Advertisement

அண்ணனின் பதட்டத்தை கவனித்த ஆர்யன், ருஹானாவின் கையைப் பற்றி “நானும் எழுந்ததும் உன்னை காணோமேன்னு தேடினேன். ஏன் சீக்கிரம் எழுந்து தோட்டத்துக்கு போனே?” என்று அன்பொழுக கேட்டான்.

“பயங்கர கனவு கண்டு என் தூக்கம் கலைஞ்சிடுச்சி” என்று ருஹானா மெல்ல சொல்ல, அவள் கையை தட்டிக்கொடுத்த ஆர்யன் “நீ என்னை எழுப்பி இருக்கலாமே!” என்றான்.

படபடப்பு நீங்கிய அம்ஜத் அவர்களின் நெருக்கத்தை பார்த்துக் கொண்டே “ஆமா, நீ ஆர்யனை தான் எழுப்பி இருக்கணும். வாழ்க்கை துணை அதுக்கு தானே இருக்கறாங்க?” என்றான்.

“கவலைப்படாதீங்க அண்ணா! நான் அவளை பத்திரமா பார்த்துக்குவேன்” என்று உடன்பிறந்தவனிடம் சொல்லிய ஆர்யன் “என் ரெண்டு கண்ணும் எப்பவும் அவள் மேல தான் இருக்கும்” என்று ருஹானாவை பார்த்து கண்களை உருட்டினான்.

ருஹானா கையை உருவிக் கொள்ள முயல, ஆர்யனின் பிடி அழுத்தமாக இருந்தது. அண்ணன் சிரித்தமுகமாக சாப்பிட ஆரம்பிக்கவும் தான் ஆர்யன் மனைவியின் கையை விட்டான்.

———–

சல்மா ஆர்யனின் அலுவல அறைக்கு காபி கொண்டுவர, முதலில் மறுத்த ஆர்யன், ருஹானா உள்ளறையில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறாள் என தெரிந்ததும் காபியை மேசையில் வைக்க சொன்னான்.

அலுவல வேலை சம்பந்தமாக அவன் சல்மாவை பாராட்ட, அவள் உச்சி குளிர்ந்து போனாள். “உங்க நம்பிக்கைக்கு பாத்திரமா எப்பவும் நான் இருப்பேன். என்னைக்கும் உங்களுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன்” என சல்மா நெகிழ்ந்து பேச, ருஹானா கதவை திறந்து கொண்டு இருவரையும் கண்டுகொள்ளாமல் வெளியேறினாள்.

அதுவரையில் சல்மாவை பார்த்து பேசிக்கொண்டிருந்த ஆர்யன் கணினியின் பக்கம் திரும்பிக் கொண்டான். அதை புரிந்து கொள்ளாமல் மகிழ்ச்சி கண்ணை மறைக்க சல்மா அவனை பார்த்துக்கொண்டே நின்றாள்.

———–

ருஹானா விட்டு சென்ற சால்வையை தன்வீர் கொண்டுவர, இருவரும் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

“நான் அந்தப்பக்கம் வரும்போது எடுத்திருப்பேனே, உனக்கு எதுக்கு வீண் அலைச்சல், தன்வீர்?”

“அம்மாவோட மனசு உனக்கு தெரியாதா, ருஹானா? அது இருக்கட்டும். ஆர்யன் எங்கே? இவ்வளவு தூரம் வந்துட்டு அவரை பார்க்காம எப்படி போறது?”

“அவருக்கு வேலை அதிகம் தன்வீர். காலைல இருந்து பிசியா தான் இருக்கார். அவரை தொந்தரவு செய்ய வேண்டாமே” என ருஹானா சால்ஜாப்பு சொல்லும்வேளையில், அதை கேட்டுக்கொண்டே வந்த ஆர்யன் “தன்வீர் வந்ததை ஏன் என்கிட்டே சொல்லல நீ?” என்று ருஹானாவை தோளோடு அணைத்துக் கொண்டான்.

தன்வீரை நலம் விசாரித்தபின் “ஏன் என்னை பார்க்காம கிளம்பறே? வாயேன் நாம சேர்ந்து சாப்பிடலாம்” என அழைத்தான்.

தன்வீர் வேலை இருப்பதாக மறுக்க, ருஹானாவின் கையில் இருந்த சால்வையை வாங்கிய ஆர்யன் அவள் கழுத்தை சுற்றி பாசமாக போட்டுக்கொண்டே தணிந்த குரலில் தீக்கங்குகளை கொட்டினான். “நீ வாய்மூடி தான் இருக்கணும். இங்க நடக்கறதை யார்கிட்டயாச்சும் சொன்னா, அதோட பின்விளைவுகள் பயங்கரமா இருக்கும்.”

“இந்த சால்வை உன்னோட கண்ணோட நிறத்தை தூக்கி காட்டுது” என்று புகழ்ந்தபடியே ஆர்யன் அவள் கையோடு கை கோர்க்க, தன்வீர் அதை மகிழ்ச்சியாக கவனித்தான்.

“நீங்க எத்தனை அழகான தம்பதி! இப்படி அருமையா மாறுவீங்கன்னு யார் நினைச்சா?” என்று தன்வீர் பாராட்டிவிட்டு செல்ல, ஆர்யனின் கையை உதறிவிட்டு ருஹானா படிக்கட்டில் ஏறினாள்.

அவளை துன்புறுத்த அவன் செய்யும் ஒவ்வொரு செயலும் அவனுக்கும் அதிகவேதனை அளித்ததை அவன் உணர்ந்தே இருந்தான். அவளின் அருகாமை அவனை கொதிக்க வைத்தாலும் குளிரவும் வைத்தது.

———

இவானின் உரிமை தனக்கு கிடைக்கும்படி செய்ய என்ன வழிகள் இருக்கின்றன என வழக்கறிஞர்களின் கருத்துக்களை கேட்கும்படி ஆர்யன் ரஷீத்திடம் கூறினான்.

“வாய்ப்பே இல்ல, ஆர்யன்!”

“சட்டத்தின் ஓட்டைகள் ஏதாவது இருக்கும் ரஷீத்! நல்லா பார்க்க சொல்லு!”

“சரி, ஆர்யன்! நீங்க கோபப்படலனா நான் ஒன்னு சொல்லவா?”

ஆர்யன் என்ன என்பது போல பார்க்க, ரஷீத் “என்னால இன்னும் நம்ப முடியல, ருஹானா இப்படி செய்திருப்பாங்கன்னு. நீங்க சிறையில இருக்கும்போது அவங்க சிந்திய கண்ணீர் நிஜம். உங்களுக்காக அவங்க வாட்ச்மேன் நிஸாம் கிட்டே கெஞ்சினதை என் கண்ணால நான் பார்த்தேன்” என்று தயக்கமாக சொன்னான்.

“அவளுக்கு சிறையில இருக்கற ஆர்யன் வேண்டாம், ரஷீத். சுதந்திரமான பணக்கார ஆர்யன் தான் தேவை. அதுக்கு தான் அப்படியொரு முயற்சி எடுத்திருக்கா. அவ ஒரு பொய்சொல்லி!”

———

ஆர்யன் போர்த்திய சால்வையை தூக்கி எறிந்துவிட்டு சோபாவில் ருஹானா அமர்ந்திருக்க, அனுமதி கேட்காமல் சல்மா உள்ளே வந்தாள். ஆர்யனின் படுக்கையறையை உரிமையுடன் சுற்றி பார்த்தவள், ருஹானாவிடம் “என் அன்பே! ஏன் சோகமா இருக்கே? ஆர்யன் கூட சண்டையா? ஏன் உங்க தேனிலவு வேகமா முடிந்தது?” என கேட்டாள்.

ருஹானா பதில் எதும் சொல்லவில்லை. சல்மா மீது பார்வையும் திருப்பவில்லை. ருஹானாவின் கண்ணெதிரே வந்து நின்று கொண்ட சல்மா “கல்யாணம் செய்துக்கிட்டா ஆர்யனை கைக்குள்ள வச்சிக்கலாம்னு நினைச்சியா? ஆர்யன் ஒரு சிங்கம். உன்னால அவனை கூண்டில் அடைக்க முடியுமா?” என்று கேட்டவள் கட்டிலருகே இருந்த அவர்களது திருமண படத்தை கையில் எடுத்தாள்.

“மாயாஜாலக்கதை சீக்கிரம் முடிவுக்கு வந்தது” என்று சொல்லி அதை கீழே போட்டு காலால் எத்தினாள். ருஹானா அழுகையை சிரமப்பட்டு அடக்க, அவளை பார்த்து நக்கல் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு சல்மா வெளியேறினாள்.

கீழே கிடந்த படத்தை எடுத்து துடைத்து அது இருந்த இடத்தில் வைத்த ருஹானா, மேசை இழுப்பறையை திறந்து முடிவிலி சின்னத்தையும், கூழாங்கற்களையும் எடுத்தாள்.

கோபமாக உள்ளே வந்த ஆர்யன் அவள் கைகளில் இருப்பதையும் அவள் கண்ணீரையும் பார்த்து மனம் கசிந்தான். என்றாலும் “இன்னுமா இதெல்லாம் வச்சிருக்கே? இன்னுமா வெற்றுக்கனவுகள் கண்டுட்டு இருக்கே?” என்று கேட்டான்.

“உங்களை பற்றிய கனவு எதுவும் எனக்கு இப்போ இல்ல. நீங்க எப்படி என்னை ஏமாத்துனீங்கன்னு நினைவு வச்சிக்க தான் இதையெல்லாம் பத்திரமா வச்சிருக்கேன்” என ருஹானா ஆத்திரமாக சொல்லவும் அவனும் கொதிநிலையடைந்தான். அவள் இருகைகளையும் பற்றி இழுத்து சுவரோடு சாய்ந்தான்.

“ஒருத்தங்க தகுதி என்னவோ அதுபோல தான் நானும் அவங்களை நடத்துவேன். ஆனா உன்னை இன்னும் மட்டமா தான் நடத்தணும். இவானால தான் நீ தப்பிச்சே. இல்லனா…” என்று சொல்லி முடிக்கவில்லை, இவானே வந்து அவளை காப்பாற்றினான்.

“சித்தி! எனக்கு தூக்கமே வரல. வந்து எனக்கு கதை சொல்லுங்க!”

நடுங்கிக் கொண்டு நிற்கும் ருஹானாவை பார்த்த ஆர்யன் “உன்னோட சித்தியால வர முடியாது. வா நான் உனக்கு கதை சொல்றேன்” என இவானை கூட்டி சென்று படுக்கையில் விட்டான்.

“அசுரன் சின்னப்பையன் கதையா சித்தப்பா?”

“இல்ல, இது வேற கதை. நெருக்கமா பழகின எதிரியை நம்பி ஏமாந்து போன கதை!”

“ஆனா அசுரன் தான் எல்லா எதிரிகளையும் அழிச்சிட்டானே, சித்தப்பா? அவனுக்கு இன்னுமா எதிரி இருக்காங்க?”

“அவனும் அப்படித்தான் நினைச்சான், சிங்கப்பையா! ஆனா அவனோட பெரிய எதிரி அவனுக்கு பக்கத்திலயே இருந்திருக்கான். அவன் போட்டுருந்த முகமூடியால அசுரனுக்கு அவனோட சுயரூபம் தெரியல. அசுரனோட பலவீனங்கள் எல்லாமே அந்த துரோகிக்கு தெரியும்ன்றதால அவன் அசுரனை பலமா தாக்கிட்டான்.”

“அசுரனுக்கு ரொம்ப அடிபட்டுடுச்சா, சித்தப்பா?”

“ஆமா, ஆழமான காயம் தான். ஆனா நீ கவலைப்படாதே. அசுரன் தைரியமானவன். அதோட அவனுக்கு எதிரியோட உண்மை முகமும் தெரிஞ்சிடுச்சி. அதனால இனிமேல் ஏமாற மாட்டான். எதிரி செய்ததுக்கு எல்லாம் அசுரன் அவனை பழிவாங்குவான். அசுரன் தான் கடைசியில ஜெயிப்பான். அவன் தன்னோட தவறுகள்ல இருந்து பாடம் கத்துக்கிட்டான். இனி அவன் யாரையும் நம்ப மாட்டான்” என்று ஆர்யன் கதையை முடிக்கும் முன்னரே இவான் உறங்கி இருந்தான்.

தன் அறைக்கு வந்து கதவை திறந்த ஆர்யன் ருஹானாவின் கண்ணீர்க்குரல் கேட்டு அப்படியே நின்றான். இவானின் டாலரை திறந்து வைத்தப்படி அவள் வடித்த கண்ணீர் மொழிகள் அவன் இதயத்தை இரணமாக்கியது.

Advertisement