Advertisement

“நான் இவனோட கால்பந்து விளையாடுவேன். நாங்க மீன் பிடிக்க போவோம். பூக்கள் வளர்ப்போம்” என்று திரையில் அம்ஜத் சொல்ல, இங்கே “இன்ஷா அல்லாஹ்!” என்றாள் ருஹானா, கண்ணீரை துடைத்தபடி.

“கேட்டியா இவான்? இதெல்லாம் நீ பெரியவனா வளர்ந்ததும் என்கூட செய்யணும்” என அம்ஜத் சொல்ல, இவான் வேகமாக தலையசைக்க, ருஹானாவும் ஆர்யனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

இப்போது காட்சிகள் மாறின. “இந்த குழந்தையும் நான்தானா?” என இவான் கேட்க, அம்ஜத் “ஆமா, நீ தவழும்போது எடுத்தது” என்று சொன்னவன் அடுத்த காட்சியையும் விளக்கினான். “இது நீ முதல் அடி எடுத்து வைக்கும்போது.”

ஆர்யன் முன்னே நின்று அழைக்க, குட்டி இவான் தள்ளாடி அடியெடுத்து வைத்தான். “பயப்படாம நடந்து வா, சிங்கப்பையா! வலிமையா காலடி வை. உனக்கு உறுதுணையா நான் எப்பவும் இருப்பேன். நீ கீழே விழுந்தாலும் நான் உன்னை தூக்கி நிறுத்துவேன்” என்று அங்கே ஆர்யன் இவானை முன்னோக்கி கூப்பிட, இங்கே ஆர்யனுக்கு தாங்க முடியவில்லை.

“பார்! பார்! இப்போ கவனமா பாரு, இவான்! நீ என்னை முதல் தடவை அம்ஜத் பெரியப்பான்னு கூப்பிட்டது வரும்” என்று அம்ஜத் சொல்ல, இவான் எழுந்து போய் பெரியப்பாவின் அருகில் அமர்ந்து கொண்டான்.

ஆர்யன் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் வெளியே செல்ல, ருஹானாவும் அவனை தொடர்ந்தாள்.

மேன்மாடத்தில் குளிரிலும் ஆர்யன் நெற்றியில் வியர்வை பூத்திருந்தது. பின்னால் வந்த ருஹானா தனக்கு ஆறுதலாக பேசுவாள் என ஆர்யன் பார்க்க, அவளோ “கஷ்டம் தான்ல. ரொம்ப கஷ்டம். என்னால கண்ணீரை எப்பவுமே மறைக்க முடியல, நொறுங்கி போறேன். எல்லாமே முன்னால இருந்தது போல இருந்தா நல்லா இருக்குமேன்னு மனசு ஏங்குது” என்றாள்

ஆர்யனின் முகத்தில் அதே ஏக்கத்தையும், அதே நேரம் அவளை நோக்கிய ஆழமான பார்வையும் கவனித்தவள் “இவானோட பழைய ஆரோக்கியத்தை சொன்னேன்” என்றாள். ஆர்யன் கண்களை மூடித் திறந்தான்.

“என் மனசோட ஒருபக்கம் பயமுறுத்தினாலும், இன்னொரு பக்கம் இவான் குணமாகிடுவான்னு நம்பிக்கையும் தருது” என்று அவனுக்கும் ஒளியை காட்டினாள்.

ஆர்யன் அவளை உற்றுப்பார்க்க, “அந்த நம்பிக்கையால தான் நான் சுவாசிக்கிறேன். சொல்வாங்க தானே, நம்மால தாங்க முடியாத அளவுக்கு மீறி அல்லாஹ் இன்னல்கள் தரமாட்டார். அதனால நாம தாங்குவோம், பொறுத்திருப்போம்” என ருஹானா அவன் மனதில் ஆழ விதைத்தாள்.

“நாம ரெண்டுபேருமே இவானுக்காக தான் இந்த வாழ்க்கையை வாழுறோம். அவன் நம்ம கிட்டே ஒப்படைக்கப் பட்டிருக்கிறான். நாமளும் அவனை சுத்தி தான் இருக்கோம்” என்றவள் கண்ணீரை துடைத்துக்கொண்டு சிரித்தாள். “இவானுக்கு ஒன்னும் ஆகாது. பிரார்த்தனையை நான் நம்புறேன். கண்டிப்பா அல்லாஹ் நம்ம வேண்டுதலுக்கு செவி சாய்ப்பார்.”

ஒவ்வொரு நொடியும் ருஹானா ஆர்யனுக்கு ஆச்சரியமும், அமைதியும் தந்தாள். ஆர்யனின் நெற்றி சுருக்கங்கள் மறைந்தது. நம்பிக்கை புன்னகை இலேசாக முகத்தில் அரும்பியது.

——–

அறைக்குள் வந்த சல்மாவிடம் கரீமா கேட்டாள். “கீழே என்ன நடக்குது?”

“இவானும் மச்சானும் இவானோட சின்ன வயசு வீடியோவை பார்த்துட்டு இருக்காங்க. ஆர்யனும் பிசாசும் பால்கனில நின்னு பேசிட்டு இருக்காங்க. என்ன பேசுறாங்கன்னு தெரியல. அக்கா! ஆர்யன் ஏன் இப்படி அமைதியா மாறிப்போனான்?”

“அதோட ருஹானாவோட இணக்கமா நடந்துக்கறான். என்ன விஷயம்னு அவன்கிட்டயே கேட்கறேன்.”

சொன்னபடியே ஆர்யன் தனியாக இருக்கும்நேரம் கரீமா அவனிடம் சென்று ‘அவன் கவலையாக இருப்பது அவளுக்கும் வருத்தம் தருகிறது’ என்றும் ‘ஒரே குடும்பமான அவர்கள் எதையும் சேர்ந்து எதிர்கொள்வார்கள்’ என்றும் நைச்சியமாக பேசி இவானின் நோயை பற்றி தெரிந்து கொண்டாள்.

ஆர்யனும் இதை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என அவளிடம் உறுதி வாங்கிக்கொண்டு, அண்ணன் இரத்தம் தேவைப்படும், அடுத்த நாள் அவனை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றும் சொன்னான்.

———

“என்னால நம்ப முடியல, அக்கா! இவான் பாவம்!”

“ஆமா, சின்ன பையன்!”

“ஆக, இதான் காரணமா? இவானோட உடல்நிலைக்காக ரெண்டுபேரும் நடிக்கிறாங்களா?” நிம்மதியான சல்மாவின் முகத்தில் புன்னகை, இருவரும் சமரசம் ஆகிவிடவில்லை என்று.

“ஆமா, ஆனா நீ வெளிய சொல்லிடாதே, சல்மா! கவனம்!”

“சரி, அக்கா! நீ கவலைப்படாதே! சீக்கிரம் அவன் குணமாகட்டும். ஆனா எனக்கு ஒரு ஆசை. திட்டாதே, அக்கா! ஒருவேளை அவன் சரியாகலனா நமக்கு நல்லதுதான். ஆர்யன் ருஹானாவோட இணைப்பு பாலம் முறிஞ்சிடும்” என்று சல்மா தயவுதாட்சண்யமின்றி சொல்ல, கரீமா அவளை முறைக்க, சல்மா “ஸாரி! நான் அப்படி நினைக்கக்கூடாது” என்று மன்னிப்பு கேட்டாலும், அவள் புன்னகை மறையவில்லை.

———

“சித்தப்பா! இங்க வாங்க! சித்தி ஜப்பான் பலூன் வாங்கிட்டு வந்துருக்காங்க!” என இவான் கூவி அழைக்க, மேல்மாடி மாடத்திற்கு வந்த ஆர்யனையும் அவன் ஆர்வம் தொற்றிக்கொண்டது.

“இது எவ்வளவு தூரம் பறக்கும்?” என இவான் ஆர்வமாக கேள்விக்கேட்டு கொண்டிருக்க, ருஹானா ஒரு பலூனை எடுத்து பறக்கவிட தயாராகி, ஆர்யனிடம் நெருப்பை ஏற்ற சொன்னாள்.

“நாம மூணு மட்டும் பறக்க விடலாம். ஆளுக்கு ஒன்னு!” என்று ஆர்யன் ருஹானாவை பார்த்தபடி சொல்ல, அவள் அவன் சொன்னதை கவனிக்கவில்லை. பலூனை தூக்கிப் பிடிப்பதிலேயே அவள் கவனம் இருந்தது.

“அப்போ இது என்னோட பலூன்!” என்று இவான் குதிக்க, நெருப்பு நன்றாக பற்றி அதன் வெப்பக்காற்றில் சுற்றியுள்ள மெல்லிய துணி விரியவும், ருஹானாவும் ஆர்யனும் அதை மேலே தூக்கி விட்டனர்.

“இப்போ சித்தியோடது” என்று இவான் சொல்ல, அடுத்தடுத்து இரண்டு பலூன்களையும் பறக்க விட்டனர். ஆகாயத்தை பார்த்து இவான் கைத்தட்டி ஆர்ப்பரிக்க, “உன்னோடது ரொம்ப உயரத்துல பறக்குது, ஆருயிரே! நம்ம வேதனையும் இதைப் போலவே பறந்து போகட்டும்!” என்றாள் ருஹானா.

‘இன்ஷா அல்லாஹ்!’ என்றான் ஆர்யன் மனதிற்குள். அவள் கண்ணில் நீரை பார்க்கவும் அவள் கையோடு கைகோர்த்துக்கொண்டான். திரும்பிய இவான் இமைக்க மறந்திருந்த இருவரையும் பார்த்து சிரித்துக்கொண்டான்.

———

“தூங்கிட்டானா?” அறையில் நுழைந்த ருஹானாவிடம் ஆர்யன் கேட்க, அவள் ஆமென்றாள்.

அவள்புறம் கணினியை நகர்த்திய ஆர்யன் “நான் உனக்கு ஒன்னு காட்டணும். இந்த பெண் டாக்டர் அமெரிக்கால பிரபலமானவங்க. இந்த நோயை தீர்க்கறதுக்கான வல்லுநர். தேவைப்பட்டா நாம இவானை அங்ககூட கூட்டிட்டு போகலாம்” என்றான்.

மகிழ்ச்சியடைந்த ருஹானா “நல்லவேளை, நமக்கு இன்னொரு வாய்ப்பும் இருக்கு. ஆனா இவான் இங்கயே குணமாகட்டும்” என்றாள்.

கணினி திரையை பார்க்க மிகநெருங்கியிருந்த ருஹானாவின் மேல் ஆர்யனின் கவனம் இருக்க, அவள் எண்ணம் வேறெங்கோ சுற்றியது. ‘நல்லவேளை இவானோடு தப்பி சென்றிருக்கவில்லை. அதன்பின் நோயை கண்டறிந்தால் தன்னால் எப்படி இந்த உயர்தர சிகிச்சை தந்திருக்க முடியும்?’

சிந்தனை கலைந்து திரும்பியவள் ஆர்யனின் பார்வையை கண்டு “நான் தூங்கப்போறேன்” என்று விலகினாள். படுக்கையறை கதவருகே சென்றவள் “நீங்களும் சீக்கிரம் தூங்குங்க!” என சொன்னாள். அவன் எதும் தவறாக எடுத்துக்கொள்வானோ என அஞ்சி “இவானுக்காக நாம ஆரோக்கியமா இருக்கணும்” என்று சேர்த்து சொன்னாள்.

———

“இன்னைக்கு இவான் சந்தோசமா இருந்தான். சின்ன குழந்தையா அவனை திரையில பார்த்தது அவனுக்கு அதிக மகிழ்ச்சி.”

“நீ வாங்கிட்டு வந்த ஜப்பான் பலூன் கூட அவனுக்கு ரொம்ப பிடிச்சது. ஜாலியா விளையாடினான்.”

சோபாவில் படுக்கையை விரித்துக் கொண்டிருந்த ருஹானா, ஆர்யனின் தொடரும் பார்வையை உணர்ந்தவள் “இவானுக்கு சரியாகிடும், பயப்படாதீங்க!” என்று ஆறுதலாக சொல்ல, அவன் தலையசைத்தான்

“சித்தி!” என ஓடிவந்த இவான் வேகமாக ருஹானாவின் காலை கட்டிக்கொள்ள அவள் சோபாவில் சாய்ந்தாள். “அன்பே! ஏன் அழறே?”

“உனக்கு வலிக்குதா?” பதட்டமான ஆர்யன் கட்டிலிலிருந்து எழுந்து ருஹானா இவான் காலடியில் வந்து அமர்ந்தான்.

“எனக்கு கெட்டகனவு வந்தது. நாம தோட்டத்தில விளையாட்டிட்டு இருந்தோம். அப்போ ஒரு கருப்பு உருவம் என்னை தூக்கிட்டு போய்டுச்சி. என்னால உங்கட்ட சொல்ல முடியல. ஏன்னா என்னால பேச முடியல. அந்த பெரிய கை என்னை ரொம்ப தூரம் கொண்டு போயிடுச்சி” என்ற இவான் பயத்துடன் கண்களை மூடி ருஹானாவை கட்டிக்கொண்டான்.

“அதெல்லாம் கனவு, கண்ணே! இப்போ முடிஞ்சிடுச்சி பார்!”

“நாங்க எப்பவும் உன்கூட தான் இருப்போம். எதுவும் உன்னை தூக்கிட்டு போக விட மாட்டோம், அக்னிசிறகே! சரியா?”

நிம்மதியாகி தலையாட்டிய இவான் “நான் இன்னைக்கு மட்டும் உங்ககூட தூங்கவா? அங்க எனக்கு கெட்ட கனவு வருமோன்னு பயம்மா இருக்கு” என்று கேட்க, இருவரும் அதிர்ந்து விழித்தனர்.

பின் சரியென ஆர்யன் தலையசைக்க, “சித்தப்பா! உங்களுக்கு வேலை எதுவும் இல்லயே?” என தெளிவுப்படுத்திக்கொண்ட இவான், ஆர்யனின் கைப்பிடித்து அழைத்து சென்று கட்டிலில் படுத்துக்கொண்டான்.

ருஹானா நகராமல் திண்டாடிக்கொண்டிருக்க “சித்தி! நீங்களும் வாங்க, சித்தப்பா கட்டில்ல சேர்ந்து படுக்கலாம்” என்று கூப்பிட்டான். ஆர்யன் வேறுபக்கம் பார்வையை திருப்பிக்கொள்ள, ருஹானாவும் கட்டிலை பார்க்காமலேயே மிகுந்த தயக்கத்துடன் இவான் பக்கம் வந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள்.

இருவரின் கைகளையும் பிடித்துக்கொண்ட இவான் “நீங்க ரெண்டு பேரும் என்கூட இருந்தா நான் ராட்சஷனை பார்த்து கூட பயப்பட மாட்டேன். நீங்க எனக்கு அம்மா அப்பா தான்” என்று சொல்ல, இருவரும் அவனை கனிவுடன் பார்த்தனர்.

“ரெண்டுபேரும் சேர்ந்து எனக்கு கதை சொல்றீங்களா?”

“சரி, அன்பே! நானே தொடங்குறேன். ஒரு காலத்துல ஒரு கண்ணாடி சிறுவன் இருந்தான். அவன் வலிமையானவன். உடைந்துடுவோமோன்னு அவன் பயந்ததே இல்ல. ஏன்னா…” என ருஹானா யோசிக்க, ஆர்யன் தொடர்ந்தான்.

“ஏன்னா அவனை பாதுகாக்கற காற்றுப்பெண் அவனை நோக்கி வர்ற எந்த ஆபத்தையும் அனுமதிக்க மாட்டா. ஊதி தள்ளிடுவா. அவன் கீழே விழ நேரும்போது அவனை விழாம பிடிச்சிக்குவா.”

புன்னகைத்த ருஹானா “காற்றுப்பெண்ணும் கண்ணாடிப்பையனும் பகலெல்லாம் சேர்ந்து விளையாடுவாங்க. ராத்திரி காற்றுப்பெண் கண்ணாடிப்பையனை மரமனிதன் கிட்டே கொடுத்துடுவா. அந்த மரமனிதன் தன்னோட இலைகிளையால மிருதுவான மெத்தை தயாரித்து கண்ணாடிப்பையனை தூங்க வைப்பான்” என்று சொல்ல, ஆர்யன் அவளை வியந்து பார்த்தான்.

அவர்கள் கைகளை தடவிக்கொண்டே கதை கேட்ட இவான் “அப்புறம் சித்தப்பா?” என்றான்.

“ஒருநாள் கண்ணாடிப்பையன் சீக்கிரமே எழுந்து வெளியே போய்ட்டான். காற்றுப்பெண்ணும் மரமனிதனும் தூங்கிட்டு இருந்தாங்க. அவன் தெரியாம ரொம்ப தூரம் போய்ட்டான். அப்போ சூறாவளி அவனை சூழ்ந்திடுச்சி” என்ற ஆர்யன் ருஹானாவை பார்த்தான்.

“காற்றுப்பெண்ணும் மரமனிதனும் எழுந்து பார்த்தப்போ பையன் இல்லன்னு தெரிஞ்சிக்கிட்டாங்க. காற்றுப்பெண் உடனே அவனை தேடிப் போனா. அவ பையனை பார்க்கும்போது மலையுச்சியில அவன் சூறாவளி கூட சண்டை போட்டுட்டு இருந்தான்.”

“கண்ணாடிப்பையன் அவ்வளவு தைரியமானவனா சித்தி?”

“ஆமா, அன்பே! ஆனா சூறாவளி பயங்கரமா இருந்தது. காற்று பெண்ணும் போராடினா. அவனை காப்பாத்த அவளாலயும் முடியல. சூறாவளியோட வேகம் அதிகமாகிடுச்சி. அவ கீழே விழப் போகும் சமயம் மரமனிதன் தனது பலமான கைகளோட அங்கே வந்துட்டான்.” கண்ணீர்மல்க ருஹானா சொல்ல, இரக்கத்துடன் அவளை பார்த்த ஆர்யன் உறுதியாக தலையாட்ட, இவான் சந்தேகம் கேட்டான்.

“ஆனா மரமனிதன் இருந்த இடம் விட்டு நகர்ந்தா செத்துப் போய்டுவானே?”

“ஆமா கண்ணே! ஆனா அவன் தன்னோட உயிரை பத்தி கவலைப்படல. நொறுங்கப் போகும் சின்னப்பையனை காப்பாத்த வந்துட்டான். தன்னோட பெரிய கிளைகளால சிறுவனை மூடி பத்திரமா உள்ள வச்சிக்கிட்டான்.”

“சித்தி! மரமனிதன் காற்றுப்பெண்ணையும் காப்பாற்றுவானா?” என இவான் கேட்க, ருஹானா பேசமுடியாமல் தலையாட்ட, ஆர்யன் பதில் சொன்னான்.

“ஆமா அக்னிசிறகே! அவனும் துணை நின்னான். காற்றுப்பெண் தன்னோட சக்தி எல்லாத்தையும் திரட்டி ஆவேசமா சூறாவளியோட போராடினா. மரமனிதன் சண்டை போட முடியாதப்போ காற்றுப்பெண் அவனுக்கு உதவி செய்தா” என்ற ஆர்யன் ருஹானாவை பார்த்து சொன்னான். “காற்றுப்பெண் மரமனிதனுக்கும் சிறுவனுக்கும் தன் காற்றால உயிர்சுவாசம் கொடுத்தா.”

“காற்றுப்பெண்ணும் மரமனிதனும் கண்ணாடி சிறுவனை காப்பாத்த சேர்ந்து போரிட்டாங்க. அவங்க கிட்ட இருந்து பையனை யாராலும் பிரிக்கமுடியாது” என்று ருஹானா ஆர்யனுக்கும் சேர்த்து சொல்ல, ஆர்யனும் நம்பிக்கையோடு சொன்னான். “ரெண்டு பேரோட வலிமைக்கு முன்னால சூறாவளி பலகீனமாகிடுச்சி. தோற்று போய் திரும்பிடுச்சி.”

“அதுக்கு அப்புறம் எப்போ புயல் வீசினாலும் கண்ணாடிப்பையனை மரமனிதனும் காற்றுப்பெண்ணும் தங்களுக்கு நடுவுல வச்சி பாதுகாப்பாங்க” என்று ருஹானா கதையை முடித்து இவானை பார்க்க அவன் தூங்கியிருந்தான். அவளும் ஆர்யனின் கண்களை சந்திக்காமல் சரிந்து படுத்து கண்களை மூடிக்கொண்டாள்.

சாய்ந்து அமர்ந்திருந்த ஆர்யன் மட்டும் இருவரையும் பார்த்தபடி விழித்திருந்தான்.

(தொடரும்)

Advertisement