Advertisement

அவளின் நீர் தேங்கிய கண்கள் கண்டு அவனுக்கு அப்போதும் இதயம் வலிக்க, அதற்கும் அவன் அவளையே குற்றம் சாட்டி எல்லைமீறிய தன் கோபத்தை என்ன செய்ய என புரியாது நின்றான்.

உள்ளே குமுறிக் கொண்டிருப்பது எரிமலை என அறியாது அவன் அமைதி கண்டு அருகில் வந்த ருஹானா “இப்போ சொல்லுங்க, என்ன நடந்தது? ஏன் இப்படி இருக்கீங்க? நீங்க இப்படி இருக்கறது எனக்கு வேதனையா இருக்கு. ஏன்னு சொல்லுங்க. எனக்கு உண்மை தெரியணும்” எனக் கேட்டாள்.

“என்னை பொறுத்தவரை நீ ஒன்னுமே இல்ல. இதான் உண்மை!” அவள் முகம் நோக்கி கொந்தளித்தான்.

விக்கித்துப் போன ருஹானா “நான்…” என தொடங்க, “நீன்னு எதுவுமே இல்ல. இந்த மாளிகையில உனக்கு ஒரு மதிப்பும் இல்ல. என்னோட பார்வையிலும் இல்ல” என்று ஆவேசமாக இரைந்தான்.

“ஆனா நடந்தது எல்லாம்…” நம்பிக்கை இழக்காமல் ருஹானா அவர்களின் காதலை நினைவுப்படுத்தப் பார்க்க, அதற்கும் ஆர்யன் பதில் வைத்திருந்தான்.

“எல்லாமே இவானுக்காக. உன்னை இங்க இருக்க வச்சது இவானை நான் இழக்கக்கூடாதுன்னு தான். அதுக்கு என்ன தேவையோ அதை தான் செய்தேன்.”

“இல்ல! இல்ல!” கண்ணீர் வெள்ளமாக வடிந்தது.

“எல்லாம் முடிந்தது. சமூக சேவை நிறுவனம் நம்பினாங்க, குடும்பத்தினர் நம்பினாங்க, எல்லாரும் நம்பிட்டாங்க. ஏன் நீயும் நம்பினே! நான் வெட்டின குழியில நீ விழுந்திட்டே!” இரக்கமே இன்றி பேசினான்.

“ஆனா இந்த கற்பனைக்கதை இதோட முடிந்தது. இப்பவும் நீ இங்க இருக்க விரும்பற தானே?” அவள் தேம்பல் கண்டும் அவன் நிறுத்தவில்லை.

“அப்படின்னா இனி நான் என்ன சொல்றேனோ அதன்படி தான் நீ இருக்கணும்.” வெளியே கையை காட்டி “இந்த கதவுக்கு அப்புறம் எல்லாம் ஒழுங்கா இருக்கற மாதிரி தான் நீ நடிக்கணும்” என்றான்.

“ஆனா இங்க.. இந்த கூண்டுல… நீ உயிரோட இருந்தாலும் சரி, இந்த சிறையில செத்தாலும் எனக்கு அதை பத்தி அக்கறை இல்ல” என்று அவன் கத்த, அவள் பயந்துபோய் பின்னடைந்தாள்.

“இப்போ என் கண்ணு முன்னால நிக்காதே. போ!” என அவன் வெறுப்புடன் சொல்ல, வெளிப்படும் கதறலை வாயை மூடிக்கொண்டு அடக்கியபடி இதெல்லாம் நிஜம் தானா என அவனையே பார்த்தாள். அவன் முகத்தை திருப்பிக் கொள்ள தள்ளாடியபடி வெளியே வந்தாள்.

நிற்காமல் கொட்டும் கண்ணீரை துடைத்தபடி வெளியே வரும் ருஹானாவை மறைந்திருந்து பார்த்த கரீமாவும், சல்மாவும் சந்தோஷத்தின் உச்சியில் இருந்தனர். “நம்ம வேலை வெற்றிகரமா முடிந்தது” என இருவரும் கைகளை தட்டிக் கொண்டனர்.

மெல்ல தோட்டத்துக்கு வந்து சேர்ந்த ருஹானாவின் அதிர்ச்சி கொஞ்சமும் விலகவில்லை. தோட்டத்தில் செடி நடுவதற்காக ஆழமாக வெட்டி வைத்திருந்த குழியை பார்த்தபடி கதறி அழுதாள்.

——–

படுக்கையறைக்குள் வந்த ஆர்யன் கோட்டை கழற்றி கட்டிலில் வீசியெறிந்தான். உள்ளே வெப்பம் தகிக்க சட்டையை அகற்ற முனைந்தவன் பட்டனை கழற்ற பொறுமையின்றி சட்டையை இருகைகளாலும் பிய்த்து தூக்கி வீசினான்.

“இவானுக்காக மட்டும்.. இல்லனா..” என பொரிந்தவன் அலமாரியில் இருந்த இருவரின் துணிகளையும் எடுத்து தன் பலங்கொண்ட மட்டும் அறையெங்கும் வீசியடித்தான்.

தலையை பிடித்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தவன் “எப்படி முடியும்..? அவளோட.. ஒரே அறையில.. எல்லாம் இவானுக்காக..” என புலம்பினான்.

வாசலுக்கு வெளியே கடுங்குளிரில் அழுதுகொண்டிருந்த ருஹானா எழுந்து உள்ளே வந்தாள். இவானின் அறைக்குள் வந்தவள் அயர்ந்து தூங்கும் இவானின் கையைப் பற்றி முத்தமிட்டாள். “நான் சமாளிப்பேன். உனக்காக நான் எத்தனையோ செய்திருக்கேன். இதை செய்ய மாட்டேனா? நீ என்கூட இருக்கும்போது இந்த உலகமே எதிர்த்தாலும் நான் கலங்க மாட்டேன். பின்வாங்க மாட்டேன்.”

———

கட்டிலில் குறுக்காக படுத்து தன்னையறியாமல் உறங்கிய ஆர்யன் மனதுக்கு பிடித்தமான நறுமணத்தை ஆழ்ந்து சுவாசித்தபடி கண் திறந்தான். தேனிலவில் ருஹானா அணிந்திருந்த உடை அவன் அருகே இருக்க, அதை முதலில் ஆசையாக பார்த்தவன் பின் அனைத்தும் நினைவிற்கு வர அதை தூக்கி தரையில் வீசினான்.

“அவ இன்னும் இங்க தான் இருக்கா. அவளோட வாசனை, அவளோட ஆன்மா, அவளோட ஒவ்வொரு பாகமும் இங்க இருக்கு. என் தலைக்குள்ள இருக்கு. எனக்குள்ள இருக்கு.”

——–

“சித்தி! நீங்க என்கூடவா தூங்குனிங்க?” காலையில் விழித்தெழுந்த இவான் கேட்க, “இல்ல கண்ணே! காலையில உன்னை பார்க்க வந்தேன். நீ தூங்கிட்டு இருக்கவும் நானும் உன்கூட தூங்கிட்டேன்” என ருஹானா சமாளித்தாள்.

“என் ஸ்வெட்டரை எடுத்துட்டு வரேன். நீ போய் பல்தேய்த்து குளி. நாம சாப்பிடப் போவோம்” என்று சொல்லி அறைக்கு சென்றவள், அறை அலங்கோலமாக கிடப்பதை பார்த்து எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள். “நீங்க உடைச்சா நான் அதை சரி செய்வேன். இவானுக்காக நான் எதுவும் செய்வேன்.”

——–

இவானும் ருஹானாவும் சாப்பிட வர அவர்களுக்கு முன்னமே ஆர்யன் உணவு மேசையின் நடுவில் அமர்ந்திருந்தான். அவனை பார்த்து ருஹானா திகைத்து நிற்க, இவான் அவளை இழுத்து செல்ல, அருகே நெருங்கினர்.  இவான் காலை வணக்கம் சொல்லிவிட்டு ஆர்யனின் வலதுபுறம் அமரவும் ருஹானாவும் இவான் பக்கத்தில் அமர சென்றாள்.

கடுமையான முகத்துடன் தன் இடப்பக்கத்தை காட்டிய ஆர்யன் “இங்க.. நீ என் பக்கத்துல தான் உட்காரணும்” என்று சொல்ல, கண்ணீர் தளும்பினாலும் கால்கள் எட்டு எடுத்து வைக்க மறுத்தாலும் அவன் காட்டிய இடத்தில் அமர்ந்தாள். “எல்லாமே ஒழுங்கா இருக்கற மாதிரி தெரியணும்” என்று ஆர்யன் அடிக்குரலில் மிரட்டினான்.

உணவு மேசைக்கு வரும்போதே சகோதரிகள் “பட்டிக்காட்டுப் பேய் இல்லாம இன்னைல இருந்து நாம சாப்பிடப் போறோம், அக்கா” என மகிழ்ந்தபடி வர, ஆர்யன் ருஹானாவை பரிவாக கவனிப்பது கண்டு அதிர்ந்து நின்றனர்.

“சாரா! அவளுக்கு காபில இன்னும் கொஞ்சம் டிகாஷன், சர்க்கரை சேருங்க.”

சல்மா கோபத்தில் குதிக்க “அமைதியா இரு சல்மா! என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்” என்று கரீமா தங்கையை கூட்டிவந்தாள்.

ருஹானாவிற்கு தொண்டையடைக்க, சகஜமாக உண்ணும் ஆர்யனை அவ்வப்போது பார்த்தபடி எதும் சாப்பிடாமல் அமர்ந்திருந்தாள்.

“என்ன ருஹானா? ஒண்ணுமே சாப்பிடல? வெளுத்து தெரியறே! எதும் பிரச்சனையா?” என கரீமா கேட்க, பதில் அளித்தது ஆர்யன். “நான் சொன்னா கேட்கவே மாட்டேங்கறா அண்ணி. டயட்ல இருக்கேன்னு சொல்றா. அவளுக்கு அதெல்லாம் தேவையில்லைன்னு நான் நினைக்கறேன். இப்படியே அழகா தானே இருக்கா?”

“ஆமா, ஆர்யன் சொல்றது சரி தான். நீ மெலிவா இருக்கே, ருஹானா டியர்!”

“பார்த்தியா? நான் சரியா தான் சொல்றேன். இதையும் சாப்பிடு. என் மனைவி நோஞ்சானா இருக்கறது எனக்கு பிடிக்காது. இதை குடி, உடம்புக்கு நல்லது” என ஆர்யன் பரிமாற, சல்மா பொருமலாய் பார்க்க, ருஹானாவிற்கு புரையேறியது.

வேகமாக அவளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொடுத்த ஆர்யன், அவள் குடித்து முடித்ததும் “ஓகே தானே?” என கவலையாக கேட்டான். அவன் நடிப்பை ஜீரணிக்க முடியாத ருஹானா “எனக்கு ஒண்ணுமில்லை” என கசப்பாக பதில் சொன்னாள்.

கரீமா ருஹானாவிற்கு முட்டையை எடுத்து வைக்க ஆர்யன் தடுத்தான். “வேணா அண்ணி! அதிக வெள்ளைக் கரு சாப்பிட்டா அவளுக்கு தோல்ல தடிப்பு வரும்.”

கரீமாவும் சல்மாவும் ‘என்ன நடக்கிறது இங்கே?’ என்பது போல பார்த்துக்கொண்டனர்.

அப்போது அம்ஜத் மலர்களை கொண்டுவர ஆர்யன் அவற்றை வாங்கி ருஹானாவிடம் கொடுத்தான். “உனக்கு பிடித்த பூவாச்சே! நம்ம அறையில வை.”

ருஹானா திகைத்து விழிக்க, சல்மா பொறுத்துக்கொள்ள முடியாமல் கரீமாவின் ஆடையை பற்றி இழுத்தாள். கரீமா அவளுக்கு கண்ணால் ஜாடை காட்டினாள், பொறுத்திருக்கும்படி.

“நாங்க தங்கியிருந்த இடத்துலயும் இந்த பூக்கள் நிறைய இருந்தது. நாங்க அவசரமா வந்ததால எடுத்துட்டு வர முடியல” என்று ஆர்யன் அம்ஜத்திடம் சொல்ல, “ஆமா, போட்டோல பார்த்தேன். அழகான இடமா தெரிஞ்சது. எப்படி இருந்தது உங்க தேனிலவு ஆர்யன்? ஒரு தடவை நாம எல்லாரும் அங்க போகலாமா?” என அம்ஜத் கேட்டான்.

“அதே தான் நாங்க நினைச்சதும். இவளும் சொல்லிட்டே இருந்தா. அப்படித்தானே?” என்று ருஹானாவிடம் திரும்பிய ஆர்யன் அவளின் கையைப் பற்றினான்.

“ஆமா, அம்ஜத் அண்ணா! உங்களுக்கு அந்த இடம் ரொம்ப பிடிக்கும்.”

“அங்க என்ன என்ன பார்த்தீங்க சித்தி?”

“இவானுக்கு சொல்லு” என்று சிரிப்புடன் ஆர்யன் ருஹானாவிடம் சொல்ல, அவளுக்கு பேச குரல் எழவில்லை. என்றாலும் அதை விளக்க ஆரம்பித்தாள். மேசைக்கு அடியில் சல்மா கையில் இருந்த கத்தியை ருஹானாவின் புறம் திருப்ப, கரீமா அவள் கையை அசையவிடாமல் பிடித்துக்கொண்டாள்.

“அங்க அழகழகான பூனைகள், வாத்துக்கள் இருந்தது, கண்ணே! எல்லாமே குடும்பமா இருந்தது. பிரியாம இருந்தது.” ஆர்யனை ஒரு சீறும் பார்வை பார்த்தாள்.

எல்லாரும் அவள் முகத்தை பார்க்க கண்ணீரை அடக்கிக்கொண்டு ருஹானா விவரித்தாள். “நாங்க காட்டுக்குள்ள ரொம்ப தூரம் நடந்து போனோம். அங்க பெரிய ஏரியை பார்த்தோம்.”

“ஏரியா? அது கடல் போல பெருசா இருக்குமா சித்தி? அதுல கப்பல் போகுமா?”

“இல்ல, செல்லம்! அது சின்ன கடல் போல இருக்கும். கப்பல் போக முடியாது. ஆனா படகு போகலாம். நாங்க கூட படகு சவாரி செய்தோம். உன்னோட சித்தப்பா துடுப்பு தள்ளினார். முழு ஏரியும் சுத்தி வந்தோம்.”

“ஹேய்! என்னோட சித்தப்பா கேப்டன்!”

இதுவரை அவள் சொன்னதை தலையை ஆட்டி ஆமோதித்துக்கொண்டு இருந்த ஆர்யன் “அவசர வேலை வந்திருக்கலனா நாம ஒரு வாரம் இருந்துட்டு வந்திருக்கலாம். அடுத்த முறை அப்படி போய் இருக்கலாம்” என்று புன்சிரிப்புடன் சொல்ல, சிரமப்பட்டு உதட்டை இழுத்து பிடித்து புன்னகைத்த ருஹானா “ஆமா, எல்லாரும் சேர்ந்து போவோம்” என்றாள்.

“அண்ணி என் அறைக்கு வாங்க” என்று ஆர்யன் எழுந்து செல்ல, கரீமாவும் சல்மாவும் அவனை பின்தொடர்ந்தனர்.

ஆர்யன் அறைக்கு சென்றதும் சல்மா “ஆர்யன்! எப்படி அவ இன்னும் இங்க…” என தொடங்கவும் அவளை கைநீட்டி தடுத்த ஆர்யன் “எனக்கு ஆதாரங்கள் மேலே அக்கறை இல்ல. நான் எதையும் நம்பவும் இல்ல” என்றான்.

Advertisement