Advertisement

ருஹானாவை காரில் அமர வைத்து தண்ணீரை கொடுத்த ஆர்யன் “இதை குடி” என்றான். அவள் குடித்ததும் இரு மோதிர விரல்களிலும் இருந்த இரத்த காயத்தை அவன் கழுவ முற்பட, “இது ஒன்னும் முக்கியமில்ல” என்று அவள் கைகளை இழுத்துக் கொண்டாள்.

ஆத்திரமான ஆர்யன் “வேற எது தான் முக்கியம் உனக்கு? நான் வரலனா என்ன ஆகியிருக்கும்? அவன் உன்னை எதாவது செய்திருந்தான்னா? உனக்கு மூளை கெட்டு போச்சா? இங்க எதுக்கு வந்தே?” என்று கேட்டான். அவள் பேந்த பேந்த விழிக்க, அவள் காயங்களை கழுவியவன் “வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” என்று காரை எடுத்தான்.

———

முகம் இறுகி மாளிகைக்குள் வந்தவர்களை பார்த்து ‘அடுத்த சூறாவளி வீசப்போகிறது’ என சகோதரிகள் மகிழ, வேகமாக அறைக்கு வந்த ஆர்யன் கதவை பூட்டிவிட்டு விசாரணையை துவங்கினான்.

“நீ எதுக்கு அந்த சேரிக்கு போனே? ஏமாத்துறவங்களும் போதையை தேடுறவங்களும் தான் அங்க போவாங்க? உனக்கு போதை பழக்கம் இல்ல. வேற எதுக்கு அங்க போனே? நான் வரலனா செத்திருப்பே! உயிரை பணயம் வச்சி அங்க போக வேண்டிய அவசியம் என்ன? சொல்லு!”

அவனின் காட்டுக்கத்தலுக்கு கண்ணை மூடிக்கொண்ட ருஹானா கவுனின் பையிலிருந்த இவானின் சங்கிலியை எடுத்து கையில் இறுக்கி பிடித்துக்கொண்டாள். “நீங்க எதுக்கு அங்க வந்தீங்க? என்னை தொடர்ந்து வந்தீங்களா? நானே தப்பிச்சி இருப்பேன். உங்க உதவி எனக்கு தேவை இல்ல” என மனசாட்சியை அடக்கி, அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் பேச்சை திசை திருப்பி விட்டாள்.

அவள் கையை பிடித்து காயத்தை காட்டியவன் “ஆமா, கண்டிப்பா உன்னை நீயே காப்பாத்தி இருப்பே” என இகழ்ச்சியாக சொன்னவன் அவள் கையை படக்கென்று கீழே விட்டு “இப்போ பேச்சை மாத்தாம உண்மையை சொல்லு. எதுக்கு அங்க போனே?” என்று கேட்டான்.

அவள் தலைகுனிந்து மௌனம் சாதிக்க, “சரி, நீ சொல்ல வேணாம். நானே கண்டுபிடிக்கிறேன்” என்று அவன் சொல்ல, அவள் பயந்து விழிவிரித்து அவனை பார்த்தாள்.

“இனிமேல் என்னை கேட்காம, என்கிட்டே காரணம் சொல்லாம நீ எங்கயும் போகக்கூடாது. அப்பவும் என்னோட ஆட்களோட தான் வெளிய போகணும். புரியுதா?” என இரைந்தவன் கதவை திறந்து வெளியே சென்றான்.

உடனே ருஹானா ஷதாப்கானின் அறிமுக அட்டையை எடுத்து அதிலிருந்த எண்ணிற்கு “நான் ருஹானா. இது தான் என்னுடைய தொலைபேசி எண். உங்க தகவலுக்காக காத்து இருக்கேன்” என்று செய்தி அனுப்பிவிட்டு அந்த அட்டையை கிழித்துப்போட்டாள்.

——–

பின்பக்க தோட்டத்தில் நின்ற ஆர்யன் கையில் வைத்திருந்த ருஹானாவின் மோதிரத்தை பார்த்தபடி “சரியான நேரத்துக்கு நான் போகலனா என்ன ஆகியிருக்கும்?” என கேட்டுக்கொண்டான். அந்த காட்சியை அவனால் கற்பனை செய்ய முடியவில்லை.

படுக்கையறை சோபாவில் அமர்ந்திருந்த ருஹானாவும் இதையே தான் கேட்டாள், தங்களது திருமண புகைப்படத்தை பார்த்தபடி. அவன் பால் சாயத்தொடங்கிய மனதை கட்டுப்படுத்தியவள் “உனக்கு என்ன பைத்தியமா? அவன் உன்னோட எதிரி. இந்த காயமே சாட்சி, உன்னோட திருமண முறிவுக்கு” என்று தன் விரல் காயத்தை தடவியபடி உறுதிப்படுத்திக்கொண்டாள்.

அதற்குள் தெளிந்திருந்த ஆர்யன் “இந்த மோதிரத்துக்கு நீ தகுதி இல்ல” என்று வெறுப்பாக சொன்னவன், அண்ணன் அங்கே வரவும் முகபாவத்தை இயல்பாக மாற்றிக்கொண்டான்.

“ஆர்யன்! அங்க பாரு! நீயும் ருஹானாவும் நட்ட செடி எப்படி வளர்ந்திருக்கு?” என்று காட்டிய அம்ஜத் “நல்ல சீதோஷ்ணம் இப்போ. ருஹானாவோட சேர்ந்து இங்க உட்கார்ந்து காபி குடியேன். ரெண்டுபேரும் மனசு விட்டு பேசுங்க. நான் ஜாபரை கொண்டு வர சொல்றேன்” என்றவன் ஆர்யன் மறுக்கும்முன் உள்ளே சென்றுவிட்டான்.

——–

பின்வாசல் தோட்டத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த ஆர்யன், எதிரே ருஹானா வந்து அமரவும் “காபி குடிச்சதும் இங்க இருந்து போய்டு” என்றான் கடுமையாக.

“நான் அம்ஜத் அண்ணாக்காக வந்தேன். எனக்கு ஒன்னும் இங்க இருக்க விருப்பம் இல்ல. கவலைப்படாதீங்க” என்றாள் ருஹானா, அவனை விட எரிச்சலாக.

ஜாஃபருடன் வந்த அம்ஜத் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை சற்று தொலைவிலேயே பார்த்துவிட்டு “ரெண்டுபேரும் எத்தனை அன்பா இருக்காங்கல? நான் தான் தேவையில்லாம கவலைப்பட்டுட்டேன்” என்று சொல்ல, எல்லாம் தெரிந்த ஜாஃபர் “ஆமா, அம்ஜத் சார்!” என்றான்.

ஜாஃபர் காபியை மேசையில் வைத்துவிட்டு உள்ளே செல்ல, அம்ஜத் அங்கிருந்த செடிகளை பார்வையிட ஆரம்பித்தான்.

அண்ணனுக்காக ருஹானாவுடன் பேச விழைந்த ஆர்யன், காபி கோப்பையை கையில் எடுத்துக்கொண்டு “யார் கூட சேர்ந்து காபி குடிக்கிறோமே அவங்களை பொறுத்தது தான் காபியோட சுவை அமையும்” என்றான்.

ருஹானா ஆர்வமாக கேட்பது போல காபி குடிக்க, இவர்களுக்கு இதமான சூழலை அமைத்துக்கொடுத்ததை எண்ணி அம்ஜத் தன்னை தானே பாராட்டி சிரித்துக்கொண்டான்.

“ஒரு தடவை ஒரு வியாபார தோழனோட காபி குடிக்கும்போது அது விஷம் போல கசப்பா இருந்தது. அவன் துரோகம் செய்றான்னு உடனே கண்டுபிடிச்சி அவனுக்கான கடுமையான தண்டனையை கொடுத்தோம்.”

“இப்போ உன் கூட… “ என்று ஆர்யன் சொல்லும்போது ருஹானாவின் செல்பேசி அழைத்தது.

“உன் போன் அடிக்குது, எடு. முக்கியமான செய்தியா இருக்கப் போகுது.” அவள் போன் அதிர்ந்தாலே ஆர்யனின் உடலும் உள்ளமும் பதறுகிறது. “அது நான் பார்த்துக்கறேன்!” என்று அலட்சியமாக சொல்லி எழுந்த ருஹானா, “நன்றி, அம்ஜத் அண்ணா!” என்று உள்ளே சென்றுவிட்டாள்.

“ஆர்யன்! நான் உனக்கு புது லில்லி பூக்களை காட்றேன், வா” என்று அம்ஜத் ஆர்யனை பிடித்து வைத்துக்கொள்ள, ஆர்யனால் ருஹானாவை தொடர முடியவில்லை.

அறைக்குள் வந்த ருஹானா விட்டுப்போனது ஷதாப்கானின் அழைப்பு என தெரிந்ததும் அவனுக்கு அழைப்பு விடுத்தாள். “உங்க அடையாள அட்டை தயாராக ஒரு வாரம் ஆகும்.”

“பரவாயில்ல. ஒரு வாரம் தானே? சரி” என ருஹானா போனை அடைக்க, உள்ளே வந்த ஆர்யன் “யார் கூட பேசுறே? ஒரு வாரத்துல என்ன நடக்கும்?” எனக் கேட்டான்.

“அது உங்களுக்கு தேவை இல்லாதது.”

“இப்போ தானே எனக்கு துரோகம் செய்தவனோட முடிவை பத்தி உனக்கு சொன்னேன். உனக்கு புரியல?”

“ஆமா, நல்லா புரிஞ்சது. நீங்க குணப்படுத்த முடியாத ஒரு முரடன்னு புரியுது” என்றவள் “நீங்க செலுத்துற எல்லா அம்பையும் நான் தாங்கிக்குவேன், இவானுக்காக” என்று சொல்லவும் அவள் கையை பற்றி ஆர்யன் இழுத்தான்.

“அதே இவானுக்காக தான் அந்த அம்புகள் இன்னும் உன் நெஞ்சில பாயாம இருக்கு. இவானுக்காக தான் உன்னை உயிரோட விட்டு வச்சிருக்கேன்” என்று ஆர்யன் சொல்லும்போது இவான் உள்ளே வந்தான்.

“சித்தப்பா! என்னோட விமானத்தோட இறக்கை உடைஞ்சிடுச்சி” என்று அவன் விமானத்தை காட்ட, அவன் மூக்கிலிருந்து ஒரு துளி இரத்தம் அந்த விமானத்தின் மீது விழுந்தது.

இருவரும் அதிர்ச்சியாகி “இவான்!” என நெருங்க, அவன் மயங்கி கீழே சரிந்தான்.

“கண்ணை திற அன்பே! என்னாச்சு?” என ருஹானா நடுங்க, அவனை தூக்கி தோளில் போட்ட ஆர்யன் “வா, ஆஸ்பிடல் போகலாம்” என விரைந்தான்.

———-

“என்ன நடந்தது?” மருத்துவர் விசாரித்தார்.

“மூக்குல இருந்து ரத்தம் வந்தது. திடீர்னு மயங்கி விழுந்துட்டான். உடம்பெல்லாம் தடிப்பா வந்திருக்கு. நேத்து இரவு கூட இதெல்லாம் இல்ல. இப்போ கொஞ்ச நேரம் முன்ன உள்ளங்கை நீல நிறமாகிடுச்சி” என ருஹானா படபடப்பாக விவரித்தாள்.

“சரி, நீங்க அமைதியா இருங்க. என்னன்னு பார்க்கறேன்” என்று அவர் உள்ளே சென்றார்.

“அவனுக்கு ஏதாவது ஆகிடுமா?” என ருஹானா கலவரமாக, ஆர்யன் அவளை ஆறுதல்படுத்தினான். “அதெல்லாம் ஒன்னும் ஆகாது. அவன் வலிமையானவன்.”

இவானின் விமானத்தை கையில் வைத்திருந்த ருஹானா அதை பார்த்து கலங்கினாள். “இது சாதாரண மயக்கம் தானே? ஏன் டாக்டர் வர இவ்வளவு நேரமாகுது. அல்லாஹ்! இவானை காப்பாத்துங்க” என அழுதாள்.

“என்னை பாரு! பொறுமையா இரு! இவானுக்கு சரியாகிடும். கண்ணீரை துடை… இவானுக்காக…” என்ற ஆர்யன் அவள் கையில் தன் கைக்குட்டையை வைத்தான்.

Advertisement