Advertisement

“அவகிட்ட நான் தோத்துப் போயிட்டேன். அவ என்னை காதலிச்சான்னு நம்பினேன். முழுப்பொய் அவ. நானே தான் என்னோட வீட்டை அவளுக்கு திறந்துவிட்டேன், விருந்தாளியா இல்ல உரிமைக்காரியா.. அவளை முழுசா நம்பினேன். அவள் அழுக்கு காலோட வீட்டுக்குள்ள வந்தா, என்னோட இதயத்தை கறையாக்கிட்டா!”

“ஆனா உங்களோட முடிவு போல என்னோடது இருக்காது, அப்பா. சிதறுன என்னோட அங்கங்களை சேர்ப்பேன். கடினமான முழு பாறையா உருமாறுவேன். அவளை உயிரோட மண்ணில் புதைப்பேன். அவளோட வாழ்க்கையை நரகமாக்குவேன்.”

“நான் சத்தியம் செய்றேன், அப்பா! நம்மோட வாரிசை அவ கிட்டே இருந்து வாங்குவேன். அவளை மூச்சு திணற வைப்பேன்.”

———

தந்தையின் பேர் பொறித்த பலகையை கட்டிக்கொண்டு ருஹானா அழுது புலம்பினாள்.

“அப்பா! நான் நரகத்துல இருக்கேன் அப்பா. என்னை மன்னிச்சிடுங்க, அப்பா! நீங்க சொன்னது தான் சரி. அர்ஸ்லான் குடும்பத்தை பற்றி அக்காவுக்கு எச்சரிக்கை செய்தீங்களே! அந்த விஷப்பாம்பு என்னையும் முழுங்கிடுச்சி, அப்பா!”

“என்னால சுவாசிக்க முடியல. என்னோட இதயத்துல அவரை அமர வைத்தேன். அவர் சொன்னது எல்லாமே பொய். இவானுக்காக திறமையா நடிச்சிருக்கார். என்னை வானத்துக்கு கூட்டிட்டு போய் பாதாளத்துல தள்ளிவிட்டுட்டார்.”

“இப்போ நான் சந்தேகத்துக்கு இடமில்லாம தெரிஞ்சிக்கிட்டேன். அவர் ஒரு காட்டுமிராண்டி தான், ஆர்யன் அர்ஸ்லான் காட்டுமிராண்டி மட்டும் தான்.”

“நம்மோட வாரிசுக்காக மட்டும் தான் இனிமேல் என் இதயம் துடிக்கும். எப்பாடுபட்டாவது அந்த காட்டுமிராண்டி கிட்டே இருந்து பிரிச்சி இவானை கூட்டிட்டு வருவேன். இது சத்தியம்!”

காதல் வாழ்வு துளிர்க்கும்முன்னே கருகிப்போக

பெண்கிளியின் தன்னியல்பான போராட்டகுணம் தலைதூக்க

விலகி நின்று வெறுப்பை உமிழும் பெரும்பறவை விட்டு

அக்னிசிறகுடன் பறந்து செல்ல புத்துயிர் கொள்கிறது!

——–

மாளிகைக்கு திரும்பிய ஆர்யன் அங்கே ருஹானா இல்லை என அறிந்து கொடுஞ்சினம் கொண்டான். அவளை தேடிப் புறப்பட்டவன் அவளே எதிரே வர, அவள் திமிற திமிற இழுத்துக்கொண்டு அறைக்கு வந்தான்.

அவன் ஆவேசமாக வருவதை பார்த்த சல்மா சந்தோசமாக ஓடிச்சென்று அக்காவையும் அழைத்துக்கொண்டு உள்ளே பேசும் சத்தம் கேட்கும்வண்ணம் ஒளிந்து நின்றாள்.

“என்னோட அனுமதியில்லாம வெளிய போகக்கூடாதுன்னு சொல்லியிருந்தேனே! எங்க போயிட்டு வரே?” ஆர்யன் கத்திய கத்தல் வெளியே நன்றாக கேட்டது.

“என் அப்பாவோட கல்லறைக்கு!” நிமிர்வாக பதில் வந்தது.

“உன்னோட கல்லறைக்கு போறதா இருந்தாலும் என்னை கேட்டுட்டு தான் போகணும். புரியுதா?”

கொடிய வார்த்தைகளைக் கேட்ட ருஹானா நிதானமாக தலைதூக்கி அவனை பார்த்தாள். சங்கிலியின் இவானின் டாலரை பிடித்துக்கொண்டாள். அவளின் கண்ணீர் நின்றது. அவனை ஆழ்ந்து பார்த்தாள்.

தடுமாறிய ஆர்யன் “கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு” என்று கேட்க, இன்னும் அவனை உற்று நோக்கினாள். தப்பு செய்தவர்களின் பயஉணர்வு அவள் கண்களில் சிறிதும் இல்லை.

“ஏன் அப்படி பார்க்கறே?”

“உங்க சுயரூபத்தை பார்க்கறேன். இத்தனை நாள் நீங்க மறைச்சி வச்சிருந்த உண்மை முகத்தை தேடுறேன்.” சீறலாய் வந்தது வார்த்தைகள்.

“பாரு, பாரு, இன்னும் நல்லா பாரு. இதான் நான். இதான் என் சுயரூபம்” என்று ஆர்யன் இரைந்தாலும் அவள் தைரியம் கண்டு அவனுக்கு குழப்பமே மேலிட்டது.

வேகமாக அவன் வெளியே வரும் சத்தம் கேட்க, கயவர்கள் இருவரும் ஒரே ஓட்டம் எடுத்தனர். கரீமாவின் அறைக்கு வந்து தான் அவர்கள் ஓட்டம் நின்றது.

“காதல் கல்யாணம் முடிவுக்கு வந்துடுச்சி, சல்மா. ருஹானாவோட இடிபாட்டு மிச்சங்கள் தான் கொஞ்சம் கிடக்குது. அதையும் நாம சீக்கிரமே வெளிய தூக்கி போட்டுடலாம்.”

“அவ வெளியே போனாலும் என்ன ஆகும், அக்கா? ஆர்யன் தான் என் முகத்தை கூட பார்க்க மாட்றானே?”

“புயல் ஓயும் வரை பொறுமையா இருக்கணும், சல்மா! அதுக்கு அப்புறம் ருஹானா விட்டுட்டுப் போன வெற்றிடத்தை நீ நிரப்பணும்.”

“அல்லாஹ்! எனக்கு பொறுமையை கொடுங்க. இவானுக்காக இதையெல்லாம் தாங்குற சக்தியை கொடுங்க” என்று ருஹானா இறைவனை வேண்ட, காருக்கு வந்த ஆர்யன் “என் முகத்தை பார்க்கறாளாமே, நான் தானே அவளோட முகமூடியை பார்த்து ஏமாந்தேன்?” என பொருமிவிட்டு காரை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றான்.

——–

“அவ்வளவு தான், சையத் பாபா! அவ மட்டும் என்னை முட்டாளாக்கல, நீங்களும் சேர்ந்து தான்! நீங்க பார்த்தது எல்லாமே பொய். அவளை நீங்க தப்பா நினைச்சிட்டீங்க.”

“நான் என்ன பார்த்தேன்னு எனக்கு தெரியும், மகனே! உங்க ரெண்டுபேரின் காதலுக்கும் நானே சாட்சி!”

“இப்போ நான் அதை அழிச்சிட்டேன். அதுக்கும் நீங்களே சாட்சியா இருங்க. என்னோட இதயத்துலயும் அவளுக்கு இடம் இல்ல, என் வீட்லயும் இல்ல. இவானோட வாழ்க்கையில இருந்தும் அவளை விலக்கி வைக்கறேன். அர்ஸ்லான் மாளிகைல காலடி வச்ச தினத்தை நினைச்சி அவ தினமும் அழணும்.”

“அவசரப்படாதே மகனே! நீ இப்போ கோபத்துல இருக்கே..” என பேசுபவரை கை நீட்டி தடுத்த ஆர்யன் “இல்ல, நான் கேட்டதுலாம் போதும்” என எழுந்து சென்றுவிட்டான்.

செல்லும் அவனை பார்த்தபடி சையத் “உன்னோட பெருங்காதல் தான் உன்னை இவ்வளவு கோபப்பட வைக்குது. உன் கண்ணையும் மறைக்குது. அது உனக்கு புரியும் நாளும் சீக்கிரம் வரும்” என வருத்தமாக சொன்னார்.

——–

இரவு கவுனை எடுத்துக்கொண்டு வெளியே செல்லும் ருஹானாவை கதவருகில் தடுத்த ஆர்யன் “எங்க போறே?” என்று கேட்டான்.

“இவான் அறைக்கு!”

“நீ இங்க தான் தூங்கப் போறே!”

“எனக்கு விருப்பம் இல்ல.”

“இங்க தான்னு நான் சொன்னேன்.”

“முடியாது! இவ்வளவுக்கும் பிறகும் நான் எப்படி..”

“இங்க தான் இருக்கணும். மூச்சு விட முடியாம நான் எப்படி அவஸ்தைப்படறனோ, அதை நீயும் அனுபவி!” என முடிவாக சொன்னவன் அவளுக்காக இத்தனைநாள் விட்டுக் கொடுத்திருந்த தன் கட்டிலில் படுத்துக்கொண்டான்.

தலையணையில் அவள் வாசம் வர முகத்தை சுருக்கியவன் “இதை மாற்று” என அதிகாரமாக சொல்ல, சோபாவில் படுத்துக்கொண்ட அவள் “காலைல மாத்துவாங்க, கவலைப்படாதீங்க!” என்று திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

வெறுப்புடன் என்றாலும் தலையணையில் தலைசாய்த்து படுத்துக்கொண்டான்.

அதிகாலையில் கண்விழித்த ஆர்யன் சோபாவில் ருஹானாவை காணாமல் திடுக்கிட்டான். தடதடவென வேகமாக எழுந்து பால்கனியில் எட்டிப் பார்த்தவன் அந்த அழகு காட்சியில் கனிந்து நின்றான்.

குளிராடை எதுவுமின்றி கைகளை கட்டிக்கொண்டு சூரியன் உதிக்காத சிவந்த வானத்தை வெறித்துக்கொண்டு ருஹானா சோகப்பதுமையாக நின்றிருந்தாள்.

“எப்படியாவது சீக்கிரம் இங்க இருந்து கிளம்பிடணும். இவானை கூட்டிட்டு போக என்ன வழின்னு தேடணும்.”

மேல்மாடி தோட்டத்திற்கு வந்த அம்ஜத், சால்வையை கொண்டுவந்து ருஹானாவிற்கு போர்த்த, திரும்பிய ருஹானா அவனுக்கு நன்றியுரைத்தாள்.

“ஏன் ருஹானா இந்த நேரத்துல இங்க வந்து நிக்கிறே?”

“எனக்கு தூக்கம் கலைஞ்சிடுச்சி, அம்ஜத் அண்ணா!”

“ஏன்? உன்னோட அமைதி கெட்டுப் போச்சா?”

அதை கேட்டதும் நிமிர்ந்து மேன்மாடத்தை ருஹானா நோக்க, அங்கே நின்று ஆர்யன் இவர்களை கவனித்துக் கொண்டிருப்பதை பார்த்தாள். முகம் மாறியவள் “வாங்க அம்ஜத் அண்ணா! உள்ளே போகலாம். குளிர் அதிகமா இருக்கு” என கூட்டி சென்றாள்.

———

அலுவலக மேசையில் ருஹானாவின் நகைகள் இருப்பதை பார்த்த ஆர்யன் அதை கையில் எடுத்தான். திருமண மோதிரம் தவிர தான் அளித்த அத்தனை ஆபரணங்களும் இருப்பதை கண்டவன், ருஹானா உள்ளே வரவும் அவளிடம் கேட்டான். “இது என்ன?”

“நீங்க எனக்கு கொடுத்தது!”

“இதெல்லாம் ஆர்யன் அர்ஸ்லான் உனக்காக வாங்கியது. நீ தைரியமா சவால் விட்ட மனிதன் உனக்கு போட்ட பிச்சை. நான் சொல்றவரை அது உன்கிட்டே தான் இருக்கணும். நீ எளிதா தூக்கி போட முடியாது. இது போன்ற மலிவான நாடகத்தையெல்லாம் நிறுத்து” என்று கத்திவிட்டு அவற்றை தரையில் எறிந்தான்.

“சித்தப்பா! சித்தி! நாம பூங்காவுக்கு போலாமா?” என்று இவான் உள்ளே வர, ருஹானா மறுப்பதற்கு முன் ஆர்யன் முந்திக்கொண்டான். “இன்னைக்கு எனக்கு வேலை இருக்கு, சிங்கப்பையா! நாளைக்கு போலாம்.”

“ஹைய்யா! நாங்க பூங்காவுக்கு போறோமே!” என்று குதித்த இவான், இருவரையும் காலை உணவுக்கு அழைத்து வந்தான்.

“ருஹானா! நீ ஏன் வெளுத்து தெரியுறே?” என்று சல்மா கபடப்பரிவாக கேட்க, அம்ஜத் “அவ தூங்கவே இல்ல, காலைலயே தோட்டத்தில இருந்தாளே!” என்றவன் “சல்மா சொல்றது சரி தான். நீ நல்லா இல்லயே, என்னாச்சி ருஹானா? ஏன் உனக்கு தூங்க முடியல?” என படபடப்பாக கேட்டான்.

Advertisement