Advertisement

கதவின் பூட்டை திறக்க எதை எதையோ வைத்து முயற்சி செய்த ருஹானா அவள் முயற்சிகள் பலனளிக்காமல் சோர்ந்து போனாள். அவளுக்கு ஜாஃபரின் நினைவு வந்து போனை எடுக்க, அதற்குள் கதவை திறந்துகொண்டு ஆர்யன் உள்ளே வந்தான்.

அவள் கையை பற்றி “என்னை மிரட்ட உனக்கு எங்கிருந்து வந்தது தைரியம்?” என அவன் உறும, அவன் கையை தூசியை போல தள்ளிவிட்டவள் அவனை இடித்துக்கொண்டு வெளியே ஓடினாள்.

சில வினாடிகள் திகைத்து நின்றுவிட்ட ஆர்யன் அவள் பின்னே செல்ல, அவள் அதற்குள் பாய்ந்து இவான் அறைக்கு சென்று அவனை அணைத்துக் கொண்டாள்.

கோபமாக வந்த ஆர்யன் இவானின் தேம்பலில் அதிர்ந்து நின்றுவிட்டான்.

காலைக் கட்டிக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்த இவான் ருஹானாவிற்கு கால்சட்டையை காட்ட, ருஹானா அவனை தேற்றினாள். ஆர்யனுக்கும் இவானின் நிலைமை புரிந்து தன்னையே நொந்து கொண்டான்.

“இது ஒண்ணுமில்ல, கண்ணே! நீ அழாதே!”

“நீங்க என்மேல இனி அன்பா இருக்க மாட்டீங்களா சித்தி?”

“ஏன் இப்படி பேசுறே, பேபி? நான் உன்னை ரொம்ப நேசிக்கறேன். இந்த உலகத்துல எல்லாத்தையும் விட, யாரையும் விட.”

ஆர்யனின் இதயம் சுருங்கியது.

“ஆனா நீங்க ஏன் என்கூட இல்ல?”

“என்னை மன்னிச்சிடு ஆருயிரே! ஆனா இந்த நிமிடத்தில இருந்து நான் உன்கூட தான் இருப்பேன். ஒரு நொடி கூட உன்னை தனியா விட மாட்டேன். இது சத்தியம்” என ருஹானா சொல்ல, பின்னால் நின்று கேட்டுக் கொண்டிருந்த ஆர்யன் இதயத்தின் அவன் அறியா ஒரு மூலை நிம்மதியடைந்தது.

இவானை சுத்தம் செய்ய தூக்கிய ருஹானா, அங்கே ஆர்யன் நிற்பதை கண்டு அவனை சீறும் விழிகளால் சுட்டெரித்தாள்.

———

இவான் தூக்கத்திலும் விசும்பினான். “சித்தி! நீங்க ஏன் வரல?”

அவனை தட்டிக் கொடுத்து தூங்க வைத்த ருஹானா அவன் ஆழ்ந்து தூங்கியதும் எழுந்து ஆர்யனை தேடிச் சென்றாள்.

நடந்து கொண்டு இருந்தவன் சிறுத்தையை போல சீறிக்கொண்டு வந்தவளை பார்த்து அசையாது நின்றான்.

“எப்படி உங்களால இப்படி செய்ய முடிந்தது? என்னை எவ்வளவோ கொடுமைப்படுத்தினீங்க! நான் அமைதியா பொறுத்துக்கிட்டேன். இதுவரை இவானுக்காக எதுவும் பேசாம இருந்தேன். அதுக்காக என்னை அடைச்சி போடுவீங்களா? நான் என்ன மிருகமா இல்ல உங்க அடிமையா?”

“நான் உள்ளே கிடக்கும்போது என்ன நடந்ததுன்னு உங்களுக்கு தெரியுமா?  இவானுக்கு தேவைப்பட்ட நேரத்துல நான் அவன் பக்கத்துல இல்ல. அவனுக்காக தான் நான் உயிர்வாழறேன். ஆனா அவனுக்கு என்னால உதவி செய்ய முடியல. அதுக்கு காரணம் நீங்க!”

“அவனுக்காக என் உயிரையும் கொடுப்பேன். ஆனா இப்போ அவனை தவிக்க விட்டுட்டேன். நீங்க எனக்கு என்ன அநியாயம் வேணும்னாலும் செய்யலாம். ஆனா இவானை என்கிட்டே இருந்து பிரிக்க முடியாது. அவனுக்கு நீங்களும் தேவைன்னு தான் நான் சகிச்சிட்டு போறேன்.”

“சரி, என்னை மேலே இருந்து தூக்கி போட்டுட்டீங்க. ஓகே! உங்க மோசக்கார விளையாட்டுல நீங்களே ஜெயிச்சீட்டீங்க! அதோட நிறுத்திக்கோங்க!”

“இதுக்கு மேலே வேற மாதிரி ருஹானாவை தான் பார்ப்பீங்க. இனி என் சுயமரியாதையை இழக்க மாட்டேன். இவானை விட்டு பிரியவும் மாட்டேன். இதோட எல்லாம் முடிந்தது. எனக்கும் இவானுக்கும் நடுவுல வராதீங்க!” என்று சொல்லி அவள் கோபமாக திரும்பி நடக்க, ஆர்யன் அவள் கையைப் பற்றி நிறுத்தினான்.

“என்கிட்டே இப்படி பேசாதே!”

“பேசினா? என்ன? கொன்னுடுவீங்களா? ஏற்கனவே உங்க பொய்களால என்னை கொன்னுட்டீங்க. ரெண்டாவது முறை உயிரை எடுக்க முடியாது. இதுக்கு மேலே என்ன செய்வீங்க? நீங்க எது செய்தாலும் எனக்கு கவலை இல்ல. என்னோட கடைசி சொட்டு ரத்தம் இருக்கறவரை இவானுக்காக நான் போராடுவேன்” என அவள் பேசிய வேகத்தில் அவன் கை தானாக அவளை விடுவித்தது.

கொண்ட நம்பிக்கையை கொன்றவனிடம்

மீண்டும் மீண்டும் பொறுத்துப் பணியும்

முட்டாள்தனமின்றி வீறுநடை போடுகிறாள்!

தன்னுயிர் சிறகின் அரவணைப்பை 

தகர்த்திட வீரமங்கை விட்டுவிடுவாளா?

எதிர்க்க துணியும் சிங்கப்பெண்!

கனலை கொட்டியும் கொதிப்பு அடங்காமல் வேக மூச்சுகளை எடுத்து விட்ட ருஹானா தோட்டம் போய் காற்று வாங்க நின்றாள்.

“என்ன, நீ கவலையா இருக்கே ருஹானா? உன்னோட அமைதி கெட்டுப் போச்சா?” என அவளை ஜன்னலில் இருந்து பார்த்து வந்த அம்ஜத் கேட்க, அவனை சமாளித்து ருஹானா இவானிடம் சென்றாள்.

———

“ஏன் ஆர்யன் கோபமா இருக்கான், அக்கா?”

“ருஹானா டியர் உரிமை போர்க்கொடி தூக்கியிருக்கா. நல்லதுதான்.  நம்ம வேலை சுலபமா முடியும், சல்மா!”

———

“என் மேல இன்னும் கோபமா இருக்கியா கண்ணே?”

“நேத்து நீங்க என்கூட பூங்காவுக்கும் வரல. நான் கூப்பிட்டேன், நீங்க கதவும்  திறக்கல.”

“என்னை மன்னிச்சிடு தேனே! இனி நான் என்னோட சத்தியத்தை காப்பாத்துவேன். ஏன்னா இந்த உலகத்துல எனக்கு உன்னைவிட பெருசு யாரும் இல்ல. இதை எப்பவும் மறக்காதே, சரியா?”

“நீங்க கல்யாணம் செய்துக்கிட்டதுக்கு அப்புறம் நாம மூணு பேரும் எப்பவும் சேர்ந்து இருப்போம்னு சொன்னீங்களே!”

“பாரு, தேனே! நாம சேர்ந்து தான் இருக்கோம்.”

“அப்போ நாம சித்தப்பா கூட சேர்ந்து விளையாடுவோமா?”

——-

ஆர்யனுக்கு காபி கொடுத்த ஜாஃபர், ஆர்யன் கேட்காமலேயே அவன் வேண்டும் தகவலாக “ருஹானா மேம் லிட்டில் சார் கூட இருக்காங்க!” என்றான் உணர்ச்சியற்ற குரலில்.

“அவ என்னை முறைக்கறதை பார்த்தா துரோகம் செய்தது என்னமோ நான்ங்ற மாதிரி இருக்கு. என் முதுகுக்கு பின்னால அவ்வளவு வேலை செய்திட்டு எப்படி என்னை நிமிர்வாக பார்க்கறான்னு எனக்கு புரியல” என ருஹானா பேசியது தாங்கமாட்டாமல் ஆர்யன் புலம்ப, அவனுக்கு இசைவான பதில் கிடைக்கவில்லை.

“இதை நான் சொல்றதுக்காக என்னை மன்னிச்சிடுங்க சார். ஒருவேளை அது குற்றமற்றவர்களோட வலிமையா இருக்கலாம்” என தயக்கம் இருந்தாலும் ஜாஃபர் சொல்லிவிட, அடிவாங்கியவனாய் ஆர்யன் “எனக்கு தெரியும், நீங்க அவளை நம்புறீங்க. அவளோட  பரிதாப முகத்தை பார்த்து நீங்களும் ஏமாறுறீங்க தானே? ஆனா இன்னொருமுறை நான் அவள்ட்ட ஏமாற மாட்டேன்” என்றான் பிடிவாதமாக.

பதில் பேசாமல் ஜாஃபர் சென்றபின், ருஹானா உள்ளே வந்தாள், ஜாஃபர் சொன்ன அதே நிமிர்வுடன், ஆனால் ஆர்யன் சொன்ன பாவமான முகபாவனையின்றி.

“நாம பேச வேண்டியிருக்கு!” குரலில் உறுதி.

“ஒஹ்! அப்படியா? என்ன பேசப் போறே? என்ன உரிமையில பேச வந்திருக்கே?”

“இவானோட சித்திங்கற தகுதியில.. உங்க பார்வையில நான் ஒன்னும் இல்லாட்டாலும் இவானுக்கு நான் சித்தி தான். அது என்னைக்கும் மாறாது.” ஆர்யனின் நக்கலுக்கு பதில் தந்தாலும் அவள் முகத்தில் அந்நியத்தன்மை.

“நமக்குள்ள ஏதோ சரியில்லன்னு இவானுக்கு புரியுது. அவனோட நாம நேரம் செலவழிக்காதது அவனை பாதிக்குது. நாம அவனோட சேர்ந்து இருந்து தான் ஆகணும். அவனுக்காக இந்த துன்பத்தை அனுபவிச்சி தான் ஆகணும். இதை நீங்க செய்வீங்களா, இல்லனா நான் வேற எதாவது காரணம் சொல்லி சமாளிக்கவா?”

“இவானுக்கான்னா நான் எதுக்கும் மறுப்பு சொல்ல மாட்டேன். ஏன் உன்னை சகிச்சிக்கிறதைக் கூட” என்ற ஆர்யனின் குத்தல் பேச்சு கூட அவள் உறுதியை குலைக்கவில்லை.

இவான் ஆர்யனின் பலவீனமாக இருக்க, ருஹானாவின் பெரும்பலமே இவான் தான்.

“நான் சாப்பிட கீழே போறேன். நீயும் சீக்கிரம் வா! நீ செய்த கிறுக்குத்தனத்தால என் அண்ணனும் ஏதோ சந்தேகப்படறார். அவர் நம்மை சேர்ந்து பார்க்கணும்.” உத்தரவு தான்.

“கவலைப்படாதீங்க, நான் என்னோட கடமையை சரியா செய்வேன். நீங்க சொன்னதுக்காக இல்ல, இவானுக்காகவும் அம்ஜத் அண்ணாவுக்காகவும்.” உன் கட்டளைக்கு கீழ்படியவில்லை, நானே இரக்கம்கொண்டு செய்கிறேன் எனும் தொனியில் சொல்லி சென்றுவிட்டாள்.

———

ஏதோ யோசனையோடு தம்பி காபி அருந்துவதை அம்ஜத் கவலையோடு பார்க்க, சல்மா “ஆர்யன்! நான் ரிப்போர்ட் மெயில் செய்தேனே, பார்த்தீங்களா?” என அவன் கவனம் கலைத்தாள். “அப்புறம் பார்க்கறேன்” என்று ஆர்யன் விறைப்பில்லாமல் சொல்ல கரீமாவிற்கு ஒரே சந்தோசம், ஆர்யன் அவர்கள் வசமானதைப் போல.

“நாங்க வந்துட்டோம்!” எனும் இவானின் உற்சாக குரல் கேட்க, அனைவரும் பார்க்க ஆர்யன் கழுத்தை திருப்பி பின்னால் பார்த்தான். பார்த்தவன் அசந்து போய்விட்டான்.

முழு கருப்பு உடையில் மிதமான ஒப்பனையில் கம்பீரமாக அர்ஸ்லான் மாளிகையின் அதிபதி போல இலேசாக புன்னகைத்தபடி ருஹானா வந்து கொண்டிருந்தாள், எல்லாருக்கும் காலை வணக்கம் சொல்லியபடி.

அவள் மீது வைத்த கண்ணை எடுக்காமல் அவள் நகர நகர அவளை நோக்கியே கழுத்தை திருப்பிய ஆர்யன், தன் அருகில் அவள் வந்து நின்றும்கூட நாடக மேடையில் வசனத்தை மறந்து முழிப்பவன் போல கண்ணை விரித்தான்.

அம்ஜத் மகிழ்ச்சியாக வணக்கம் சொல்ல, கரீமா பொய்யான புன்னகையில் சொல்ல, சல்மாவும் கூட சலிப்பாக சொன்னாள்.

“குட், குட்! நாம இன்னைக்கு சேர்ந்து சாப்பிடப் போறோம்!”

“ஆமா, அம்ஜத் அண்ணா!” என்று சொன்ன ருஹானா, இவானுக்கு தேவையானதை தட்டில் எடுத்து வைத்தாள்.

“எனக்கு சந்தோசம்!” என அம்ஜத் ஆனந்தப்பட, “எனக்கும் அப்படித்தான்” என அவனிடம் புன்னகை முகம் காட்டியவள் ஆர்யனிடம் திரும்பி “உங்களுக்கு முக்கியமான வேலை ஒன்னும் இல்லயே?  இன்னைக்கு நாம சேர்ந்து பொழுதை கழிக்கலாமா?” என காதல் மனைவியாக கேட்டாள்.

“கண்டிப்பா! என்னோட நேரம் உன்னோட தான், அது உனக்கே தெரியும்!” என்ற ஆர்யனின் பதிலில் கரீமாவும் சல்மாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

ஆர்யனின் தட்டை பார்த்த ருஹானா “வேலையை பத்தியே யோசித்திட்டு இருப்பீங்க, உங்க தட்டு காலியா இருக்கு பாருங்க” என்று சொல்லி அவனுக்கும் பரிமாறினாள்.

சகோதரிகள் வாயில் உணவை வைக்காமல் இவர்களையே விழுங்கிக் கொண்டிருக்க, ஆர்யனை சுற்றிக்கொண்டு அவன் பக்கம் அமர்ந்த ருஹானா அவனின் இடக்கரத்தை அழுத்தி பிடித்தாள். “எதை பற்றியும் யோசிக்காம சாப்பிடுங்க. சாப்பாடும் முக்கியம்” என்று தேன் தடவிய சொற்களை உதிர்க்க, அம்ஜத் அவர்களை சிரிப்புடன் பார்த்தான். ஆயிரம் கோபங்கள் இருந்தாலும் ஆர்யனுக்கு அவள் தொட்ட இடம் இனித்தது.

ஆர்யன் திகைப்பை மறைக்க, அவளோ ஒற்றை புருவம் உயர்த்தி ‘எப்படி என்னோட செயல்?’ என்பது போல இதழோரம் புன்சிரிப்பை தவழவிட்டாள்.

“சாரா! எனக்கு டீ” என அம்ஜத் கேட்க, அனைவருக்கும் தேநீர் தந்த சாராவிடம் ருஹானா சத்தமாக “சாரா அக்கா! நஸ்ரியா கோர்ஸ் சேர்ந்திட்டாளா?” என்று கேட்க, “ஆமா, ருஹானா மேம்! ஆர்யன் சாருக்கும் உங்களுக்கும் என்னோட பலப்பல நன்றிகள்” என்று பணிவாக சொல்ல, ஆர்யன் அதை தலையாட்டி ஏற்றுக்கொண்டான்.

Advertisement