Advertisement

“என் இதயத்துல உன்னை தவிர யாரும் இல்ல. உனக்காக தான் இந்த கொடுமையை நான் தாங்கிட்டு இருக்கேன். என் முதுகுல குத்தின பகைவனோட நான் வாழ்ந்திட்டு இருக்கறதும் உன்னால தான். உனக்காக தான் நான் இங்க வந்தேன். உனக்காக தான் எல்லா அவமானங்களையும் சகிச்சிட்டு இருக்கேன். எனக்குன்னு இருக்கறது நீ மட்டும் தான். என் வாழ்க்கையில உன்னை தவிர யாரும் தேவையில்ல.”

அவளின் வேதனையை பொறுக்கமுடியாமல் கதவை மூடி வெளியே வந்தவனுக்கு, ருஹானாவின் சார்பாக ஜாஃபர் மற்றும் சையத் பேசியது காதில் ஒலித்தது.

மனம் இளகிய ஆர்யன் மீண்டும் அறைக்குள் வரவும் ருஹானா கட்டிலிலிருந்து எழுந்து சோபாவிற்கு செல்ல, அவள் கையில் வைத்திருந்த புத்தகம் தவறி கீழே விழுந்தது. தேனிலவில் அவர்களின் கட்டிலில் அலங்கரித்த பூக்களில் சிலவற்றை ருஹானா புத்தகத்தில் பத்திரப்படுத்தி இருக்க, அவை வெளியே வந்து விழுந்தது. ஆர்யன் அதை பார்த்துவிட்டு இதற்கும் சண்டை போடுவானோ என பயந்த ருஹானா அதை வேகமாக எடுத்து சோபாவின் மேல் வைத்தாள்.

தங்கள் தேனிலவின் நினைவுகளை அவள் பொக்கிஷமென பாதுகாப்பது கண்டு ஆர்யனுக்கு இதயம் உருக, “இவை…” என அவன் கேட்கும்போதே அது காதில் விழாதது போல ருஹானா கழிப்பறைக்குள் சென்றுவிட்டாள்.

ஆர்யன் புத்தகத்தை எடுத்து அந்த மலர்களை பார்த்து மயங்கிக்கொண்டிருந்த வேளையில், ருஹானாவிற்கான அடுத்த இடி அவளது அலைபேசியில் வந்து இறங்கியது. மிஷால் அனுப்பிய அந்த குறுஞ்செய்தியை படித்த ஆர்யன் மதுவை உண்ட குரங்கானான்.

“ருஹானா, எனக்கு தெரியும் எல்லாம் தாறுமாறா போய்டுச்சி. ஆனா நாம இதுல இருந்து வெளிய வர முடியும். நாம பேசினா எல்லாத்துக்கும் தீர்வு கிடைக்கும். உனக்காகவே நான் இருக்கேன், காத்திட்டு இருக்கேன்!”

விடுவிடுவென வெளியே சென்றவன் தோட்டத்தை அடைந்து ஆவென ஆங்காரமாக குரல் எழுப்ப ஜாஃபர் ஓடிவந்தான். “நீங்க சரியா தானே இருக்கீங்க?”

“இல்ல, நான் நல்லா இல்ல. என் வீட்லயே துரோகி இருக்கும்போது நான் எப்படி நல்லா இருக்க முடியும்? அவ முகத்தை தான் பார்க்கறேன். அவளோட தான் ஒரே அறையில இருக்கறேன். என்னோட குடும்பத்தை காப்பாத்த மட்டும் தான் இதுவரை நான் வாழ்ந்திருந்தேன். ஆனா இப்போ ஒரு மோசமான எதிரிக்கு நானே எல்லா கதவையும் திறந்து விட்டுட்டேன். துரோகம் என்னோட முகத்துல வந்து அறையுது. எனக்கு பைத்தியம் பிடிக்குது. ஒரு பக்கம் என்னோட வெறுப்பு, மறுபக்கம்…” அவன் சொல்லவருவது அவனுக்கே பிடிக்கவில்லை.

“எனக்கு புரியது! ருஹானா மேடம் கூட நீங்க செலவழித்த தருணங்கள்…”

“இல்ல, அவ பேரை சொல்லாதீங்க. அவளை லேசா நான் விட மாட்டேன். அவ அனுபவிப்பா! இவானுக்காக தானே அவ உயிர் வாழ்றா? அவனை அவகிட்டே இருந்து பிடுங்கறேன்.”

ஜாஃபர் மௌனமாக அகல, ஆர்யன் நெடுநேரம் குளிரில் நடக்க, அப்போதும் அவன் கொதிப்பு அடங்கவில்லை.

அதிகாலையில் அறைக்குள் வந்தவன் ருஹானா எதையும் போர்த்திக்கொள்ளாமல் அயர்ந்து தூங்குவதை பார்த்தான். அவள் காலடியில் மடித்து வைத்திருந்த போர்வையையும் பார்த்தான்.

“உன்னோட கள்ளமில்லாத முகத்தை பார்த்து இனி நான் ஏமாற மாட்டேன்” என்றுவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

———-

காலையில் தும்மலோடு கண்விழித்த ருஹானா கட்டிலில் ஆர்யன் படுத்த சுவடு தெரியாதது கண்டு புருவம் உயர்த்தினாள். தனது அலைபேசியை எடுத்து பார்த்தவள் மிஷால் அனுப்பிய செய்தியை படித்தாள். “இருக்கற பிரச்சனை பத்தாதுன்னு இது வேறயா?” என்று கசப்புடன் சொன்னவள் அதை அழித்தாள்.

குளித்து உடை மாற்றி இவான் அறையை எட்டிப்பார்க்க அங்கே இவான் இல்லை. அவனை தேடிக்கொண்டே கீழே வர உணவு மேசையில் சல்மாவின் குரல் கேட்டது.

“இவான் செல்லம்! இன்னும் ஒரே வாய் தான். இது சாப்பிடு! உன் உடம்புக்கு நல்லது” என்று இவானின் அருகே அமர்ந்து சல்மா ஊட்டிக் கொண்டிருக்கும் காட்சியை கண்டு திகைத்து நின்றாள்.

“சித்தி! நான் உங்களை பார்க்கும்போது நீங்க நல்லா தூங்கிட்டு இருந்தீங்க. சித்தப்பா தான் உங்களை எழுப்ப வேண்டாம்னு சொல்லிட்டார்” என்று இவான் சொல்ல, அம்ஜத் “ஆமா ருஹானா! நானும் உன்னை எழுப்ப சொன்னேன், எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்னு. ஆனா ஆர்யன் நீ தூங்கட்டும்னு சொல்லிட்டான்” என்று சொல்ல, மெல்ல நடந்து வந்து நாற்காலியில் அமர்ந்தாள்.

“ராத்திரி நீ சரியா தூங்கல, அதான் உன்னை தொந்தரவு செய்யல” என்று ஆர்யன் அவள் முகம் பார்க்காமல் சொல்ல, நன்றி சொன்ன அவள் கண்ணீரை வெளியிடாமல் வைக்க மிகுந்த சிரமப்பட்டாள். ஒரு தும்மலும் வெளிப்பட, கரீமா, “அச்சோ! உனக்கு சளி பிடிச்சிருக்கா? இப்போ தட்பவெப்பமே குளிரா தானே இருக்கு! உடம்பை கவனமா பார்த்துக்கோ, ருஹானா டியர்!” என்று போலி பரிவு காட்டினாள்.

“சித்தி! என்னோட விமானத்தை நாம செய்து முடிக்கலாமா?” என்று கேட்க, ருஹானா சிரிப்புடன் தலையாட்டினாள்.

“சிங்கப்பையா! நான் உன்கூட சேர்ந்து செய்யவா? உன் சித்தி சாப்பிடட்டும்”

“சரி சித்தப்பா!” என்ற இவான், “சித்தி! நீங்க சாப்பிட்டதும் வாங்க” என்று ருஹானாவை பார்த்து சொன்னான். ருஹானா சரியென தலையாட்டும்முன் ஆர்யன் “உன் சித்திக்கு உடம்பு சரியில்ல போல. அவங்களை களைப்பாக்க வேண்டாம். அவங்க ஓய்வெடுக்கட்டும். நாம போலாம்” என்று இவானை கைப்பிடித்து அழைத்து சென்றான்.

அனைவரும் எழுந்து செல்ல, எதிரே அத்தனை வகை உணவிருந்தும் ருஹானா ஒரு வாய் கூட உண்ணாது திக்பிரமை பிடித்து அமர்ந்திருந்தாள்.

———-

“நான் போய் ஒட்ட பசை எடுத்துட்டு வரேன்” என்று ஆர்யன் தனது அறைக்கு செல்ல, தலையாட்டிய இவான் அவன் அறைக்கு சென்றான்.

ருஹானாவின் அலைபேசி அங்கே இருக்க, தயக்கத்துடன் என்றாலும் ஆர்யன் அதை எடுத்து ஆராய்ந்தான். “ஒஹ்! உன் காதலனோட செய்தியை அழிச்சிட்டியா? சரியான கேடி தான்! சாட்சியில்லாம செய்றியா?”

——–

“உன்னோட விமானம் தயார், பைலட்!”

“நாம சேர்ந்து செய்திட்டோம், சித்தப்பா!”

“சரியா சொன்னே, சிங்கப்பையா! மேன் டு மேன்!” என்றவன் குரலை தழைத்து “நீ இப்போ வளர்ந்திட்டே அக்னிசிறகே! உன் சித்தி எப்பவும் உன்கூடவே இருக்க முடியாது. ஆனா நான் இருப்பேன். உனக்கு எப்போ தேவைனாலும் நான் உன்கூட இருப்பேன். நாம சேர்ந்து எதையும் சாதிக்கலாம், மேன் டு மேன்!” என்று சொல்ல, அவன் பேசியது அனைத்தும் கதவருகே வந்து நின்ற ருஹானாவிற்கு தெளிவாக கேட்டது.

“நாம மீன்பிடிக்க போலாமா?”

“கண்டிப்பா! உனக்கு சரிவந்துச்சினா நாம கப்பல்ல கூட போகலாம். நீ என்ன விரும்பறியோ அது எல்லாம் செய்யலாம்.”

“சித்தி?” என்று அவன் கேட்க, ஆர்யன் முகம் இறுகியது. அவனை விட இறுக்கமாக உள்ளே வந்த ருஹானா இவானின் அந்தப்புறம் அமர்ந்தாள். “நீ வளர்ந்து பெரிய ஆளானாலும் சித்தி உன்கூடவே இருப்பேன். உன்னை விட்டு பிரியவே மாட்டேன்” என்று அவன் கன்னம் தடவி முத்தமிட்டாள். ஆர்யன் முகம் காதுவரை சிவந்தது.

“சித்தி! இதை பார்த்தீங்களா? நாங்க போய் இந்த விமானத்தை விடுறோம். நீங்க ஓய்வெடுத்துட்டு வாங்க. அப்புறம் நாம சேர்ந்து விளையாடலாம்” என்று சொல்லி இவான் வெளியே செல்ல, அவனோடு செல்ல எழுந்த ஆர்யன் ருஹானாவின் புறம் திரும்பி சொன்னான். “அதிக நம்பிக்கை வைக்காதே!”

———–

“பார்த்தியா சல்மா, காலம் எப்படி மாறுதுன்னு? இத்தனை நாள் நீ அவளை பார்த்து பொறாமைப்பட்டுட்டு இருந்தே! இன்னைக்கு இவானுக்கு நீ உணவு தர்றதை அவ முகம் கோணி பார்த்தா!”

“ஆமா அக்கா! இனிமேல் அவ பொறாமை மட்டும் தான் படணும்.”

அவர்கள் பேசிக்கொண்டிருந்த வரவேற்பு அறைக்கு இவானும் ஆர்யனும் வர, கரீமா உள்ளே செல்ல, இவானின் விமான விளையாட்டில் சல்மாவும் இணைந்து கொண்டாள். “இவான் செல்லம்! உன்கூட விளையாடுறது எனக்கு ரொம்ப பிடிக்குது. இத்தனை நாள் வேலை காரணமா இதை மிஸ் செய்திட்டேன். இனிமேல் உன்கூட நிறைய விளையாடப் போறேன்.”

அவள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த ஆர்யனுக்கு ஒரு யோசனை பளிச்சிட,  “எங்களோடு வெளிய வர்றியா?” எனக் கேட்டான். உலகமே அவள் கையில் கிடைத்தது போல மகிழ்ந்த சல்மா பேச்சு வராமல் தலையாட்டினாள்.

அந்த இனிப்பான செய்தியை தமக்கையுடன் சல்மா பகிர்ந்துகொள்ள, அவள் கண்களும் பேராசையால் விரிந்தது. “யெஸ், இதான் சரி! இவானோடு முதல்ல பழகு. பின்னாடியே ஆர்யன் பூனை போல வருவான். அவன் ருஹானாவை இவான்ட்ட இருந்து விலக்க நினைக்கிறான்.  சல்மா! நீ இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதே!”

(தொடரும்)

Advertisement