Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                 அத்தியாயம் – 122

“நிஜமாத்தான் சொல்றியா அக்கா?”

“ஆமா, சல்மா! நானே நேர்ல பார்த்தேனே! இறுதி யாத்திரையை பார்க்கறது மாதிரி கல்யாண போட்டோவை பார்த்தாங்க ரெண்டு பேரும்.”

குதூகலமான சல்மா “அந்த சூனியக்காரி என்ன செய்தா?” என ஆர்வமாக கேட்டாள்.

“பாவம், அவ என்ன செய்வா? வெளுத்து போய் சிலையா நின்னா. ஆனா ஆர்யன் புத்திசாலி. எதையும் முகத்துல காட்டிக்கல. ஆனா ரெண்டு பேரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கல. அவன் மனசுல அவ இல்ல. இனி நீ நிம்மதியா மூச்சு விடலாம்.”

———–

ஜோடியாக இருவரும் நிற்கும் கல்யாணப் படத்தை வரவேற்பறை அலங்கார மேசையில் வைத்த ருஹானா “நிஜமா இதெல்லாம் பொய்யா?” என கேட்டுக்கொண்டாள்.

அங்கே ஜாஃபர் வர அவனிடமும் கேட்டாள். “என்ன நடந்தது ஜாஃபர் அண்ணா? உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். நீங்க தானே மலையை போல அவரை நம்ப சொன்னீங்க!”

“இதுக்கான பதில் என்னோட எல்லைக்கு அப்பாற்பட்டது, ருஹானா மேடம்! ஆனா ஒன்னே ஒன்னு சொல்லுவேன். காலத்தின் மீது நம்பிக்கை வைங்க.”

சோகமாக தலையாட்டிய ருஹானா “நீங்க இவானை பார்த்துக்கறீங்களா? நான் வெளியே போயிட்டு வந்துடறேன்” என கேட்டாள்.

“கண்டிப்பா!” என்று அவன் சொன்னதும் அவள் மாளிகையை விட்டு வெளியேற, அதை கரீமா பார்த்துக்கொண்டு இருந்தாள்.

                                        ———-

“இவான் செல்லம்! யாரை தேடுறே நீ? உன் சித்தியையா? அவங்க அவசரமா புறப்பட்டு வெளியே போனாங்களே! வா, நான் உனக்கு சாப்பிடத் தரேன்” என ஆர்யனின் காதுபட பேசி இவானை சமையலறைக்கு அழைத்து சென்றாள் கரீமா.

‘நிச்சயமா அவனை பார்க்கத்தான் போயிருப்பா!’ என மனதில் சொல்லிக்கொண்ட ஆர்யன் வேகமாக எழுந்து காரை எடுத்தான்.

———

“எல்லாமே பொய், பர்வீன் அம்மா, எல்லாமே!”

“இரு இரு மகளே! பொறுமையா விளக்கமா சொல்லு. அழாதே!”

“அது நான் மாட்டிக்க விரிச்ச வலை. அம்மா! இவானுக்காக என்னை ஏமாத்தி கிணத்துல தள்ளிட்டார்.”

“ஆர்யனா இப்படி செய்தார்? என்னால நம்ப முடியலயே!”

“ஆரம்பத்துல இருந்தது போலவே அவர் என்னை வெறுக்கறார், எதிரியா பார்க்கறார் அம்மா. அங்க என்னால இருக்க முடியல. புழுங்கி தவிக்கிறேன். ஒவ்வொரு நொடியும் சித்ரவதையா இருக்கு. இவானுக்காக மட்டும் தான் நான் அங்க இருக்கேன்.”

“இங்க பார் ருஹானா! கண்டிப்பா வேற ஏதோ காரணம் இருக்கு, மகளே! அவர் கண்ணுல உனக்கான அன்பை நான் பார்த்தேன். அது பொய்யாக சாத்தியமே இல்ல.”

“இல்ல, அம்மா! அவர் என்னோட இதயத்தை சுக்குநூறா உடைச்சிட்டார்.”

“என்னை நம்பு. கொஞ்சம் பொறுத்திரு, மகளே! உண்மை சரியான நேரம் வெளிவந்தே தீரும். அப்போ ஆர்யன் ஏன் இப்படி நடந்துக்கறார்ன்ற காரணமும் தெரிய வரும்.”

———

“ஏன், ஏன் ஏன்?” என கேட்டுக்கொண்டே ருஹானா சாலையில் பாவமாக நடந்து செல்ல, காத்திருந்து அவளை பின்தொடர்ந்த ஆர்யனின் கார் மெல்ல ஊர்ந்து வந்தது.

பூங்காவின் அருகே நடந்து வந்தவள் அங்கே காற்றில் ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலை பார்த்து நின்றுவிட்டாள். ஆர்யன் தள்ளிவிட அவளும் இவானும் அசைந்து ஆடியது அவள் நினைவிற்கு வர, அவளை பார்த்திருந்த ஆர்யனுக்கும் அதுவே நிகழ்ந்தது.

நினைவுகளின் அழுத்தம் தாங்காமல் அங்கே இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து ருஹானா குலுங்கி குலுங்கி அழ, ஆர்யனின் கண்களிலும் நீர் திரையிட்டது. என்ன நடந்திருந்தாலும் சரி அவள் கண்ணீரை துடைப்பதே முக்கியம் என காரிலிருந்து இறங்கியவன் அவளை நோக்கி நடந்தான்.

அவளை நெருங்கும்சமயம் எதிரே மிஷால் வருவதை பார்த்த நொடி ஆர்யன் மேனியெங்கும் தீப்பற்றி எரிந்தது. மின்னல் வேகத்தில் திரும்பி காரை செலுத்திக்கொண்டு சென்றுவிட்டான். ஆபத்து சமயத்தில் சரியான நேரத்தில் காப்பாற்ற வராத மிஷால் அவள் மேல் பழிவிழ மட்டும் எங்கிருந்து தான் வருவானோ?

ருஹானாவை கண்டு ஆச்சரியமான மிஷால் அவள் அழுதுகொண்டு இருப்பதை பார்த்து பக்கம் நெருங்கினான். “ருஹானா! ஏன் அழறே? அவன் தானே காரணம்? நான் தான் சொன்னேனே!”

“என்கிட்டே பேசாதே! என் முன்னாடி கூட வந்திராதே!” பல்லைக் கடித்துக்கொண்டு அவனிடம் சீறிய ருஹானா வேகநடையிட்டு நகர்ந்துவிட்டாள்.

——–

ஒரே நாளில் அந்நியமாய் தெரிந்த அர்ஸ்லான் மாளிகையை பார்த்துக்கொண்டே உள்ளே வந்த ருஹானாவை எதிர்கொண்ட அம்ஜத், “ருஹானா! இங்க பார், நீ காப்பாத்தின பறவைக்கு கூடு செஞ்சிட்டோம். இனி அது குணமாகி பறக்கறவரை இந்த கூட்டிலயே இருக்கலாம். இதை மரத்துல தொங்கவிடப் போறோம். எல்லாருக்கும் வீடு அவசியம், இல்லயா?” என கேட்டான்.

“ஆமா, அம்ஜத் அண்ணா! நீங்க சரியா தான் செய்திருக்கீங்க” என ருஹானா பாராட்ட, சிரித்தபடி அவனும் ஜாஃபருடன் தோட்டம் நோக்கி சென்றான்.

சமையலறையில் நஸ்ரியாவுடன் விளையாடிக்கொண்டு இருந்த இவானை சென்று பார்த்த ருஹானா, “சித்தி! நான் உங்களை தேடினேன். என்னை விட்டு எங்க போனீங்க?” என்று அவன் கேட்கவும் அவனை கட்டியணைத்து முத்தமிட்டாள்.

அவனுக்கு ஆப்பிள் வெட்டித் தரும்போது தேனிலவுக்கு செல்லும் வழியில் இருவரும் ஆப்பிள் சாப்பிட்டது ஞாபகம் வர, “தனியா இருக்கும்போது கூட நல்லா தானே நடந்துக்கிட்டார்?” என அங்கலாய்த்தாள்.

———

சமையலறையில் இருந்து வெளியே வந்த ருஹானாவை ஆர்யன் கையைப் பற்றி முரட்டுத்தனமாக இழுக்க, அவள் வேகமாக அவன் கையை உதறினாள். “விடுங்க, நானே வரேன்!”

படுக்கையறையில் நுழைந்ததும் ஆர்யன் “என்னை கேட்காம நீ வெளிய போகக்கூடாது. நீ எங்க போறே, யாரை பார்க்கறேன்னு எனக்கு தெரியணும். புரியுதா?” என்று கோபமாக இரைய, அவனை விட சத்தமாக ருஹானா கத்தினாள்.

“போதும்! நிறுத்துங்க! இப்போ நீங்க யார்? எனக்கு யார் நீங்க? என்னோட பொக்கிஷத்தை பாதுகாத்தவரா, எனக்கு எல்லாம் செய்தவரா, இல்ல இப்போ என்முன்னே நிக்கிற காட்டுமிராண்டியா? எனக்கு உங்களை தெரியவே இல்ல!” பேசிக்கொண்டு இருக்கும்போதே அவளது அன்னையின் புகைப்படத்தையும், முடிவிலி சின்னத்தையும் எடுத்து கட்டிலில் போட்டாள். அவளின் ரௌத்திரம் கண்டு ஆர்யன் ஒருகணம் அசந்து நின்றுவிட்டான்.

அவளை நெருங்கி அவளது தோள்பட்டையை பிடித்து உலுக்கியவன் “இதோ உன் முன்னாடி இருக்கற நான் தான் உண்மை! இவானுக்காக தான் உன்னை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க எல்லாமே செய்தேன்” என்று சொல்ல, அவனை கண்ணுக்குள் பார்த்த ருஹானா இல்லையென தலையாட்டினாள்.

“இல்ல, நான் நம்ப மாட்டேன். வேற ஏதோ இருக்கு. எதுக்கு என்னை படகுல கூட்டிட்டு போனீங்க? கையை பிடிச்சி மலை மேலே ஏன் அழைச்சிட்டு போனீங்க? ஏன் ஆப்பிள்.. ஏன் மலர்கள்… அப்போ நம்மை சுத்தி யாருமே இல்ல. நமக்கு ஏற்கனவே கல்யாணமும் ஆகியிருந்தது. அப்பவும் ஏன் இதெல்லாம் செய்தீங்க? ஏன்? ஏன்? ஏன்?”

“ஏன்னா நீ மேலே இருந்து கீழே விழணும்னு நினைச்சேன். ஏன்னா நான் உன்னை வெறுக்கறேன்.” நடந்ததை சொல்லாமல் மேலும் அவன் மீது பழி போட்டுக் கொண்டான். அந்த வெறுப்பை தாங்கமுடியாத ருஹானா கண்களை மூடிக்கொண்டாள். கண்ணீர் கோடாய் இறங்கியது.

“நீ சவால்விட்டே தானே? இவானை நீ என்கிட்டே இருந்து பிரிச்சி கூட்டிட்டு போவேன்னு, நானே இவானை உன்கிட்டே தூக்கி கொடுப்பேன்னு!”

“அந்த உன்னோட அகங்காரத்தை அடக்க நினைச்சேன். ஆர்யன் அர்ஸ்லான் யாருன்னு உனக்கு காட்டணும்னு நான் ஆசைப்பட்டேன். நீ என்ன ஆர்யன் அர்ஸ்லான் கூட நாமாகிடுவியா?”

“நடக்க முடியாததுலாம் கனவா கண்டியே, இப்போ நொறுங்கிப் போனியா?” முகத்தை சுருக்கி இகழ்ச்சியாக ருஹானாவை மேலும்கீழும் ஆர்யன் பார்க்க, அவள் கூனிக்குறுகிப் போனாள்.

கதவை அறைந்து சாத்திவிட்டு ஆர்யன் வெளியேற, ருஹானா உணர்வின்றி கட்டிலில் சரிந்தாள்.

———-

கல்லறை சாலையில் காரிலேயே வெகுநேரம் அமர்ந்திருந்த ஆர்யன் மிகுந்த தயக்கத்துடன் தந்தையின் கல்லறைக்கு வந்தான். மணலில் மண்டியிட்டு அமர்ந்தவன் மணல்மேட்டை மெல்ல தடவிக் கொடுத்தான். உடைந்து சேர்ந்த எலும்பு கொண்ட இடது முழங்கையை பற்றிக்கொண்டவன், குரல் கமற தந்தையிடம் மனவேதனையைக் கொட்டினான்.

“முதல்முறையா உங்களை பார்க்க வந்திருக்கேன், அப்பா!”

“உன் அப்பா போல இருக்காதேன்னு ஒரு பெண் சொல்லிட்டு போனாளே, அதைப் போலவே நானாகிட்டேன், அப்பா! உங்களை போலவே ஆகிட்டேன்!”

“என்னை நம்ப வச்சி ஏமாத்திட்டா ஒருத்தி. எப்படி நான் இருக்கக்கூடாதுன்னு இத்தனை வருஷங்களா இருந்தேனோ, அந்த நிலைமைக்கு என்னை கொண்டுவந்துட்டா. உடைச்சி தூளாக்கிட்டா. என்னால மூச்சு விட முடியல.”

Advertisement