Advertisement

ஜாஃபரிடமிருந்து சங்கிலியை பெற்றுக்கொண்ட ருஹானா அதன் விடுபட்ட கண்ணிகள் கோர்க்கப்பட்டிருப்பதை கவனித்தாள். அது யார் செய்திருப்பார்கள் என்பது அவளுக்கு புரிந்து போனது. அவன் எதிரே வந்தும், அவனுக்கு நன்றி உரைக்கவும் அவளுக்கு மனதில்லை.

“டாக்டர் கொடுத்த மருந்து சீட்டு வேணுமே! இந்த மாத்திரை உணவுக்கு முன்னாடியா, பின்னாடியா?” என அவள் கேட்க, ஆர்யன் பதில் சொல்லாமல் அவளை ஆராய்ந்தான். ‘நீ துரோகியா, நிரபராதியா?’

“ஏன் இப்படி பார்க்கறீங்க?” என அவள் கேட்டபின்பே, அவன் மருந்து சீட்டு இருக்கும் இடத்தை சொல்லிவிட்டு நகரந்தான்.

———

“என்னை கொலை செய்யறது மாதிரி வந்தான், அக்கா” என்று அழுதபடி ஓடிவந்த சல்மா, ஆர்யனின் கைக்கு கிடைத்த படத்தை பற்றியும், ஆர்யன் துப்பறிவாளன் சந்திப்பு நிகழவிருப்பதையும் கரீமாவிடம் சொன்னாள்.

“இல்ல, இந்த சந்திப்பு நடக்கக்கூடாது!”

“அவன் கேட்ட பணத்தை கொடுத்திருந்தா இப்படி மாட்டி இருக்க மாட்டோம், அக்கா! எல்லாம் உன்னால தான். நீ தான் கெடுத்தே!”

“என்னை சொல்றியா? எல்லாம் உன் அறிவுகெட்டத்தனத்தால வந்தது. ஒழுங்கா அசல் பதிவுகளை வாங்கியிருந்தா இந்த  சிக்கலே வந்திருக்காது” என சீறிய கரீமா சல்மாவின் கழுத்தை பிடித்தாள். 

“இப்பவும் நீ மக்கு மாதிரி தான் செய்திருக்கே, எனக்கு தெரியாது, தெரியாதுன்னு சொல்லி! இதுக்கு ருஹானா குற்றம் செய்யாதவள்னு நீயே சாட்சி சொல்லிட்டு வந்திருக்கலாம்.”

“நான் என்ன சொல்லி இருக்கணும், அக்கா? நீ தான் சொல்லேன்!”

“ருஹானாவும் மிஷாலும் உங்களுக்கு சந்தேகம் வந்திருச்சின்னு தெரிஞ்சிக்கிட்டு, உங்களை ஏமாத்த அதே இடத்துல அதே உடை உடுத்தி திரும்ப இந்த போட்டோவை எடுத்திருக்காங்கன்னு சமாளிச்சிருக்கலாம்ல?”  

சல்மா வியப்பாக புருவம் உயர்த்த, அவளின் பிடியை விட்ட கரீமா அடியாளுக்கு போன் செய்து நாளை அந்திவேளைக்கு முன் துப்பறிவாளனை கண்டிப்பாக பிடித்திருக்க வேண்டும் என கட்டளையிட்டாள்.

———-

“நான் மிகுந்த குழப்பத்துல இருக்கேன், ஜாஃபர்! என்ன யோசிக்கறதுன்னு கூட எனக்கு புரியல. இதை பார்த்தா உங்களுக்கு என்ன தோணுது?” என்று ஆர்யன் படத்தை நீட்டினான். “காதலர்களுக்குள்ள நடக்கற சண்டையா இல்ல எதிர்பார்க்காதது நடந்திட்ட அதிர்ச்சியும் கோபமுமா? என்னால வேறுபடுத்தி பார்க்க முடியலயே!” என ஆர்யன் புலம்ப, ஜாஃபர் அதை பார்த்துவிட்டு திருப்பி தந்தான். 

“ருஹானா மேம் குற்றமற்றவங்கன்னு தான் எனக்கு தோணுது சார். உண்மை சிலசமயம் மறைந்து தான் இருக்கும்” என்று சொல்லி ஜாஃபர் செல்ல, ‘இது உண்மையா? அவ நிஜமாவே கள்ளமில்லாதவளா? இல்ல, இதும் அவளோட இன்னொரு ஏமாற்று வேலையா?’ என குழம்பியபடி ஆர்யன் தோட்டத்தில் நின்றான். கொட்டும் பனி அத்தனையும் அவன் தலை மீது தான்.

உள்ளமெனும் ஊஞ்சல்

நம்பிக்கைக்கும் சந்தேகத்திற்கும்

இடையே ஊசலாடிட,

அவன் இதயத்தில் அவள் பிம்பம்

கொள்ளவும் முடியாத

தள்ளவும் இயலாத

ஈரத் தத்தளிப்பாய்!

———-

குளிர் மிக அதிகமாக இருக்க, படுக்கையறையில் ருஹானா தன்னுடைய போர்வையையும் ஆர்யன் படுக்கையில் விரித்துக்கொண்டு இருக்க, உள்ளே வந்த ஆர்யன் அதை பார்த்தான்.

அவன் முகத்தில் கேள்வியை பார்த்தவள், “அறையில ஹீட்டர் வேலை செய்யல. நீங்க பனியில நின்னுட்டு வரீங்க, அதான்…” என்று இழுக்க, ஆர்யன் அந்த போர்வையை எடுத்து அவளுக்கு சோபாவில் விரித்தான்.

“எனக்கு ஒன்னுல்ல. நீ தான் நடுங்கறே!” என்று சொன்னவன் இன்னொரு கனமான குளிராடையையும் அவளுக்கு கொண்டுவந்து கொடுத்தான். அவள் அதை போட்டுக்கொள்ள உதவினான். 

அவனின் நெருக்கத்தில் சங்கடப்பட்ட ருஹானா வேகமாக சென்று படுத்துக்கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டான். கட்டிலில் அமர்ந்த ஆர்யன் அவளை பார்த்தபடியே யோசித்தான்.

‘நீ தான் சிதைந்து போயிருந்த என்னை சீராக்கினே! நீ பொய்யா நடிச்சியா என்கிட்டே? ரெண்டு படங்களும் வேற வேற கதையை சொல்லுது. என்னோட ஒரு மனது இன்னும் உண்மைக்காக ஏங்குது. ஒரு மனது ஒன்னும் புரியாத இருட்டுல இருக்குது. என் முன்னால ரெண்டு கதவு இருக்கு. எனக்கு எதுல போகன்னு தெரியல.’

எழுந்து தூங்கும் அவளின் அருகே வந்தான். ‘இதுவரைக்கும் திணறிட்டு இருந்த நான் இன்னைக்கு இந்த போட்டோவை பார்த்து தான் மூச்சு எடுத்தேன். இந்த நம்பிக்கையை இழக்கமாட்டேன். எப்பாடுபட்டாவது உண்மையை தேடி கண்டுபிடிப்பேன்!’

———-

ருஹானா காலையில் தன்னை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த ஆர்யன் முகத்தில் தான் கண்விழித்தாள். தும்மியபடியே “நீங்க தூங்கலயா?” என அவள் கேட்க, அவன் பதில் சொல்லாமல் மாத்திரையை கொடுத்தான். “உனக்கு சளி பிடிக்கப் போகுது, அது நல்லது இல்ல.”

ஒரு கணம் திகைத்தவள் “புரிஞ்சது, இவானுக்காக.. இந்த பருவநிலையில எளிதா எல்லாருக்கும் உடம்பு சரியில்லாம போகும். அது அவனை பாதிக்கும்” என்று சொல்ல, “ஆமா, அதும் ஒரு காரணம்” என்று அவன் சொன்னான். அவள் விழிக்க, அவன் புரியாத பார்வை பார்த்துவிட்டு அவன் வெளியேறினான்.

‘எதுக்கு இதெல்லாம்?’ என்று கேட்டுக் கொண்டவள் மாத்திரையை கையில் எடுத்தாள்.

———-

உணவு மேசையில் கரீமா “இவான் எங்கே? இன்னும் தூங்குறானா?” என ருஹானாவிடம் கேட்க, “அவன் சீக்கிரம் எழுந்துட்டான். அறையிலயே சாப்பிட்டு ஓய்வெடுக்கறான். ரொம்ப வெளியே வர்றது அவனுக்கு நல்லது இல்ல” என்று பதில் அளித்தவளுக்கு தும்மல் வந்துவிட்டது. 

“நீயும் ஓய்வா இரு. ரொம்ப சோர்வாகிட்டே!” என்று கரீமா பொய் கரிசனம் காட்ட, “நேத்து மோசமா இருந்தது. மாத்திரை போட்டதும் இப்போ பரவாயில்ல” என ஆர்யனை பார்த்தபடியே கரீமாவிற்கு பதில் சொன்னாள். “இருந்தாலும் நல்லா சாப்பிட்டு உன் உடம்பையும் பார்த்துக்கோ, ருஹானா டியர்!” என கரீமா ஆர்யனின் முன்னே நடித்தாள்.

தலையாட்டிய ருஹானா தள்ளி இருந்த உணவு பாத்திரத்தை எட்டி எடுக்க முயல, ஆர்யன் அவசரமாக மேசையில்  தவழ்வது போல சென்று அதை எடுத்து அவளிடம் கொடுத்தான். ரொட்டியையும் எடுத்து அவளிடம் நீட்டியவன் “இதையும் சாப்பிடு. அண்ணி சொல்றது சரிதான். உன் உடல்நிலையில கவனமா இரு” என்றான்.

ருஹானா மட்டுமல்ல, ஆர்யனின் அக்கறையை பார்த்து அதிர்ந்து போயிருந்த சல்மாவும் உணவை ஒரு பிடி கூட உண்ணாதிருக்க, அதை கவனித்த அம்ஜத் “சல்மா! நீ சாப்பிடலயா?” என கேட்க, அவள் சாப்பிடுவது போல பாவனை செய்தாள். 

துப்பறிவாளனின் சந்திப்பை பற்றி தெரிந்து கொள்ள “ஆர்யன்! இன்னைக்கு உன் வேலை எப்படி? இரவு உணவுக்கு உனக்காக காத்திருக்கலாமா?” என கரீமா கேட்க, “வேண்டாம், எனக்கு முக்கியமான வேலை ஒன்னு இருக்கு” என்று ஆர்யன் அவளை திகிலடைய வைத்தான். 

———

ருஹானா பரிசளித்த உடைந்த பேனாவை ஆர்யன் கையில் வைத்துக்கொண்டு வெளியறையில் இருக்க, உள்ளறையில் ருஹானா முன்தினம் ஆர்யன் அவளுக்கு போர்த்திய அவனது குளிராடையை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.

ஆர்யனின் தற்சமய அனுசரணையில் நெகிழத் தொடங்கிய மனதை ‘இல்ல… அப்படிலாம் யோசிக்காதே! இந்த போர்நிறுத்தம் இவானுக்காக தான். இதுக்கு வேற எந்த அர்த்தமும் இல்ல..’ என்று சீராக்கி கொண்டவள் அடுத்து செய்ய வேண்டியது என்ன என்று முடிவெடுத்தாள். ‘இது இப்படியே போக முடியாது. இதை பத்தி பேசியாகணும்.’

ருஹானா மிஷாலை அறையும் படத்தை பார்த்துக்கொண்டிருந்த ஆர்யன், ருஹானா வெளியே வந்ததும் அதை கோட் பையில் மறைத்தான்.

“நான் உங்ககிட்டே பேசணும். நீங்க செய்த எல்லாத்துக்கும் நன்றி” என்று தொடங்கியவள் “எனக்கு தெரியும், நம்மோட மோதல் இவானோட உடல்நிலையால நிறுத்தப்பட்டு இருக்கு. வேற எதும் மாறல. நீங்க என்னை வெறுக்கறீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். என்னோட ஆழமான மனக்காயங்களும் ஆறாம தான் இருக்கு. அது எப்படி ஆறப் போகுதோ?” என சொல்லும்போது அவள் கண்களில் கண்ட கண்ணீர் ஆர்யன் மனதை பிசைந்தது. 

“ஆனா இப்போ நிலவுற அமைதி  இவானுக்கும் நலம் பயக்கும். இப்படியே எல்லாம் நீடிக்கட்டும். நானும் எல்லாம் மறக்க தயாரா இருக்கேன், இவானோட மகிழ்ச்சிக்காக. மறுபடியும் பழையபடி மாறினாலும் நம்மோட சண்டையில இருந்து நான் இவானை பாதுகாப்பேன்” என்று தெளிவாக பேசிமுடித்து திரும்பிய ருஹானா, ஆர்யன் அவளை ஆழ்ந்து பார்க்கவும் நின்றாள்.

‘சிலசமயம் சிலது நடக்கும். அதன் விளைவா எல்லாமே மாறும், உலகமே மாறும். ஆப்பிரிக்காவில ஒரு பட்டாம்பூச்சி சிறகை அசைச்சா, அதோட விளைவா உலகத்தோட மறுபகுதியில புயல் ஏற்படும்னு சொல்வாங்க! இப்போ அதான் இங்க நடக்குது.” ஆர்யன் பேசுவது புரியாமல் ருஹானா பார்த்தாள்.

“மறுபடியும் எங்கயோ பட்டாம்பூச்சி சிறகை அசைக்கலாம். நாளைக்கோ, எப்பவோ எனக்கு தெரியல. அந்த சரியான தருணம் வரும்போது எல்லாமே மறுபடியும் நல்லதா மாறும். ஒருகண மாற்றம் வாழ்க்கையையே புரட்டி போடும் தானே!” பேசி முடித்துவிட்டேன் என்பது போல ஆர்யன் திரும்பி அவன் வேலையை பார்த்தான்.

குழம்பிய ருஹானா உள்ளே வந்து கதவை மூடியவள் ‘என்ன சொல்ல வர்றீங்க? இது இன்னொரு விளையாட்டா? அடுத்து இன்னொன்னை தாங்கற சக்தி எனக்கு இல்ல, என்னால முடியாது’ என அழுதாள்.

———-   

‘மொய்தீன்! நீ கேட்ட பணத்தை நான் கொடுக்கறேன். ஆர்யனை சந்திக்கும்முன்னாடி என்னை பாரு’ என செய்தி அனுப்பிவிட்டு, சல்மா தோட்டத்தில் நடந்தபடியே துப்பறிவாளனின் குறுஞ்செய்தியை எதிர்பார்த்திருந்தாள்.  

சில நிமிடங்களில் அவனிடம் இருந்து அழைப்பு வரவும், வேகமாக அழைப்பை ஏற்றாள். “ஹலோ! மிஸ்டர் மொய்தீன்!”

“கடைசியா புத்திசாலித்தனமா முடிவெடுத்திருக்கீங்க, சல்மா மேடம்! நான் கேட்ட பணம் தயாரா?”

“தயார் தான். நீ எவ்வளவு கேட்டாலும் நான் தரேன். நீ ஆர்யனை இதுக்குள்ள இழுக்காத வரையில எவ்வளவு பணமானாலும் தருவேன்.”

“ஆக, உன் பாடத்தை நீ படிச்சிக்கிட்டே. ஆனா இது தாமதமா நடந்து இருக்கே! என்னை மாட்ட வச்சி உன் வாழ்க்கையிலயே மிகப்பெரிய தப்பை செய்திருக்கே! இதான் நீ எனக்கு செய்த கைமாறா?” 

“என்னை மன்னிச்சிடுங்க, மிஸ்டர் மொய்தீன்! உங்களை கெஞ்சி கேட்கறேன்.”

“வீணா கெஞ்சாதே. நீ பறித்த குழியில நீயே விழுந்துக்கோ!”

“ஓஹோ! நான் மாட்டினா நீ தப்பிச்சிடுவேன்னு நினைக்கறியா, மொய்தீன்? அந்த ஆவணங்கள் எல்லாமே பொய்ன்னு தெரிஞ்சா ஆர்யன் என்னை மட்டும் கொல்ல மாட்டான். நான் மட்டுமா இதெல்லாம் செய்தேன்? அவன் மனைவிக்கு எதிரா அத்தனை போலியான அத்தாட்சிகள் தயாரித்த உன்னையும் சேர்ந்து தான் என்னோட எரிப்பான்.” 

“எனக்கு ஒன்னும் ஆகாது. நான் தான் உண்மையை சொல்லப் போறேனே! நீ உயிரோட எரியுறதை நான் சந்தோசமா வேடிக்கை பார்ப்பேன்” என்று சொல்லிவிட்டு அவன் அழைப்பை துண்டித்து விட்டான்.

“ஹல்லோ!” என பலமுறை கத்திப்பார்த்த சல்மா “ராஸ்கல்!” என அவனை திட்டித் தீர்த்தாள்.

தூரத்தில் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த புது தோட்டக்காரன் கடப்பாரையை கொண்டு பூமியில் வேகமாக குத்தினான்.

——— 

கட்டிலில் அமர்ந்து சல்மா அழுது கொண்டிருக்க, கரீமா அலைபேசியில் கோபமாக பேசிக்கொண்டு இருந்தாள். “அதெப்படி? உங்க கையில இருந்து தப்பிப்பான்? உங்க திறமையெல்லாம் எங்க போச்சி? என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது. அவன் ஆர்யனை பார்க்கறதுக்குள்ள நீங்க அவனை பிடிக்கணும். அவன் உங்க கைல மாட்டின உடனே எனக்கு போன் செய்!”

“அக்கா! இப்போ என்ன ஆகும்?” அலைபேசியை மூடிய கரீமாவிடம் சல்மா கேட்க, அக்கா தங்கையின் மேல் அந்த கோபத்தை கொட்டினாள். “என் கண்ணு முன்னால இப்படி அழுதுட்டு இருக்காதே! எனக்கு பித்து பிடிக்க வைக்காதே!”

“நாம தொலைஞ்சோம். ஆர்யன் எல்லா உண்மையும் தெரிஞ்சிக்க போறான். அர்ஸ்லான் மாளிகைல இதான் நாமோட கடைசி பொழுது. தோட்டத்துல குழிவெட்டி நம்மை உயிரோட புதைச்சிடுவான். நம்ம கதை முடிந்தது” என கரீமா சொல்ல, பீதி நிறைந்த அவள் முகத்தை பார்த்த சல்மா, மெல்ல நகர்ந்து வந்து அவள் கையை பிடித்துக்கொண்டாள்.

——— 

ருஹானா முடிவிலி சின்னத்தை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருக்க, ஆர்யன் திடீரென உள்ளே வரவும், அது கீழே போட்டுவிட்டாள். அதை எடுத்து அவளிடம் கொடுத்த ஆர்யன் பதட்டமான அவள் முகத்தை பார்த்து ஏதோ சொல்ல வந்து நிறுத்திக்கொண்டான்.

“என்கிட்டே எதும் சொல்லணுமா?” என அவள் கேட்க, அவன் பதில் சொல்வதற்குள் போனில் செய்தி வந்த ஒலி கேட்டது. துப்பறிவாளன் ஆர்யனை சந்திக்கும் இடத்தை பற்றிய தகவலை அனுப்பி இருந்தான்.

“முக்கியமான வேலையா போறேன். திரும்பி வந்துடுவேன். எனக்காக காத்திரு” என்று சொல்லிவிட்டு ஆர்யன் வெளியே சென்றுவிட்டான். 

திகைத்து நின்ற ருஹானா முடிவிலி சின்னத்தை இழுப்பறையில் பத்திரப்படுத்தியவள் அப்படியே கட்டிலில் அமர்ந்துவிட்டாள். “அல்லாஹ்! இதெல்லாம் நிஜமா நடக்குமா? நடந்த எல்லாம் மறந்து போகுமா? காயங்கள் அத்தனை எளிதா குணமாகுமா? காத்திருக்க சொல்றாரே! நம்பாதேன்னு என் மனசு சொல்லுது. ஆனா அவர் சொன்னது போல நல்லதா எல்லாம் மாறுமா? அல்லாஹ் நீங்க தான் துணை நிற்கணும்” என்று ருஹானா இறைவனை வேண்டினாள்.

———–

அங்கே இருளில் துப்பறிவாளன் சொன்ன இடத்தில் காத்திருந்த ஆர்யனும் ஆண்டவனை நினைத்து ஒரு நிமிடம் கண் மூடினான். நிமிர்ந்து வானத்தை பார்க்க அங்கே துருவ நட்சத்திரம் பளிச்சென்று தெரிந்தது. 

‘துருவ நட்சத்திரம். அதான் மாலுமிகளுக்கும் மற்றவர்களுக்கும் வழிகாட்டி. மனிதன் செல்லும் பாதையை முடிவெடுக்க வைக்கறதும் அந்த நட்சத்திரம் தான்!’ ருஹானாவின் வார்த்தைகள் ஆர்யனின் காதில் ஒலிக்க, அவன் மானசீகமாக அவளுடன் பேசிக்கொண்டான்.

“இன்னைக்கு இரவு எல்லாம் கண்டுபிடிக்கறேன், உன்கிட்டே திரும்பி வர்ற வழியை கண்டுபிடிக்கறேன்!”

(தொடரும்)

Advertisement