கு தெரியாது. நீங்க சொன்ன பிறகு நான் அவன்கிட்டே பேச முயற்சி செய்தேன். ஆனா அவன் போன் எடுக்கல” என்று சொன்ன சல்மா, ஆர்யனை திசை திருப்பினாள். “இதுவும் அவங்க ஆட்டம்தான்னு உங்களுக்கு புரியலயா, ஆர்யன்?”

“நீ என்ன சொல்றே?”

“இது மொய்தீன் தான் அனுப்பி இருப்பான்னு எப்படி சொல்றீங்க? ருஹானா கூட செய்திருக்கலாமே! ஆரம்பத்துல இருந்தே இது மாதிரிதான் அவ நாடகம் நடத்திட்டு இருக்கா. அந்த பைல் பத்தி தெரிஞ்சிட்டு இருப்பா. திரும்ப மிஷாலை பார்த்து அதே  இடத்துல அதே உடையில உங்களை நம்ப வைக்கறது போல ஒரு போஸ் கொடுத்திருக்கா, நீங்களும் ஏமாந்திட்டீங்க!”

அவளை முறைத்த ஆர்யன் “நீ ஏதோ மறைக்கறே, நான் அதை கண்டுபிடிக்கறேன். உயிர் மேல ஆசை இருந்தா இப்பவே தப்பிச்சி ஓடிடு” என்று மிரட்டிவிட்டு வெளியே சென்றவன் படிக்கட்டில் நின்று கொண்டான். சல்மாவின் கூற்றை ஆராய்ந்தவன் “அப்படியா செய்திருப்பா? இப்படி திட்டம் போடுற அளவுக்கு மோசமானவளா?” என கேட்டுக் கொண்டான்.

ரஷீத்திற்கு அழைத்து துப்பறிவாளனை உடனே கண்டுபிடிக்க சொன்னான்.

தனது அறைக்கு திரும்பும் வழியில் இவானின் அறையில் சத்தம் கேட்க, அங்கே எட்டிப்பார்த்தான். ருஹானாவும் இவானும் தரையில் அமர்ந்து ஒரு பாட்டிலை சுற்றி விளையாடிக்கொண்டு இருந்தனர்.

“உண்மையை சொல்றீங்களா, நான் சொல்றதை செய்றீங்களா?”

“உண்மை!”

“உங்களுக்கு யாரை ரொம்ப ரொம்ப பிடிக்கும்?” என்று இவான் கேட்க, ருஹானா அவன் வயிற்றில் கிச்சுகிச்சு மூட்டியபடி “உன்னை தான் கண்ணே!” என்று சொல்ல, இவான் பொங்கி சிரித்தான்.

ஆர்யனை பார்த்துவிட்ட இவான் “சித்தப்பா! நீங்களும் விளையாட வாங்களேன்! இந்த விளையாட்டு நல்லா இருக்கு” என்று அழைக்க, ‘உண்மை?’ என்று மனதில் கேட்டுக்கொண்ட ஆர்யன் தலையாட்டிவிட்டு உள்ளே வந்து அவர்களோடு அமர்ந்தான்.

“இப்போ உங்க முறை சித்தி!” என்று இவான் சொல்ல, ருஹானா பாட்டிலை தரையில் சுழற்றினாள். அது இவானை நோக்கி நிற்க “உண்மையா, செயலா?” என ருஹானா அவனிடம் கேட்டாள்.

“உண்மை சித்தி!”

“எங்களுக்கு தெரியாம நீ எப்பவாது தப்பு செய்திருக்கியா?” என ருஹானா கேட்க, இவான் தயங்கியபடி பதிலளித்தான்.

“ம்ம்ம்.. சாரா ஆன்ட்டி ஒரு தடவை குனாஃபி செய்திருந்தாங்க. எனக்கு வயிறு வலிக்கக் கூடாதுன்னு கொஞ்சமா கொடுத்தாங்க. எனக்கு அது ரொம்ப பிடிச்சது. யாருக்கும் தெரியாம நான் போய் நிறைய எடுத்து சாப்பிட்டேன். எனக்கு வயிறு வலி வந்துடுச்சி” என்று சொல்ல, ருஹானா சிரித்தாள்.

“இப்போ நானு!” என்று இவான் சுற்ற, அது ஆர்யனை காட்டியது.

“சித்தப்பா! உண்மையா செயலா?”

“செயல்!”

“அப்படின்னா…“ என்று யோசித்த இவான் “சித்திக்கு முத்தம் கொடுங்க!” என்று சொல்ல, இருவரும் திகைத்தனர். “வாங்க! இதான் ரூல். நீங்க தந்து தான் ஆகணும்” என்று இவான் சொல்ல, ருஹானாவை நெருங்கிய ஆர்யன் அவள் முன்னே மண்டியிட்டு அவள் நெற்றியில் இயந்திரகதியில் முத்தமிட்டான்.

“இது நீங்க சுத்துங்க” என இவான் ஆர்யனிடம் கொடுக்க, புட்டியும் அவனுக்கு துணை செய்வது போல ருஹானாவை கைகாட்டியது.

“சித்திட்ட கேளுங்க, சித்தப்பா!”

“உண்மையா செயலா?”

செயல் என்று சொன்னால், இவான் ஏதாவது சங்கடமாக செய்ய வைத்திடுவானோ என பயந்த ருஹானா “உண்மை!” என்றாள்.

“சிங்கப்பையா! போய் என் போனை எடுத்துட்டு வா!” என்று இவானை அனுப்பிவிட்டு ஆர்யன் ருஹானாவிடம் கேட்டான். “என் கிட்டே இருந்து ரகசியம் ஏதாவது மறைக்கிறியா?”

“ஆமா! மறைக்கிறேன்” என ருஹானா பட்டென்று சொல்லிவிட, அதிர்ந்த ஆர்யன் “அது என்ன?” என கேட்டான்.

“நான் சொல்ல மாட்டேன்!”

“இது தவறான விளையாட்டு!”

“எப்படி தவறு? நீங்க கேட்ட ஒரு கேள்விக்கு தான் நான் பதில் சொல்லணும். அது சொல்லிட்டேன்.”

“நாம மறுபடியும் விளையாடலாம்” என ஆர்யன் புட்டியை எடுக்கப் போக “இப்போ என்னோட முறை” என்று ருஹானா தன் பக்கம் புட்டியை இழுத்துக்கொண்டாள்.

“சித்தப்பா! எல்லா இடமும் தேடி பார்த்தேன். உங்க போனை காணோமே!” என்று இவான் ஓடிவர, ஆர்யன் “நான் அப்புறம் எடுத்துக்கறேன், அக்னி சிறகே!” என்று சொன்னான்.

இவானின் கையை பிடித்த ருஹானா “இப்போ நீ சாப்பிட வேண்டிய நேரம். வா போகலாம், மானே!” என்று அவனை கூப்பிட்டாள்.

“ஆனா, சித்தி நம்ம விளையாட்டு…”

“அப்புறமா விளையாடலாம், கண்ணே!” என்று அவனை இழுத்துக்கொண்டு வேகமாக வெளியே சென்று விட்டாள்.

“ஆக, உன்கிட்டே ரகசியம் இருக்கு. அதை என்கிட்டே மறைக்கவும் செய்றே” என்று கோபமாக சொல்லிக்கொண்ட ஆர்யன் அறைக்கு சென்று அவள் அலமாரியில் தேடினான், ஏதாவது இரகசியம் ஒளிந்திருக்கிறதா என்று.

உருட்டி பிரட்டி ஆனால் துணிகளை கலைக்காமல் ஆர்யன் தேட, அங்கே அவனுக்கு ஒரு புதையலே கிடைத்தது. அதை பார்த்ததும் அவன் முகமும், மனமும் குப்பென்று குளிர்ந்தது. அது ஆர்யனது அழகான புகைப்படம்.

அவள் அம்மாவின் புகைப்படத்திற்கு ஆர்யன் சட்டமிட்டு கொடுத்தபோது ருஹானா சொன்னது அவனுக்கு நினைவு வந்தது. ‘அன்புக்குரியவங்களை கூடவே வச்சிருக்கறது மனதுக்கு சந்தோசம் கொடுக்கும்’

“இதை ஏன் மறைச்சி வச்சிருக்கா? ஏன்? ஏன்?”

———

“அக்கா! நீ சொன்னது போலவே ஆர்யனை திசை திருப்பி விட்டுட்டேன். அது இப்போ எடுத்த போட்டோன்னு அவனை குழப்பிட்டேன்.”

“குட்! நல்ல காரியம் செய்தே சல்மா!”

“ஆனாலும் நான் எதையோ மறைக்கிறேன்னு அவன் கண்டுபிடிச்சிட்டான்.”

“ஆர்யன் இப்போ அடிபட்ட சிங்கத்தை போல அவ்வளவு எளிதா விட்டுக் கொடுக்க மாட்டான். யார் மேல பாயறதுன்னு பார்த்துட்டு இருப்பான்.”

“மிஷால்!”

“மிஷால்!” என்று இருவரும் ஒரு சேர சொல்ல, “ஆமா, மொய்தீனை பிடிக்க முடியாட்டாலும் மிஷால்ட்ட இருந்து உண்மையை வாங்க முயற்சி செய்வான். அவனை உடனே எச்சரிக்கணும்” என்ற கரீமா மிஷாலை அழைத்தாள்.

“இந்த அம்மாக்கு இப்போ என்ன வேணுமாம்?” என்று சலித்துக்கொண்டே மிஷால் போனை எடுத்தான். “ஹலோ!”

“குறுக்க பேசாம நான் சொல்றதை கேளு மிஷால்! டிடெக்டிவ் வாக்கு தவறிட்டான். அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு ஆர்யன் கிட்டே உண்மையை சொல்லிடுவேன்னு மிரட்டுறான். ருஹானா உன்னை கன்னத்தில அடிக்கற போட்டோவை ஆர்யனுக்கு அனுப்பி வச்சிட்டான். ஆர்யன் உண்மை தெரிய வெறி கொண்ட வேங்கை போல அலைஞ்சிட்டு இருக்கான். எப்போனாலும் உன்னை தேடி வருவான். நீ உடனே தப்பிடு.”

“அவனுக்கு பயந்துட்டுலாம் நான் எங்கயும் போக மாட்டேன்.”

“நீ என்ன மடையனா? ஏற்கனவே உன்னை சுட்டான், அதிர்ஷ்டவசமா நீ தப்பிச்சிட்டே. இப்போ உன் உயிர் உனக்கு வேணும்னா அகாபாவை விட்டு மறைஞ்சிடு.”

———-

Advertisement