Advertisement

“அக்கா! அவன் அழிச்சிட்டேன்னு சத்தியம் செய்தான், அக்கா!”

“அதை நீ நம்பிட்டே! முட்டாள்! அதை சரிபார்க்கல!” என்று அவளை கட்டிலில் தள்ளிவிட்ட கரீமா தலையில் அடித்துக் கொண்டாள்.

“இல்ல, இல்ல, இது உன் தப்பு இல்ல! உன்னை நம்பினேன் பார், என் தப்பு! உன்னால நம்ம கதையே முடிஞ்சி போச்சி.”

“அக்கா! நாம அவன் கேட்ட பணத்தை கொடுத்து….”

“இல்ல, இதை இப்படி டீல் செய்யக் கூடாது. எனக்கு தெரியும், இந்த மாதிரி ஆட்களை பற்றி. ஒரு முறை கொடுத்து பழக்கிட்டா இது தொடர்கதையாகிடும். வேற வழி தான் யோசிக்கணும்.”

“அக்கா! இப்போ என்ன செய்றது?”

“என் முன்னாடி நிக்காம போய் தொலை.”

———-

“நன்றி! இவான் இவ்வளவு சந்தோசமா இருந்து நான் பார்த்ததே இல்ல” என்று ருஹானா ஆர்யனுக்கு நன்றி சொல்ல, அவன் “இப்படியே எல்லாம் கடந்து வந்துடுவோம்” என்றான்.

“சித்தி! இன்னும் கொஞ்ச நேரம் விளையாடலாமா? இதெல்லாம் நான் விளையாடினதே இல்ல.”

“சரி, சரி! ஆனா அதுக்கு முன்ன சாப்பிட்டுக்கோ. களைப்பாகிட்டே கண்ணே!”

“ட்ரம்ப்போலின் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சித்தப்பா. இதை நாம வச்சிக்கலாமா?”

ஆர்யன் சம்மதிக்க, சந்தோசமாக இவான் எல்லாவற்றிலும் சுற்றி வந்து விளையாடினான். நஸ்ரியா, அம்ஜத்தோடு சேர்ந்து பஞ்சு மிட்டாய் சாப்பிட்டான்.

புது தோட்டக்காரன் இவானுக்கு டெய்சி மலர்களை கொண்டுவந்து தர, “இது நல்ல வாசனை, பெரியப்பா” என்று அவன் சொல்ல, அம்ஜத் “அது நறுமணம் மட்டும் தர்றது இல்ல, ஆரோக்கியமும் தரும்” என்றான்.

தோட்டக்காரனுக்கு நன்றி சொன்ன இவான் அவனுக்கு சாப்பிட உணவும் எடுத்து கொடுத்தான். இவானின் தலையை பாசமாக தடவிக்கொடுத்து அவன் சென்றான்.

———-

“நாம ஒரு புது விளையாட்டு விளையாடலாமா?” என ஆர்யன் கேட்க, அம்ஜத் சிரிப்புடன் கோலிகுண்டுகளை எடுத்து இவானிடம் கொடுத்தான்.

இவான் ஆச்சர்யமாக பார்க்க, அம்ஜத் “சின்னவயசுல நாங்க இது எப்பவும் விளையாடுவோம். எங்க கிட்ட பணம் இருக்காது. ஆனா எங்க ஏரியால அதிக கோலிகள் நாங்க தான் வச்சிருப்போம். ஏன்னா உன்னோட சித்தப்பா தான் இதுல சிறந்தவன். யாருமே அவனை தோற்கடித்தது இல்ல” என்று தம்பியின் பெருமைகளை புகழ்ந்தான்.

“உனக்கு சொல்லி தரவா, சிங்கப்பையா?” என்று கேட்ட ஆர்யன், தரையில் முக்கோணம் வரைந்து அதில் கோலிகுண்டுகளை அடுக்கினான். சற்று தொலைவில் நின்று அதை அடிக்கப் போக, ருஹானா அவனை தடுத்தாள். “ஆனா நீங்க நிற்கற கோணத்துல அடிச்சா சரியா இருக்காது.”

அவளை முறைத்த ஆர்யன் இவானிடம் “நீ உன் சித்தி சொல்றதை கேட்காதே!” என்றான். ஆர்யனிடமிருந்து கோலியை பறித்த ருஹானா வேறு கோணத்தில் அதை அடிக்க, முக்கோணத்தில் இருந்த கோலிகள் சிதறின.

“அடடா ருஹானா! சூப்பரா விளையாடுறியே எப்படி?”

“என் அப்பா சொல்லிக் கொடுத்தார், அம்ஜத் அண்ணா. நாலு வயசுல இருந்து இது எனக்கு கை வந்த கலை.”

“என் சித்தப்பாவை ஜெயிச்சிடுவீங்களா?” என்று இவான் கேட்க, அவள் சிரித்துக்கொண்டாள்.

“வாய்ப்பே இல்ல” என கோபமாக சொன்ன ஆர்யன் அவனுடைய வாய்ப்பில் மற்ற கோலிக்குண்டுகளை அடித்து சேகரிக்க, இறுதி வாய்ப்பு ருஹானாவிற்கு சென்றது.

அக்கா விரட்டி அடிக்க மேலே இருந்து இவர்களின் ஆட்டத்தையும், சிரிப்பையும், நெருக்கத்தையும் பார்த்த சல்மா பொசுங்கிப் போனாள்.

“சித்தப்பா! சித்தி உங்களை தோற்கடித்துடுவாங்க போலவே?” என்று இவான் பயமுறுத்த, “அக்னிசிறகே! நான் தோற்கவே மாட்டேன்!” என்று ஆர்யன் வீராப்பாக சொன்னான்.

“இல்ல, இது தப்பு!” என்று கடைசி கோலிக்குண்டு கோட்டின் மேல் நின்றதா இல்லையா என இருவர்க்கும் சண்டை வர, ஆர்யனும் ருஹானாவும் மண்டியிட்டு அதை பார்க்க, இவான் அவர்களுக்கு நடுவே வந்து தரையில் படுத்து ஆராய்ந்தான்.

காலையில் இருந்து புகைப்படங்கள் எடுத்து தள்ளியது போல ஜாஃபர் இந்த ருசிகர காட்சியையும் பதிவு செய்து சேமித்தான்.

இவானின் தீர்ப்பு ருஹானாவிற்கு சாதகமாக அமைந்தது.

“வெல்டன் ருஹானா! இதுவரை ஆர்யன் தோத்து நான் பார்த்ததே இல்ல!”

“என்னை யாரும் ஜெயிக்க முடியாது, அம்ஜத் அண்ணா!” என ருஹானா அடக்கமாக வெற்றியை கொண்டாட, ஆர்யன் முகம் சிவந்து போனான். “வாழ்த்துக்கள்! நீ நல்ல பிளேயர் தான்” என்று தோல்வியை ஒப்புக்கொண்டு ஆர்யன் ருஹானாவிற்கு தன்னுடைய கோலிகளை தர, அவள் “இது எல்லாமே உனக்காகத்தான்!” என்று இவானிடம் தந்தாள்.

“நான் உங்க கூட இருக்கறதால தானே சித்தி நீங்க ஜெயிச்சீங்க?” என்று கிசுகிசுப்பாக இவான் கேட்க, “ஆமா தேனே! அதிலென்ன உனக்கு சந்தேகம்? நீ தான் என்னோட லக்கி சார்ம்” என்று ருஹானாவும் அவன் காதுக்குள் சொல்ல, இவான் மகிழ்ச்சியாக சிரித்தாள்.

அவர்களின் சிரிப்பை பார்த்த ஆர்யன் “பதில் ஆட்டம் இருக்கே, அப்போ பார்த்துக்கலாம்” என்று சவால் விட்டான். “அப்போ நீங்க மறுபடியும் விளையாடுவீங்களா? ஹேஹ்! ஜாலி!” என இவான் குதுகலித்தான்.

———

இரவில் திரும்பவும் இவானுக்கு மூக்கில் இரத்தம் வர, அவனை அமைதிப்படுத்தி ருஹானா படுக்க வைக்க, ஆர்யன் மருத்துவரிடம் பேச அவளையும் அழைத்தான். ஜாஃபரிடம் இவானை ஒப்படைத்துவிட்டு ருஹானா சென்றாள்.

“ஜாஃபர் அங்கிள்! ஏன் எனக்கு மூக்குல ரத்தம் வருது. ஏன் கைல சிவப்பா இருக்கு? என் சித்தி கிட்ட கேட்டா அவங்க பயப்படுவாங்க, கவலைப்படுவாங்க. அதான் உங்ககிட்டே கேட்கறேன்” என்று இவான் சொல்ல, ஜாஃபருக்கு துக்கம் எல்லை கடந்தது.

என்றாலும் கோலி குண்டின் உள்ளே இருக்கும் பொட்டுக்களை உதாரணமாக கொண்டு, அவன் உடம்பிலும் அதே போல இருக்கும் சிறுநலக்குறைவு மருத்துவம் பார்த்தால் சரியாகிவிடும் என்று சிறியவனுக்கு புரியும்வண்ணம் ஜாஃபர் விளக்கினான்.

———-

இவானுக்கு ஏற்பட்டதை தாங்கமுடியாமல் உடைந்து அழும் ருஹானாவை இம்முறை ஆர்யன் தேற்ற வேண்டியதாகிவிட்டது. “அம்மா, அப்பா இருவரையும் இழந்த பின்னும் அவன் போராடி இவ்வளவு தைரியமா இருக்கான். இதையும் தாண்டி வந்துடுவான். கவலைப்படாதே!”

இவானிடம் மருத்துவமனைக்கு போக வேண்டியதின் அவசியத்தை இருவரும் விளக்க, ஜாஃபர் ஏற்கனவே அவனுக்கு சொல்லியிருந்ததால் அவன் சிரமமின்றியே ஏற்றுக்கொண்டான்.

“அப்போ நாம நாளைக்கு போய் சிகிச்சை எடுத்துக்கலாமா, சித்தி?”

“ஆமா, கண்ணே! ஆனா சிலநாட்கள் நாம அங்கயே தங்குறது போல இருக்கும்.”

“சரி சித்தி! என் அம்மா ஹாஸ்பிடல்ல இருக்கும்போது நான் ரொம்ப பயந்து அழுதேன். அதுபோல நீங்க பயப்படக்கூடாது. நான் சீக்கிரம் குணமாகி வந்துடுவேன். ஏன்னா நான் அக்னிசிறகு!” என்று இவான் அவர்களுக்கு தைரியம் சொல்ல, இருவரின் கண்களும் குளமானது.

“ஆமா செல்லம்! நீ சீக்கிரம் வந்துடுவே! அதுக்கு அப்புறம் நீ ஆசைப்பட்ட இடத்துக்கு எல்லாம் போகலாம்!” என்று ருஹானா சொல்ல, ஆர்யனும் தலையாட்டினான்.

“கடலுக்கு கூட்டிட்டு போவீங்களா, சித்தப்பா!”

“கண்டிப்பா, அக்னிசிறகே!”

“நீங்க, நான், சித்தி… மூணு பேரும் போலாமா?”

“கண்டிப்பா” என்றான் ஆர்யன் ருஹானா பார்த்தபடி.

“அர்ஸ்லான் ப்ராமிஸ்?” என இவான் கேட்க, ஆர்யன் “அர்ஸ்லான் ப்ராமிஸ்!” என உறுதி அளித்தான்.

———

“என்னக்கா! திரும்ப அந்த சூனியக்காரி ஆர்யனை பிடிச்சிடுவா போல? ஒன்னா விளையாடுறாங்க, சேர்ந்தே இருக்காங்க.”

“இவானுக்கு உடம்பு சரியில்ல. அவனை குஷிப்படுத்த வேற என்ன செய்வாங்க?”

“அதுக்காக இப்படியா? இந்த டிடெக்டிவ் வேற என் போன் நம்பர் தெரிஞ்சிக்கிட்டான். அப்பப்போ செய்தி அனுப்பி பயமுறுத்துறான்.”

“ஆர்யன் கவனம் இவான் மேலே இருக்கும்போதே நாம டிடெக்டிவ் தொல்லையை அகற்றிரனும்.”

“என்ன செய்யப்போறே அக்கா?”

“அவன் கேட்ட பணத்தை தரப்போறேன்.”

“என்ன இப்படி சொல்றே அக்கா? நீ தானே தரக்கூடாதுன்னு சொன்னே?”

“ஆமா, இது ஒரு வலை தான். அந்த பணத்தை அவன் வாங்க வரும்போது என் ஆட்கள் அவனை பிடிச்சிடுவாங்க.”

கபட நரி கரீமாவின் வலையில் விழுவானா துப்பறிவாளன்?

———–

கையில் வைத்திருக்கும் கோலிக்குண்டை பார்த்தபடி கவலையுடன் அமர்ந்திருந்த ஆர்யன், காபி கொண்டு வந்த ஜாஃபரிடம் கேட்டான்.

“எப்படி ஜாஃபர் அந்த துன்ப கட்டத்தை நீங்க கடந்து வந்தீங்க?”

“நம்பிக்கை மட்டும் தான், சார். இப்பவும் லிட்டில் சார் உங்க ரெண்டு பேர் மேலயும் அளவு கடந்த நம்பிக்கை வச்சிருக்கார்.”

“உண்மை தான். ஆனா எனக்கு அவளை நினைத்தா குழப்பமா இருக்கு.”

ஜாஃபரிடம் பதில் இல்லை.

“இவான் மேல உயிரையே வச்சிருக்கா. அவனுக்கு தேவைன்னா அவளோட இதயத்தையே எடுத்து கொடுத்துடுவா. உருகி உருகி பிரார்த்தனை செய்றா. எப்படி ஒரே மனுஷி இவ்வளவு நல்லவளாவும், அத்தனை புத்திசாலித்தனமா திட்டங்கள் போடுற சூழ்ச்சிக்காரியாவும் இருக்க முடியும்?”

ஜாஃபரிடம் அதற்கும் பதில் இல்லை.

பெருமூச்சு விட்டவன் எழுந்து இவான் அறைக்கு செல்ல, தூங்கும் இவானின் அருகிலிருந்து ருஹானா இறைவனிடம் வேண்டுவது அவனுக்கு கேட்டது.

“அல்லாஹ்! இவான் இல்லாம எங்களால வாழ முடியாது. கள்ளம்கபடம் இல்லாத பிஞ்சு குழந்தையை எங்களுக்கு திருப்பி தாங்க. அவனோட சேர்ந்து போராட அவனோட சித்தப்பாக்கு வலிமையை கொடுங்க. ஆமின்” என்று அவள் முடிக்க, ஆர்யனும் ஆமின் என்றான் மெல்ல.

உள்ளே நுழைந்தவன் இவானை தொட்டு தடவ, அவனின் கவலையை உணர்ந்த ருஹானா “அதுக்கு அப்புறம் ரத்தம் எதுவும் வரல. நல்லா தூங்குறான்” என்றவள் “நான் இங்கயே இருக்கட்டுமா?” என கேட்டாள்.

“இல்ல, கஷ்டமான தினங்கள் நமக்கு நாளைல இருந்து வர இருக்கு. அதை தாங்க தெம்பு வேணும். நீ போய் தூங்கு.”

“நீங்க?”

“நீ போ, வரேன்!”

அவள் சென்றதும் இவானின் கையை பிடித்துக்கொண்ட ஆர்யன் “யா அல்லாஹ்! இவான் வயசுல உங்ககிட்ட நான் ஒன்னு கேட்டேன். கண்மூடின என்னோட அப்பாவை திருப்பி கேட்டேன். அது சாத்தியம் இல்லன்னு எனக்கு அப்போ புரியல. அதுக்கு அப்புறம் உங்களை நான் எதுவும் கேட்டது இல்ல. ஆனா இப்போ இவானை குணமாக்க கேட்கறேன். இது உங்களுக்கு முடியும்தான். தயவுசெய்து அவனை எங்களுக்கு கொடுத்துடுங்க” என்று பிரார்த்தனை செய்து முடித்தவன் ஆமின் என்று சொல்ல, கதவருகே நின்ற ருஹானாவும் அதையே சொன்னாள்.

கொடூர நோயே!

உறக்கம் கலைத்தாய்

உயிரை உருவுகிறாய்!

அடிமைச் சங்கலியிட்டாயென்று

ஆணவம் கொள்ளாதே!

அன்புச் சங்கிலியிலே

பிணைந்துள்ளோம் நாங்கள்

ஒன்றுப்பட்டே வெல்வோம்!

———

Advertisement