Advertisement

மருத்துவர் வெளியே வரவும் இருவரும் அவரிடம் விரைந்தனர். “அவன் தானாவே கண்ணு முழிச்சிட்டான். சில பரிசோதனைகள் எடுக்கணும். முடிவு வந்ததும் தான் என்னன்னு சொல்ல முடியும். இப்போ சந்தேகமா தான் இருக்கு.”

“என்ன சந்தேகம் டாக்டர்? தெளிவா சொல்லுங்க.”

“பரிசோதனை முடிவுகள் வரட்டும், பார்த்துடலாம். டெஸ்ட் எடுத்ததும் நீங்க பையனை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்” என்று மருத்துவர் செல்ல, “என்ன டாக்டர் இப்படி சொல்றார்? அப்போ இது சாதாரண மயக்கம் இல்லயா?” என ருஹானா பயப்பட, “அதெல்லாம் ஒன்னும் இருக்காது” என ஆர்யன் அவளுக்கு துணிவூட்டினான்.

———-

“சித்தி! சித்தப்பா!” கட்டிலில் அமர்ந்திருந்த இவான் இவர்களை பார்த்ததும் சிரித்தான்.

“உனக்கு வலி ஒன்னும் இல்லயே?” அழுகையை அடக்கிக்கொண்டு ருஹானா கேட்க, அவன் இல்லையென தலையாட்டினான்.

“சித்தி! நான் ஒரு கனவு கண்டேன். இளவரசி ஒரு விமானத்துல பயணம் செய்றாங்க. அதோட இறக்கை உடைஞ்சிடுது. அசுரன் தன் கையால விமானத்தை தாங்கி பிடிச்சி காப்பாத்துறான். நான் அசுரனை பார்த்து பயப்படவே இல்ல, சித்தப்பா!”

“வெல்டன், அக்னிசிறகே! நீ தைரியசாலி!”

“நான் மயங்கி விழுந்திட்டேனா, சித்தி?”

“இது தூங்கி எழுந்துக்கற மாதிரி தான், அன்பே!”

“அப்படித்தான் டாக்டரும் சொன்னாங்க. அப்போ தான் எனக்கு கனவு வந்திருக்கு. சித்தப்பா! இங்க தங்கணுமா?” என்று இவான் கேட்க, “இல்ல சிங்கப்பையா! நாம மூணு பேரும்…. சேர்ந்தே வீட்டுக்கு போகலாம்” என்று ஆர்யன் சொல்ல, ருஹானா அவனை கூர்ந்து பார்த்தாள்.

——–

ஜாஃபரிடமும் கரீமாவிடமும் இவானுக்கு உடம்பு சரியில்லை என்பது அம்ஜத் உள்ளிட்ட யாருக்கும் தெரியக்கூடாது என ஆர்யன் அறிவுறுத்த, அவர்களும் சரியென்றனர்.

இவான் அறைக்கு ஆர்யன் செல்ல, அங்கே இவான் ருஹானாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான். “நான் கொஞ்சம் பயந்திட்டேன். அப்புறம் உங்களை பார்த்ததும் சரியாகிட்டேன்” என்று அவன் சொல்ல, இருவரும் மனம் கலங்கினர்.

மரவிமானத்தை கையில் எடுத்த ருஹானா “இது சாதாரணம் தான் கண்ணே! நான் கூட மயங்கி இருக்கேன். நம்ம உடம்பு இந்த விமானம் போல தான். பெட்ரோல் இல்லனா விமானம் பறக்க முடியாது இல்லயா?” என ருஹானா கேட்க, இவான் தலையாட்டினான்.

“நம்ம உடம்பு சரியில்லாம போனா விமானம் போல அது சைகைகள் காட்டும். மூக்கு ஒழுகும், வயிறு வலிக்கும். இப்படி மயக்கம் வரும். அதனால தான் நாம உடம்பை நல்லா பார்த்துக்கணும். நல்லா சாப்பிடணும். சரியான நேரம் தூங்கணும்.” ருஹானா சொல்லியதை கேட்ட இவான் கொட்டாவி விட, ஆர்யன் அவனை படுக்க வைத்தான்.

“நான் தூங்குறவரை இங்க இருப்பீங்களா?” என இருவரையும் பார்த்து இவான் கேட்க, ருஹானா ஆர்யன் முகம் பார்த்தாள். “கண்டிப்பா அக்னிசிறகே!” என்று ஆர்யன் சொல்ல இவானின் இருபக்கமும் அமர்ந்தனர்.

இருவரின் கைகளையும் சேர்த்து தன் மேல் வைத்த இவான் அதை பிடித்துக்கொண்டு கண்களை மூடினான். ருஹானாவின் கண்ணீர் நிற்காமல் வடிய ஆர்யன் அவளை இரக்கத்துடன் பார்த்தான். அழுகையை கைமூடி அவள் அடக்க, ஆர்யன் “நான் இருக்கேன், கவலைப்படாதே!” என்றதும் அவளால் தாள முடியவில்லை.

எழுந்து அவர்கள் அறைக்கு ஓடிவந்தவள் பெரும்சத்தத்துடன் அழுதாள். செல்பேசியை எடுத்து, இவானின் அறிகுறிகள் வைத்து இணையத்தில் தேட, அது அவளை மிகவும் பயமுறுத்தியது. அவள் தேம்பி அழ, உள்ளே வந்த ஆர்யன் “இன்டர்நெட்ல பார்க்கதே! நாளைக்கு டாக்டர்ட்ட இருந்து தெரிஞ்சிக்கலாம்” என்றான். அவளின் அழுகை அவன் ஆழ்மனம் வரை சென்று தாக்கியது.

ஆர்யன் அவளது இரு மோதிரங்களையும் எடுத்து நீட்டினான். அவனை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டே அவற்றை எடுத்த ருஹானா விரல்களில் மாட்டிக்கொண்டாள்.

இவானுக்கு ஆபத்து என்றதும் அவர்கள் சண்டையை மறந்து ஒற்றுமையாக சேர்ந்து நிற்கின்றனர். அவர்களின் வெறுப்பை விட இவான் மேல் அவர்கள் கொண்ட அன்பே மேலோங்கி நிற்கிறது.

——–

மொட்டைமாடியில் நின்று இருளை வெறித்துக்கொண்டு நின்ற ஆர்யனுக்கு இவானின் உடல்நிலை பற்றிய வருத்தமும், நாளைய பரிசோதனை முடிவுகள் பற்றிய கலக்கமும் வாட்டி வதைத்தது. கைமுஷ்டியை மதில் சுவரில் வேகமாக மோதினான்.

விடியல் வரை அங்கேயே நின்றவன் உள்ளே வர, அறையில் ருஹானா இல்லை. இவான் அறைக்கு செல்ல அங்கே அவன் தலையை தடவியபடி அமர்ந்திருந்தாள்.

“எப்படி இருக்கான்?”

“நல்லா தூங்கிட்டான். வேற எந்த பிரச்சனையும் இல்ல.”

“நீ தூங்கவே இல்லயா?” என்று அவன் கேட்க, அவள் பதில் சொல்லும்முன் அவன் கையை பார்த்துவிட்டவள் பதைப்புடன் எழுந்து வந்தாள். “உங்க கை?”

கையை பின்னால் மறைத்த ஆர்யன் “அது ஒன்னுமில்ல. நேரம் ஆகுது, வா, போகலாம்!” என்று நடந்தான்.

“இவானுக்கு நடந்தது எனக்கு நடந்திருக்கலாம்” என்று ருஹானா சொன்னதை கேட்டு திரும்பியவன் “நீ இல்லாம இவான் இருப்பானா? இப்போ தான் நாம தைரியமா இருக்கணும்” என்றான். ருஹானா இல்லாமல் ஆர்யன் இருப்பானா? அதை அவன் உணர்ந்துவிட்டானா?

——–

“என்னால முடியல.” மருத்துவமனை வாசலில் ருஹானா நின்றுவிட்டாள். “வா, நான்  இருக்கேன்ல உன்கூட!” என்று ஆர்யன் அவளை உள்ளே அழைத்துசென்றான்.

மருத்துவரின் அறையில் காத்திருக்கும்போதும் அவள் கலவரத்துடன் கைகளை பிசைய, அவள் கைகளை பற்றி ஆறுதல் சொல்ல ஆர்யனின் கை பரபரத்த போதும் அடக்கிக்கொண்டு “மனசை  அமைதியா வச்சிக்கோ” என்றான். ஆனால் அவன் மனதும் பயந்து நடுங்கிக்கொண்டு தான் இருந்தது.

மருத்துவர் உள்ளே வர “நல்ல முடிவுகள் தானே டாக்டர்?” என ஆர்யன் எழுந்து கொள்ள, “நீங்க உட்காருங்க” என்றவர் “துரதிஷ்டவசமாக ரத்த பரிசோதனைல இவானுக்கு லுகேமியான்னு தெரிய வந்திருக்கு” என்று இருவரையும் பீதியடைய செய்தார்.

“என்ன?” அவர்கள் திக்பிரமையுடன் அசையாமல் இருந்தனர்.

“உங்களுக்கு ஏத்துக்க கஷ்டமா தான் இருக்கும், எனக்கு தெரியும். ஆனா நாம இப்பவே சிகிச்சையை ஆரம்பித்தா 80% குணமாக வாய்ப்பு இருக்கு.”

“ஏதோ தப்பு நடந்திருக்கு. என் அண்ணன் பையனுக்கு இப்படி நடக்க வாய்ப்பு இல்ல. சரியா பாருங்க” என்றவன் அதனை அவனே எடுத்து சரிபார்த்து கலங்கி நிற்க, ருஹானா அழுதபடி வெளியே ஓடிவிட்டாள்.

‘இவான் உன்னோட பொறுப்பு. உன்னை நம்பி தான் அவனை உன்கிட்டே ஒப்படைக்கிறேன்’ என்று தஸ்லீம் மரணப்படுக்கையில் அவளிடம் சொன்னது கண் முன்னே வர, “அல்லாஹ்! இவானை காப்பாத்துங்க. என்னால இதை தாங்க முடியல. அவனை என்கிட்டே இருந்து பிரிச்சிடாதீங்க. எனக்கு அவனை தவிர யாரும் இல்ல” என்று கண்ணீர் விட்டாள்.

சோதனை முடிவுகளை கிழித்துப் போட்ட ஆர்யன் “நான் இதை நம்ப மாட்டேன். வேற டாக்டர்ட்ட கூட்டிட்டு போறேன்” என்று இரைய, அந்த சத்தம் கேட்டு ருஹானா உள்ளே சென்றாள்.

“கண்டிப்பா! பலவித கருத்துக்கள் கேட்டா தான் நல்லது. அப்போ தான் சரியான சிகிச்சை செய்ய முடியும்.” மருத்துவர் அமைதியாக பேசினார்.

“என்ன சிகிச்சையா? எதுக்கு? இவானுக்கு ஒன்னும் இல்ல” என்று அவன் ஒத்துக்கொள்ளாமல் அம்ஜத் போல திரும்ப திரும்ப பேச, ருஹானா “அமைதியாகுங்க. அவங்க சொல்றதை கேட்போம். எனக்கும் நம்ப முடியல தான். ஆனா நாம கடவுளுக்கு பிறகு டாக்டரை தான் நம்பணும்” என்று அவனை சாந்தப்படுத்த பார்த்தாள்.

“வா, போகலாம்” என்று ஆர்யன் வெளியே செல்ல, மருத்துவர் ருஹானாவிடம் “உங்க உணர்வு எனக்கு புரியுது. ஆனா சிகிச்சை தொடங்க தாமதமாக்கிடாதீங்க. சீக்கிரமே ஹாஸ்பிடல்ல அட்மிட் செய்ங்க” என்று சொல்ல, அவள் தலையாட்டிவிட்டு வெளியே வந்தாள்.

———-

ஆர்யனின் கார் உள்ளே வர, இவான் “நான் இப்போ கடல் மேலே பறக்கறேன். பறவைகளை விட உயரமா பறக்கறேன்” என்றபடி விமானத்தை வைத்து வெளியே விளையாடிக்கொண்டு இருந்தான்.

இவர்களை பார்த்ததும் “சித்தப்பா! விமானத்தை நானே சரி செய்திட்டேன்” என்று ஓடிவர, இருவரும் கண்ணீரை துடைத்துக் கொண்டு கீழே இறங்கினர்.

ஆர்யன் மண்டியிட்டு இவானை அணைத்துக்கொள்ள, “என்னை மிஸ் செய்தீங்களா, சித்தப்பா?” என்று இவான் கேட்க, ஆர்யனுக்கு பயங்கரமான கற்பனை தோன்ற, அவன் கண்களை மூடிக்கொண்டு இவானை இறுக்கி கட்டிக்கொண்டான்.

(தொடரும்)

Advertisement