Advertisement

தோட்டத்தில் ருஹானா அடிபட்ட பறவைக்கு சிகிச்சை அளித்தபடி அதனுடன் கண்ணீரோடு பேசிக் கொண்டிருப்பதை பார்த்து நின்றான்.

“யார் உன்னை இப்படி செய்தது? உனக்கும் ஏன் இந்த வேதனைன்னு புரியல, இல்லயா? பயப்படாதே. நான் உன்னை குணமாக்குவேன். சீக்கிரமே உனக்கு இந்த வலி மறைஞ்சிடும். இப்போதைக்கு நல்ல நிகழ்வுகளை மட்டும் நினைச்சிக்கோ.”

அம்ஜத் வந்து ருஹானாவிடம் அந்த பறவையை வாங்கி தடவிக் கொடுக்க, ஆர்யன் மாளிகைக்குள் சென்றான்.

சல்மாவின் அறைக்கு வந்த ஆர்யன் “இந்த துப்பறிவாளனோட பேர், முகவரி, தொலைபேசி எண் எனக்கு தேவை” என்றான். பயந்து நடுங்கிய சல்மா “எனக்கு அவளைப் பத்தி முன்னாடியே தெரியும். அதனால தான் நான் உங்ககிட்டே சொல்லிட்டே இருந்தேன்…” என்று இழுத்து இழுத்து பேச, “நான் கேட்டது மட்டும்” என்றான் ஆர்யன் கறாராக.

சல்மா அவன் கேட்ட தகவல்களை எழுதிக்கொடுக்க, அதை வாங்கிக்கொண்டு தனது அறைக்கு வந்தான். அங்கே காத்திருந்த ரஷீத்திடம் அந்த கோப்பை கொடுத்த ஆர்யன் “இதுல இருக்கறது எல்லாமே உண்மையா பொய்யான்னு எனக்கு உடனே கண்டுபிடிச்சி சொல்லு” என்றான்.

ரஷீத் அதை வாங்கிக்கொண்டு வெளியே செல்ல, அதை பார்த்த சல்மா கரீமாவிடம் ஓடினாள்.

“அக்கா! நாம கொடுத்த ஆதாரங்களை ஆர்யன் நம்பல. ரஷீத்ட்ட அதை விசாரிக்க சொல்லி கொடுத்திருக்கான்.”

“நான் நினைச்சேன், ஆர்யன் இப்படி தான் செய்வான்னு. அவ்வளவு லேசா அவன் ஏமாறுவானா? மத்தது எதுவும் கண்டுபிடிக்க முடியாது. குரல்பதிவு மட்டும் சந்தேகம் தான். அது வெட்டி ஒட்டினதுன்னு நிபுணர்கள் ஈஸியா சொல்லிடுவாங்க.”

“ஐயோ அக்கா! இப்போ நாம என்ன செய்ய?”

“நீ ரஷீத்தை தொடந்து நெருக்கமா கண்காணி. அந்த ஒலிப்பதிவு கருவி மட்டும் எங்க போகுதுன்னு கண்டுபிடி. அப்புறம் நாம பணத்தால அடிச்சி அதையும் உண்மைன்னு நம்ப வச்சிடலாம்.”

“சரி அக்கா!”

———-

ஆர்யனுக்கு காபி கொண்டு சென்ற நஸ்ரியா ருஹானாவை பார்த்ததும் அதை அவளிடம் கொடுக்க, ருஹானா அதை கொண்டு சென்று ஆர்யனின் முன்னே மேசையில் வைத்தாள். அவன் அவளைப் பாராமல் திரும்பிக் கொள்ள, ஒரு முடிவுக்கு வந்த ருஹானா அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

“அந்த விடுதியில என்ன நடந்தது? எதுக்கு என்னை அப்படி விட்டுட்டு வந்தீங்க? அது உங்க வியாபார சம்பந்தமான சிக்கல்ன்னு சொன்னாங்க. அது உண்மையா?”

“அப்புறம்… என்மேலே ஏன் கோபப்பட்டீங்க? என்னை அறியாம நீங்க கோபப்படும்படி நான் எதும் செய்திட்டேனா?”

அவனிடமிருந்து ஒரு அசைவும் இல்லாதபோதும் ஒரு பெருமூச்சு விட்ட ருஹானா “எனக்கு புரியல, ஒரே நிமிசத்துல எப்படி நீங்க அப்படியே வேற ஆளா மாற முடியும்?” என கேட்க, ஆர்யன் அவளை திரும்பிப் பார்த்து முறைத்தான்.

“உனக்கு எதுவும் புரியணும்னு அவசியம் இல்ல!”

குற்றக் குறுகுறுப்பின்றி தைரியமாக அவன் பார்வையை தாங்கி அவள் நிற்க, அவன் தான் முகத்தை திருப்பிக்கொண்டான்.

“என்னை பார்த்து சொல்லுங்க. நான் எதாவது தப்பு செய்தேனா? எனக்கு தலையே வெடிக்குது. நீங்க எனக்கு விளக்கம் சொல்லித்தான் ஆகணும்.”

“நான் உனக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை” என்றவன் வெளியே சென்றுவிட்டான்.

காரணம் என்னவென்றே தெரியாமல் அவன் காட்டும் கோபம் அவளை அலைக்கழித்தது. அவனின் வெறுப்பு தாங்கிய பார்வையை அவளால் தாள முடியவில்லை.

——–

இரவில் பனிப்பொழிவில் அம்பு விட்டுக் கொண்டிருந்த ஆர்யனிடம் நெருங்கி வந்த கரீமா பணிவாக பயந்தவள் போல பேசினாள்.

“ஆர்யன் டியர்! எனக்கு இப்போ தான் விஷயம் தெரிஞ்சது. சல்மா செய்த தப்புக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். நம்ம குடும்பத்தோட நன்மைக்காக அவ இப்படி செஞ்சிருக்கா. எனக்கு முன்னமே தெரிஞ்சிருந்தா இதை நான் அனுமதிச்சிருக்க மாட்டேன்.”

கரீமா அவன் முகத்தை நோட்டமிட்டபடியே “ஆனா ருஹானா இப்படியெல்லாம் செய்திருப்பான்னு எனக்கு தோணல. ஏதோ தப்பு நடந்திருக்கு. நீயும் நம்பல தானே?” என்று கேட்டுப் பார்த்தாள்.

“உண்மை கண்டிப்பா வெளிய வரும்” என்று அவன் அழுத்தமாக சொல்ல, கரீமா உள்ளுக்குள்ளே பயந்தாள். அவள் முகம் வெளிறியது

“அதுவரை இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது” என்று ஆர்யன் கட்டளையிட, “கண்டிப்பா!” என்று பவ்யமாக சொல்லி சென்ற கரீமா சிறிது தூரத்தில் ஆர்யனை திரும்பி பார்த்து கிண்டலாக சிரித்தாள்.

———-

“சித்தி! சித்தப்பா கோபமா இருக்காரா?”

“ஏன் செல்லம் அப்படி கேட்கறே?”

“அவர் கோபமா இருந்தா தான் வில் பயிற்சி செய்வார். அவர் என்மேல தான் கோபமா இருக்காரா?”

“இல்ல தேனே! உன்மேல எப்படி கோபப்படுவார்? அவருக்கு நிறைய வேலை. கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் ஆகத்தான் இப்படி செய்யறார். உன்னை அவர் ரொம்ப நேசிக்கிறாரே. உன்னால ஒன்னும் இல்ல” என்று இவானை அணைத்து முத்தமிட்ட ருஹானா அவனை படுக்க வைத்தாள். “நேரமாச்சே, நீ தூங்கு!”

ஜன்னல் வழியே ஆர்யனை எட்டிப் பார்த்தவள் “அதிக குளிரா இருக்குமே!” என்று கவலைப்பட்டாள். ஒரு முடிவு எடுத்தவளாக கீழே இறங்கி அவனிடம் சென்றாள். அவள் வந்தது தெரிந்தாலும் ஆர்யன் அவளை பார்க்கவும் இல்லை. அம்பெய்வதை நிறுத்தவும் இல்லை.

“நீங்க பதில் சொல்ல மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா நீங்க ஏன் என்கிட்டே இப்படி நடக்கறீங்கன்னு எனக்கு நீங்க சொல்லித்தான் ஆகணும். ஏன்னா அது தெரிஞ்சிக்கற உரிமை எனக்கு இருக்கு.”

ஆர்யனிடமிருந்து பதில் வராமல் அம்புகள் பாய்ந்துக்கொண்டிருக்க, அவள் விடாது பேசினாள்.

“நாம கடற்கரைல இருக்கும்போது நீங்க உங்களைப்பற்றி ஒன்னு சொன்னீங்க. பாறை சிதறி உடைஞ்சதுன்னு. இப்பவும் அதே நிலைமைல தான் நீங்க இருக்கீங்க. ஆனா இந்த முறை நீங்க தனியா இல்ல. நான் உங்ககூட இருக்கேன். எப்போ உங்களுக்கு கோபம் வந்தாலும் என்கிட்டே காட்டுங்க. நான் அதை தாங்கிக்குவேன். ஆனா என்னன்னு தெரியாத இருட்டுல என்னை தள்ளாதீங்க. எதுவா இருந்தாலும் நாம சேர்ந்தே சரி செய்வோம். நீங்க மௌனமா இருந்தா பொல்லாத இருட்டுல நாம தொலைந்து போய்டுவோம்.”

அவள் குரல் உடைந்து பேச, ஆர்யன் கண்களும் கலங்கின. வில்லை இறுக்கி பிடித்துக்கொண்டு நேர் பார்வையோடு அம்பு பலகையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுக்காக கொண்டுவந்த குளிராடையை கீழே வைத்த ருஹானா மெல்ல நடந்து செல்ல, திரும்பிய ஆர்யன் அவள் கண்ணிலிருந்து மறையும்வரை பார்த்திருந்தான்.

தங்களின் அறைக்கு வந்த ருஹானா, மேசை இழுப்பறையிலிருந்து ஆர்யன் தந்த முடிவீலி சின்னத்தை எடுத்தவள் “நான் எங்கயும் போயிட மாட்டேன். நீங்க பழையபடி திரும்பற வரை நான் காத்திருக்கேன், எது நடந்தாலும் காத்திருக்கேன்” என்று சொல்லிக்கொண்டாள்.

அதிகாலையில் அறைக்கு வந்த ஆர்யன் பார்த்தது கட்டிலின் குறுக்கே படுத்துக்கொண்டு போர்த்திக்கொள்ளாமல் தூங்கும் ருஹானாவை தான். அவளின் கண்ணீர்க்கோடுகளை கண்டு நெருங்கியவன் அவள் விரலில் மாட்டியிருந்த முடிவீலியை பார்த்தான்.

அவன் மனம் இளக்கம் தர, அவளையே பார்த்துக்கொண்டு நின்றவனின் பார்வை மேசையில் அவள் எடுத்து வைத்திருந்த உடைந்த பேனாவின்மீது விழ, அவன் மனக்குரங்கு திரும்பவும் ஆவேசம் அடைந்தது.

பேனாவை கையில் எடுத்துக்கொண்டவனின் நினைவு திருமண ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதற்கு செல்ல, அடுத்து அவன் கையெழுத்து போட்ட இன்னொரு ஒப்பந்தமும் நினைப்பிற்கு வந்து தொலைத்தது.

அர்ஸ்லானின் சொத்துக்களில் எந்த பங்கும் தேவையில்லை என ருஹானா கையெழுத்திட்ட ஆவணம் பற்றி தோன்றியதும் அவனின் இதயம் மகிழ்ச்சியில் திளைத்தது. ருஹானா கைப்பட எந்த செல்வமும் வேண்டாம் என எழுதி தந்திருக்க, சல்மா அளித்த சான்றுகள் எல்லாம் போலியே என்ற தீர்மானத்துக்கு வந்த ஆர்யன் வேகமாக வெளியே சென்று அவன் மேசையில் அந்த ஆவணத்தை தேடினான்.

பரபரப்பாக அதை தேடி எடுத்தவன் அதை வாசிக்கவும் நிம்மதியானான், தன் மனைவி குற்றமற்றவள் என்று. என்றாலும் முழுதாக படித்துவிட எண்ணியவன் இறுதி வரை படிக்க முழுகுண்டு ஒன்று அவன் தலையில் விழுந்தது.

ஆறு மாதங்கள் மட்டுமே இது செல்லும் என்னும் நிபந்தனையை பார்த்தவன் கண்கள் அனலைக் கக்கின. அதை கசக்கி கையில் அழுத்தியவன் வேகமாக குறுக்கும் நெடுக்கும் நடக்க, விழித்து எழுந்த ருஹானா சந்தர்ப்பம் தெரியாமல் வெளியே வந்தாள்.

“நீங்க வந்துட்டீங்கன்னு எனக்கு தெரியாதே! நீங்க தூங்கவே இல்லயா? நாம பேசலாமா?” என்று மெதுவாக கேட்க, ரௌத்திரத்துடன் அவளை நோக்கிய ஆர்யன் அவளை நெருங்க, கதவு தட்டப்பட்டு திறந்தது.

காபி ட்ரேவுடன் உள்ளே வந்த நஸ்ரியா புன்னகையுடன் “ரெண்டு பேரும் சேர்ந்து காபி குடிப்பீங்கன்னு கொண்டு வந்தேன்” என்று இறங்கி வந்தாள்.

“எடுத்துட்டு போ!” மாளிகையே அதிரும்வண்ணம் ஆர்யன் கத்த, நஸ்ரியா மிரண்டு போய் “ஆனா…” என்று மன்னிப்பு கேட்க விழைய, “வெளியே போ!” என்று இரைந்தவன் காபி ட்ரேவை தட்டி விட்டான்.

காபி கோப்பைகள் நொறுங்க, நஸ்ரியா பயந்து நடுங்க, அவளை அணைத்து பிடித்த ருஹானா “சரி, சரி, நஸ்ரியா நீ போ” என்று அவளை அறைவாசல் வரை கொண்டுவிட்டாள்.

‘ஆத்திரம் அறிவுக்கு சத்துரு’ என்று தெரியாத ஆர்யன் கொதித்துப் போய் நிற்க, திரும்பி வந்த ருஹானா அவனை விட அதிகமாக சத்தமிட்டாள். “என்மேல கோபம் இருந்தா என்கிட்டே காட்டுங்க. ஒன்னும் தெரியாத அப்பாவி சின்னப் பொண்ணை ஏன் விரட்றீங்க?”

ஆர்யன் கோபத்தை அடக்க முடியாமல் வெளியே செல்ல முயல, அவனை தடுத்த ருஹானா அவன் கையைப் பிடித்துக் கொண்டாள். “நீங்க எங்கயும் போக முடியாது. எனக்கு பதில் சொல்லி தான் ஆகனும். என்கிட்டே பேசித்தான் ஆகணும். சொல்லுங்க!”

அவள் அவனை பிடித்து உலுக்க, அவளை வேகமாக உதறியவன் அறையை விட்டு வெளியேற, அவன் பின்னாலேயே அவளும் ஓடினாள். ஆர்யன் காரை எடுத்து வெளியே செல்ல, “காரை நிறுத்துங்க. எனக்கு பதில் சொல்லுங்க” என்று அவளும் ஆவேசமாக காரின் பின்னே ஓடிவந்தாள்.

கண்ணாடியில் அவள் ஓடிவருவது தெரிந்தாலும் ஆர்யன் நிறுத்தாமல் செல்ல, பக்கவாட்டு தெருவிலிருந்து வந்த கார் ஒன்று அவளை இடித்தது. ருஹானா மயங்கி சரிய, அவள் மேல் மோதிய கார் நிற்காமல் விரைந்தது.

(தொடரும்)

Advertisement