Advertisement

காலையில் எழுந்த ஆர்யன் ருஹானாவை சோபாவில் காணாமல் தேட, அவள் தோட்டத்தில் கடுங்குளிரில் சிரமப்பட்டு குழியை வெட்டிக் கொண்டிருந்தாள். அருகில் தோட்டக்காரன் நின்றும் அவன் உதவியை அவள் ஏற்கவில்லை.

வேகமாக கீழே சென்ற ஆர்யன் அவளிடமிருந்து கடப்பாரையை வாங்கி குழியை பெரிதாக்கி கொடுக்க, இருவரும் சேர்ந்து எலுமிச்சை செடியை நட்டனர். அதை அழுத்தி ஊனி பலப்படுத்தி தண்ணீர் ஊற்றினர். அவர்களுக்கு திருப்தியும், நிம்மதியும் ஏற்பட்டது.

——–

மருத்துவமனை செல்லும் இவானுக்கு அம்ஜத் தவிர மற்றவர்கள் வாசலுக்கு வந்து கண்ணீரை மறைத்தவாறு விடைகொடுத்தனர்.

“லிட்டில் சார் உங்களுக்கு பிடிச்ச ஜாம் செஞ்சி வைக்கறேன். சீக்கிரம் திரும்பி வாங்க!” என்றார் சாரா.

“உங்ககூட விளையாட புது விளையாட்டு கண்டுபிடிச்சி வைக்கறேன். அங்க உங்களுக்கு போரடிச்சா எனக்கு போன் செய்ங்க!” என்றாள் நஸ்ரியா.

கையில் அவனுக்கு பிடித்தமான சிண்டு பொம்மையை வைத்திருந்த இவான் எல்லாவற்றுக்கும் சிரித்தபடி தலையாட்டிக்கொண்டான். “ஜாஃபர் அங்கிள்! நான் திரும்பி வரவரைக்கும் என்னோட மத்த பொம்மையெல்லாம் கவனமா பார்த்துக்கங்க” என்று சொல்ல, ஜாஃபர் சரியென்றான்.

‘இது எப்போது முடியும்?’ என்பதுபோல சல்மா பார்த்து நிற்க, ஆர்யன் அண்ணனுக்கு எந்த விஷயமும் தெரியக்கூடாது என கரீமாவிடம் எச்சரிக்கை செய்துவிட்டு, ருஹானாவும் இவானும் ஏறிக்கொள்ள காரை எடுத்தான்.

தண்ணீரை எடுத்து வேகமாக ஊற்றிய சாரா “இந்த தண்ணீரைப் போல வேகமாக போய் வேகமாக திரும்பி வாங்க” என்றார், அழுதுக்கொண்டே.

———-

மருத்துவமனை வாசலில் ருஹானா பயந்து நிற்க, இருவர் கைகளையும் தன்னிரு கைகளாலும் பிடித்துக்கொண்ட ஆர்யன் “மூணு பேரா உள்ளே போறோம், மூணு பேரும் திரும்பி வீட்டுக்கு போவோம்” என்றான் நம்பிக்கையாக.

அங்கே வாயுபலூன்கள் பலவர்ணங்களில் ஒருவர் விற்க, இவான் ஆசையாக அதை பார்த்தான். ருஹானா “வாங்கிக்கோ அன்பே!” என்று சொல்ல, “எது எடுக்க சித்தி? சிவப்பு கலரா, மஞ்சள் கலரா?” எனக் கேட்க, ஆர்யன் “எல்லாத்தையும் எடுத்துக்கோ, சிங்கப்பையா!” என்றான்.

“வேணாம், சித்தப்பா! ஹாஸ்பிடலுக்கு சிகிச்சைக்கு வரும் மற்ற பசங்களுக்கு வேணுமே! நான் சிவப்பு பலூன் எடுத்துக்கறேன்.”

அடுத்தவர்களுக்காக யோசிக்கும் ருஹானாவின் குணம் இவானுக்கு வந்திருப்பதை கண்டு பெருமை கொண்ட ஆர்யன், பெருமிதமாக பலூனுக்கு காசு கொடுத்தான்.

பொம்மை படங்கள், விளையாட்டு பொருட்களோடு இருந்த இவானின் அறை சிறுவர்களுக்கு என்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அவனை அங்கே தங்க வைத்த ருஹானாவும் ஆர்யனும் அவனுக்கு தேவையானவற்றை அலமாரியில் அடுக்கி வைத்தனர்.

அவர்களின் முகத்தில் சிரிப்பில்லை என கண்ட இவான் “சித்தப்பா! நான் உங்களுக்கு ஒரு கதை சொல்றேன், கேளுங்களேன்” என்று சொல்ல, இருவரும் அவன் பக்கம் வந்து அமர்ந்தனர்.

“ஒரு அரக்கன் சின்ன பசங்களோட சிரிப்பை திருடிட்டு போயிட்டான். சிரிப்பு இல்லாம பசங்க சோகமா இருந்தாங்க. அப்போ வெள்ளை உடை தேவதைகள் வந்தாங்க. நாங்க குட்டிப் பசங்களுக்கு சிரிப்பை உருவாக்கறோம். ஆனா அதுக்கு ஒரு நிபந்தனை இருக்கு. எங்களோடதான் சில நாட்கள் தங்கி இருக்கணும்னு ஒரு பெரிய கோட்டைக்கு கூட்டிட்டு போனாங்க. அந்த கோட்டை தான் இந்த மருத்துவமனை. இங்க இருக்கறவங்க தான் தேவதைகள். சீக்கிரமே அவங்க பசங்களுக்கு சிரிப்பை வரவச்சிடுவாங்க.”

இவான் சொன்ன கதையை கேட்டு ஆர்யன் உணர்ச்சிவெள்ளத்தில் இருக்க, அவர்களுக்கு மருத்துவரிடம் இருந்து அழைப்பு வந்தது. இவானை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை செவிலிப்பெண் ஏற்க, இருவரும் வெளியே நடந்தனர்.

“வரும்போது இந்த கதையை இவானுக்கு நீ சொன்னியா?” என ஆர்யன் கேட்க, “இல்ல, இது நான் சொன்ன கதையில்ல. அவனோட கற்பனை” என்று ருஹானாவும் ஆச்சரியமாக சொல்ல, ஆர்யனும் வியந்து போனான்.

மருத்துவர் இவானின் சிகிச்சை முறைகளையும், அதன் பக்கவிளைவுகளையும் எடுத்து சொல்லி, அதனால் மனம் தளராது அவர்கள் நடந்து கொள்ளவேண்டிய வழிமுறைகளையும் விளக்கி சொன்னார். மேலும் சில ஆழமான பரிசோதனைகள் இப்போது எடுக்கவேண்டும், அதன் முடிவுகளை வைத்தே அடுத்து வரும் சிகிச்சை அமையும் என்று  சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.

“இன்னும் எத்தனை டெஸ்ட் தான் எடுப்பாங்க?” என ருஹானா கவலைப்பட, ஆர்யன் சிகிச்சையின் கடுமை கண்டு பயந்தான். “நானும் என் தலைமுடியை சிரைத்து கொள்வேன்” என்று ஆர்யன் வருத்தப்பட்டு பேச, “நானும்!” என்று அழுத ருஹானாவிற்கு ஆறுதலாக அவள் தோள் தொட்டான், தயங்கியபடி. அவள் கண்ணீர் விழிகளோடு அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

                                                  ——-

தங்களை தேற்றிக்கொண்டு இவானின் அறைக்கு அவர்கள் வந்தபோது அவனும் எல்லா பரிசோதனைகளும் முடிந்து திரும்பியிருந்தான். கரீமாவும், சல்மாவும் கப்பல் தலைமைமாலுமி தொப்பியோடு அவனை காண வந்திருந்தனர்.

இவான் தொப்பியை தலையில் வைத்துக்கொண்டு “சித்தப்பா! பாருங்க, நான் கேப்டன் போல இருக்கேனா?” என்று கேட்க, ஆர்யன் தலையை மட்டும் அசைத்தான்.

அவன் அருகில் சென்று அமர்ந்துகொண்ட ருஹானா “ஆமா கண்ணே! அப்படியே தான் இருக்கே! சிறந்த கேப்டனாக வர வாழ்த்துக்கள்!” என்று அவனுக்கு சல்யூட் வைத்தாள். இவான் கிளுக்கி சிரிக்க, ஆர்யன் முகம் மலர்ந்தது. சல்மா உதட்டை சுளித்துக்கொண்டாள்.

கரீமாவின் அலைபேசி சிணுங்க, அவள் எடுத்து பார்த்தாள். அவளின் கையாளின் அழைப்பு அது என தெரிந்ததும், இருவரும் வெளியே நழுவினர்.

“கரீமா மேம்! நாங்க பணத்தை வச்சிட்டு காத்திருந்தோம். அவனும் வந்தான். ஆனா அவனை பிடிக்க போற சமயம் அவனுக்கு சந்தேகம் வந்து தப்பிச்சி ஓடிட்டான். நாங்க துரத்தினோம். ஆனா அவன் சாமர்த்தியமா எங்கயோ பதுங்கிட்டான். பணம் மட்டும் நாங்க எடுத்துட்டு வந்துட்டோம்.”

“முட்டாள்! ஒரு காரியத்தை ஒழுங்கா முடிக்க மாட்டியா? அவன் ஒருத்தனை உங்க ரெண்டுபேரால பிடிக்க முடியலயா? வெண்ணை வெட்டிகளா! போங்க! அவனை எங்கிருந்தாலும் தேடி கண்டுபிடிங்க! பிடிச்சிட்டு வந்து என்கிட்டே பேசு!”

கோபத்தால் முகம் கொடூரமாக மாறிய கரீமாவிடம், சல்மா எப்போதும் கேட்கும் கேள்வியை பயத்துடன் கேட்டாள். “இப்போ என்ன அக்கா செய்றது?”

அவளை சுட்டுவிடுவது போல பார்த்த கரீமா “நீயும் எங்கயாவது தொலைந்து போ!” என்று கத்தினாள்.

——–

இவானுக்கு உணவு ஊட்டிக்கொண்டிருக்கும்வேளையில் மருத்துவரிடம் இருந்து அவசர அழைப்பு வந்தது. துடிக்கும் நெஞ்சை கையில் பிடித்துக்கொண்டு இருவரும் அவர் அறைக்கு செல்ல, வாசல் தாண்டி உள்ளே கால் வைக்க பயந்து போய் ருஹானா சட்டென்று நின்றுவிட்டாள்.

அவள் கையை கோர்த்துக்கொண்டு அழுத்தி பிடித்த ஆர்யன் கண்களால் அவளுக்கு தைரியம் உரைத்தான்.

ஆனால் உள்ளே நுழைந்த அவர்களின் துயரத்தை மருத்துவர் ஒரு நொடியில் போக்கினார். “உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. இப்போ வந்திருக்கற பரிசோதனை முடிவுகள் தெளிவா சொல்லுது, இவானுக்கு லுகேமியா நோய் இல்ல! அதே அறிகுறிகள் இருக்கற நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு தான் அவனை பலமா தாக்கியிருக்கு” என்று அவர் சொன்ன விநாடி இருவரின் உயிரும் மீண்டது.

ஆனந்த கண்ணீர் துளிர்க்க, இருவரும் ஒருவரையொருவர் மகிழ்ச்சியாக பார்த்துக்கொண்டனர்.

“அப்படின்னா இவானுக்கு ஒன்னும் பயப்படற மாதிரி இல்ல தானே?” ருஹானாவிற்கு மேலும் உறுதி தேவைப்பட்டது.

“ஆமா! அவனுக்கு கடுமையான சிகிச்சைகள் தேவைப்படாது” என்று அவர் சொல்ல, ருஹானா மகிழ்ச்சியுடன் ஆர்யனை இறுக்க கட்டிக்கொண்டாள். “அல்லாஹ்க்கு நன்றி!” என அவள் சொல்லிக்கொண்டே இருக்க, ஆர்யனும் அதையே திருப்பி சொன்னான். தன்னை அணைத்து நிற்கும் அவள் முதுகையும் தட்டிக்கொடுத்தான்.

காபி வாங்கிக்கொண்டு வந்த சல்மாவும், கரீமாவும் இதை பார்த்து திகைத்தனர். அவர்கள் தழுவி நிற்பதை பார்த்த சல்மா கையில் இருந்த காகித கப்பை அழுத்த, சூடான காபி அவள் கையில் கொட்டியது.

காபியை விட கொதித்துப்போன சல்மா அதை தூர எறிந்துவிட்டு வேகமாக உள்ளே வந்தாள். “என்ன நடந்தது?” என்று அவள் எரிச்சலோடு கேட்க, இருவரும் அணைப்பிலிருந்து விலகினர்.

சல்மாவின் முகபாவத்தை பார்த்து பயந்த கரீமாவும் உள்ளே வந்தவள் “என்ன ஆச்சு ஆர்யன் டியர்?” என்று கேட்க, ஆர்யன் அவளுக்கு நல்ல விஷயத்தை சொன்னான்.

“வாழ்த்துக்கள், ஆர்யன்!” என்று சல்மா வேகமாக ஆர்யனை அணைக்க வந்தாள். அவளை புறக்கணித்த ஆர்யன் அவளை கையால் தடுத்து நன்றி சொல்ல, சல்மா அவமானப்பட்டு மனம் நொந்து போனாள்.

மருத்துவர் ஐடிபி எனப்படும் குருதித்தட்டுக்குறையை பற்றி விளக்கி,   இரத்தத்தின் ஆட்டோ-இம்யூன் கோளாறு எப்படி  இவானை பாதித்திருக்கிறது என்பதையும் விவரித்தார். மருந்து மாத்திரைகள் மூலமாகவே இவானை குணப்படுத்த முடியும், ஆனால் வேறு நோய்கள் தாக்கிவிடாமல் அவனை கவனமுடன் பாதுகாத்திட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.

எல்லாவற்றையும் உன்னிப்பாக கேட்டுக்கொண்டவர்கள் மகிழ்ச்சியுடன் இவானிடம் சொல்வதற்காக செல்ல, தானும் அங்கேயே இருந்து உதவுவதாக சல்மா கூற, ஆர்யன் அவர்களை மாளிகைக்கு திரும்ப சொன்னான்.

மறுத்துக் கூறப்போன சல்மாவை கையை பிடித்து இழுத்துக்கொண்டு கரீமா செல்ல, அவள் திமிறினாள். “அக்கா! என்னை விடு! நீ பார்க்கலயா, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவ எப்படி ஆர்யனோட ஒட்டிக்கிறா? நான் ஆர்யனோட இருந்திருப்பேன்ல?”

“வாயை மூடு சல்மா, இங்க தலைக்கு மேல வெள்ளம் போயிட்டு இருக்கு. இப்போ இதான் முக்கியமா? சீக்கிரமே நாம அந்த டிடெக்டிவ் கதையை முடிக்கலனா ஆர்யன் நம்ம ரெண்டுபேரையும் உயிரோட வச்சி கொளுத்திடுவான்.”

                              ———-

“அல்லாஹ்க்கு ஆயிரம் முறை நன்றி சொல்லணும், நம்மோட துக்கத்தை சந்தோசமா மாத்திட்டார். மனித வாழ்க்கையே இப்படித்தான் ஒரு நிமிடத்தில் எல்லாமே தலைகீழா மாறிடுது” என்று ருஹானா சொல்ல, ‘இப்படியே எல்லாமும் மாறிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என ஆர்யன் மனது ஏங்கியது.

சட்டைப்பையில் இருந்து கைக்குட்டையை எடுத்து ருஹானாவிடம் கொடுத்த ஆர்யன் “இனிமேல் அழாதே. உன் சிவந்த முகத்தை வைத்து இவான் கண்டுபிடித்து விடுவான்” என்றவன் “இந்த நல்ல செய்தியை யார் இவானுக்கு முதலில் சொல்வது?” என்று கேட்டான்.

“ரெண்டுபேரும்.. சேர்ந்தே சொல்வோம்” என ருஹானா புன்னகைத்தாள்.

அதன்படியே இருவரும் இவானிடம் சொல்ல, சிண்டுவுடன் விளையாடிக்கொண்டிருந்த இவான் “என்ன? அதுக்குள்ளயா? காலைல தானே வந்தோம்?” என சந்தோசமாக கேட்டான்.

“ஆமா அக்னிசிறகே! நீ வலிமையானவன் இல்லயா? அதனால்தான் வேகமாக குணமாகிட்டே” என்று ஆர்யன் சொல்ல, இவான் தன்னுடைய ஓட்டை பல் தெரியும்வண்ணம் அழகாக சிரித்தான்.

“சித்தப்பா ரெண்டாவது முறையா சிரிக்கறார், இப்போ. நான் பிறந்தபோதுதான் முதல்முறை சிரிச்சதை நான் பார்த்தேன்” என்று இவான் சொல்ல, ஆர்யன் சிரிப்பு மேலும் விரிவடைந்தது.

(தொடரும்)

Advertisement