Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                 அத்தியாயம் – 123

நஸ்ரியாவின் மேல்படிப்பு பற்றி சாரா ருஹானாவிடம் கேட்க, அது பற்றி ஆர்யனிடம் அனுமதி வாங்க வந்தவள், அவன் கரீமாவிடம் அம்ஜத்தின் உடல்நிலை, சிகிச்சை பற்றி பேசிக்கொண்டிருப்பதை பார்த்து தயங்கி நின்றாள்.

“ஏன் அங்கயே நிற்கறே? பக்கத்துல வாயேன்!” என்று ஆர்யன் கரீமாவின் முன்னிலையில் ருஹானாவை ஆசையாக அழைக்க, நெருங்கியவள் “உங்களுக்கு நேரம் இருந்தா நான் உங்ககிட்டே ஒன்னு கேட்கணும்” என்றாள்.

“ஏன் இந்த சம்பிரதாயம்? என்னோட எல்லா நேரமும் உன்னோடது தானே?” என அவன் செல்லம் கொஞ்ச, “வந்து.. நஸ்ரியா…” என ருஹானா தயங்க, அவர்கள் பேசுவதை கேட்க அமர்ந்திருந்த கரீமாவுக்கு ஆர்வம் போய் எழுந்தாள். “ஸாரி ருஹானா! நான் அம்ஜத்க்கு மாத்திரை கொடுக்க போகணும்.”

கரீமா சென்றதும் ஆர்யன் முகம் இறுக்கமாக மாற, “நஸ்ரியா பேஷன் டிசைனிங் கோர்ஸ் சேர அனுமதி கேட்கறா. காலைல மட்டும் கொஞ்சநேரம் வேலைல இருக்க மாட்டா. அவ வேலையை சாரா செய்துடுவாங்க. உங்கட்ட சாரா…” என்று ருஹானா சொல்லும்போதே வேகமாக ஆர்யன் எழுந்துவிட்டான்.

“என்ன விளையாடுறியா? எந்த உரிமையில இதை நீ என்கிட்டே கேட்கறே? நீ என்ன இந்த மாளிகையோட எஜமானியா?”

“நான் இல்ல, ஆனா அவங்க அப்படி நினைக்கிறாங்க.”

“உன்னோட தகுதி அறிந்து நடந்துக்கோ!” என தணிந்த குரலில் அவன் அவளை கடியும்போது, “சித்தி! என்ன நீங்க இன்னும் கிளம்பலயா? சித்தப்பா பூங்காவுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னாரே!” என இவான் குளிராடை அணிந்து வந்து நிற்க, இருவரும் விலகி நின்று சிரித்தமுகம் காட்டினர்.

“இதோ உடை மாத்திட்டு உடனே வரேன், செல்லம்!” என ருஹானா மேலே செல்ல, சல்மா ஒய்யார உடையுடன் வந்து நின்றாள்.

“சித்தி எங்க?” என இவான் கேட்க, “உன் சித்திக்கு வேற வேலை இருக்காம். நாம போவோம், வா!” என ஆர்யன் முன்னே நடக்க, வேகமாக வந்து மேல்படிக்கட்டில் ஸ்தம்பித்து நின்ற ருஹானாவை பார்த்த இவான் “என்ன சித்தி? ஏன் எங்க கூட வர மாட்டீங்க?” என பாவமாக கேட்டான்.

சல்மா சிரிப்பை மறைக்க திரும்பி நின்றுகொள்ள, தீப்பார்வை பார்க்கும் ஆர்யனை முறைத்துக்கொண்டே கீழே இறங்கி வந்த ருஹானா “நான்.. எனக்கு திடீர்னு ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சி, அன்பே! எனக்கு உடம்பும் சரியில்ல தானே? நாம இன்னொரு நாள் போலாம்” என இவானின் கன்னம் தடவி சொல்ல, அவன் சரியென்று தலையாட்டினாலும் நகராமல் நின்றான்.

“இவான் டியர்! நாம போகலாம், தேனே!” என்று சல்மா கை நீட்ட, இவான் அதை பற்றவில்லை. சல்மாவே வலுக்கட்டாயமாக இவானின் கையை பிடித்து நடந்தவள் அவர்களோடு ஆர்யன் வராததை கண்டு “ஆர்யன்?” என கூப்பிட்டாள்.

“நீங்க கார்ல ஏறுங்க, வரேன்!” என்று அவன் சொல்ல, சல்மா இவானை கூட்டிக்கொண்டு வெளியே செல்ல, ருஹானா பதைப்புடன் மேலே சென்றுவிட்டாள். அவள் கையில் அலைபேசியை பார்த்த ஆர்யனுக்கு தான் இல்லாத நேரத்தில் மிஷாலோடு பேச வெளியே செல்வாளோ என தோன்ற அவள் பின்னோடு அறைக்குள் சென்றான்.

“உன்னை அப்படியே விட்டுட்டு போவேன்னு நினைச்சியா? உன் இஷ்டத்துக்கு நீ ஆட முடியாது. நான் வர்ற வரைக்கும் இந்த அறையிலயே கிட” என்று வேகமாக வெளியே சென்று கதவை பூட்டிவிட்டான்.

கதவருகே ஓடிவந்த ருஹானா “என்ன செய்றீங்க? கதவை திறங்க! உங்களுக்கு பைத்தியமா?” என்று கதவை ஓங்கி தட்டினாள்.

“கத்தாதே! யாருக்காவது எதாவது தெரிஞ்சிதுன்னா நீ தான் அனுபவிப்பே!” மூளையை எங்கோ அடகு வைத்த ஆர்யன் சென்றுவிட்டான்.

“இவானை என்கிட்டே இருந்து பிரிக்கமுடியாது. நான் விட மாட்டேன்” என பலவாறு புலம்பி அழுதபடி கதவில் சாய்ந்துவிட்டாள் ருஹானா.

———

இவானோடு விளையாடுவதை விட்டுவிட்டு ஆர்யனுக்கு நன்றி சொல்வதிலும் அவனோடு பேசுவதிலும் சல்மா ஆர்வம் காட்ட, ஆர்யனுக்கு அவள் பேசும் ஒலி கூட கேட்கவில்லை. பூங்கா எங்கும் ருஹானாவின் பிம்பம் தான் அவனுக்கு தெரிந்தது. “சித்தப்பா! சித்தி நம்ம கூட வந்திருக்கலாம்” என இவானும் அதையே எதிரொலிக்க, ஆர்யன் உணர்வு வரப்பெற்றான்.

“வா, இவான் டியர்! உன் சித்தியை விட நான் உன்கூட நல்லா விளையாடுவேன். ஊஞ்சல் ஆட்டிவிடவா?” என சல்மா கேட்க, இவான் மறுத்துவிட்டான்.

ஆர்யனிடம் வந்த சல்மா “எனக்கு என்ன நடக்குதுன்னு தெரியுது, ஆர்யன்! உங்க உணர்வுகள் புரியுது. உங்களுக்கு பேசணும்னா, ஆதரவு வேணும்னா நான் இருக்கேன்” என்று சல்மா பேசிக்கொண்டே போக, ஆர்யனின் எண்ணம் பூட்டிவைத்தவள் மேல் தான் இருந்தது.

இவானை பின்னணியில் வைத்து ஆர்யன் ஒருபுறமும் தான் ஒருபுறமும் நின்று சல்மா செல்ஃபி எடுக்க அதன் சத்தத்தில் திரும்பி பார்த்த ஆர்யன், சல்மா இவானை மறைத்துவிட்டு அவனோடு மட்டும் அடுத்த போட்டோ எடுக்க முயல “போதும்” என்று விட்டான்.

“நான் இறங்கனும்” என இவான் சொல்ல, அவனை இறக்கிவிட்ட சல்மா அக்காவிற்கு அந்த போட்டோவை அனுப்ப, “எனக்கு பாத்ரூம் போகணும், சல்மா அக்கா!” என இவான் கூப்பிட அவள் அவனை லட்சியம் செய்யவில்லை.

“இரு, போகலாம். நான் இப்போ பிசியா இருக்கேன்.” போனை பார்த்துக்கொண்டே அவள் சொல்ல, இவான் ஆர்யனை பார்க்க, அவன் தள்ளிநின்று போன் பேசிக்கொண்டிருந்தான்.

———-

“இதே  தான், சல்மா! இப்படியே ஆர்யனுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கோ! அவன் உன் கைப்பிடியில வந்துட்டான்னா, நாம ருஹானாவை மாளிகையை விட்டு துரத்திடலாம். வெரிகுட் டியர்!” என்று சந்தோசத்தில் குதித்துக்கொண்டு பேசிய கரீமா தோட்டத்தில் அவள் பின்னால் நின்றவனை அப்போது தான் கவனித்தாள்.

‘யார் இது? நான் பேசுறது எல்லாம் கேட்டுட்டானா?’ என பயந்துபோன கரீமா அவனை விசாரித்தாள். “யார் நீ? இங்க என்ன செய்றே?”

அவளுக்கு பதில் சொல்லாமல் அவன் விழிக்க, ஜாஃபர் ஓடிவந்தான். “கரீமா மேம்! அவன் புதுசா வந்த தோட்டக்காரன். அவனுக்கு பேச வராது. எழுத படிக்க தெரியாது” என அவன் சொல்லவும், உயிர் மீண்ட நிம்மதியில் தலையாட்டி நகர்ந்தாள்.

———-

ஆர்யன் உள்ளே வரவும், ஜாஃபர் “ரஷீத் உங்களுக்காக காத்திருக்கார்” என்று சொல்ல, தலையசைத்த ஆர்யன் “எங்களுக்கு காபி கொண்டு வாங்க!” என்று வரவேற்பறைக்கு செல்ல, சல்மா துள்ளிக் குதித்துக்கொண்டு படிக்கட்டில் ஏறி சென்றாள்.

கவனிப்பாரின்றி நின்ற இவான் தன் குளிராடையை கழட்டி நனைந்திருந்த கால்சட்டையை மறைத்துக்கொண்டான். யாரும் பார்க்கிறார்களா என சுற்றுமுற்றும் பார்த்தவன் மேலே சென்று ருஹானாவை தேடினான். “சித்தி எங்க இருக்கீங்க?”

படுக்கையறை பூட்டி இருக்கவும் கதவை தட்டி “சித்தி! வெளிய வாங்க!” என அழுதான். “இவான் செல்லம்! என்ன நடந்தது?” என ருஹானா பதட்டப்பட, “வெளிய வாங்க! ஏன் கதவை திறக்க மாட்றீங்க?” என்று கைப்பிடியை ஆட்டிக்கொண்டே கண்ணீர் விட்டான்.

“அன்பே! அடி எதும் பட்டுடுச்சா?” என அவள் நெஞ்சை கையில் பிடித்துக்கொண்டு பதற “இல்ல சித்தி! நான் சொல்ல மாட்டேன்! அது அசிங்கம்” என்று இவான் மேலும் அவளை பயமுறுத்தினான். கண்ணீரை துடைத்துக் கொண்டவள் “ஏன் அழறே இவான்?” என கேட்க, “நீங்க வாங்க சித்தி” என அவன் விவரம் சொல்லாமல் அழ, இப்படியே சிறிது நேரம் சென்றது.

ஒரு தீர்மானத்துக்கு வந்த ருஹானா “அன்பே! நீ உன் அறைக்கு போ. இப்போ நான் வரேன்” என்று சொல்ல, இவான் ஒரே ஓட்டமாக யார் கண்ணிலும் படாமல் அவன் அறைக்கு சென்றுவிட்டான்.

“இது ரொம்ப அதிகம்! ரொம்ப ரொம்ப அதிகம்! இதுக்கு மேலே தாங்க முடியாது! போதும்!” என்று பல்லை கடித்தவள் போனை எடுத்து ஆர்யனுக்கு அழைப்பு விடுத்தாள்.

———

போன் அழைப்பின் ஓசையில் ரஷீத் பேசிக்கொண்டிருப்பதை நிறுத்த, ஆர்யன் ருஹானாவின் அழைப்பை பார்த்து வெகுண்டான். “நீ சொல்லு, ரஷீத்!”

“லாயர்ஸ் ஒரு வழி கண்டுபிடிச்சிருக்காங்க ஆர்யன். ருஹானா உங்களை ஏமாத்துறாங்க, தவறான தொடர்பு வச்சிருக்காங்கன்னு நிரூபணம் ஆகிட்டா அவங்க கிட்டே இருந்து இவானோட உரிமையை வாங்கிடலாம்.”

ரஷீத் சொன்னதை கேட்டு அதிர்ச்சியான ஆர்யன் மௌனம் சாதித்தான்.

“நீங்க சொன்னா நான் இப்பவே ஒரு டிடெக்டிவ் ஏற்பாடு செய்றேன், ருஹானாவை பின் தொடர…” என்று ரஷீத் சொல்லி முடிக்கக்கூட இல்லை. வேகமாக மறுத்தான். “அது நான் சொல்றேன், இப்போ வேணாம்.”

ஏன், அவன் கையிலேயே இருக்கிறதே சாட்சிகள், ஆதாரங்கள்! அதை காட்டி அவள் நடத்தை சரியில்லை என்று நிருபித்து அவளை விலக்கி வைக்க வேண்டியது தானே? இவான் எளிதாக அவன் வசமாகிவிடுவானே! எதற்கு வேறு யோசனை? எது அவனை தடுக்கிறது? அவள் தவறானவள் என ஊர் உலகத்திற்கு தெரிய வந்தால் அவனுக்கென்ன?

மறுபடியும் ருஹானாவின் அழைப்பு ஒலிக்க, யோசனையில் இருந்த ஆர்யன் முகம் ஆவேசம் அடைந்தது. ரஷீத் போனையும் அதை எடுக்காத ஆர்யனையும் மாற்றி மாற்றி பார்க்க, அழைப்பு நின்ற நிமிடத்தில் செய்தி ஒலியெழுப்பியது. ஆர்யன் எடுத்து படித்தான்.

‘இப்போ கதவை திறக்கலனா நான் கத்தி ஊரை கூட்டுவேன்!’

போனை வீசிவிட்டு ஆர்யன் வேகமாக எழ, “என்ன ஆர்யன்?” என ரஷீத் பதறி கேட்க, “நாம அப்புறம் பேசலாம்” என்று விரைந்து விட்டான்.

———

Advertisement