Advertisement

“நான் போக மாட்டேன். எப்பவும் விட இப்போ தான் நீங்க இவானுக்கு அதிக தேவை.” ருஹானா பிடிவாதம் பிடித்தாள்.

“எனக்கும் அவன் மட்டும் தான் தேவை. என் கையை விட்டு எல்லாம் நழுவி போகுது. எனக்கு என்ன செய்ய, எப்படி செய்யறதுன்னு தெரியல. என்னால முடியல!” ஆர்யன் தளர்ந்துவிட்டான்.

“உங்களுக்கு தெரியலங்கறதால இவானை விட்டுக் கொடுக்கப் போறீங்களா? நம்மோட வாரிசை கைவிடப் போறீங்களா?” என அவள் கேட்க, ஆர்யன் நிமிர்ந்து கோபமாக பார்த்தான்.

“உங்க மனசு கேட்கற கேள்வி எனக்கு தெரியும். ஏன் இவானுக்கு வந்தது, எனக்கு வரக்கூடாதா? நானும் இதே தான் கேட்டுக்கிட்டேன். அதுக்கு சரியான பதில் எனக்கும் தெரியல. இது நமக்கான சோதனையா இருக்கலாம். நம்மால முடிந்ததை நாம செய்வோம். முடியாததை அல்லாஹ் வசம் ஒப்படைச்சிடுவோம். இவான் நம்மோட வாரிசு. நாம எல்லாரும் அவரோட வாரிசு.”

கண்ணீரோடு நம்பிக்கையாக பேசும் ருஹானாவை ஆர்யன், காக்க வந்த தேவதையைப் போல பார்த்துக்கொண்டே இருந்தான்.

“இன்றைய நாட்கள்ல நீங்க என்மேல வெறுப்பு காட்றீங்க. நானும் உங்க மேல கோபமா இருக்கேன்” என்று ருஹானா எழுந்து கொள்ள, நீலநிற ஃபைலை நினைத்துக்கொண்ட ஆர்யன் முகம் மாறினான்.

“வெறுப்புக்கோ கோபத்துக்கோ இது நேரம் இல்ல. இவானுக்காக நாம இணைந்து செயல்படணும். நாம வலிமையா இருந்தா தான் இவானுக்கு வலிமையை கொடுக்க முடியும். கடைசி முறையா கேட்கறேன், நீங்க என்கூட வரமுடியுமா, முடியாதா?” ஆர்யன் முகத்தை திருப்பிக்கொண்டான். வெளியுலம் அறியாத ருஹானா உலகம் சுற்றிய அவனுக்கு அறிவுரை சொல்லும் நிலைமை!

“இதுக்குமேல உங்க விருப்பம். உங்க கோபத்திலும் விரக்தியிலும் நீங்க மூழ்கி கிடங்க. நான் இவான்ட்ட போறேன். அவனுக்கு நான் தேவை இப்போ!”

அரும்பும் தளிரால் துளிர்விட்ட

அன்பை மறந்துவிட்ட நெஞ்சங்கள்

தளிர் நோய்ப்பட தவிக்கின்றன!

பெற்ற மனம் கொண்ட

உற்ற உயிர் கலங்கினாலும்

நிலைகுலைந்த பெருமலையை

நிமிரச் செய்கிறது!

இறைநம்பிக்கையும் தன்முனைப்பும்

அற்புதங்களை செய்யுமே!

சாலையில் ருஹானா நடந்துக் கொண்டிருக்க, அவள் பின்னாலிருந்து வந்த கார் அவள் அருகே நின்றது. ருஹானா ஏறிக்கொள்ள, நம்பிக்கை பயணம் மாளிகை நோக்கி சென்றது.

———-

காரிலிருந்து இறங்கிய ருஹானாவும் ஆர்யனும் தோட்டத்தில் குரல் கேட்க அங்கே திரும்பினர். அம்ஜத்துடன் சேர்ந்து இவான் காய்ந்த சருகுகளை சேர்த்து அள்ளிக்கொண்டிருக்க, அம்ஜத் அவனை உற்சாகமாகப்படுத்தினான். “வெல்டன் கேப்டன்! யார் முதல்ல கூடையை நிறைக்கறாங்கன்னு பார்க்கலாம்.”

இவானை பார்க்க பார்க்க ஆர்யனின் திடம் குறைவதை கண்ட ருஹானா, ஆர்யனின் கையை பிடித்தாள். அவன் அவளை ஆச்சர்யமாக பார்க்க, அவள் இவானின்புறம் பார்வையை திருப்பினாள். அவளது ஸ்பரிசத்தில் தனது முழு உலகமும் தன்னை நோக்கி வந்தது போல உணர்ந்த ஆர்யன், தங்களை அழைக்கும் இவானை பார்த்தான்.

“சித்தப்பா! சித்தி! நான் பெரியப்பா கூட சேர்ந்து என்ன செய்திருக்கேன்னு பாருங்க!” என்ற இவான் இவர்களை பார்த்து கையசைத்து ஆரவாரம் செய்துவிட்டு வேலையை தொடர்ந்தான்.

குனிந்து தன் கையை பிடித்திருந்த அவள் கையை நோக்கிய ஆர்யன் அவள் விரல்களை தானும் அழுந்த பிடித்துக்கொண்டான், ஆதரவு தேடுபவன் போல.

“இவானுக்காக!” என்ற ருஹானா முகத்தில் புன்னகையை வரவைக்க, ஆர்யன் அவளை அதிசயமாக பார்த்தான்.

———

ஓடிவந்த இவான் பாய்ந்து வந்து ஆர்யனை கட்டிக்கொண்டான். “சித்தப்பா! எங்க வேலை முடிந்தது.  உங்களோட சேர்ந்து சாப்பிடலாம்னு சித்தி சொன்னாங்க.”

அவனின் நறுமணத்தை ஆழ சுவாசித்த ஆர்யன் “அவங்க சொன்னது சரிதான், இவான்!  நாம சேர்ந்து சாப்பிடலாம்” என்றான் தெளிந்த மனதுடன்.

“ஆர்யன்! காலைலயே எங்க போனே நீ?”

“அவசரமான வேலை இருந்தது அண்ணா!”

“சாப்பிட்டியா?”

“இல்ல அண்ணா!”

“உள்ளே வா, நான் எடுத்துவைக்க சொல்றேன்” என அம்ஜத் முன்னே செல்ல, பேசிக்கொண்டே வரும் இவானின் கையையும் ருஹானா பற்றிக்கொள்ள, மூவரும் கைகோர்த்தபடி வீட்டிற்குள் நுழைந்தனர்.

“சித்தப்பா நாங்க விமானம் வச்சி விளையாடினோம். ரொம்ப பெரிய புதிர்படத்தை சரியா பொருத்தினோம். நான் பெரியவனானதும் இதைவிட பெரிய புதிர்படத்தை எளிதா செய்வேன்னு பெரியப்பா சொன்னார்.”

இவர்களை சேர்ந்து பார்க்கவும், அதிலும் ருஹானா ஆர்யனின் இணைந்த கைகளை பார்க்கவும், உணவுமேசையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த சல்மாவின் உணவு தொண்டையில் சிக்கிக்கொண்டது. கரீமாவின் முகம் இருண்டாலும் சமாளித்துக்கொண்டாள். “வாங்க, வாங்க! சாப்பிட வாங்க!”

இவான் ஆர்யனுடன் பேசிக்கொண்டே சாப்பிட, ஆர்யன் உணவை மறுக்க, ருஹானா அவனை உண்ண வற்புறுத்த, அம்ஜத் மகிழ்வாக அவர்களுடன் பேச்சில் இணைந்து கொண்டான். கரீமாவும் சல்மாவும் உண்ணாமல் அவர்களையே பார்த்திருந்தனர்.

இவான் கைகளில் இருந்த தடிப்புகளை சொறியவும் அவற்றை பார்த்த ஆர்யன், நேற்றைவிட அது அதிகமாகியிருப்பதை கண்டுவிட்டு திகில் அடைந்தான். சாப்பிடாமல் வேகமாக எழுந்து மேலே சென்றுவிட்டான்.

ரஷீத்தை அழைத்து விவரம் சொல்லிய ஆர்யன், அகாபா நகரின் சிறந்த மருத்துவர்களிடம் பரிசோதனை முடிவுகளை உடனே அனுப்பி அவர்களின் கருத்துக்களை கேட்க சொன்னான்.

———

“இப்போ நாம் ஆப்பிரிக்கா மேல பறக்கறோம். அடுத்து அமெரிக்கா போக போறோம். நடுவுல விமானத்துக்கு காஸ் போட்டுக்கலாமா?”

“சரி, அப்படியே நீங்களும் பழசாறு குடிங்க பைலட்!”

“ஆமா, அப்படியே கொஞ்சம் ஓய்வெடுத்துக்கலாம்” என்று இவான் வரவேற்பறை சோபாவில் அமர, ருஹானா பதறினாள். “உனக்கு எதும் வலிக்குதா, மயக்கம் வர்ற மாதிரி இருக்கா, கண்ணே?”

“அதெல்லாம் ஒன்னுமில்லை சித்தி! நீங்க ஏன் பயப்படுறீங்க?”

“சரி, பேபி! உனக்கு எது செய்தாலும் என்கிட்டே உடனே சொல்லிடணும்” என்று ருஹானா பயத்தை மறைக்க, அவள் போன் ஒலித்தது. “நான் வாகிதா அக்காட்ட பேசிட்டு வரேன். நீ மேல போய் சித்தப்பா கூட விளையாடு, கவனம், அன்பே!”

ருஹானாவின் வெளியேறும் திட்டம் பற்றி கேட்ட வாகிதாவிடம் இவானின் உடல்நலக்குறைவை சொல்லி ருஹானா வருத்தப்பட, வாகிதா அவளுக்கு பலவாறு ஆறுதல் சொன்னாள். பர்வீனிடம் இந்த தகவலை சொல்லவேண்டாம் என ருஹானா கேட்டுக்கொள்ள, அவளும் சம்மதித்தாள்.

———-

“நான் பைலட் இவான் அர்ஸ்லான்! நம் விமானம் சில வினாடிகளில் மேலே பறக்கப் போகிறது. பயணிகள் அனைவரும் தயாரா?”

“சித்தப்பா! என்கூட ஓடிவாங்க! நான் எவ்வளவு வேகமாக ஓடுறேன், பாருங்க!”

“கவனம் அக்னிசிறகே! கீழே விழுந்துடாதே!”

“மாட்டேன், சித்தப்பா! நான் விழுந்தாலும்தான் காப்பாத்த நீங்க இருக்கீங்களே!”

“ஆமா, சிங்கப்பையா! உன்னை நான் எல்லாவித ஆபத்துல இருந்தும் காப்பாத்துவேன்!”

“சித்தப்பா! நீங்க கவலையா இருக்கீங்களா? நீங்க கவலையா இருந்தாத்தான் சாப்பிட மாட்டீங்க! நான் வருத்தமா இருந்தா என்ன விஷயம்னு நீங்க சொல்ல சொல்வீங்க தானே! இப்போ நான் உங்களை கேட்கறேன், என்னன்னு சொல்லுங்க” என்று பெரிய மனிதனைப் போல கேட்ட இவான் ஆர்யனை தழுவிக்கொண்டான்.

“கதைல அசுரன் சோகமா இருக்கும்போது குட்டிப்பையன் கட்டிப்பிடிச்சான் தானே? நானும் உங்களை கட்டிப்பிடிக்கறேன். இப்போ உங்க கவலை போயிடுச்சா?”

“ஆமா, அக்னிசிறகே! நீ என்கூட இருக்கும்போது எனக்கு எதைப்பற்றியும் கவலை இல்ல. நாம சேர்ந்தே எல்லா கஷ்டத்தையும் முறியடிப்போம்!” இப்போது ஆர்யன் தமையன் மகனை இறுக்கிக் கொண்டான்.

இருவரின் அணைப்பையும் பார்த்தபடி “என்னோட மானை காணோமேன்னு தேடிட்டு இருந்தேன். அது சித்தப்பா கூட இருக்கு” என்று ருஹானா உள்ளே வந்தாள்.

“இதோ சித்தியும் வந்துட்டாங்க! இப்போ நாம அதிக வலுவாகிட்டோம் தானே, சித்தப்பா?”

“ஆமா இவான்!”

“நாம சேர்ந்து இருக்கலாமா இப்போ?”

“முழுநாளுமே இருக்கலாம். உனக்கு என்ன என்ன செய்யணுமோ செய்யலாம். நானும் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்” என ஆர்யன் சொல்லவும், இவான் மகிழ்வோடு ருஹானாவை பார்த்து சிரித்தான்.

———

ருஹானா ஓவனில் இருந்து லெமன் குக்கிசை வெளியே எடுக்க, இவான் “சித்தி! நான் பெரியவனா வளர்ந்தாலும் உங்க குக்கீஸ் தான் விரும்பி சாப்பிடுவேன்” என்றான்.

“நீ எவ்வளவு பெரியவனானாலும் நான் உனக்கு குக்கீஸ் செய்து கொடுப்பேன்” என்ற ருஹானா அவனுக்கு கிண்ணத்தில் இட்டு கொடுத்தாள்.

சமையலறைக்கு வந்த ஆர்யன் “உங்க வேலை முடிஞ்சதுன்னா வெளியே வர்றீங்களா? சர்ப்ரைஸ் ரெடி” என்று அழைத்தான். வரவேற்பறையில் இருந்த திரையை பார்த்ததும் இவான் “என்ன சித்தப்பா நாம கார்ட்டூன் பார்க்கப் போறோமா?” என கேட்டான்.

“அதைவிடவும் உனக்கு பிடிச்சது” என ஆர்யன் சொல்ல, மூவரும் சோபாவில் அமர்ந்தனர்.

“எனக்கும் இப்போ ஆவலா இருக்கு” என ருஹானா சொல்ல, “என்ன இது சித்தப்பா?” என இவான் கேட்க, “ஒரு ஹீரோவோட பிறந்த கதையை பார்க்கப் போறோம்” என்றான் ஆர்யன்.

“புது படமா?”

“இருக்கலாம். ஆனா ஆறு வருடத்துக்கு முன்னால எடுத்தது” என்ற ஆர்யன் வீடியோ கருவியை இயக்கினான்.

“எத்தனை அழகா இருக்கான், கன்னம்லாம் சிவப்பா இருக்கே! மாஷா அல்லாஹ்! கொள்ளை முடி, சுருள் சுருளா எவ்வளவு அழகு! ஆர்யன்! ஆர்யன்! நீ தூக்கு” என திரையில் அம்ஜத் சொல்ல, ஆர்யன் கையில் பச்சிளங்குழந்தை. முகத்தில் பரவசத்துடன் சகோதரர்கள் நிற்க, அருகில் கரீமாவும்.

அதிசயத்துடன் திரையை உற்றுப் பார்த்த இவான் “நானா அந்த குழந்தை?” என கேட்க, ஆர்யன் சிரிப்புடன் தலையாட்டினான். ருஹானா கண்கொட்டாமல் பார்த்து ரசித்தாள்.

“எவ்வளவு சின்ன குழந்தை நீ! நானும் உன்னை பார்த்திருந்திருக்கலாம்” என அவள் வருத்தப்பட, “நான் குழந்தையா இருக்கும்போது நீங்க என்னை பார்த்தது இல்லயா, சித்தி?” என இவான் கேட்க, “இல்லயே!” என்றாள் ருஹானா.

“நீ பிறந்து ரெண்டு நாள் தான் ஆகியிருந்தது, அக்னிசிறகே! உன்னை அப்போதான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம். அதுதான் எங்க வாழ்க்கையில மிகுந்த சந்தோசமான நாள்” என்று ஆர்யன் சொல்ல, இவான் சிரித்தபடி திரையை பார்த்தான்.

“ஆர்யன் உன் ஜாடை தெரியுதே!” என கரீமா சொல்ல, ஆர்யனுக்கோ பெருமகிழ்ச்சி முகத்தில் தெரிந்தது. “இவன் என்னை பார்க்கறான்!”

“ஆமா ஆர்யன்! சிரிக்கிறான் பாரு உன்னை பார்த்து” என புதுக்குரல் கேட்க, “இந்த வீடியோவை யார் எடுத்தது சித்தப்பா?” என இவான் கேட்டான்.

“அக்ரம் அண்ணா!” என வருத்தமாக இவான் சொல்ல, “என்னோட அப்பாவா?” என ஆவலாக இவான் கேட்டான்.

“ஆமா உன் அப்பா தான்!”

“என்னை பார்த்து எல்லாரும் சந்தோசப்பட்டீங்களா?”

“ஆமா, ரொம்ப! ரொம்ப!”

“நானும் வந்திட்டேன்! என்ன செய்றீங்க எல்லாரும்?” என்றபடி அம்ஜத் ஆர்யன் அருகில் அமர்ந்தான்.

இப்போது குட்டி இவான் அம்ஜத் கையில் இருந்தான். “தீயக்கண்ணுல இருந்து அல்லாஹ் என் தம்பி மகனை காப்பாற்றட்டும். அவன் ஆரோக்கியமா வளரட்டும்” என்று சொல்ல, அவன் பக்கத்தில் இருந்த ஆர்யன் “இன்ஷா அல்லாஹ்!” என்றான்.

Advertisement