Advertisement

“மகிழ்ச்சி! இன்ஷா அல்லாஹ் அவ நல்லா படிக்கட்டும்” என ருஹானா சொல்ல, “இன்ஷா அல்லாஹ்!” என்ற சாரா சமையலறைக்கு சென்றுவிட்டார். ‘ஓ! நீ நினைக்கிற காரியத்தை இப்படி நடத்திக்கிறியா?’ என ஆர்யன் பார்க்க, ஆம் என கண்ணால் பதில் சொன்னாள், ருஹானா

“இவான் செல்லம்! எல்லாத்தையும் சாப்பிடு. அப்போ தான் உன் சித்தப்பா போல வலிமையா வளர முடியும்” என இவானை சாப்பிட வைத்தவளின் குரலை தவிர அந்த உணவுமேசையில் வேறு யாரின் குரலும் ஒலிக்கவில்லை. அமைதியாக சாப்பிட்டனர்.

“திருமண வீடியோ வந்துடுச்சி, ஆர்யன் சார்!” என்று ஜாஃபர் கொண்டுவந்து தர, அம்ஜத் “சூப்பர்! ஆர்யன், ஆர்யன்! நாம அதை சேர்ந்து பார்க்கலாமா?” என ஆவலோடு கேட்டான்.

“இப்போ இல்ல, அண்ணா! நாங்க இவானுக்கு நேரம் கொடுத்திருக்கோம்” என்று சொல்ல, “ஆமா, பெரியப்பா! இன்னைக்கு சித்தியும் சித்தப்பாவும் என்கூட தான் இருக்கப் போறாங்க. அப்படித்தானே சித்தி?” என சிரிப்போடு கேட்க, சுருங்கிய அம்ஜத்தின் முகம் பெரிதாக மலர்ந்தது.

“ஆமா அன்பே!” என்று ருஹானா சொல்லி எழ, “வா, சிங்கப்பையா! புதிர் விளையாட்டுல உன்னோட சித்தி என்னைவிட வேகமாக இருக்காங்களான்னு பார்க்கலாம்” என்று ஆர்யன் எழுந்து கொள்ள, இவான் இருவரின் கையையும் பற்றிக்கொண்டு கூட்டிச் சென்றான்.

“அங்கே பாரேன், கரீமா! மாஷா அல்லாஹ்! எவ்வளவு அழகா இருக்கு, மூணு பேரும் சேர்ந்து போறது! ஆஹா!” என ரசித்த அம்ஜத், “சல்மா! கொஞ்சம் எட்டி பாரேன்!’ என்று அவளின் வயிற்றெரிச்சலையும் அதிகப்படுத்தினான்.

———-

இவானோடு புதிர் விளையாட்டில் படத்துண்டுகளை சேர்த்துக்கொண்டிருந்தனர், இருவரும் முறைத்துக்கொண்டும், அதை இவானிடமிருந்து மறைத்துக்கொண்டும்.

ருஹானா ஆர்யனை கண்டுகொள்ளவே இல்லை. ஆர்யனோ அவளை கோபமாக பார்க்கிறேன் என்று அவள்புறமே பார்வையை வைத்திருந்தான்.

புதிர் படத்தை முடிக்கும்வேளையில் நடுவில் இருந்த இரண்டு துண்டுகளை மட்டும் காணவில்லை. “தேடுங்க சித்தி, இங்க தான் இருக்கும். விளையாட்டை முடிக்கணுமே!”

எல்லா இடமும் பார்த்த ருஹானா “இங்க இல்லயே!” என்றபடி தேட, ஆர்யன் “தேட வேண்டிய அவசியம் இல்லன்னு நினைக்கறேன். யாரோ ஒளிச்சி வச்சிருக்காங்க” என்றபடி இவானின் கால்சட்டை பையிலிருந்து அவற்றை எடுத்தான்.

“ஸாரி! சித்தப்பா!”

“ஏன் தேனே அப்படி செய்தே?”

“எனக்கு இந்த கேம் சீக்கிரம் முடிய வேண்டாம். இது முடிந்தா நீங்க ரெண்டு பேரும் என்னை விட்டு போய்டுவீங்க” என்று தலையை குனிந்துகொண்டு இவான் சொல்ல, பெரியவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டனர்.

“சிங்கப்பையா! இப்போலாம் நாங்க உன்கூட நேரம் செலவழிக்கல தான். ஆனா அதுக்காக நீ இப்படி செய்யலாமா? நேர்மை பற்றி நான் உனக்கு சொல்லியிருக்கேன் தானே? நேர்மையை எதுக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாதே!”

“ஆமா சித்தப்பா! இனி நாம் எப்பவும் நேர்மையா இருப்பேன்! சத்தியமா!”

———-

“என்ன அப்படி ஒரு பார்வை, நான் பேசும்போது?” படுக்கையறைக்குள் நுழைந்த ருஹானாவின் பின்னால் வந்த ஆர்யன் கேட்டான்.

“நேர்மையை பற்றி சொற்பொழிவு செய்தீங்களே! உங்க செய்கைக்கும் பேச்சுக்கும் ஒத்துவரலயேன்னு பார்த்தேன்.”

ஆர்யனின் கோபம் தலைக்கு ஏறி அவளை பிடித்து சுவரோடு அழுத்தினான். “என்ன சொல்றே நீ?”

“நீங்களே சொன்னீங்க, என்னை ஏமாத்தி தோற்கடித்தீங்கன்னு. நீங்க எப்படி நேர்மைன்ற வார்த்தையை பயன்படுத்தலாம்?”

“நீ…” அத்தனை நெருக்கத்தில் அவள் கண்களும், யௌவனமும் அவன் மனதை கொள்ளை கொள்ள, அவனுக்கு வார்த்தை மறந்து போனது.

“நான்.. என்ன..”

“ஒழுங்கா நடந்துக்கோ, கவனம்!” அவளை உதறிவிட்டான்.

“ஆமா, ஆமா! நான் கவனமா தான் இருக்கணும். ஏன்னா என் பகைவனோட ஒரே வீட்டுல ஒரே அறையில வசிக்கிறேனே!”

அவளின் பகைவன் என்ற விளி அவன் மனதை தைத்தது.

———-

ருஹானா கீழே வர சல்மா எதிரே வந்தாள். சலிப்பாக அவளை நோக்கிய ருஹானாவை பார்த்து சல்மா வம்பு வளர்த்தாள்.

“என்ன திமிரா பார்க்கறே? உன் திட்டத்தை மாத்திக்கிட்டியா? அழுமூஞ்சி ருஹானா போய் ராங்கிக்காரி வந்திருக்கா? நீ இவானை மட்டும் தான் ஏமாத்த முடியும். வேற யாரையும் உன் நடிப்பை நம்ப வைக்கமுடியாது. என்ன ஆனந்தகுடும்பம்னு படம் ஓட்றியா?”

ருஹானாவின் அருகே வந்து தன் அலைபேசியிலிருந்த போட்டோவை காட்டிய சல்மா, “உண்மையான ஆனந்த குடும்பம் எதுன்னு பார்க்கறியா? இது நிஜமானது” என்றாள், புன்னகையோடு.

“இதுவா நிஜம்? அது எதுவுமே உன்னோடது இல்ல. இந்த வீட்டுல உனக்கு எந்த உரிமையும் இல்ல. ஒரு சின்ன குழந்தையோட அவசரம் தெரியாம போட்டோக்கு போஸ் கொடுத்துட்டு இருக்கே! நீயெல்லாம் என்கிட்டே பேச வந்துட்டே!” என்று விட்டு ருஹானா வெளியே செல்ல, சல்மா முகத்தில் சிரிப்பு மறைந்து கடுப்பானது.

———-

“என்ன சொல்றீங்க? ஒரு வருடம் முடியும்முன்ன விவாகரத்து வாங்கினா இவானோட உரிமையை நான் இழக்கணுமா? சரியாத்தான் சொல்றீங்களா?” கலக்கத்துடன் ருஹானா கேட்டாள் எதிரே இருந்த வழக்கறிஞரிடம்.

“ஆமா, மிசஸ் ருஹானா! ஒரு வருடம் போன பின்னாலும் நீங்க கேஸ் போடணும்னா உங்களோட நிதிநிலை பையனை வளர்க்க போதுமானதா இருக்கணும். அதை மறந்திடாதீங்க” என்று அவர் மேலும் அவளை அதிர்ச்சியாக்கினார்.

“இதைத் தவிர வேற வழியே இல்லயா?” என ருஹானா நிராசையோடு கேட்க, அவர் தலையாட்டி மறுத்தார்.

ருஹானா ஏமாற்றத்தோடு திரும்ப, ஆர்யனுக்கும் ஏமாற்றம் தான். ருஹானாவை தவறவிட்ட ஆர்யன் மிஷாலின் உணவகத்தின் வாசலில் காத்துக்கிடந்தவன் அவள் அங்கே வந்த சுவடு தெரியாமல் குழம்பி திரும்பினான்.

———-

“சல்மா! அவ என்னனாலும் பேசிட்டு போகட்டும், நீ அவளை விடு! அவ முடிந்த கதை! இவான் சமையலறையில இருக்கான், அவனை நீ பாரு! அவனுக்கு நீ தான் சிறந்த தாய்னு ஆர்யனுக்கு காட்டு.”

“நீ சொல்றது சரி தான், அக்கா!” என்று சமையலறைக்கு சென்ற சல்மா இவானுக்கு லெமன் குக்கீஸ் செய்து தருவதாக சொன்னாள். கூட இருந்த சாரா உதவுவதாக கூற, தேவையான பொருட்களை மட்டும் எடுத்து வைத்துவிட்டு செல்லுமாறு சல்மா கட்டளையிட அவரும் அதன்படியே சென்றுவிட்டார்.

———–

ருஹானாவை தேடி அகாபா நகரத்தை சுற்றிவந்த ஆர்யன் ஒரு சாலையின் சந்திப்பில் அவளை பார்த்துவிட்டான்.

காரைவிட்டு இறங்கி அவள் முன்னால் போய் நின்றவன் “எங்க போனே நீ? என்ன செய்றே?” என்றான். அவள் பதில் சொல்லாமல் முறைக்க “நான் ஒரு கேள்வி கேட்டேன்” என பதிலுக்கு வற்புறுத்தினான். “கேட்டுச்சி” என இளக்காரமாக சொன்ன ருஹானா அவனிடம் ஒரு காகிதத்தை நீட்டினாள்.

“இவான் பேர்ல இருக்கற பங்குகளுக்கு மீதான என்னோட உரிமையை திருப்பி தர்ற பத்திரம் இது” என்று சொல்லி ஒரு கட்டு பணத்தையும் அவன் கையில் திணித்தாள். “இது என் வங்கி கணக்குல நீங்க போட்ட பணம். உங்க ஒரு காசு கூட எனக்கு வேணாம்” என்று சொல்லி நடந்துவிட்டாள்.

“ஆக அவன் கிட்ட இருந்த என் பணத்தை வாங்கி எனக்கு திருப்பி கொடுக்கறீயா? என்னோட நம்பிக்கையை திரும்ப பெற இதான் நீங்க ரெண்டு பேரும் பேசி புதுசா போட்ட திட்டமா?” ஏமாற்றி பணம் பிடுங்கியிருந்தாலும் ஆர்யனுக்கு அக்கறை இல்லை, ருஹானா மிஷாலின் உறவே அவனை வெறிகொள்ள வைக்கிறது.

பாவம் ருஹானா! அவள் கணக்கிலிருந்து மிஷால் பணம் எடுத்ததும் அவளுக்கு தெரியாது, திரும்ப போட்டதும் தெரியாது.

———–

“இங்க போர் எதும் நடந்ததா?” என்று சமையலறை உள்ளே நுழைந்த ருஹானா அதிர்ச்சியாக கேட்க, குளிர்சாதன பெட்டியை திறந்து கொண்டிருந்த சல்மா “நாங்க லெமன் குக்கீஸ் செய்றோம்” என்று பெருமையாக சொன்னாள்.

ஓவனில் இருந்து கருகிய வாசம் வர, சாரா ஓடிசென்று அதை எடுத்தார். கன்னங்கரேல் என்று இருந்த குக்கீசை பார்த்து சல்மாவின் விழி பிதுங்க, சாரா கீழே குனிந்து சிரிப்பை அடக்கிக் கொண்டார்.

ருஹானா எதுவும் சொல்லாமல் இவானின் அருகே செல்ல, “சித்தி! நீங்க எனக்கு செய்து தர்றீங்களா?” என்று ஆவலோடு அவன் கேட்க, “கண்டிப்பா, செல்லம்!” என்ற ருஹானா சல்மாவிடம் “உனக்கு விருப்பம் இருந்தா நான் செய்றது பார்த்து கத்துக்கோ” என்றாள்.

“எனக்கு ஒன்னும் அவசியம் இல்ல” என்று அலட்சியமாக சொன்ன சல்மா எரிச்சலோடு வெளியே சென்றுவிட்டாள்.

“சமையல் ஒரு கலை! நீ பிறவிலயே அதுல நிபுணி!” என்று சாரா பாராட்ட, “என்னோட சித்தி தான் உலகத்துலேயே சிறந்த குக்” என்று இவான் பெருமையாக சொல்ல, ருஹானா முகத்தில் பெருமிதம்.

“சந்தேகமே வேண்டாம் லிட்டில் சார்” என்ற சாரா பேசிக்கொண்டே களேபரமாக கிடந்த சமையலறையை சுத்தம் செய்தார். “என்னோட கசின் ஒருத்தி உன்னைப் போல தான் நல்லா சமைப்பா, ருஹானா! அது தான் அவளுக்கு வாழ்க்கை அமைக்க கை கொடுத்தது. அவளோட கணவனை விட்டு பிரிஞ்சதும் சமையல் செஞ்சே ரெண்டு பசங்களை வளர்த்திட்டா.”

“அதுக்கு முன்னாடி அவங்க வேலை செய்யலயா?”

“இல்ல, அவ புருஷன் அனுமதிக்கல. ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் அப்புறம் அவளே சொந்த ஹோட்டல் தொடங்கிட்டா. அல்லாஹ் கருணையால இப்போ நல்ல பணவசதியோட இருக்கா. அதான் சொல்றேன், இதெல்லாம் அல்லாஹ் கொடுத்த வரம். உனக்கும் கிடைச்சிருக்கு” என்று சாரா சொன்னதை கேட்ட ருஹானாவின் முகத்தில் நம்பிக்கை ரேகைகள் விரிய, வெகு நாட்களுக்கு பின்னர் அவள் முகம் புன்னகை பூத்தது.

———-

சோபாவில் அமர்ந்து ருஹானா அலைபேசியில் சமையல் தொடர்பான வேலைகளை தேடிக்கொண்டிருக்க, நஸ்ரியா அறையின் கதவை தட்டி உள்ளே நுழைந்தாள். “ருஹானா! எனக்கு உன்னோட அறிவுரை வேணுமே!”

ருஹானா அவளை அமர சொல்ல, அவளது கல்விக்கு அனுமதி வாங்கி தந்தவளுக்கு நன்றி சொன்ன நஸ்ரியா எதிரே அமர்ந்தாள். “வந்து… உனக்கு தான் அந்த அனுபவம் இருக்கே! காதல்ல இருக்கறது எப்படி இருக்கும்? சொல்லேன்!”

“நீ யாரையாவது காதலிக்கிறியா?” புன்னகையும் வருத்தமும் ஒரே சேர வந்தது ருஹானாவின் முகத்தில்.

“எனக்கே சரியா புரியல. அதான் உன் கிட்டே கேட்கறேன்.”

எப்போதும் போல ஆர்யன் திறந்திருந்த கதவருகே காதை தீட்டிக்கொண்டு நின்றான்.

“காதல் உன்னோட ஒவ்வொரு மூச்சு காத்துலயும் கலந்து இருக்கும். நீ எந்த வேலை செய்தாலும் உனக்குள்ளேயே அது எப்பவும் ஓடிட்டே இருக்கும். உன்னோட நினைவுகள்ல இருந்து நீ அவரை தூக்கி போடணும்னு நினைச்சாலும் உன்னால முடியாது. அவர் எவ்வளவு தூரத்துல இருந்தாலும் உனக்கு நெருக்கத்துல தான் இருக்கறது போல தோணும்.”

குட்டையாய் குழம்பிக் கிடந்த ஆர்யனுக்கு மிஷாலும் ருஹானாவும் அணைத்திருந்த புகைப்படம் தான் கண்ணுக்கு தெரிந்தது.

“நம்பிக்கை தான் காதல். எது நடந்தாலும் உனக்காக இருப்பார்ன்ற நம்பிக்கை!” என்று ருஹானா சொல்ல, ஆர்யன் முகம் இறுகியது.

“காதல் கடைசிவரை நிலைக்கும்னு நீ நம்புறியா, ருஹானா? இல்ல காலமாற்றத்துல மறைந்திடுமா?”

“நீ சரியான துணையை தேர்ந்தெடுத்தா, காதல் என்னென்னைக்கும் நிலைத்து இருக்கும். ஆனா நீ தவறான நபரை நம்பிட்டா, அங்க காதல் இருக்காது, உன் வாழ்க்கையில பெரிய பிரச்சனை தான் பூதாகரமாக நிற்கும்.”

(தொடரும்)

Advertisement