Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                அத்தியாயம் – 126

இவான் கனவுபயம் கொண்டு இருவரின் இடையே தூங்க, மூவரும் சேர்ந்து பாதுகாப்பாக தூங்கினாலும் ருஹானா கெட்டகனவு கண்டு திடுக்கிட்டு எழுந்துகொண்டாள். அவளுடைய வேகத்தில் தானும் எழுந்துகொண்ட ஆர்யன் அவளைப் பார்க்க, அவள் அசையாமல் தூங்கும் இவானை பார்த்து பயந்தாள்.

அவன் தலையை தடவி “இவான் செல்லம்!” என ருஹானா எழுப்ப, ஆர்யன் அவள் பயத்தை புரிந்து கொண்டான். அசைந்து எழுந்த இவான் இருவருக்கும் காலைவணக்கம் சொல்ல, ருஹானா ஆசுவாச பெருமூச்சுவிட்டாள்.

“நல்லா தூங்கினியா, சிங்கப்பையா?”

“ஆமா, சித்தப்பா! எனக்கு தீம் பார்க் கனவு கூட வந்தது. நாம மூணு பேரும் சந்தோசமா அங்க விளையாடுறோம்” என்று சொன்ன இவான், அவர்களுக்கு இடையே வந்து “நான் மகிழ்ச்சியா இருக்கேன். எனக்கு ரெண்டு பேரும் முத்தம் கொடுக்க மாட்டீங்களா?” என அவனிரு கன்னங்களையும் தொட்டுக் கொட்டினான்.

அவர்கள் இருவரும் நெருங்கி அவன் கன்னத்தை நோக்கி உதடுகளை கொண்டுவர, முகத்தை பின்னிழுத்து கொண்ட இவான் “எனக்கு அவசரமா பாத்ரூம் போகணும். உங்க முத்தத்தை போயிட்டுவந்து வாங்கிக்கறேன்” என்று ஓடிவிட்டான்.

இதழ்கள் இன்பமாக இணைய இருந்த நொடியின் கடைசி தருணத்தில் இருவரும் சுதாரித்து விலகினர்.

“நான் இவான் சட்டையை..”

“என் போன் எங்கே…”

தடுமாறி கட்டிலை விட்டு இறங்கினர். கண்களில் ஏக்கம், வெட்கம், ஆசை, பரிதவிப்பு, குழப்பத்துடன் ருஹானா பார்க்க, கனிந்திருந்த தன்முகத்தை நொடியில் மாற்றிக்கொண்ட ஆர்யன் “நமக்குள்ள எதுவும் மாறல. மாறவும் செய்யாது. நேத்து ராத்திரி நடந்ததுலாம்….” என்று பேச, இடைமறித்த ருஹானா “இவானுக்காக…. எனக்கு தெரியும். உங்களுக்கு எது மறக்காதோ அது எனக்கும் மறக்காது” என கடுமையாக சொன்னாள்.

————

இவானுக்கு ருஹானா உடை மாற்ற, இவான் “நான் நிறைய விளையாடினேன். வானம் வரை நாம குதிச்சோம். ஊஞ்சல்ல ஆடினோம். நாம பூங்கால ஆடுவோமே, அது மாதிரி இல்ல இது. அதுவே தானா ஆடுச்சி, சித்தி! நிறைய பஞ்சு மிட்டாய், பாப்கார்ன் சாப்பிட்டோம்” என தன் கனவை விவரிக்க, அவனின் உடலில் சிவந்து காணப்பட்ட பகுதிகளை பார்த்த ருஹானா, “நீ கீழ போ, அன்பே! நாங்க இப்போ வரோம்” என்று அனுப்பிவிட்டாள்.

“இவான் தோல்ல அதிகமா தடிப்புகள் வருது. நாம எப்போ ஹாஸ்பிடல் போகணும்? சிகிச்சைக்கு லேட்டாகிடக் கூடாதே!”

“நான் டாக்டர்ட்ட பேசினேன். இன்னைக்கு அண்ணனை கூட்டிட்டு போய் டெஸ்ட் எடுக்கணும். நம் மூணு பேரோட ரத்தமும் கொடுக்கணும்.”

“நான் இவானோட தீம்பார்க்குக்கு போகலாம்னு நினைச்சேன்.”

“அவனை வெளியே கூட்டிட்டு போகக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார்.” மறுத்தான் ஆர்யன்.

‘கடுமையான நீண்ட சிகிச்சை இவானுக்கு காத்திருக்கு. ஹாஸ்பிடல் போகும்முன்னே அவன் இந்த ஒருநாள் பூராவும் மகிழ்ச்சியா கழிக்கணும். எல்லாத்தையும் மறந்திட்டு இன்றைய பொழுதை அவன் எப்பவும் சந்தோசமா ஞாபகம் வச்சிக்கணும்’ என நினைத்துக்கொண்டே படிக்கட்டில் இறங்கினான்.

———-

உணவுமேசையின் நடுவில் தன்னிடத்தில் இவானை அமரவைத்த ஆர்யன், அவனது வலதுபுறம் ருஹானாவுடன் அமர்ந்தான். இடதுபுறத்தில் அம்ஜத், கரீமா, சல்மா அமர்ந்திருந்தனர். நாளை சிகிச்சை துவங்கும் நாள் என அம்ஜத், இவான் தவிர அனைவரும் அறிந்திருந்தனர்.

அவனுக்கு பிடித்த உணவுவகைகள் மட்டும் மேசையில் நிரம்பியிருக்க, நஸ்ரியா பனிமனிதன் பிஸ்கெட்டை கொண்டுவந்து வைத்தாள். “இது உங்களுக்கு பிடிச்சிருக்கா பாருங்க, லிட்டில் சார்?”

சாராவும், ஜாஃபரும் அருகில் இருக்க, எல்லோரையும் கவனித்த இவான் “ஏன் எல்லாரோட மூக்கும் கண்ணும் சிவந்து இருக்கு?” என கேட்க, “வெங்காயம் வெட்டினோம், லிட்டில் சார்! வேற ஒன்னுமில்ல” என்று புன்னகை முகம் காட்டிய சாரா, இருவரையும் அழைத்துக்கொண்டு உள்ளே போய்விட்டார்.

“சித்தப்பா! இங்க பாருங்க ஸ்னோமேன் குக்கீஸ்!” என காட்ட, “எல்லாம் உனக்கு தான் சாப்பிடு, சிங்கப்பையா!” என்றான் ஆர்யன்.

“எனக்கும் தருவியா, இவான் செல்லம்?” என அம்ஜத் கேட்க, “பெரியப்பா! உங்களுக்கு எத்தனை வேணுமோ எடுத்துக்கங்க, எல்லாரும் சாப்பிடலாம்” என்று இவான் பெருந்தன்மையாக சொல்ல, சிரித்த அம்ஜத் “இவான் தங்கமான பையன், ஹைஃபை கொடு” என்று கைகளை தட்டினான்.

“நாம இன்னைக்கு தீம் பார்க் போலாமா, சித்தப்பா?”

“ரொம்ப பனி பெய்யுதே, அதை மூடி இருப்பாங்க, அன்பே!”

“நாம வேற விளையாடலாம், அக்னிசிறகே! அதுக்கு முன்ன நாங்க பெரியப்பாவை கூட்டிட்டு ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடறோம்.”

“ஏன்? எதுக்கு? நான் வர மாட்டேன், ஆர்யன்!”

“உங்க மாத்திரைகள் சிலதை மாத்தணும், அண்ணா! அதுக்காக டெஸ்ட் எடுக்கணும்.”

“டெஸ்ட் வேணாம். ஹாஸ்பிடல் போனாலே என் அமைதி கெட்டு போகும். நான் வரல.”

“அம்ஜத் டியர்! ஆர்யன் சொல்றதை கேளுங்க.”

“நான் வெளிய போக மாட்டேன், கரீமா!”

“அம்ஜத் அண்ணா! நாம அப்படியே நர்சரி போய் செடி வாங்கிட்டு வரலாம்னு நினச்சேன். உங்களுக்கு வேணாம்னா….” என ருஹானா இழுக்க, அம்ஜத் முகம் மலர்ந்தது. “ஒஹ்! அப்படியா? போகலாமே! டாக்டரை பார்க்கறதும் அவசியம்தானே?”

நிம்மதியான ஆர்யன் நன்றியோடு ருஹானாவை பார்க்க, அவள் முகத்தை திருப்பிக்கொண்டாள், ‘இப்போது இப்படித்தான் பார்ப்பாய். அப்புறம் எனக்கு நன்றாக மனிதர்களை ஏமாற்ற தெரிகிறது என்று என்மீதே குற்றம் சுமத்துவாய்! எனக்கு எதற்கு உன் பாராட்டும், வசைமொழியும்?’ என்று மனதில் சலித்தபடி.

“நானும் வரேன், சித்தி!” ஆசையாக ருஹானாவிடம் இவான் கேட்க, ஆர்யன் முந்திக்கொண்டான்.

“இல்ல, அக்னிசிறகே! நாங்க போய்ட்டு சீக்கிரம் வந்துடுவோம். அதுக்கு அப்புறம் நாம இங்க சேர்ந்து இருக்கலாம்.”

“இவான் டியர்! அவங்க போயிட்டு வர்றதுக்குள்ள நாம ஏதாவது செய்யலாமா?” என சல்மா கேட்க, ருஹானாவின் முகம் மாறியது. யோசித்த இவான் “குக்கீஸ் மட்டும் செய்ய வேண்டாம்” என்று சொல்ல, அனைவர் முன்னிலும் சல்மாவிற்கு அவமானமாகப் போனது.

“இல்ல, நான் உனக்கு ஆங்கிலம் கத்து தரேன், இவான்!”

————

இவானின் இரத்த சம்பந்த குடும்பத்தினர் மூவரும் பரிசோதனைக்கு குருதிதானம் அளித்துவிட்டு, செடிகள் விற்கும் இடத்தை சுற்றி வந்தனர்.

“பாருங்க, அண்ணா! ஒன்னுமே இல்ல, பயந்தீங்களே?”

“யாரு பயந்தது? நானா? இல்லயே! பாரு ஆர்யன்! நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன்!” என்று சிரித்த அம்ஜத், தம்பியின் மறுமொழிக்கு காத்திராமல் செடி நாற்றுக்களுக்கு நடுவே சென்றுவிட்டான்.

“இன்ஷா அல்லாஹ்! நம்ம ரத்தம் தெரபிக்கு பயன்படணும். எல்லா வழிமுறைகளும் வெற்றிகரமாக நடக்கணும்” என்று சொன்ன ருஹானாவின் பார்வை எலுமிச்சை செடிக்கு சென்றது.

“இதை எடுத்துக்கலாமா? இவானோடு சேர்ந்து இதுவும் நம்ம தோட்டத்துல வளரட்டும். வீட்ல மரம் இருந்தா இவான் கேட்கும்போதுலாம் லெமன் குக்கீஸ் செய்து கொடுக்கலாம்” என்று கேட்க, ஆர்யனும் மகிழ்ச்சியாக தலையாட்டினான்.

நிறைய விதைகளையும், நாற்றுகளையும் வாங்கி வந்த அம்ஜத் “சீக்கிரம் போய் இதெல்லாம் நட்டு வைக்கணும். வா, ஆர்யன்!” என்று அவசரப்பட, ஆர்யன் “அதுக்கு முன்ன ஒரு முக்கியமான வேலை இருக்கு, அண்ணா!” என்றான்.

———-

சல்மாவின் ஆங்கில வகுப்பு இவானுக்கு சலிப்பை ஏற்படுத்த, அவனுக்கு பால் கொண்டுவந்த நஸ்ரியாவிடம் “சித்தி, சித்தப்பா எப்போ வருவாங்க?” என கேட்க, சல்மா எரிச்சலானாள்.

நஸ்ரியா மர்மமாக சிரித்தபடி பின்வாசலை காட்ட, இவான் வேகமாக எழுந்து அங்கே ஓடினான். அங்கே பார்த்த காட்சியில் திகைத்து நின்றான். கண்கள் அகல “வாவ்! அற்புதம்!” என வாய் முணுமுணுத்தது.

வண்ண வண்ண பலூன்கள் எங்கும் சூழ்ந்திருக்க, பஞ்சு மிட்டாய், சாக்லேட், குக்கீஸ் மற்றும் பலவித தின்பண்டங்கள் ஒரு புறம் குவிந்திருக்க, இராட்டினம், ஊஞ்சல், சறுக்குமரம் இன்னும் பொழுதுபோக்கு பூங்காவில் இருக்கும் அத்தனை பிற கேளிக்கைகளும் அங்கே அமைக்கப்பட்டு இருந்தது.

எல்லாவற்றுக்கும் நடுவே அம்ஜத், ஆர்யன், ருஹானா புன்னகை தவழ நின்றிருந்தனர். “சித்தி! சித்தப்பா” என்று இவான் ஓடிவந்து இருவரையும் அணைத்துக்கொண்டான்.

“பார் அன்பே! நீ தீம்பார்க்குக்கு போக ஆசைப்பட்டே! உன் சித்தப்பா தீம்பார்க்கை இங்கயே வரவழைச்சிட்டார்!”

“ஐ லவ் யூ சித்தப்பா!” என்று குதித்த இவான் “நம்ம சொந்த பார்க்! அப்படியே என் கனவுல வந்தது போலவே இருக்கு” என்று சொல்லி இராட்டினத்தில் ஏறி உட்கார ஆர்யன் அதை இயக்கினான். இராட்டினம் சுற்றி வர, “என் சித்தப்பா கேப்டன், நான் இப்போ பறக்கறேன், ஹை! ஜாலி” என்று கைகளை நீட்டி ஒரு பக்கமாக சாய்ந்தான்.

“சித்தி! நீங்களும் வாங்க!”

“இல்ல அன்பே! இது பெரியவங்களுக்கு இல்ல”’ என்று ருஹானா மறுக்க, இவான் அடம்பிடிக்க, ஆர்யன் கண்ணால் அவளை அழைத்தான். அவளும் ஏறிக்கொள்ள, ஆர்யன் கம்பி கொண்டு சுழற்ற, இருவரும் அவனை சுற்றி வந்தனர்.

சுற்றிலும் அனைவரும் வேடிக்கை பார்க்க, சல்மாவின் முகம் கடுகடுவென இருந்தது. “உன் முகத்தில இருந்து பொறாமையை எடு, சல்மா!” என கரீமா அறிவுறுத்த, தங்கை அக்காவை முறைத்தாள்.

“ஆர்யன்! நானும் வரவா?” என்று அம்ஜத் ஆசைப்பட, ஆர்யன் அவனையும் ஏற்றிக்கொண்டான். “சுற்று ஆர்யன்! வேகமா சுற்று! கரீமா இங்க பாரேன்! நாங்க எப்படி சுத்துறோம்! இவான், நல்லா இருக்குல?” என அம்ஜத் குதூகலிக்க, இவானும் அவனோடு சேர்ந்து ஆனந்த கூச்சலிட்டான்.

அப்போது வாயிற்காவலன் சல்மாவிற்கு ஒரு கடினமான காகித உறையை கொண்டுவந்து தர, அதில் அனுப்புனர் பெயர் இல்லை. “பெயர் தாங்காத உறைகள் நல்ல தகவலை கொண்டு வருவது இல்ல. இது என்னன்னு பார்க்கலாம், வா” என்று கரீமா சல்மாவை அழைத்து சென்றாள்.

அதில் ஒரு கடிதமும், ஒலிப்பதிவு நாடாவும் இருந்தது. “இந்தா! உன் டிடெக்டிவ் அனுப்பி இருக்கான். பிரிச்சி படி” என்று கரீமா கோபமாக சல்மாவின் முகத்தில் வீச, அவள் பயத்துடன் படித்தாள்.

“நீ யாருன்னு என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சியா? நீ யாரை ஏமாற்றினேன்னும் நான் கண்டுபிடிச்சிட்டேன். ஆர்யன் அர்ஸ்லானை ஏமாற்ற அவ்வளவு குறைவான கூலி போதுமா? ரெண்டு நாளைக்குள்ள ஐந்து லட்சம் தினார் எனக்கு வந்தாகணும். இல்லனா ஒரிஜினல் ரெகார்டர் ஆர்யன் அர்ஸ்லானுக்கு அனுப்பிடுவேன்.”

செய்தியோடு மிஷால் ருஹானாவோடு அவன் காதலை மறுத்து பேசிய அசல் குரல்பதிவின் ஒரு நகலும் இருந்தது.

“அது எப்படி முடியும்? அசல் ஒலிப்பதிவை அழிச்சிட்டேன்னு சொன்னானே!”

“நீ அவனை நம்பலாம்னு சொன்னியே, வேற நகல் இல்லன்னும் சொன்னே, எல்லாத்தையும் பார்த்துக்கறேன்னு சொன்னே!” கரீமா அடிப்பது போல பாய்ந்து வர சல்மா பயந்து நடுங்கினாள்.

Advertisement