Advertisement

“நாம ஏன் உங்க கல்யாண வீடியோவை இன்னும் பார்க்கல? எனக்கு பார்க்க ஆசையா இருக்கு. எப்போ கேட்டாலும் நீ அப்புறம்னு சொல்றே! இப்போ சேர்ந்து பார்க்கலாமா?”

“நிச்சயமா அம்ஜத் அண்ணா! அவர் வேலைல பிசியா இருந்தார். எங்களுக்கும் பார்க்க ஆசையா தான் இருக்கு” என்று ருஹானா சொல்ல, வேறுவழியின்றி ஆர்யனும் “ஆமா, நாம் ஹால்ல உட்கார்ந்து பார்க்கலாம், வாங்க!” என்று அண்ணனை எழுப்பி அழைத்து சென்றான்.

———-

எதிரே இருந்த பெரிய திரையில் ஆர்யன் ருஹானா நிக்காஹ் வீடியோ ஓடிக் கொண்டிருக்கிறது.

“ஆர்யன்! உன்னை தான் எல்லாரும் அதிசயமா பார்க்கறாங்க. நீ அழகா இருக்கே!”

“என் சித்தி இளவரசியைப் போல இருக்காங்க!”

“இதான் காதல்! நீங்க எத்தனை அழகா நடனம் ஆடினீங்க! ஒரு சினிமா பார்க்கற மாதிரி இருக்கு.”

அம்ஜத் ஆனந்தமாக ரசிக்க, தம்பதிகளுக்கு பலவிதமான உணர்ச்சிக் கலவைகள் மனதில் முட்டி மோதின. பழைய நினைப்புகளும் புதிய கோபங்களும் அவர்களை அலைக்கழித்தன.

“சித்தி! வாங்க, நாம இப்போ ஆடலாம்!” என்று பிடிவாதம் பிடித்த இவான் ருஹானாவுடன் நடனம் ஆடினான். சிறிது நேரத்தில் ருஹானாவின் கையை ஆர்யனிடம் கொடுத்து “சித்தப்பா! இப்போ நீங்க” என்றான்.

இருவரும் விழிக்க, “ஆமா! ஆமா! ஆர்யன்! நீ போ! மறுபடியும் எங்களுக்கு ஆடிக்காட்டு!” என்று அம்ஜத் உற்சாகமாக கைத்தட்ட, ஆர்யனுக்கு யோசிக்கக்கூட அவகாசம் இல்லை.

இவர்கள் இருவரையும் இணைப்பதில் நிறைய பேரின் பங்கு இருக்கிறது. ஏன் சிலசமயம் வில்லிகளின் சதிச்செயலும் கூட தலைகீழாக அமைந்து இவர்கள் நெருங்க காரணமாக இருந்தது. என்றாலும் இவான், அம்ஜத்தின் பங்களிப்பே அனைத்திலும் மேன்மையானது.

ருஹானாவின் கையை முரட்டுத்தனமாக தன் தோளில் எடுத்து போட்ட ஆர்யன் மறுகையையும் அழுத்தி பிடித்தான். அவள் முதுகில் ஒரு கையை வைத்து தன்னோடு சேர்த்தான். இருவரும் இசைக்கு ஏற்ப இயைந்து உடலை அசைக்க, தலையசைத்தபடி இவானும் அம்ஜத்தும் கனிவோடு பார்க்க, கரீமா கடுங்கடுப்போடு பார்த்தாள்.

சத்தம் கேட்டு மேலே இருந்து எட்டிப்பார்த்த சல்மாவிற்கு அவள் கண்களையே நம்ப முடியவில்லை. முகத்தை அஷ்டகோணலாக சுருக்கியவள் வேகமாக இறங்கி ஆடுபவர்களை நோக்கி பாய்ந்து செல்ல, கரீமா ஓடிவந்து அவளை பிடித்துக்கொண்டாள்.

இணைசேர்ந்து பெரும் காதலுடன் கண்ணோடு கண் சேர்த்து திரையில் ஆடும் இருவரும் தங்களை மறந்து லயித்திருக்க, இங்கே வெட்டவா குத்தவா என்பது போல நடனமாடிக்கொண்டிருந்தனர். ஆனாலும் அந்த பனிநெருப்பு நடனத்தை நிறுத்த மனம் வரவில்லை ஆர்யனுக்கு.

ருஹானாவின் அலைபேசி குறுஞ்செய்தி வந்திருக்கிறது என தெரிவிக்க, அது ருஹானாவிற்கு கேட்கும்முன் ஆர்யனுக்கு கேட்டு விட்டது. அவன் ஆட்டத்தின் வேகத்தை குறைக்க, அடுத்த கிளிங் சத்தத்திற்கு நடனத்தை நிறுத்திவிட்டான்.

மேசையில் இருந்த அவளது அலைபேசியை முறைத்து பார்த்தபடி “போதும் அண்ணா! எனக்கு முக்கியமான போன் ஒன்னு பேசணும்” என்று மேலே சென்றுவிட்டான். போனை எடுத்துக்கொண்ட ருஹானாவும் “வா, அன்பே! உன் மத்தியான தூக்கத்துக்கு நேரம் ஆகிடுச்சி” என்று இவானை கைப்பிடித்து கூட்டிச்சென்றாள்.

அவர்களை புன்னகையுடன் பார்த்த அம்ஜத் “கரீமா! நாமும் அழகா ஆடினோம்ல?” என எரியும் தீயில் நெய்யை ஊற்றினான். “ஆமா டியர்!” என்று கரீமா பல்லைக் கடித்தாள்.

———-

இவானை தூங்கவைத்துவிட்டு உடை எடுக்க உள்ளே வந்த ருஹானாவிடம் ஆர்யன் “நான் உன்னை பாராட்டியே ஆகணும். மனிதர்களை ஏமாற்ற தனித்திறமை இருக்கு உன்கிட்டே” என்றான். அண்ணனை அமைதிப்படுத்தியவளை பாராட்டாமல் பழி கூறுபவனை என்ன செய்வது?

“அதுல உங்களோட நான் போட்டி போட முடியாது. உங்க சொந்த லாபத்துக்காக என்னை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிட்டீங்களே! அதுக்கு நிகர் எது?” வலிமையாக திருப்பி கொடுத்துவிட்டு ருஹானா அவனை எதிர்த்து நின்றாள்.

மீண்டும் அவள் கைப்பையிலிருந்து குறுஞ்செய்தி அறிவிப்பு ஒலி வர அவள் வேகமாக வெளியே சென்றுவிட்டாள். மிஷால் தான் செய்தி அனுப்புகிறான் என ஆர்யன் கொதித்து நின்றான்.

ருஹானா மாளிகையின் வாசலை கடக்கும்போது வாகிதாவின் அழைப்பு வர, “ருஹானா! என் செய்திகளுக்கு நீ பதில் அனுப்பல. அதான் கால் செய்தேன்” என்று சொன்ன அவள், ருஹானா இவானுடன் தப்பி செல்லும் திட்டத்தில் எதும் மாற்றம் இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டாள்.

ருஹானா வெளியே செல்கிறாள் என தெரிந்ததும் பிறகு பேசுவதாக சொன்னவள் “நான் உன் சகோதரியை போல. எந்த உதவினாலும் என்கிட்டே நீ கேட்கலாம்” என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள்.

ருஹானா சாலைக்கு வந்து வாடகை வண்டியை அழைக்க இருந்தவள் கைப்பையை திறந்து பணத்தை பார்த்தாள். கணக்கு போட்டு பார்த்தபின் பேருந்து நிலையம் சென்று நின்று கொண்டாள்.

அவள் பேருந்து ஏறும்போது வந்துவிட்ட ஆர்யன் பேருந்தை பின் தொடர்ந்தான். இறங்க வேண்டிய இடத்தில் ருஹானா இறங்கி சிறிய சந்தில் நடக்க, கார் உள்ளே செல்லமுடியாத காரணத்தால் அதை ஓரமாக நிறுத்திவிட்டு ஆர்யன் வருவதற்குள் அவள் மறைந்துவிட்டாள்.

குறுகிய சந்துகளில் அவளை தேடி நடந்தபடி “எங்க போனா? இங்க என்ன செய்றா?” என கேட்டுக்கொண்டான்.

அந்த பகுதியிலிருந்த பாழடைந்த வீடுகளையும் முரட்டு மனிதர்களையும் பார்த்து பயந்தபடி நடந்த ருஹானா கைப்பையை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள். “எல்லாம் இவானுக்காக… நிதானமா இரு” என சொல்லிக் கொண்டாள்.

எதிரே வந்த ஒருவன் யார் என்று கேட்க, அவள் “எனக்கு ஷதாப்கானை பார்க்கணும். அடையாள அட்டை செய்து தர்றவர்” என்று சொல்ல “பணம் வச்சிருக்கியா?” என்று கேட்ட அவன், அவள் ஆமென தலையாட்டவும் ஒரு குடிசை வீட்டிற்கு அழைத்து சென்றான்.

அங்கே இருந்த ஷதாப்கானை அவன் அவளுக்கு அறிமுகம் செய்து வைக்க, “எனக்கு அடையாள அட்டை வேணும், எங்க ரெண்டு பேருக்கும்” என்று இவானுடைய புகைப்படத்துடன் அவளுடைய புகைப்படத்தையும் சேர்த்து கொடுத்தாள்.

“சின்ன பசங்களுக்கு செய்ய முடியாது. குழந்தை கடத்தல் வியாபாரத்துல என்னை மாட்டிவிடப் பார்க்கறியா?”

“இல்ல, இல்ல, நான் அவன் சித்தி. இங்க என்னால இருக்க முடியல. அவனுக்காக தான் புது ஊர்ல புது வாழ்க்கையை தொடங்கப் போறேன். அவனுக்கு அம்மா அப்பா யாரும் கிடையாது. அவனோட கஸ்டடி என்கிட்டே தான் இருக்கு” என்று சொன்னவள், அலைபேசியிலிருந்த சமூக சேவை நிறுவனத்தின் உத்தரவையும் காட்டினாள்.

“1000 தினார் வேணும்.”

“என்கிட்டே 600 தினார் தான் இருக்கு.”

“அதை எடுத்துக்கிட்டு அப்படியே போய்டு.”

“தயவுசெய்து எனக்கு உதவி செய்ங்க. எனக்கு யாரும் ஆதரவு கிடையாது. நான் எப்படியாவது மீதம் தந்துடறேன்.”

“இந்த எண்ணுக்கு செய்தி அனுப்பு. தயாரானதும் சொல்றேன். வந்து அட்டையை வாங்கிக்கோ” என ஒரு அறிமுக அட்டையை கொடுத்தான்.

“சரி, மிக்க நன்றி!” என்று அவள் திரும்பி வெளியே வந்தாள்.

சாக்கடைகளும், குப்பைகளும் நிறைந்த அந்த பகுதியை ஆர்யன் சுற்றி வந்தான். “எங்க தான் போனே நீ? என்ன திருட்டுத்தனம் செய்றே?”

ருஹானாவை வழிமறித்த இருவர் “மரியாதையா உன் பர்ஸ் கொடுத்துடு” என்று மிரட்டினர்.

“யாராவது உதவி செய்ங்களேன்! ப்ளீஸ்!” என்று கத்திக்கொண்டே ஓடிய ருஹானா ஒரு முட்டு சந்தில் மாட்டிக்கொண்டாள். ஒருவன் அவளின் கைப்பையை பிடுங்க, இன்னொருவன் அவளை சுவரோரம் அழுத்தி “உன்னோட மோதிரத்தை கொடு” என முரட்டுத்தனமாக பற்றி இழுத்தான்.

“அவளை விடு!” என்ற சத்தத்தில் மூவரும் திரும்பிப் பார்க்க, அங்கே ஆர்யன் கோபாவேசமாக வந்து கொண்டிருந்தான்.

“நீ யார்டா?” என ஒருவன் அவனை அடிக்கப் போக, ருஹானாவை பிடித்திருந்தவன் அவளை சுவரில் மோதி கீழே தள்ளிவிட்டு ஆர்யன் மீது பாய்ந்தான்.

இருவரையும் ஆர்யன் நையப்புடைத்து அடித்து சில நிமிடங்களில் சாய்க்க, அவர்கள் எடுத்த பொருட்களை போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

எழமுடியாமல் கீழே கிடந்த ருஹானாவின் அருகே வந்தவன் கையை நீட்டினான். அவன் கையை பிடித்துக்கொண்டு மெல்ல எழுந்து நின்றவள் உடனே அவன் கையை விட்டுவிட்டாள்.

தூரத்தில் கீழே கிடந்த மோதிரங்களை மட்டும் கையில் எடுத்த ஆர்யன் “வா” என்றான். ஒரு எட்டு எடுத்து வைத்தவளுக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வர, அவள் மெதுவாக சாய, அவள் கீழே விழும்முன் ஆர்யன் மின்னல்வேகத்தில் ஓடிவந்து அவளை தாங்கிக் கொண்டான்.

அவன் மேல் சாய்ந்து சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்ட ருஹானா “எனக்கு ஒண்ணுமில்லை” என விலகி நின்று சுவரை பிடித்துக் கொண்டாள்.

“இந்நேரம் நீ செத்துருப்பே!” என்றான் ஆர்யன்.

———

Advertisement