Advertisement

பேயறைந்தது போல முகம்மாறிய சல்மா “ஆனா அதெல்லாம்…” என்று விளக்க வர, “நான் ஒருமுறை தான் சொல்லுவேன். நான் அதை நம்பல” என்று ஆர்யன் சொன்னான்.

“அவ என் மனைவி. அவ அப்படித்தான் இங்க இருப்பா. நீங்க அவளை எதும் கேட்கக் கூடாது. அவ்வளவு தான். இதைப் பத்தி யாருக்கும் எதுவும் தெரியக்கூடாது. முக்கியமா அவளுக்கு.. ஒரு வார்த்தை கூட.. இதான் முடிவு.”

ஆர்யன் ஓரளவாவது கருணை கொண்டவனாக ருஹானாவை இவர்கள் முன்னால் தரம் தாழ்த்தவில்லை.

உறுதியாக சொன்ன ஆர்யனின் கூற்றை ஏற்ற கரீமா “நீ சொன்னா சரியா தான் இருக்கும், ஆர்யன். நீ சொன்னபடியே நாங்க செய்றோம்” என்று சல்மாவை இழுத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

அவர்கள் இருக்கும்வரை நிதானமாக காட்டிக்கொண்ட ஆர்யன், அவர்கள் சென்றதும் அந்த நீலக்கோப்பின் மேல் முஷ்டியால் குத்தினான். அலைபேசியை எடுத்து ரஷீத்திற்கு அழைத்தவன் இவானின் உரிமையை பெற தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க சொன்னான்.

——–

கரீமாவின் அறையில் “எப்படி இப்படி ஆகும்? அதெப்படி ஆர்யன் இதை நம்பாமல் போவான்?” என சல்மா ஆவேசமாக கத்த, நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருந்த கரீமா புன்னகை செய்தாள்.

“அடங்கு சல்மா! ஆர்யன் நம்பிட்டான்.”

“என்ன சொல்றே அக்கா?”

“இவானோட கஸ்டடி ருஹானா கைவசம் இருக்கு. அதனால தான் இன்னும் அவளை அடிச்சி விரட்டாம இருக்கான். கொஞ்சம் காத்திரு சல்மா! அதுக்கும் எதாவது ஏற்பாடு செய்வான், ஆர்யன் டியர்!”

——–

ஆர்யன் மறந்துவிட்டு சென்ற செல்பேசியை சாரா எடுத்து தர, ருஹானா பூக்களோடு அதையும் எடுத்துக்கொண்டு சென்று ஆர்யன் மேசையில் வைத்தவள் “நீங்க எளிதா நடிக்கறீங்க. என்னால முடியல” என்று சோர்வாக சொன்னாள்.

அவள் அறைக்கு வந்ததை உணர்ந்தும் திரும்பாமல் நின்றிருந்த ஆர்யன் “முடிந்து தான் ஆகணும்” என்றான் அதிகாரமாக.

“எல்லாம் மாறின பின்ன.. எனக்கு அப்படி நடக்க தெரியல” என்று அவள் சலிப்பாக சொல்ல, வேகமாக திரும்பிய ஆர்யன் காலியான பூச்சாடியை அவள் கையில் திணித்து முறைப்பாக ஏதோ சொல்ல வருவதற்குள் ஜாஃபர் உள்ளே வந்து “சமூக சேவை நிறுவனத்தில இருந்து வந்திருக்காங்க” என்று அறிவித்துவிட்டு சென்றான்.

பூக்களை தானே ஜாடியில் வைத்த ஆர்யன், தனது போனை எடுத்துக்கொண்டு “கீழே வந்து என் மனைவியா நடி. ஒழுங்கா நடந்துக்கலனா அதோட விலை இவான்! நினைவு வச்சிக்கோ” என்று மிரட்டிவிட்டு கீழே சென்றான்.

ஆர்யன் இரு அதிகாரிகளையும் வரவேற்று உள்ளே அழைத்தவன், ருஹானா வரவும் அவளுடன் கை கோர்த்துக்கொண்டான்.

“வாழ்த்துக்கள்! எப்படி இருக்கு உங்க திருமண வாழ்க்கை?”

“நான் தப்பு செய்திட்டேன்!” என்று ஆர்யன் பக்கத்தில் அமர்ந்திருந்த ருஹானாவை பார்த்து சொல்ல மூவரும் திகைத்தனர். “முன்னாடியே நாங்க நிக்காஹ் செய்திருக்கணும். தேவையில்லாம தள்ளி போட்டுட்டேன். இவளோட முன்னமே இணைந்திருந்தா என்னோட மகிழ்ச்சி எப்பவோ கிடைச்சிருக்கும்” என்று அவன் காதலாக அவளை பார்க்க, அதிகாரிகள் சிரிப்பை மறைத்துக் கொண்டனர்.

“அருமை! எங்களுக்கும் சந்தோசம். நீங்க சொல்லுங்க ருஹானா!”

“இவானுக்கு அதிக ஆனந்தம். எங்களை பெற்றவர்களா நினைக்கறான். எப்பவும் சிரிச்சிட்டே இருக்கான்.”

“நல்லது, இவானோட மகிழ்ச்சி தான் எங்களுக்கு முக்கியம். ஆனா ருஹானா மேடம் நீங்க சரியா இல்லயே?  சோர்வா தெரியறீங்க.”

“நான் நல்லா தான் இருக்கேன். ரெண்டு நாள் முன்ன சின்ன விபத்து. களைப்பா இருக்கு. அவ்வளவு தான்.”

“திருமண வேலைகள், தேனிலவு, விபத்து.. இப்படியே அடுத்தடுத்து எங்களை சோர்வாகிடுச்சி” என்று ருஹானாவின் தோளை அணைத்தபடி ஆர்யனும் சேர்ந்து கொண்டான்.

“ஆமா, எங்க மேல கண் பட்டுடுச்சி. அதை தவிர்த்து பார்த்தா எல்லாம் சரி தான். அன்புக்குரியவங்க கூட ஒரே கூரையின் கீழ இருக்கற சந்தோசத்துக்கு ஈடு இணையே இல்ல” என்று ருஹானா ஆர்யனை பார்த்தபடி இகழ்ச்சியாக சொன்னாள்.

“உங்க நிக்காஹ் போட்டோவை இணையத்துல பார்த்தோம். உங்க நடனம் மிக சிறப்பா இருந்தது.”

“நன்றி!”

“ருஹானா மேடம்ட்ட இவானோட கஸ்டடி இருக்கு. இப்போ உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சி. நீங்க ரெண்டு பேரும் இவானுக்கு அம்மா அப்பாவா உங்க கடமைகளை செய்யணும்.”

“எல்லாமே இவானுக்காக!” என்று இருவரும் ஒரே நேரத்தில் கூறினர்.

“அவனை வளர்க்கற பொறுப்பும் அவனோட எதிர்காலமும் எங்க கையில இருக்கு. அதை நாங்க தவறவிட மாட்டோம்” என்று ஆர்யன் சொல்ல, “இவான் எங்களோட அன்பை பார்த்தும் அதை அனுபவித்தும் வளர்வான்” என்று ருஹானாவும் அவனை ஒட்டியே பேச, வெகு திருப்தியான அதிகாரிகள் இவானிடம் தனியே பேச சென்றனர்.

“உன்னோட சித்தி சித்தப்பா கல்யாணம் செய்தது உனக்கு சந்தோசமா இருக்கா?”

“ஆமா, ரொம்ப.. ரொம்ப…! நான் அவங்களுக்கு இடையில படுத்து தூங்குவேன். இந்த பக்கம் சித்தி, இந்த பக்கம் சித்தப்பா, நடுவுல நான்” என்று இவான் அவர்களிடம் சந்தோசமாக விவரித்தான்.

தூரமாக அமர்ந்திருந்த அவர்களை பார்த்தபடி ருஹானாவை நெருங்கிய ஆர்யன் அவள் கூந்தலை ஒதுக்கியவாறே “அவங்களுக்கு சந்தேகம் வராம நடந்துக்கணும்” என கண்களில் கடுமை காட்டி சொல்ல, அதை தாங்கமுடியாத ருஹானா பட்டென்று எழுந்து “நான் தண்ணீ குடிச்சிட்டு வரேன்” என்று சென்றுவிட்டாள்.

கண்ணீரை துடைத்தபடி தண்ணீரை மடக்கு மடக்காக விழுங்கும் ருஹானாவை, ஜாஃபர் இரக்கமாக பார்த்த பார்வையில் தன்னால் அவளுக்கு உதவ முடியவில்லையே என்ற ஆற்றாமையும் கலந்திருந்தது.

இவானுடன் பேசிமுடித்த அதிகாரிகள் ஆர்யனிடம் விடைபெற வந்தனர். “உங்க நேரத்தை எங்களுக்காக ஒதுக்கினதுக்கு நன்றி மிஸ்டர் ஆர்யன். இவானோட சந்தோசம் பார்த்து எங்களுக்கும் சந்தோசம். நாங்க எங்க தொடர்ந்த விசாரணைக்காக இடைவெளி விட்டு மறுபடியும் வருவோம்.”

ஆர்யன் தலையசைக்க, “எங்க ருஹானா மேடம்?” என்று கேட்டனர்.

“எங்களுக்காக காபி தயாரிக்க போயிருக்கா” என்று ஆர்யன் சொல்லும்போதே அங்கே ருஹானா வர, அவளை பார்த்து “நீ நமக்கு காபி கொண்டு வா. நான் இவங்களை வழியனுப்பிட்டு வரேன்” என்று அவர்களை வெளியே அழைத்து சென்றான்.

‘என்னது! காபியா?’ என்று ருஹானா திகைத்துப் பார்த்தாள்.

——–

காபி கோப்பைகளுடன் ஆர்யனின் அறைக்குள் வந்த ருஹானாவை பார்த்து ஆர்யன் முகம் சுருக்கினான். “என்ன இது?”

“நீங்க தானே கேட்டீங்க?”

“நான் உன்கூட உட்கார்ந்து காபி குடிப்பேன்னு நினைச்சியா?”

அவர்கள் இருவரும் சேர்ந்து காபி அருந்திய அத்தனை இனிய தருணங்களும் அவளுக்கு நினைவு வர, “எனக்கு புரியல. குழப்பமா இருக்கு. என்ன செய்யன்னு எனக்கு தெரியல. நான் என்ன தான் நினைக்கறது?” குழம்பிப்போன ருஹானா அவனிடமே பரிதாபமாக கேட்டாள்.

“எதுவும் நினைக்காதே. நான் என்ன சொல்றேனோ அதன்படி செய்” என்று கத்திவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

——-

அன்னையின் புகைப்படத்தை கட்டிக்கொண்டு சுவரை பார்த்து ருஹானா அழுதபடி படுத்திருக்க, உள்ளே வந்த ஆர்யனுக்கு அழுகையில் குலுங்கும் அவளது தோள்களை பார்த்து மனம் பதறியது. அவள் கண்ணீரை துடைக்க கைகள் துடிக்க, சந்தேகம் கொண்ட அவன் மூளை தடுத்தது.

அப்போது “சித்தி!” என கத்தியபடி அழுகையுடன் இவான் பாய்ந்து ஓடிவர, ருஹானா எழுந்து அவனை கட்டிக்கொண்டாள். “என்ன அக்னிசிறகே?” என ஆர்யனும் அருகே நெருங்கினான்.

“சித்தி! நான் பயங்கரமான கனவு கண்டேன். படகுல போகும்போது நீங்க ரெண்டு பேரும் கடல்ல விழுந்திட்டீங்க. உங்களால மூச்சு விட முடியல. நான் கத்தி கத்தி கூப்பிடுறேன்” என்று அவன் பயப்பட, ருஹானா அவனை தேற்றினாள்.

“அது வெறும் கனவு தான், கண்ணே! பார், நாங்க இங்க தான் இருக்கோம்.”

“ஆனா நெஜம் போலவே இருந்தது. நான் உங்க கூட படுத்துக்கவா?”

இருவரும் அதிர்ந்து விழிக்க, ருஹானா மறுப்பதற்குள் “சரி தான் சிங்கப்பையா. நீ உன் சித்தி கூட படுத்துக்கோ. எனக்கு வேலை இருக்கு. முடிச்சிட்டு வரேன்” என்று ஆர்யன் சொல்ல, “சீக்கிரம் வந்து என் பக்கம் படுத்துக்கோங்க, சித்தப்பா” என்றான் இவான்.

ஆர்யன் தலையாட்டி வெளியே செல்ல, இவான் ருஹானாவை கட்டிக்கொண்டு படுத்தான். “அழாதீங்க சித்தி! இப்போ எனக்கு பயம் போய்டுச்சி. நீங்க தண்ணியில விழுந்தாலும் சித்தப்பா உங்களை காப்பாத்திடுவார்.”

       ———

வெளிமாடத்தில் ஆகாயம் பார்த்து நின்ற ஆர்யனிடம் ஜாஃபர் “பனி ஊசியா குத்துமே, ஏன் இங்க நிற்கறீங்க, சார்?” என்று கேட்க, சிறிது நேரம் மௌனம் சாதித்த ஆர்யன் தன் மனக்குமுறலை வெளியே கொட்டினான்.

“மத்தவங்க பற்றி முடிவுகளை பகலிலயும், இதயத்துல இருக்கறவங்க பற்றி இரவிலயும் முடிவு எடுக்கணும்னு சொல்வாங்க தானே, ஜாஃபர்? என்னால இப்பவும் அவளை போக சொல்ல முடியலயே! என்னோட கோபத்தை அவ முகத்தை பார்த்து காட்ட முடியல. அதே சமயம் எனக்குள்ள இருந்து ஒலிக்கற குரலையும் அடக்க முடியல. அவளோட ஒரே அறையில மூச்சு விட முடியல. அவ என்னோட திசை காட்டியா ஒரு சமயத்துல இருந்தா. ஆனா… இப்போ எல்லாம் இவானுக்காக… கடல் ஆழத்துல பாறையா நான் மூழ்கினாலும் இவானை விட்டு தர மாட்டேன்!”

ஜாஃபர் ஒன்றும் சொல்லாமல் அகல, நெடுநேரம் அங்கேயே நின்ற ஆர்யன் அறைக்கு திரும்ப, அங்கே ருஹானாவை இறுக கட்டிக்கொண்டு தூங்கும் இவானை பார்த்து நின்றான்.

———-

காலையில் திருமணப் புகைப்படங்கள் வந்திருக்க, அதை எடுத்துக்கொண்டு கரீமா அவர்களை நோட்டம் பார்க்க வந்தாள்.

“ஆர்யன்! படங்கள் எல்லாம் ரொம்ப அழகா வந்திருக்கு. எதுலாம் சட்டம் போட்டு சுவற்றில் மாட்டணும்னு நீங்க ரெண்டு பேரும் பார்த்து சொன்னீங்கனா இப்பவே கொடுத்துடலாம்.”

ருஹானா சிரமப்பட்டு முகத்தை இயல்பாக வைத்திருக்க, ஆர்யன் ஒரு புகைப்படத்தை எடுத்து அவளிடம் நீட்டினான். “இதுல நீ ரொம்ப அழகா இருக்கே. இதை நம்ம அறையில வைக்கலாம்.”

அவள் அதை கசந்த புன்னகையுடன் வாங்க, கரீமா எல்லாரும் இருக்கும் படத்தை எடுத்து “ருஹானா டியர்! இதை உன்னோட பர்வீன் அம்மாட்ட கொடு. அங்கயும் மகள், மருமகன் புகைப்படம் மாட்டணும், இல்லயா?” என்று கொடுத்தாள்.

“சரி அண்ணி, மத்ததை நாங்க பார்த்துக்கறோம்” என்று சொல்லி ஆர்யன் கரீமாவை வெளியே அனுப்ப, ருஹானாவும் உள்ளறைக்கு செல்ல திரும்பினாள்.

“எங்க போறே? நீ தான் இதை தேர்ந்தெடுத்து சட்டம் போட அனுப்புறே. மாளிகைல அங்க இங்க மாட்டி வைக்கிறே” என்று ஆணையிட, “என்னால முடியாது” என ருஹானா மறுத்தாள்.

“நீ தான் செய்றே!”

“எனக்கு இது தேவையில்லாதது” என ருஹானா பிடிவாதம் பிடிக்க, “உனக்கு எது தேவை, எது தேவையில்லன்னு நான் முடிவு செய்துக்கறேன்” என்று சொன்ன ஆர்யன், புகைப்படங்களை அவள் காலடியில் ஆத்திரமாக வீசியெறிந்து வெளியேறினான்.

அவள் இதயத்தில் ஆழமாக ஆணி அடிக்கும் அவன் தான் அவளுக்கு தேவை இல்லாதவன். அவளுடைய பரிசுத்தமான அன்பை பெறும் தகுதி, அவளின் ஆத்மார்த்த காதலை கிட்டும் அருகதை அவனுக்கு எள்ளளவும் இல்லை.

 

(தொடரும்)

Advertisement