Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

  அத்தியாயம் – 125

இவானின் பரிசோதனை முடிவுகளை ஏற்றுக் கொள்ளமுடியாமல் தத்தளிப்போடு வந்த ஆர்யன், அணைத்த இவானை விடாமல் வைத்துக்கொண்டான்.

“சித்தப்பா! என்னோட விமானத்தில இன்னும் ஸ்டிக்கர்ஸ் ஒட்டல. நாம இப்போ ஒட்டலாமா?” என இவான் கேட்க, அவனை விடுவித்த ஆர்யன், விமானத்தை நீட்டிய இவானின் கையை பார்த்தான். அங்கே தடிப்புகள் அதிகமாக தெரிய, கலவரத்துடன் ருஹானாவை திரும்பிப் பார்த்தான்.

“அப்புறமா, சிங்கப்பையா!” என்று சொன்னவன் வேகமாக காரை எடுத்து சென்றுவிட்டான்.

வருத்தமான இவான் “ஏன் சித்தி, சித்தப்பா போயிட்டார்? கவலையா இருக்காரா?” என கேட்க, அவன் முன்குனிந்த ருஹானா “இல்ல அன்பே! அவருக்கு கம்பெனில முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லிட்டேதான் வந்தார்.” அவனை ஆறுதல்படுத்தி திசைதிருப்பினாள். “நாம விளையாடலாமா?”

“சரி, சித்தி! நான்தான் பைலட்! நீங்க பயணி!” என்று இவான் விமானத்தை உயர்த்திப் பிடித்துக்கொண்டு ஓட, ருஹானா அவன் பின்னால் ஓடினாள். சுற்றிசுற்றி அவர்கள் ஓட, இவான் தடுக்கி விழுந்துவிட்டான்.

பதறிப்போய் ருஹானா அவனை தூக்க, “சித்தி! சித்தப்பா சொன்னது போல நான் அழ மாட்டேன். பயப்படாதீங்க” என்ற இவான் அவள் கண்ணீரை துடைத்தான்.

கீழே விழுந்ததால் உடை தூசியாக, அதை மாற்றுவதற்காக ருஹானா இவானை உள்ளே அழைத்துச்சென்றாள்.

———

கார் மலைமீது அதிபயங்கர வேகத்தில் ஏறி வந்தது. சடாரென உச்சியில் நிறுத்தி இறங்கிய ஆர்யன் பாதாளத்தில் தெரிந்த கடலை பார்த்து “ஏன்? ஏன்? ஏன்?” என கத்தினான். அவன் கண்ணிலிருந்து சொட்டு சொட்டாக நீர் இறங்கியது. ஓவென அவன் அலறிய சத்தத்தில் மரத்திலிருந்த பறவைகள் அதிர்ந்து உயரே பறந்தன.

———-

“காலைல எங்க போனீங்க சித்தி? நான் எழுந்ததும் உங்களை தேடினேன்.”

“எனக்கு சில பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது, கண்ணே! உன் சித்தப்பா என்னை கடைக்கு கூட்டிட்டு போனார். நீ முழிக்கறதுக்குள்ள வந்துடலாம்னு நினைச்சோம். ஆனா முடியல.” பேசிக்கொண்டே சட்டையை கழற்றிய ருஹானா அதிர்ந்தாள்.

“என்ன சித்தி, இந்த தடிப்புக்கள் அதிகமாகிடுச்சி. நான் தூங்கும்போது பூச்சி கடிச்சிருக்குமா?” என இவான் அப்பாவியாக கேட்க, ருஹானா முகத்தை மாற்றிக்கொண்டாள். “வலிக்குதா மானே?”

“இல்ல சித்தி! இது உடனே மறைஞ்சிடும் தானே?”

“ஆமா பேபி!” என்று அவன் கையில் முத்தமிட்ட ருஹானாவிற்கு கண்ணீர் பார்வையை மறைக்க, ஜாஃபர் அவள் நிலை கண்டு உதவ வந்தான். “மேம்! உங்களை அம்ஜத் சார் கூப்பிடுறார். லிட்டில் சாருக்கு நான் உடை மாத்துறேன்.”

அழுதுக்கொண்டே அறைக்கு ஓடிச்சென்ற ருஹானா மனமுருகி பிரார்த்தனையில் ஈடுபட்டாள்.

“நான் அன்பு வச்சிருந்தவங்க எல்லாம் என்னை விட்டு போய்ட்டாங்க. அம்மா, அப்பா, அக்கா…. அவங்களோட இழப்பையே என்னால் இன்னும் மறக்கமுடியல. ஆனா இந்த வலி என்னால தாங்கமுடியாது. இவான் இல்லாம என்னால வாழ முடியாது. யா அல்லாஹ்! உங்க கருணையால தயவுசெய்து அவனை குணப்படுத்துங்க!”

———–

ஆர்யன் தங்களுடைய குழந்தைப்பருவ வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அங்கேயிருந்த பொருட்களையெல்லாம் அடித்து உடைத்தான். சுவரில் கைகொண்டு வேகமாக அடித்தான், தலையாலும் மோதினான். பின் விரக்தியாக சுவரில் சாய்ந்து தரையில் அமர்ந்து விட்டான். என்றும் நீரைக் காணாத அவன் கண்கள் இப்போது கண்ணீர் கடலில் மிதந்தன.

“என்னோட அப்பாவை என் கண்ணு முன்னால இழந்தேன். என் சின்ன அண்ணனையும்.. இப்போ அவனோட பையனையுமா? என்னை ஏன் எடுத்துக்க மாட்றீங்க? இவான் ஏன்? என்னை அழைச்சிக்கோங்க!”

———-

ருஹானாவின் எதிரே வந்த சல்மா “மறுபடியும் என்ன செய்தே நீ? ஆர்யனை ஏன் வெளிய அனுப்பிவிட்டே?” என்று கோபமாக கேட்க, ருஹானா அவளை சட்டை செய்யாமல் நடந்தாள்.

படிக்கட்டில் அவளின் வழியை மறித்துக்கொண்ட சல்மா “நீ அர்ஸ்லான் மாளிகைல கால் எடுத்து வச்சதுல இருந்து நஞ்சை பரப்பறே! நீ ஒரு விஷ நாகம்!” என்றாள்.

“ஒரு மனிதனுக்கு அவசியம் இருக்கவேண்டியது தூய்மையான இதயமும், நல்ல எண்ணங்களும். அது ரெண்டும் உனக்கு இல்ல” என இகழ்ச்சியாக சொன்ன ருஹானா, அவளை தாண்டி கீழே இறங்கி சென்றாள்.

சல்மா அவமானப்பட்டு முகம் சுருங்கி நின்றாள்.

———

வரவேற்பறையில் பெரிய புதிர்படத்தை அம்ஜத்தோடு இணைத்துக்கொண்டிருந்த இவான் அருகே வந்து அமர்ந்தாள் ருஹானா.

“ருஹானா! இவனை பாரேன்! இத்தனை கஷ்டமான படத்தை எப்படி சேர்கிறான்! எதிர்காலத்துல பெரிய அனலிஸ்ட்டா வரப் போறான்.”

“இல்ல பெரியப்பா! நான் கேப்டன் தான். கடல்ல பெரிய கப்பல்களை செலுத்துவேன்” என்று சொன்ன இவான், உற்சாகமின்றி இருந்த ருஹானாவின் மனநிலையை மாற்ற “சித்தி! உங்களையும் சித்தப்பாவையும் எல்லா நாடும் கூட்டிட்டு போவேன், நீங்க எங்க போகணும்னு சொன்னாலும் அங்க” என்றான்.

இவானின் வருங்கால திட்டமிடுதலை எண்ணி உள்ளுக்குள் அழுத ருஹானா மேலுக்கு புன்னகை செய்ய, அம்ஜத் சிரித்தபடி “நான்?” என்று கேட்டான்.

“உங்களையும் தான், பெரியப்பா. அப்புறம் கரீமா பெரியம்மா, சாரா ஆன்ட்டி, ஜாஃபர் அங்கிள், நஸ்ரியா அக்கா…” என இவானின் பட்டியல் பெரிதாக, “சல்மா?” என அம்ஜத் மறுபடியும் கேட்டான்.

“ஆமா, பெரியப்பா. நம்ம வீட்ல இருக்கற எல்லாரையும் தான். அங்கயும் நாம குடும்பமா ஒன்னா இருக்கலாம்” என்று சொல்ல, ருஹானா எழுந்து வெளியே சென்றுவிட்டாள்.

கைகளால் வாயை மூடிக்கொண்டு பின்பக்க படிக்கட்டில் வந்து அமர்ந்தவள் பக்கத்தில் ஜாஃபர் வந்து உட்கார்ந்தான்.

“தவறாக இருந்தா மன்னிச்சுடுங்க, ருஹானா மேம். லிட்டில் சாருக்கு லுகேமியாவா?”

அதிர்ச்சியடைந்து திரும்பிப் பார்த்த ருஹானாவின் அழுகை நின்றிருந்தது. “உங்களுக்கு எப்படி தெரிந்தது?”

“லிட்டில் சாருக்கு ஏற்பட்ட அறிகுறியால, நீங்க ரெண்டுபேரும் படற மனக்கஷ்டத்தால” என்று சொன்ன ஜாஃபர் “என் மகனுக்கும் இதே நோய் தாக்குச்சி” என்றான்.

மேலும் அதிர்ச்சியடைந்த ருஹானா பேச்சற்று அவனைப் பார்க்க “ஆமா! கல்லூரியில படிச்சிட்டு இருந்த தாயில்லாத என் மகனுக்கு இப்படி ஆனதும் எனக்கு என்ன செய்யன்னு தெரியல. சிகிச்சைக்கு லட்சக்கணக்குல தேவைப்பட்டுச்சி. என் சேமிப்பு எல்லாம் மகனோட படிப்புக்கே செலவாகிடுச்சி. என் நிலமையை தெரிஞ்சிக்கிட்ட ஆர்யன் சாரோட எதிரிகள் எனக்கு பணம் கொடுக்க முன்வந்தாங்க” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்க, ருஹானா திகைப்பாக பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“ஆர்யன் சாரை கொல்லத்தான் அத்தனை பணமும். பலப்பல மனப்போராட்டங்களுக்கு பிறகு நானும் ஒத்துக்கிட்டேன். என் மகனை காப்பாத்த எனக்கு வேற வழியும் இல்ல. ஆனா என்னோட குறி தவறிடுச்சி. நான் தப்பிச்சி தற்கொலை செய்துக்க போனேன். என்னை விரட்டி வந்த ஆர்யன் சார் என்னை காப்பாத்தினார். விவரம் தெரிஞ்சி என் மகனையும் காப்பாத்தினார். அவன் குணமாகி இப்போ அமெரிக்கால வேலை செய்துட்டு இருக்கான். அதுக்கு அப்புறம் ஆர்யன் சாரோட குடும்பம் என்னோட குடும்பமாகிடுச்சி.”

ஆர்யனின் ஒரு நல்ல பக்கமும், ஜாஃபரின் கதையும் அதில் இருந்த நேர்மறை முடிவும் ருஹானாவிற்கு நம்பிக்கை நட்சத்திரங்களாக தெரிந்தன. ஜாஃபருக்கு நன்றி சொல்லி புத்துணர்ச்சியுடன் எழுந்தாள்.

  ———-

இவானை ருஹானா படுக்க வைக்க, அவன் தான் முதன்முதலாக செய்த காகிதக்கப்பலை அவளுக்கு காட்டினான். “சித்தி! இதை நான் சித்தப்பாக்காக செய்தேன். அவருக்கு கொடுக்க ஆசைப்பட்டேன். ஆனா அவர் இன்னும் ஆபீஸ்ல இருந்து வரல. எப்பவும் வேலை செய்துட்டே இருக்கார். நான்  கேப்டன் ஆனதும் அவரை நம்ம கூட கப்பல்லயே வச்சிக்குவேன். அப்போ அவரால எங்கயும் போகமுடியாது, தானே? நம்ம கூடவே இருப்பார்.”

சிறிய தந்தையின் அருகாமையை தேடி ஏங்கிய அவனுக்கு கதை சொல்லி தூங்க வைத்த ருஹானா, இரவு முழுவதும் ஆர்யனுக்கு அழைத்துக்கொண்டே இருக்க, ஆர்யன் அவள் அழைப்பை ஏற்கவேயில்லை.

———-

சிவந்த கண்களில் கண்ணீர் தளும்ப, விடிந்தபின்னும் அதே இடத்தில் நகராமல் தலை தொய்ந்து அமர்ந்திருந்தான் ஆர்யன்.

வாசலில் நிழலாட “நீ ஏன் இங்க வந்தே?” என்றான்.

பதில் சொல்லாமல் அவன் அருகில் வந்து அமர்ந்த ருஹானா, கைப்பையிலிருந்து இவான் தந்த கப்பலை எடுத்து ஆர்யனிடம் காட்டினாள்.

“இவான் காகிதக்கப்பல் செய்ய கத்துக்கிட்டான். அவன் செய்த முதல் கப்பல் இது. இது யாருக்காக செய்திருக்கான், தெரியுமா? உங்களுக்காக. கப்பலை சுற்றி தான் இவானோட எதிர்கால திட்டங்கள். அதுல யார் இருக்காங்க தெரியுமா? அவன் வருங்காலம் முழுதும் நீங்க தான்!”

ஆர்யனின் கண்ணீர் கன்னங்களில் வழிந்தோடியது.

“உங்க கிட்டே இருந்து அவன் எல்லாத்தையும் கத்துக்க விரும்பறான். கார் ஓட்டறதுல இருந்து கப்பல் செலுத்துறது வரை நீங்க தான் சொல்லிக்கொடுக்கணும்னு சொல்றான். அவனோட கனவு எல்லாம் நீங்க தான்.”

ஆர்யனுக்கு தொண்டை அடைத்தது. பெரிய மூச்சுக்களை எடுத்து விட்டான்.

“நாம அவனை கைவிட மாட்டோம்னு அவன் நம்புறான். நாம எப்பவும் அவன்கூட இருப்போம்னு அவன் உறுதியா இருக்கான். உங்களுக்கு நம்பிக்கை இல்லனாலும் அவனோட நம்பிக்கையை காப்பாத்த நீங்க எழுந்து வாங்க!”

“நீ போ! இங்கிருந்து போ!”

“நீங்க இல்லாம நான் எங்கயும் போகல!”

“நான் உன்னை போக சொன்னேன்!”

“போக மாட்டேன். ஏன்னா எங்களுக்கு நீங்க தேவை” என்ற ருஹானா மேலும் பேசிக்கொண்டே போனாள்.

———–

“அக்கா! ஆர்யனும் மாளிகைல இல்ல. சூனியக்காரியும் இல்ல. அவ என்கிட்டே திமிரா வேற பேசுறா. என்னவோ நடக்குது.”

“ஆமா சல்மா! இவானை பற்றி ஏதோன்னு நினைக்கறேன். நீ கவலைப்படாதே! அவங்க எப்படியும் ஒன்னு சேர மாட்டாங்க. இவானுக்காக சண்டையை தள்ளி வச்சிருப்பாங்க. என்னென்னு கண்டுபிடிக்கிறேன்.”

———

Advertisement