Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

  அத்தியாயம் – 127

“உங்க வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்றதுக்கு மன்னிச்சிடுங்க, சையத் பாபா! இவான் உங்களோட மீட்பால் சாப்பிடணும்னு ஆசைப்பட்டான்.”

“சையத் அங்கிள்! உங்களுக்கு தெரியுமா? எனக்கு உடம்பு சரியாகிடுச்சி. நான் நல்லா சாப்பிட்டு மாத்திரையும் போட்டுக்கிட்டேன்னா சித்தப்பாவை போல வலுவா இருப்பேன்.”

“ஆமா, சிங்க மகனே! இந்த மீட்பால்ஸ் இன்னும் உன்னை பலமாக்கிடும். எல்லா துன்பமும் ஓடியே போச்சி. இப்போ நீங்க மூணுபேரும் சேர்ந்து சந்தோசமா இருக்கவேண்டிய நேரம்.”

ருஹானாவும் ஆர்யனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். 

“நான் பயப்படவே இல்ல, சையத் அங்கிள்! சித்தியும் சித்தப்பாவும் தான் ரொம்ப கவலைப்பட்டுட்டு இருந்தாங்க. எனக்கு புரியாதுன்னு நினைச்சாங்க. ஆனா நான் இப்போ பெரிய பையனாகிட்டேன். நான் அழவே இல்லயே!”

“ஏன்னா நீ தான் எங்க உயிர்!” என்ற ருஹானா இவானின் கன்னத்தில் முத்தமிட, ஆர்யன் அவன் தலையை தடவிக் கொடுத்தான்.

“இதெல்லாம் அல்லாஹ் நமக்கு கொடுத்த பரீட்சை. பொறுமையா இருந்து நீங்க அதுல தேறிட்டீங்க. கண்கள் பார்க்க மட்டும் தான் செய்யும். மனசு தான் உணர்வுகளை புரிஞ்சிக்கும். சில சமயம் நாம பொய்யை பார்த்துட்டு உண்மையை உணர மறுத்துடுவோம். ஆனா கடைசியில இறைவன் நமக்காக கதவை திறந்து வைப்பார். அந்த கதவை கண்டுபிடிக்கறது மட்டும் தான் நம்ம வேலை. அது தான் நமக்கான சோதனை.”

ருஹானா புன்னகையுடன் தலையாட்ட, ஆர்யன் கவலையாக பெருமூச்சு விட்டான்.

“அங்கிள்! இன்னும் கொஞ்சம் மீட்பால் இருக்கா?”

“வா வீரனே! நாம உள்ள போய் சூடா எடுத்துட்டு வருவோம்” என்று சையத் இவானை தூக்கிக்கொண்டு நகர, இவான் “அங்கிள், சித்தியும் சித்தப்பாவும் நேசிக்கிறாங்களா?” என அவர் காதில் கேட்டான்.

“ஆமா, ஆனா அதை உள்ளுக்குள்ளயே வச்சிருக்காங்க” என்றார் அவரும் மெல்ல.

“சண்டை போடுறாங்களே!”

“சீக்கிரம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்குவாங்க. ரொம்ப சீக்கிரமே!”

சையத்தும் இவானும் உள்ளே செல்ல, ருஹானாவும் ஆர்யனும் பேசிக்கொண்டனர்.

“அல்லாஹ் இதுபோல இன்னொரு துயரத்தை கொடுக்க மாட்டார்னு நான் நம்புறேன். அப்படியே இருந்தாலும் என்னோட உயிரை எடுத்துக்கட்டும்.”

ஆர்யன் உடனே “இனிமேல் மரணத்தை பற்றிய பேச்சே வேண்டாம். இவானும் சீக்கிரமே குணமாகிடுவான்” என்று சொல்ல, ருஹானா “இன்ஷா அல்லாஹ்!” என்று சொன்னவள் சங்கிலியின் டாலரை பிடிக்க நெஞ்சில் கைவைத்தாள்.

அறுந்த சங்கிலி தன் உடையின் பையில் இருப்பது அப்போது தான் அவளுக்கு நினைவு வந்தது. அதை எடுத்து அவள் கையில் பிடித்துக்கொள்ள, ஆர்யன் அதை பார்த்தான். அவன் அவளை இழுக்கும்போது சங்கிலி அறுந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது.

———– 

மாளிகைக்கு வந்த இவானை அனைவரும் மகிழ்வுடன் அன்பாக வரவேற்க, அவனை நோய்க்கிருமிகள் தாக்காமல் இருக்க எல்லாரும் கவனமாக இருக்கவேண்டும் என ஆர்யன் அறிவுறுத்தினான்.

இவானை அவனது அறையில் விட்டு அவனோடு சேர்ந்து விளையாடிய ருஹானாவிற்கு ஆர்யனை தான் அணைத்தது அப்போது தான் நினைவிற்கு வந்தது. ‘என்ன முட்டாள்தனம் செய்தேன்? நானே போய் நெருங்கினேனே!’ என தலையில் அடித்துக்கொண்டவள் சிறிது நேரத்தில் தெளிந்தாள். ‘இவானுக்காக மட்டும் தான். வேற எந்த நோக்கமும் இல்லை.’  

பின் உடை மாற்ற தங்கள் அறைக்கு வந்தவளை கணினி முன் இருந்த ஆர்யன் ஏறிட்டு பார்க்க, அவனிடம் “எதுவுமே நடக்காதது போல விளையாடிட்டு இருக்கான். சீக்கிரமே எல்லாம் மறந்துட்டான். குழந்தைகள் இப்படித்தான் அந்த தருணத்தில் வாழ்றவங்க” என்றாள்.

“எல்லாமே இத்தனை எளிதா இருக்கணும்னு நானும் ஆசைப்படறேன்” என ஆர்யன் தன்னை மறந்து சொல்லும்போது ஜாஃபர் முன்தினம் எடுத்த புகைப்படங்களை கொடுத்து சென்றான்.

இருவரும் நெருங்கி நின்று அவற்றை ஆவலாக பார்க்க, ருஹானா “இவான் எவ்வளவு சந்தோசமா இருக்கான், அவன் கண்ணுலயே அது தெரியுது” சொல்ல, மகிழ்ச்சியாக தலையாட்டிய ஆர்யன் அடுத்த படத்தை பார்த்ததும் கோபம் கொண்டான். “நீ ஏமாற்றிட்டே!”

“என்ன ஏமாற்றினேன்?”

“இந்த கோலியைப் பாரு, அது கோட்டை விட்டு தள்ளி தான் இருக்கு.”

“அது போட்டோல அப்படி தெரியுது. நான் ஏமாற்றி இருந்தா, உங்க கண்ணை பார்த்து பேசுற தைரியம் எனக்கு இருக்காது” என்று அவன் கண்களை நோக்கிய ருஹானா அதில் ஆழ்ந்து போனாள். உடனே தன்னை மீட்டுக்கொண்டு “உங்களுக்கு நான் வெற்றி பெற்றதை ஏத்துக்க முடியலன்னு எனக்கு தோணுது” என்றாள்.

“நீ ரூல்ஸ் படி விளையாடல.”

“நான் நல்லா விளையாடினது என் தப்பா?”

“எனக்கு ஒரு ஐடியா. திரும்பவும் ரெண்டுபேரும் விளையாடுங்க” என வாசலில் வந்து நின்ற இவானின் கைகளில் கோலிக்குண்டுகள் இருந்தன.

“ஒழுங்கா விளையாடினா உன் சித்தி தோத்து போய்டுவாங்க” என்று ஆர்யன் சண்டைக்கு இழுக்க, “அதையும் தான் பார்ப்போம்” என சொன்ன ருஹானா சட்டையின் கைகளை மடக்கி விட்டுக் கொண்டாள். கூந்தலை கோதியவள் பையிலிருந்து கிளிப்பை எடுக்க அதோடு சேர்ந்து சங்கிலியும் வெளியே வந்து விழுந்தது.

அதை எடுத்து மேசையில் வைத்தவள் முடியை ஒன்றாக சேர்த்து முடிந்துகொண்டாள். அவள் முஸ்தீபுகளை பார்த்த ஆர்யன், அவளின்  சங்கிலியையும் பார்த்தான். 

“சித்தி தயாராகிட்டாங்க, சித்தப்பா! நீங்க?”

“நான் எப்பவும் தயார் தான், சிங்கப்பையா!”

பேனாவால் எல்லைக்கோட்டை அமைத்தவர்கள் ஆட்டத்தை தொடங்க, இவான் சந்தோசத்துடன் முக்கோணம் வரைந்து அதில் கோலிக்குண்டுகளை வைத்தான்.

ருஹானா கோலியை அடிக்க குனிய, அவள் கையை பிடித்த ஆர்யன்  தள்ளி நிறுத்தினான். “கோட்டுக்கு முன்னாடி கையைக் கொண்டு வராதே!”

இருவரும் அருகருகே மண்டியிட்டு ஒருவரையொருவர் பார்த்திருக்க, உள்ளே நுழைந்த சல்மா அதிர்ந்தாள். அவளை பார்த்ததும் இருவரும் எழுந்து நிற்க “எனக்கு உங்க கையெழுத்து வேணும், ஆர்யன்!” என்றாள்.

“ஆனா சித்தியும் சித்தப்பாவும் விளையாடிட்டு இருக்காங்களே” என இவான் ஏமாற்றமாக சொல்ல, “சித்தப்பாவை தொந்தரவு செய்யக்கூடாது, கண்ணே!” என ருஹானா அவன் கையை பிடித்தாள்.

“அப்புறம் விளையாடணும், சரியா, சித்தப்பா?”

“கவலைப்படாதே, சிங்கப்பையா! நாங்க இந்த ஆட்டத்தை நிச்சயமா முடிப்போம். எந்த ஆட்டத்துக்கும் கண்டிப்பா ஒரு முடிவு உண்டு. இதுக்கும் அப்படித்தான்.”

——–

வாகிதாவிடமிருந்து அழைப்பு வர, அவளுக்கு இவான் குணமான செய்தியை ருஹானா கூறினாள். பர்வீனை பார்க்க வருமாறு வாகிதா ருஹானாவை அழைக்க, சரியென்று சொன்ன ருஹானா ஆர்யனை நாடி வந்தாள்.

“கார் இருந்தா, நான் பர்வீன் அம்மாவை பார்த்துட்டு வரட்டுமா? இவானை பற்றி அவங்க வேற யார் மூலமா கேள்விப்பட்டாங்கன்னா வருத்தப்படுவாங்க.”

அவளுக்கு கார் தருவித்த ஆர்யன் “நான் அவங்களை விசாரித்ததாக சொல்லு” என தன்மையாக சொல்ல, வியப்பை மறைத்துக்கொண்ட ருஹானா சரியென்றாள்.

“இவான்?”

“நான் பார்த்துக்கறேன். நீ போயிட்டு வா!” என்று சொன்ன ஆர்யன், அவள் சென்றதும் அவர்கள் இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை ஆசையாக பார்த்தான். பின் அவளுக்கு தெரியாமல் அவன் எடுத்து வைத்திருந்த சங்கிலியை பழுதுபார்க்க ஆரம்பித்தான்.

——–

“டேமிட்!”

“என்ன சல்மா?”

“டிடெக்டிவ் மொய்தீன் பற்றி ஆர்யனுக்கு ஏதாவது தெரிஞ்சிடுச்சான்னு பார்க்கலாம்னு ஆர்யன் அறைக்கு போனேன், அக்கா! அவன் தரையில உட்கார்ந்து அந்த குப்பை கூட கோலி விளையாடிட்டு இருக்கான். எனக்கு புரியல. அவன் செய்றதுலாம் எனக்கு பைத்தியம் பிடிக்குது.”

“அதை விடு. என்ன தெரிஞ்சிக்கிட்டே? அதை சொல்லு.”

“ஒன்னும் இல்ல. ஆனா மொய்தீன் எதும் சொல்லியிருந்தா ஆர்யன் இப்படி சாதாரணமா விளையாடிட்டு இருக்க மாட்டானே!”

“ம்ம்… அதும் சரிதான். என் ஆட்கள் கையில அவன் இன்னும் அகப்படல. அதான் பயமா இருக்கு.”

“அக்கா! அவனுக்கு இன்னும் கொஞ்சம் பணம் கொடுக்கலாம்னு பேசி பார்க்கலாமா?”

“ரெண்டு மடங்கா கூட கொடுக்கலாம். ஆனா அவன் ஒத்துக்கணுமே! அவன் கோபமா இருக்கான். நம்ம மேல இருந்த நம்பிக்கை போய்டுச்சி அவனுக்கு.”

“நம்ம கழுத்துக்கு கத்தி தான் அவன்!”

“நீ ஒன்னு செய், சல்மா! அவன் குடும்பம் பத்தி தகவலை தேடு. அவன் கிடைக்கலனாலும் அவனோட குடும்பத்தினரை பிடிச்சி வச்சிக்கிட்டு மிரட்டுவோம். தன்னால பணிஞ்சி வந்துடுவான்.”

———–

இவானின் நோயைப்பற்றி கேள்விப்பட்ட பர்வீன் துக்கமும், சந்தோசமும் ஒரே நேரத்தில் அனுபவிக்க, மூவரும் இவானின் ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் இறைவனை பிரார்த்தித்தனர். 

வாகிதா ஆர்யனின் மனநிலையை பற்றி கேட்க, ருஹானா குழப்பமாக தலையசைத்தாள். “என்ன சொல்றது வாகிதா? இவானை அவர் பார்த்துக்கிட்ட விதமும், அவனுக்காக அவர் துடித்த துடிப்பும், அப்படியே வேற ஆளா இருந்தார். அந்த பழைய கொடூர முகம் காணாம போய்டுச்சி. நான் நினைக்கறேன், வெளிச்சமும், இருட்டும் அவரை மாறி மாறி தாக்குது. இப்போ இருக்கற மாதிரியே இனிமேல் எப்பவும் இருப்பாரான்னும் எனக்கு தெரியல.”

———

இவான் தூங்குவதாக ஜாஃபர் வந்து ஆர்யனிடம் சொல்ல, அவனுடைய மருந்து நேரம் தவறிடக்கூடாது என ஆர்யன் அவனை எச்சரித்தான்.

“கவலைப்படாதீங்க சார்! நான் பார்த்துக்கறேன். சின்ன சார் குணமாகி வந்ததும் மாளிகையே மகிழ்ச்சியா மாறிடுச்சி. ருஹானா மேடமும் ரொம்ப கஷ்டப்பட்டாங்க. இப்போ தான் அவங்க முகத்துல நிம்மதியை பார்க்க முடியுது.”

“இதே நிம்மதி நிலைச்சா நல்லா இருக்கும். அப்படியே அந்த ஃபைல் விவகாரமும் தீர்ந்துட்டா நிம்மதி தான்” என பெருமூச்சு விட்ட ஆர்யன், “ஆனா இந்த போராட்டத்துல ஒன்னு மட்டும் எனக்கு நல்லா புரிஞ்சது, இவான் மேல அவ வச்சிருக்கற பாசம் பொய்யில்ல” என்றவன் சங்கிலியை ஜாஃபரிடம் கொடுத்தான். “இதாவது சரி செய்ய முடிஞ்சதே!” 

ருஹானாவிடம் நேரிடையாக கொடுக்க தைரியம் இல்லாமல் தன்னிடம் கொடுக்கிறான் என புரிந்து கொண்ட ஜாஃபர், ஆர்யன் நகர்ந்ததும், “எனக்கு தெரிந்த உங்க ரெண்டு பேரோட காதல், உங்க ரெண்டு பேருக்கும் புரியணும்னு நான் ஆசைப்படறேன்” என்று சொன்னவன் சங்கிலியை பத்திரப்படுத்தினான். 

———–

இவான் அறையில் இருந்த ஆர்யனிடம் ஜாஃபர் ஒரு காகித உறையை கொண்டுவந்து தர, ஆர்யன் விசாரித்தான். “யார் அனுப்பினது?”

“அவசரம், முக்கியம்னு கேட்ல செக்யூரிட்டி கிட்டே கொடுத்துட்டு போயிருக்காங்க, சார்.”

ஆர்யன் உறையை பிரிக்க, அதில் ஒரு புகைப்படம் இருந்தது. அதை பார்த்த ஆர்யன் திகைத்தான். ருஹானா மிஷாலை கன்னத்தில் அறையும் காட்சி அதில் தெளிவாக தெரிந்தது. மிஷால் ருஹானாவை அணைத்து நின்ற அதே இடம், அதே உடை, அதே சூழல்.

புகைப்படத்தை உற்று நோக்கிய ஆர்யன் அதை திருப்பிப் பார்த்தான். ‘இது போல வந்துட்டே இருக்கும், மிஸ்டர் ஆர்யன்! நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய உண்மைகள் நிறைய இருக்கு. நாளை இரவு சந்திக்கலாம் – மொய்தீன்’ என்று எழுதியிருந்தது.

‘அவனை அணைச்சதும் ஏன் அறையுறா? எல்லாமே சதி திட்டமா?’ என யோசித்தபடி ஆர்யன் நிற்க, சிறுநரி அதுவாக வந்து சிங்கத்தின் குகையில் நுழைந்தது.

ஆர்யன் தனியாக நிற்பதை பார்த்ததும் அவனிடம் பேச்சு கொடுக்கலாம் என உடையையும், முகத்தையும் சரிசெய்துகொண்டு வந்த சல்மா “ஆர்யன் ரொம்ப களைச்சி தெரியுறீங்க! நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்யவா?” என பக்கம் வந்தாள்.

“ஒஹ் செய்யேன்! இது என்னன்னு சொல்லு” என்று ஆர்யன் காட்டிய படத்தை பார்த்த சல்மாவின் முகத்திலிருந்த சிரிப்பு ஒரு நொடியில் காணாமல் போனது. “சத்தியமா எனக்கு தெரியாது!”

“நீ ஏற்பாடு செய்த துப்பறிவாளன் தான் எனக்கு அனுப்பி இருக்கான். மத்த படங்களோடு ஒத்து போகுது. அதே இடம், அதே நேரம். ஆனா இது வேற செயலை சொல்லுது. என்ன அர்த்தம் இதுக்கு? சொல்லு!” ஆர்யன் முன்னேறி வர, நடுங்கிய சல்மா பின்னடைந்து சுவரில் சாய்ந்தாள்.

“எனக்கு தெரியல. மொய்தீன் கொடுத்ததை அப்படியே உங்ககிட்டே கொடுத்துட்டேன்.”

“நீ எதும் சொல்ல வேண்டாம். நான் நாளைக்கு அவன்கிட்டே இருந்தே தெரிஞ்சிக்கறேன்” என ஆர்யன் உறும, அவள் அப்படியே ஓட்டம் பிடித்தாள்.

‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பதை மீண்டும் நிரூபிக்கிறான் ஆர்யன். ருஹானாவிற்கு ஆதரவாக கிடைத்த ஆதாரத்தை சல்மாவிடம் சென்றா காட்டுவான்? அதுவும் துப்பறிவாளன் சந்திப்பையும் பற்றி சொல்கிறான். சல்மாவின் மீது அத்தனை நம்பிக்கையா அல்லது இவன் அடிமுட்டாளா?

ஆனால் ருஹானாவை மட்டும் சந்தேகப்படுவான், அவளிடம் மட்டும் எந்த விளக்கத்தையும் கேட்க மாட்டான். ஏனென்றால் அவளுக்கு நடப்பவை தெரிந்து விட்டால் அவள் ஆமாம் என்று ஒத்துக் கொண்டாலும் இவனால் தாங்க முடியாது. அவள் மாளிகையை விட்டு சென்றுவிட்டாலும் அந்த பிரிவை இவனால் தாங்க முடியாது.

என்னவொரு காதலின் மடத்தனம்! அதுவும் தெரிவிக்காத காதல்! இறைவன் தான் இவனை காப்பாற்ற வேண்டும்! 

———– 

Advertisement