Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                 அத்தியாயம் – 124

காதலை பற்றி இளம்யுவதிகள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, ஆர்யன் உள்ளே வந்தான். அவனை பார்த்ததும் மரியாதையாக எழுந்த நஸ்ரியா “நான் போய் என் வேலையை செய்றேன்” என்று வெளியே சென்றுவிட்டாள்.

மிஷாலுடனான தன் காதலை பற்றித்தான் இதுவரை ருஹானா விவரித்துக்கொண்டிருந்தாள் என எண்ணிய ஆர்யன், சோபாவில் இருந்த ருஹானாவின் நோட்டுப் புத்தகம், பேனா எல்லாவற்றையும் கீழே தள்ளிவிட்டான். “உன் பொருட்கள்லாம் ஏன் இங்க வச்சிருக்கே? என் கண்ணுல எதுவும் படக்கூடாது.” வேண்டாத மனைவி கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம் கதை தான்.

“நீங்க எதுக்கு இப்போ கோபப்படுறீங்கன்னு எனக்கு தெரியல. ஆனா நீங்க என்கிட்டே இப்படி பேச முடியாது. அதுக்கான உரிமை உங்களுக்கு இல்ல” என்று ருஹானா நிதானமாக சொல்ல, ஆர்யன் நிதானம் இழந்தான்.

அவளை பிடிக்க அவன் நெருங்க அவள் விலக, இவான் சங்கிலி அறுந்து கீழே விழுந்தது. விக்கித்து நின்ற ருஹானா அதை எடுத்துக்கொண்டு வேகமாக வெளியேறினாள்.

படிக்கட்டில் நின்ற அம்ஜத் அவளை அழைத்துக்கொண்டே பின்னால் வர அவனை கவனிக்காமல் அவள் வாசலை தாண்டி சென்றுவிட்டாள்.

“ருஹானா சரியில்ல!…. அவ சரியில்ல!.. அவ கவலையா இருக்கா!” என அம்ஜத்திற்கு மனபிறழ்வு ஆரம்பித்தது.

———-

“உன்னால எங்க போக முடியும்? நீயும் அர்ஸ்லான் குடும்பம் தானே! நீ எங்க போனாலும் அது உன் அடையாள அட்டையில தெரிஞ்சிடுமே! ஆர்யனும் உன்னை எப்படியும் கண்டுபிடிச்சிடுவார். எல்லா இடமும் அவருக்கு ஆட்கள் இருக்காங்க. எதுனாலும் யோசித்து பொறுமையாக செய்” என்று வாகிதா ருஹானாவிற்கு ஆறுதல் சொல்ல, பர்வீன் அம்மாவை தேடிவந்த ருஹானா வாகிதாவிடம் தன் வேதனைகளை கொட்டித் தீர்த்தாள்.

ருஹானா கிளம்பும்வேளையில் கமிஷனர் வாசிம் வீடு திரும்ப, அவன் ருஹானாவை அர்ஸ்லான் மாளிகையில் விட காரில் அழைத்து வந்தான். அப்போது அவன் போனில் மற்ற காவல் அதிகாரியுடன் பேசியதிலிருந்து போலி அடையாளஅட்டை தயாரிக்கும் ஷதாப்கானை பற்றியும், அவன் வசிக்கும் இடம் பற்றியும் ருஹானா தெரிந்து கொண்டாள்.

அவளுக்கு எந்த தேவை என்றாலும் தன்னை அழைக்கும்படி கூறிய வாசிமுக்கு நன்றி சொல்லி, அவள் அர்ஸ்லான் மாளிகைக்குள் வர, அங்கு இரவு காவல் செய்பவர்களை பார்த்துவிட்டு இவர்களை மீறி எப்படி இவானுடன் தப்பி செல்வது என யோசித்தவாறே வாசல் நோக்கி நடந்தாள்.

ஆர்யனின் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு ஒன்று அவள் காலடியில் வந்து விழ, கோபமானவள் “உங்களோட அம்புகள் என்னை பயமுறுத்தாது” என சொல்லி, அதை ஆர்யனை நோக்கி எறிந்தாள்.

“ஏன்னா நான் இன்னும் உன்னை நோக்கி அம்பு செலுத்தவே இல்ல”என ஆர்யனும் கத்த, கோபமாகவே வீட்டிற்குள் சென்றாள்.

தூங்கும் இவானின் முடியை ஒதுக்கி விட்டவள் “நாம சீக்கிரம் இங்க இருந்து போய்டலாம்” என்றாள்.

படுக்கையறைக்கு வந்த ருஹானா அம்மாவின் படத்தை கையில் எடுத்தவள் “இந்த கூண்டுல எனக்கு சொந்தமானது உங்க போட்டோ மட்டும் தான். இந்த பெரிய மாளிகைல இவான் மட்டும் தான், அம்மா. என்னோட வாரிசு இவானை இந்த புதைகுழில இருந்து காப்பாத்தணும்னா நான் உறுதியா இருக்கணும்” என சூளுரைத்துக் கொண்டாள்.

சோபாவில் அமர்ந்து அலைபேசியில் தங்குவதற்கான வீட்டை தேட ஆரம்பித்தாள். “200, 150… 120 தினார் (ஒரு ஜோர்டான் தினார் = 110 ரூபாய்) தான் குறைவான வாடகை, அதோட உணவு மத்த செலவுகள்..” பெருமூச்சை வெளிப்படுத்தியவளுக்கு சாரா சொன்ன சமையல் வேலை நினைவுக்கு வந்தது. “ரெண்டு வேலையா செய்ய வேண்டியது தான்.”

——-

இரவெல்லாம் ஆர்யன் அம்பை செலுத்திக்கொண்டே இருக்க, ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்த அம்ஜத் “ஆர்யன் கோபமா இருக்கான். அவனோட அமைதி குலைஞ்சிடுச்சி. ருஹானாவும் வருத்தமா இருக்கா. வேணா, ஆர்யன் அம்பு விடாதே! ஆர்யன்! விடாதே” என புலம்ப ஆரம்பித்தான்.

                                        ———-

தூக்கத்திலிருந்து விழித்த ருஹானா அலைபேசியை பார்த்துக்கொண்டே உறங்கிவிட்டதை உணர்ந்தவள் கையிலிருந்த அலைபேசியில் வந்த வாடகை வீட்டிற்கான விளம்பரத்தை பார்த்தாள்.

திடீரென ஆர்யன் உள்ளே வர, அவள் செல்பேசியை பின்னால் கொண்டுபோக “என்ன மறைக்கிற? என்ன திட்டம் போட்டுட்டு இருக்கே? இங்கிருந்து தப்பிச்சி போய்டலாம்னு மட்டும் கனவு காணாதே! உலகத்தோட எந்த ஓட்டையில போய் நீ ஒளிஞ்சிக்கிட்டாலும் நான் உன்னை கண்டுபிடிச்சி அழிச்சிடுவேன். புரியுதா? உன்னையும் உன்னை சேர்ந்தவங்களையும் சேர்த்து அழிச்சிடுவேன்” என்று ஆர்யன் அவள் மனதில் இருக்கும் திட்டத்தை அப்படியே சொல்ல, அவள் பயந்து பின்வாங்க, அவள் கையில் இருப்பதை பார்க்க அவன் முன்னேறினான்.

அப்போது கரீமா உள்ளே ஓடிவந்தாள். “ஆர்யன்! உன் அண்ணனுக்கு மனநிலை பாதிப்பாயிருக்கு. என்னால சமாளிக்க முடியல, ஓடிவா!”

——–

“நாம அவ்வளவு தான்… நாம தொலைந்தோம்.. ஆர்யன் அமைதி போச்சி… ருஹானா அமைதி போச்சி….”

“என்னால மருந்து கொடுக்க முடியல, ஆர்யன். அவரை நிறுத்தவே முடியல.” கரீமா சொல்ல ருஹானாவும் அங்கே வந்து சேர்ந்தாள்.

“ஆர்யன்! அம்பு வீசாதே! ருஹானா சிரிக்க மாட்றா! வேணாம்.. அம்பு வேணாம்! நம்ம அமைதி போகக்கூடாது!”

“அண்ணா! உங்களுக்கு என்ன ஆச்சு? யார் உங்களை துன்புறுத்தினது சொல்லுங்க!” நடந்துக்கொண்டே இருந்த அம்ஜத்தை ஆர்யனாலும் கட்டுப்படுத்த இயலவில்லை.

கண்ணாடி போன்றவன் தமையன்

அன்பை கண்டே அகம் மகிழ்வான்!

புன்னகை தொலைத்தவளையும்

அமைதியற்று அம்பெய்கிறவனையும்

கண்டு தத்தளிக்கிறது பாசமுள்ள இதயம்!

“டாக்டரை வர சொல்லி ஊசி போடலாம் ஆர்யன், நம்மால முடியாது” என கரீமா போனை கையில் எடுத்தாள்.

“எல்லாம் கெட்டுப் போச்சு! அமைதி கெட்டு போச்சி! ருஹானா கவலைப்படுறா” என்று மனம் வருந்தும் அம்ஜத்தை பார்த்து ருஹானா நெகிழ்ந்து போனாள். இப்படி ஒரு பவித்தரமான ஜீவனை அமைதிப்படுத்த வேண்டியது தனது கடமை என நினைத்தாள்.

அம்ஜத்தை நெருங்கி அவன் கைகளை பற்றிக் கொண்டவள் “அம்ஜத் அண்ணா! நான் நல்லா இல்ல, நாங்க நல்லா இல்ல, ஏன்னா நீங்க நல்லா இல்ல. நீங்க சரியானா நாங்க சரியாகிடுவோம்” என்று அவள் அழுத்தமாக சொல்லவும், அம்ஜத் யோசித்தான்.

“நான் சரியானா நீங்க சரியாகிடுவீங்களா?” என அம்ஜத் திரும்பி ஆர்யனை பார்த்து கேட்டான். ஆர்யன் ஆமென தலையாட்ட, அம்ஜத் சற்று நிதானமாக, ஆர்யன் கையிலிருந்த மாத்திரையை வாங்கி ருஹானா அம்ஜத்திற்கு கொடுத்தாள்.

ருஹானா அவனை கனிவாக தட்டிக் கொடுக்க, மாத்திரை சாப்பிட்ட அம்ஜத் மெல்ல அமைதி அடைய, கரீமா வாயை பிளந்து கொண்டு பார்க்க, ஆர்யன் அதிசயத்து பார்த்தான். ருஹானா அம்ஜத்தை படுக்க வைக்க, ஆர்யன் அவன் அருகே அமர்ந்தான். “இப்போ பரவாயில்லயா அண்ணா?”

“ஆர்யன்.. நீ எனக்கு சத்தியம் செய்து கொடுத்துருக்கே! ருஹானாவை கண்கலங்காம பார்த்துக்குவேன்னு சத்தியம் செய்தே! இப்போ என்ன அவளுக்கு மனம் வருத்தம் தந்தியா? அவ மகிழ்வா இல்ல, எனக்கு தெரியும். ஏதோ நடந்திருக்கு. நீ சத்தியத்தை காப்பாத்தல!”

அண்ணனின் சரமாரியான குற்றச்சாட்டில் ஆர்யன் பதில் சொல்ல முடியாமல் திகைக்க, ருஹானா கைகொடுத்தாள். “அம்ஜத் அண்ணா! நீங்க தப்பா புரிஞ்சிருக்கீங்க. ஒன்னுமே இல்லாததுக்கு உங்களை வருத்திக்கிறீங்க.”

அம்ஜத்தின் மறுபுறம் அமர்ந்தவள் அவன் கையை பிடித்துக் கொண்டிருந்த ஆர்யனின் கையின் மேல் தன் கையை வைத்தாள். “பாருங்க! குடும்பமா நம்ம வீட்ல நாம எல்லாரும் சேர்ந்து தான் இருக்கோம்” என்று சொல்ல,  அம்ஜத் முகத்தில் புன்னகை.

“குடும்பம்? ஆமா எல்லாருக்கும் குடும்பம் வேணும். பறவைக்கும் வீடு செய்து கொடுத்தோமே! நாமளும் குடும்பம் தானே ஆர்யன்?” என்று அம்ஜத் பேச, கரீமாவிற்கு எரிச்சலானது. இவன் என்ன பிரிந்தவர்களை சேர்த்து வைத்துவிடுவானோ என்று திகைப்பாக பார்த்தாள்.

“சிலசமயம் இப்படி அப்படி நடக்கும் தான். பிரச்சனை வரும் தான். ஆனா எங்க அன்புல நாங்க உறுதியா தான் இருக்கோம். அப்படித்தானே?” என்று ருஹானா ஆர்யனை பார்த்து கேட்க, அவன் அதிர்ந்தாலும் ஆமென்றான்.

இருவர் கைகளையும் சேர்த்து பிடித்த அம்ஜத் “இப்படியே இருங்க, எப்பவும் இப்படியே இருங்க! உங்க அமைதியை இழந்துடாதீங்க! சரியா ஆர்யன்?” என்று கேட்க, வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் ஆர்யன் சரியென்றான். கரீமாவின் முகம் கர்ணகொடூரமானது.

Advertisement