Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                 அத்தியாயம் – 121

பொறுமையிழந்திருந்த ருஹானா ஆர்யனின் கோபத்திற்கு காரணம் கேட்டபடி அவன் காரின் பின்னே ஓடிவர, ஒரு கார் அவளை மோதி தள்ளி சென்றுவிட்டது. அதை பார்த்து ஆர்யன் திகைத்து போய் காரை சட்டென்று நிறுத்தினான்.

அவள் பக்கம் சாயும் தன் இதயத்தை திட்டியபடி கீழே இறங்கி வந்தவன் மயங்கி கிடந்த அவள் நிலை கண்டு மனம் கலங்கினான். வேகமாக அவளை தூக்கி காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை விரைந்தான்.

அங்கே மருத்துவர்கள் அவளை அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்ல, செவிலி ஒருத்தி ஆர்யனிடம் விசாரித்தாள். “நீங்க அடிப்பட்டவங்களுக்கு என்ன வேணும்?”

“அவங்க என் மனைவி!”

“இந்த படிவத்தை நிரப்பி தாங்க” என்று சொல்லி அவள் தந்துவிட்டு செல்ல, ருஹானாவை பற்றிய விவரங்களை எழுதியவன் செல்பேசி சத்தமிட்டவும் அதை எடுத்தான்.

“சொல்லு ரஷீத்!”

“வங்கில விவரம் கேட்டு இருக்கேன், ஆர்யன். நாளைக்கு அது வந்துடும். திறமையான குரல் நிபுணரை தேடிட்டு இருக்கேன். ரெண்டு நாள்ல நீங்க சொன்ன வேலை முடிந்திடும்.”

“உண்மையை கண்டுபிடி ரஷீத்! சீக்கிரம் கண்டுபிடி” என்று நிராசையுடன் சொன்ன ஆர்யன் அவசர சிகிச்சை அறையின் வாசலிலேயே நடந்து கொண்டிருக்க, மருத்துவர் வெளியே வந்தார்.

“எப்படி இருக்காங்க?” என்று ஆர்யன் அவரிடம் கவலையாக கேட்டான்.

“பெரிசா ஒன்னும் அடிபடல. அதிர்ச்சியில மயங்கி இருக்காங்க. உள்காயம் எதும் இருக்கான்னு பரிசோதனை செய்யணும். ஒரு நாள் எங்க கண்காணிப்புல இருக்கட்டும். இப்போ தனியறைக்கு மாத்திடுவோம். அதுக்கு அப்புறம் நீங்க உங்க மனைவியை பார்க்கலாம்” என்று சொல்லி அவர் அகன்றார்.

“இது அவங்க போட்டு இருந்த ஆபரணங்கள். சிகிச்சை செய்யும்போது கழட்டினது” என்று செவிலிப் பெண் ஆர்யனிடம் நகைகளை தந்தாள்.

அவற்றை பார்த்துக்கொண்டே அமர்ந்த ஆர்யன், அவளது கைவளையை தடவி நெடுநேரம் யோசித்தான். வங்கி அட்டையை தொலைத்த தினம் அவளை சமாதானப்படுத்த அவன் அவளுக்கு அணிவித்த அந்த ஆபரணம் அவனை சிந்திக்க வைத்தது.

இவான் புகைப்படம் கொண்ட அவளின் சங்கிலி இவானின் மேல் அவள் வைத்திருக்கும் அன்பை அவனுக்கு நினைவூட்டியது. ‘உனக்கு ஏதாவது நடந்தா நான் இறந்திடுவேன்’ என இவானை ருஹானா தீயிலிருந்து காப்பாற்றிய தருணம் அவன் சிந்தனையை ஆழமாக்கியது.

ருஹானாவின் அறையை திறந்து உள்ளே சென்ற ஆர்யன் இன்னும் உணர்வில்லாமல் படுத்திருக்கும் அவளை பார்த்தபடியே நின்றான்.

“நிஜமா, நீ யார்? விஷமா, மருந்தா? தேவதையா, அரக்கியா?”

வாழ்வின் ஆதாரமாய் அவளை

கொண்டாட விழைந்தவன் கைகளில்

அவளுக்கெதிராய் ஆதாரங்கள்…

கைப்பிடித்தவன் கரங்களிலா

சேதாரங்கள் வந்து சேரவேண்டும்?

அவனின் நம்பிக்கை தராசு

கொண்டவள்புறம் சாயுமா..

கொடுஞ்சான்றுகள் கொடைசாய்க்குமா…

தவித்து துடிக்குது நெஞ்சம்!

நகைககளை பக்கமேசையில் வைத்த ஆர்யன் வெளியே வந்து ஜாஃபருக்கு அழைத்து விவரம் சொன்னவன் அவனை ருஹானாவின் துணைக்கு இருக்க வர சொன்னான், இவானுக்கு தெரியாமல்.

———-

கண்விழித்து எழுந்த ருஹானாவிடம் ஆர்யன் அவளை மருத்துவமனையில் சேர்த்ததை ஜாஃபர் சொல்ல, ‘கொண்டுவந்து சேர்த்தவருக்கு கூட இருக்க மனமில்லை. நான் கண்விழிக்க காத்திருக்கவும் முடியவில்லை’ என்று வருத்தப்பட்ட ருஹானா பக்கத்திலிருந்த திருமண மோதிரத்தை எடுத்து விரலில் மாட்டிக்கொண்டாள்.

‘என்ன ஆனாலும் சரி, அவர் மனதை குடையும் விஷயத்தை நான் கண்டுபிடிப்பேன்!’

———

ஜாஃபரும் சாராவும் போனில் பேசிக்கொண்டு இருந்ததை கேட்டுவிட்ட இவான் ஆர்யனிடம் ஓடி வந்தான். “சித்தப்பா! சித்தி ஹாஸ்பிடல்லயா இருக்காங்க?”

ருஹானா விழித்திட்டாளா என ஜாஃபரிடம் போனில் கேட்க தயங்கிக் கொண்டிருந்த ஆர்யன் “ஆமா இவான்! ஆனா அவங்க குணமாகிட்டு இருக்காங்க. நீ கவலைப்படாதே!” என்றான்.

“வாங்க, சித்தப்பா! நாம அங்க போகலாம். எனக்கு சித்தியை பார்க்கணும். நான் அவங்களை கட்டிப்பிடிச்சா அவங்களுக்கு சரியாகிடும்” என்று இவான் கெஞ்சி கேட்டு மருத்துவமனைக்கு ஆர்யனை அழைத்துவந்தான்.

இவானை உள்ளே விட்டுவிட்டு ஆர்யன் வெளியிலேயே நின்று சித்தி மகன் இருவரின் பாசப்பிணைப்பை பார்வையிட்டான், ஓரக்கண்ணால்.

கவலைப்பட்ட இவானை அணைத்துக்கொண்ட ருஹானா “எனக்கு சீக்கிரம் சரியாகிடும், அன்பே!” என்று ஆறுதல் அளிக்க, அவனோ “நான் உங்களை பார்த்துக்குவேன், சித்தி” என்று சொல்ல, வாசலில் நின்ற ஆர்யன் ருஹானாவின் கண்ணீர் கண்டும் அவளை முறைத்தான்.

———-

மாளிகைக்குள் காரை கொண்டுவந்து ஆர்யன் நிறுத்த, பின்னிருக்கையில் இருந்து ருஹானாவும் இவானும் கீழே இறங்கினர். ருஹானா இலேசாக தடுமாற, தன்னிச்சையாக அவளை பிடித்துக்கொள்ள முன்வந்த ஆர்யன் தன்மீதே கோபம் கொண்டு பின்னே நகர்ந்து விட்டான்.

இவானும், ஜாஃபரும் ருஹானாவை தாங்க, இவான் “சித்தப்பா பிடிச்சிக்கிட்டா நீங்க கீழ விழவே மாட்டீங்க சித்தி!” என்று சொல்ல, “அதான் எனக்கு நீ இருக்கியே, என்னுயிரே!” என ருஹானா எட்டு எடுத்து வைக்க மீண்டும் தடுமாறினாள். இப்போதும் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை.

“நீங்க விழுந்தா சித்தப்பாக்கு தாங்க முடியாது, அப்படித்தானே சித்தப்பா?” என்று இவான் கேட்க, வேறுவழியின்றி ஆர்யன் அருகே வந்து அவள் கைப்பற்றி உள்ளே அழைத்து சென்றான்.

விபத்துக்கு வருத்தம் தெரிவித்த கரீமா “எப்படி நடந்தது ருஹானா டியர்?” என்று விசாரித்தாள்.

“கார் வந்ததை நான் கவனிக்கல, கரீமா மேம்!” என்று ருஹானா மறைத்து பேச, ஆர்யன் “அவளுக்கு ஓய்வு தேவை அண்ணி!” என்று மேலே அழைத்து சென்றான்.

“உனக்கு எதும் தேவையா ருஹானா?” என்று கூடவே வந்த சாரா கேட்க, இல்லையென ருஹானா சொல்ல, அவளை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு சாரா இவானை கூட்டிக்கொண்டு வெளியே சென்றார்.

“உங்களுக்கு நேரம் இருந்தா….” என ருஹானா ஆர்யனின் முகம் பார்த்து தொடங்க, அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் “எனக்கு வேலை இருக்கு” என்று அவன் வெளியே சென்றான்.

உடல்வலியை விட அதிக மனவேதனையுடன் ருஹானா கட்டிலில் சாய்ந்தாள்.

———

வெளிமாடத்தில் அமர்ந்திருந்த ஆர்யனுக்கு காபி கொடுத்த ஜாஃபர் “உங்களுக்கு வேற எதும் தேவையா, சார்?” எனக் கேட்டான்.

“நூலை விட மெலிசான பாலத்து மேல நான் நின்னுட்டு இருக்கேன். அதை கடக்க எனக்கு உண்மை தான் தேவை!”

“உண்மை ஒளிந்து தான் இருக்கும். அதை தேடி கண்டுபிடிக்கறது கடினம். ஆனா உண்மையும் நம்பிக்கையும் சகோதரர்கள். நம்பிக்கையை இழக்காதீங்க. நம்பிக்கையை தவறவிட்டீங்கன்னா உண்மையும் மறைந்திடும்.”

“நான் நம்பிக்கை வைக்கும்போதெல்லாம் என் எதிரே சந்தேக சுவர் தான் வந்து நிக்கிது. நான் அதுல போய் மோதிடறேன். இன்னைக்கு அவளோட நகைகளை என்கிட்டே கொடுத்தாங்க. அதுல நான் கொடுத்த பிரேஸ்லெட்டும் இருந்தது. வங்கி அட்டை காணாம போனதுல அவளுக்கு ஏற்பட்ட துன்பத்தை மறக்க நான் அதை அவளுக்கு வாங்கிக் கொடுத்தேன். ஆனா இப்போ எனக்கு தோணுது, நிஜமாவே வங்கி அட்டையை அவ தொலைத்தாளா? அதை பயன்படுத்தி அதிக மதிப்புள்ள தங்கநகைகள் வாங்கப்பட்டு இருந்தது.”

“ருஹானா மேம் தான் அதை வாங்கியிருப்பாங்கன்னு நீங்க நினைக்கிறீங்களா?” என்று ஜாஃபர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் எழுந்த ஆர்யன், வேகமாக ருஹானாவின் பழைய அறைக்கு சென்றான்.

திருமணத்திற்கு முந்திய தினம், பர்வீன் அம்மாவின் வீட்டிற்கு ருஹானாவை ஆர்யன் அழைத்து சென்ற தினம், சூட்கேசுடன் அவளது அறையில் யோசனையுடன் ருஹானா அமர்ந்திருந்தது அவனுக்கு நினைவு வந்தது.

ஆவேசமாக அங்கிருந்த அலமாரி, மேசை எல்லாவற்றையும் உருட்டி தள்ளினான். கட்டிலுக்கு பக்கத்து மேசையை அவன் கோபமாக எட்டி உதைக்க அதன் இழுப்பறை பாதியிலேயே நின்றது. சந்தேகப்பட்ட ஆர்யன் கீழே குனிந்து அந்த இழுப்பறையை வெளியே எடுத்தான்.

அந்த இழுப்பறை இருந்த இடத்தின் அடியில் ஒரு உறை இருக்க, அதை வெளியே எடுத்தான். அதில் புத்தம்புதிய தங்கநகைகளோடு அவனது தொலைந்து போன வங்கியட்டையும் இருந்தது.

                                                  ———

“அக்கா! வேலை வெற்றிகரமா முடிந்தது. என் கண்ணு முன்னாலயே குரல்பதிவு அசல்தான்னு அறிக்கை எழுத வச்சிட்டேன். பணம் தான் எக்கச்சக்கமா கொடுக்க வேண்டியதாச்சி.”

“அது பரவாயில்ல, விடு. நம்ம வேலை நடந்தா போதும், சல்மா. இங்க புதையலே அள்ளிடலாம்.”

“மிஷால் பணத்தை திரும்ப வங்கியில போய் கட்டிட்டானா?”

“ஆமா சல்மா! ருஹானாவோட கல்லறையில கடைசி ஆணியும் அடிச்சாச்சி.”

———

ருஹானாவின் அறைக்கு ஓடிவந்த ரஷீத் “ஆர்யன்! நீங்க கத்தின சத்தம் கேட்டு இங்க வந்தேன். என்ன அது கையில?” என்று கேட்டான்.

அவனிடம் கூட ருஹானாவின் திருட்டுத்தனத்தை பகிர விருப்பப்படாத ஆர்யன், “நீ அந்த ஆளை கண்டுபிடிச்சியா? ஃபைல்ல இருக்கறது உண்மையான்னு தெரிஞ்சதா?” என்று தன்னை அடக்கிக்கொண்டு கேட்டான்.

“குரல்கள் எல்லாம் அசல்தான் ஆர்யன். வங்கியில பணம் எடுத்ததும் மிஷால் தான்” என்று நிபுணர் கொடுத்த அறிக்கையும், தனது செல்பேசியில் மிஷால் பணம் எடுப்பதையும் ரஷீத் ஆர்யனுக்கு காட்டினான்.

மிஷாலை பார்த்ததும் ஆர்யனின் ரத்த நாளங்கள் கொந்தளிக்க, அவன் மூச்சு விடக்கூட முடியாமல் நின்றான்.

“சாரி, ஆர்யன்! ருஹானாவுக்கு எதிரா யாரோ சதி செய்திருக்காங்கன்னு தான் நானும் கடைசிவரை நம்பி இருந்தேன்” என்று ரஷீத் வருத்தமாக பேச, ஆர்யன் அந்த அறிக்கையை கைகளால் கசக்கினான்.

‘உங்க அம்மா யார்கூடவோ ஓடிப் போறாங்க’ எனும் குரல் பின்னே ஒலிக்க, ‘உன் அப்பாவை போல இருக்காதே!’ என்று ஆர்யனின் அம்மா அவனை கீழே தள்ளிவிட்டு சென்றதும் அவன் தலையில் சுழன்றன.

ஆர்யனின் வேர்த்து சிவந்து போன முகத்தை பார்த்து பயந்த ரஷீத் “ஆர்யன்! என்ன?” என்று பதட்டப்பட, ஆர்யன் அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.

‘எந்த பெண்ணையும் நான் நம்பினது இல்ல. ஆனா உன்னை நம்பறேன். உன்னை மட்டும்!’ என அவன் ருஹானாவிடம் சொன்னது அவனுக்கே திரும்ப கேட்டது. எவ்வளவு தூரம் தான் முட்டாளாக்கப்பட்டோம் என மனம் கொதித்த ஆர்யன் தனது அறைக்கு வர, உடை மாற்றிக்கொண்டு கலங்கிய கண்களுடன் ருஹானா எதிரே வந்தாள்.

Advertisement