Advertisement

அர்ஸ்லான் மாளிகைக்குள் காரை செலுத்திய ஆர்யன், ருஹானாவுடன் திருமண கோலத்தில் அவன் இணைந்து நின்ற இடங்களை பார்க்கவும் தான் அழகாக ஏமாற்றப்பட்டோமோ என்று வெதும்பினான்.

கார் வந்து நின்ற சத்தம் கேட்டு வாசலுக்கு ஓடிவந்த ருஹானா ஆர்யனை பார்த்த சந்தோஷத்திலும் இறைவனை நினைத்தாள். “அல்லாஹ்க்கு நன்றி! நீங்க நலமா இருக்கீங்க!”

அவள் முகத்தை பார்க்காமல் குனிந்து இருந்தவன் அவளின் பிரார்த்தனையை கேட்டு நிமிர்ந்தான். அவள் குழந்தை முகத்தில் கவலை, நிம்மதி இரண்டையும் பார்த்து தெளிந்தான். ஆனால் அது ஒரு வினாடி தான் நீடித்தது.

“என்ன நடந்தது?” என்று அவள் அவன் கையை தொட வர, ஆர்யன் தீ சுட்டது போல ஒதுங்க, ருஹானா கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்.

அவளை கசப்புடன் பார்த்த ஆர்யன் விருட்டென்று உள்ளே போய்விட்டான். ருஹானா அடி வாங்கியதைப் போல திகைத்து நின்றுவிட்டாள்.

படிக்கட்டில் ஆர்யன் வேகமாக ஏறிவர, அவனை பார்த்த கரீமா “ஆர்யன் டியர்!” என்று அழைக்க, அவன் நிற்காமல் அறைக்குள் சென்றுவிட்டான்.

அவன் கோபத்தை இன்பமாக பார்த்து ரசித்த கரீமா, கீழே எட்டிப்பார்க்க அங்கே ருஹானாவின் சோகத்தை பார்க்கவும் இன்னும் குஷியானாள். ருஹானாவிடம் சென்ற கரீமா “ருஹானா டியர்! நான் கூப்பிட்டும் ஆர்யன் பதில் சொல்லாம போய்ட்டானே?” என்று கேட்க, “எனக்கும் தெரியல. ரொம்ப கோபமா இருக்கார்” என்று ருஹானா கவலையோடு சொன்னாள்.

“அப்போ நீ போய் அவன்கூட இரு. நீ பேசினா அவன் அமைதியாவான்” என்று ருஹானாவை ஆர்யனின் கோபக்கூண்டில் தள்ளிவிடப் பார்த்தாள்.

“நானும் போகத்தான் நினைக்கறேன். ஆனா அவர் இப்போ யாரையும் பார்க்க விரும்ப மாட்டார். தனியா இருக்கணும்னு நினைப்பார்” என ருஹானா தயங்கினாள்.

“அதுவும் சரி தான். ஆனா வேற யார்னா கஷ்டம். நீ அவன் மனைவியாச்சே? உனக்கு அவன் பதில் சொல்லித்தானே ஆகணும்? நீ தான் அவனுக்கு ஆதரவா இருக்கணும் இப்போ” என்று கரீமா பொய்யான உபதேசம் சொல்லி ருஹானாவை தூண்டினாள்.

———

கோப மூச்சுகளுடன் அறைக்குள்ளே வேகமாக நடந்து கொண்டிருந்த ஆர்யன் கட்டிலை பார்க்க, ருஹானா தூக்கத்தில் அவன் மீது கையை போட்டது நினைவுக்கு வந்தது. இனிமையாக அவன் மனதில் பதிந்திருந்த அந்த அழகிய தருணம் இப்போது ருஹானா திட்டமிட்டு செய்ததோ என்று தோன்றி அந்த இனிமையில் கருமை பூசியது.

ஆத்திரத்துடன் மேல்கோட்டை கழட்டி கட்டிலின் மீது வீச அவன் கோட்டில் இருந்து பேனா கீழே விழுந்தது. ருஹானா பரிசளித்த பேனாவை குனிந்து எடுத்த ஆர்யன் திருமண ஒப்பந்தத்தில் அதைக்கொண்டு கையெழுத்து இட்டதை நினைத்து வெறுத்துப் போனான்.

அந்த வெப்பம் மிகுந்த நேரத்தில் ருஹானா தயங்கியபடி உள்ளே வந்தாள்.

அவனிடம் மெதுவாக நெருங்கியவள் “நான் உங்களைப்பற்றி அதிகமா கவலைப்பட்டுட்டு இருந்தேன். என்ன பிரச்சனைன்னு என்கிட்டே சொல்லுங்க. உங்க இன்பதுன்பத்துல நான் பங்கேற்பேன்னு நான் உறுதிமொழி தந்துருக்கேனே!” என்று அவள் சொல்லிய வினாடி,

“போதும்!!” என்று இரைந்த ஆர்யன் தன் கையில் இருந்த பேனாவை ஆங்காரமாக இரண்டாக உடைத்துப் போட்டான். அப்படியே அதிர்ந்த பார்த்த ருஹானாவை இருகரம் கொண்டு பற்றியவன் ஆக்ரோஷமாக அவளை தள்ளிக்கொண்டே சென்று சுவரில் சாய்த்தான்.

திக்பிரமையடைந்த ருஹானா “என்ன ஆச்சு? ஏன் இப்படி நடந்துக்கறீங்க?” என்று கண்ணீரோடு கேட்டாள். அவளை கீழே தள்ளிவிட்ட ஆர்யன் வேகமாக வெளியே சென்றான். மாடிப்படி வளைவில் ஒளிந்து நின்று ஆர்யன் கோபமாக செல்வதை பார்த்த சகோதரிகள் கைகுலுக்கிக் கொண்டனர்.

“என்ன நடக்குது? எதுக்கு இத்தனை கோபம்? ஏன்? யார் மேலே? யாஅல்லாஹ்! எனக்கு புரியலயே!” என்று ருஹானா தேம்பியபடி உடைந்த பேனாவின் இரண்டு துண்டுகளையும் எடுத்தாள்.

———-

கார் அருகே வந்த ஆர்யன் எதிரே வந்த ரஷீத்தின் இடுப்பில் இருந்து துப்பாக்கியை எடுத்துக்கொண்டு காரில் ஏற, ரஷீத் “ஆர்யன்! என்ன? எங்க போறீங்க?” என்று கேட்டுக்கொண்டே பின்னால் ஓடிவர, ஆர்யன் வேகமாக கார் எடுத்து சென்றான். அதை ரஷீத்தும், ஜாஃபரும் திகைப்பாக பார்த்து நின்றனர்.

சாலையில் நடந்து கொண்டிருந்த மிஷால் தன் முன்னே புயல் போல வந்து நின்ற ஆர்யனின் காரை பார்த்து அதிர்ந்து நிற்க, காரிலிருந்து இறங்கிய ஆர்யன் தன் தலை கொண்டு மிஷாலின் தலைமீது வேகமாக மோதினான். அவன் சட்டையை பிடித்துக்கொண்டு தாறுமாறாக அடி வெளுத்துக் கட்டினான்.

துப்பாக்கியை எடுத்து ஆர்யன் மிஷாலின் நெஞ்சில் வைத்து அழுத்த, மிஷால் பயத்தில் மிரண்டான். “என்ன செய்றே? என்ன செய்றே நீ? நடுரோட்டுல என்னை கொல்லப் போறியா?”

அவனை வெறுப்புடன் பார்த்த ஆர்யன், மிஷாலின் கால்முட்டிக்கு கீழே சுட்டு விட்டான். அவனை சாலையில் தள்ளிவிட்டவன் “நீ இன்னும் உயிரோட இருக்கேன்னா, அதுக்கு காரணம் இவான்” என்று சொல்லிவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டான்.

ஆர்யனின் ஆழ்மனது ருஹானாவை நம்பினாலும் அவனின் மிஷால் மீதான பொறாமை அதை கடினமான மூடி கொண்டு மூடிவிட்டது. அவன் மூளையும் மழுங்கி விட்டது. ஆசையுடன் தான் தழுவ வேண்டிய தன் மனைவி மிஷாலின் அணைப்பில் பார்க்க அவன் ரத்தம் கொதித்தது. தான் அவளின் அன்பிற்கு ஏங்க, அவளோ மிஷாலிடம் காதலை சொல்ல, அதை கேட்கவும் அவனுடைய நாடி நரம்புகளிலும் வெறி ஏறியது.

———

“சூனியக்காரி ஏங்கி ஏங்கி அழுதுட்டு இருக்கா, அக்கா!”

“இப்போ தான் நம்மோட நேரம் ஆரம்பிக்குது. ஆர்யன் மாளிகைல இருந்து தரதரன்னு அவளை இழுத்து வெளிய தள்ளற நேரமும் வரப் போகுது.”

“சரி, நீ மிஷால்கிட்டே பேசினியா? இப்போ நடந்ததை சொன்னியா?”

“ஆமா, அவனை மறக்கக்கூடாதே. அவன் இல்லாம இதெல்லாம் சாத்தியமே இல்ல” என்ற கரீமா மிஷாலுக்கு அழைப்பு விடுத்தாள்.

ஆவணங்கள் ஆர்யனிடம் அடைந்ததை பற்றி கரீமா அவனிடம் சந்தோசமாக சொல்ல, “எனக்கு தெரியும் அது. அவன் வந்து என்னை சுடும்போதே  தெரிஞ்சிகிட்டேன். ஹாஸ்பிடல்ல இருக்கேன். நல்லவேளை குண்டு உள்ள போகல. என்னை கொல்லப் பார்த்தான். போலீஸ் இப்போ வருவாங்க. அவங்க கிட்டே அவனை மாட்டிவிடப் போறேன்” என்று மிஷால் சொல்ல, கரீமாவின் முகம் மாறியது.

“முட்டாள்! நீ போலீஸ்ட்ட புகார் கொடுத்தா ஆர்யன் உன்னை எதுக்கு சுட்டான்னு அவங்க விசாரணை செய்வாங்க. நம்ம திட்டம் எல்லாத்தையும் அவங்க கண்டுபிடிப்பாங்க. அப்புறம் ருஹானா உனக்கு நிரந்தரமா கிடைக்க மாட்டா. உன்னை வெறுத்து ஒதுக்கிடுவா” என்று பயமுறுத்திய கரீமா, மிஷாலை பணிய வைத்தாள்.

வேறுவழியின்றி மிஷாலும் காவல் அதிகாரியிடம் சாலையில் நடந்த சண்டையில் தன்மீது குண்டு பாய்ந்ததாகவும், தன்னை சுட்டது யார் என்று தெரியாது என்றும் வாக்குமூலம் தந்தான்.

———

வியாபாரம் சம்பந்தமாக வெளிநாட்டிலிருந்து ஆர்யனுக்கு வந்த கடிதங்களை அவனின் அலுவலகம் சென்று சேர்க்க ஜாஃபர் வெளியே வர, தோட்டத்தில் ருஹானா பாவமாக அமர்ந்திருப்பதை பார்த்தான். அவளிடம் என்ன என விசாரித்தும் அவள் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

ஆர்யனின் அலுவலகம் அடைந்த ஜாஃபர், ஆர்யனிடம் கடிதங்களை அளிக்க, அவனும் சுரத்தே இல்லாமல் இருப்பதை பார்த்து “நான் ஏதாவது செய்ய முடியுமா?” என்று கேட்க, ஆர்யன் அந்த பொல்லாத நீலநிற கோப்பை எடுத்து போட்டான். “அவ என்னை ஏமாத்திட்டா!”

திகைத்து போன ஜாஃபர் நம்பமுடியாமல் அதை எடுத்து பார்த்தான். நீண்ட நேரமாக ஜாஃபரிடமிருந்து பதில் வராததால் ஆர்யன் அவனை கேள்வியாக பார்க்க, “இதெல்லாம் பார்த்தா மிக உறுதியான தடயங்களா தான் தெரியுது. ஆனா உங்க உயிரை காப்பாற்றிய பெண்ணா இப்படி செய்திருப்பாங்க?” என்று கேட்டான்.

ஆர்யன் மனமும் ஆமாம் தானே என ஜாஃபரோடு ஒத்திசைக்க, ஒருகணம் தடுமாறியவன் இல்லை என மறுத்தான். “இந்த சான்றுகள் உண்மையா இருக்குமானால் இதெல்லாம் ஆணித்தரமா இருக்கு. இவ்வளவு தூரம் நுணுக்கமா திட்டம் போட்டவள் அதையும் திட்டம் போட்டு தான் செய்திருப்பா. அவளோட உயிர் போகாத அளவுக்கு சாமர்த்தியமா குண்டு முன்னாடி பாய்ந்திருப்பா!”

“நீங்க சொன்னது போலவும் இருக்கலாம். நீங்க இதைப்பற்றி அவங்க கிட்டே கேட்டீங்களா?” சரியான கேள்வி ஜாஃபரிடமிருந்து வந்தது.

“இல்ல, இவானோட கஸ்டடி இன்னும் அவளிடம் தான் இருக்கு. அவளோட எல்லா திட்டமும் எனக்கு தெரிஞ்சிடுச்சின்னு அவளுக்கு சந்தேகம் வந்துட்டா, அந்த கஸ்டடியை அவங்க ஆயுதமா பயன்படுத்த வாய்ப்பு இருக்கு. இதால இவான் எந்தவிதத்திலயும் பாதிக்கப்படக்கூடாது. இவ்வளவு செய்தவங்க இவானை பயன்படுத்திக்கவும் தயங்க மாட்டாங்க. அதனால இப்போதைக்கு நான் அவளை நேரடியா எதுவும் கேட்க மாட்டேன்.”

“ஆனா நீங்க எந்த நடவடிக்கையும் எடுக்கறதுக்கு முன்னாடி இதையெல்லாம் உண்மையான்னு உறுதிப்படுத்திக்கங்க. ஏன்னா இப்ப நீங்க செய்யப் போற எந்த செயல்ல இருந்தும் எதிர்காலத்துல மீள முடியாது. விளைவுகள் எல்லாத்தையும் நாசமாக்கிடும்” என்று சொல்லி எழுந்த ஜாஃபர்,

“ருஹானா மேம் நல்லவங்க. வார்த்தை ஜாலம் செய்து எந்தவிதமான கெட்டதையும் மறைக்கலாம். பெரிய மோசடியை கூட முகமூடி போட்டு மறைக்க முடியும். ஆனா நல்லதன்மை இதயத்துல இருந்து தானா வர்றது. நல்ல இதயத்தை புரிந்து கொள்ள வார்த்தைகள் தேவை இல்ல. ருஹானா மேம் கிட்டே இந்த மௌனமான நல்லதன்மையை நான் பலமுறை பார்த்திருக்கேன்” என்றவன் வெளியே சென்றான்.

ஜாஃபரின் அறிவுரையால் ஆர்யனின் மனப்பாரம் குறைய, அவன் அந்த கோப்பை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு விரைந்தான்.

Advertisement