Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                 அத்தியாயம் – 120

ருஹானாவிற்கு எதிராக சல்மா கொடுத்த ஆவணங்களை பார்த்த ஆர்யனின் காதுகளில் திரும்ப திரும்ப ஒலித்தது இதுவே தான்:

‘நான் உன்னை காதலிக்கிறேன், மிஷால்!’

அந்த வார்த்தைகளை சகிக்க முடியாமல் ஆர்யனின் மனம் கொதிகலனாக கொதிக்க, அந்த நீலநிற கோப்பை கைகளில் சுருட்டிக்கொண்டு ருஹானாவிடம் விளக்கம் கேட்க வேகமாக வந்தான்.

உணவு அறையை நெருங்கியவன் கையில் இருந்த புகைப்படத்தை எடுத்து வெறுப்பாக பார்த்தான். கண்ணாடி கதவின் வழியே ருஹானாவை பார்த்தான். மிஷாலின் கைகளுக்குள் இருக்கும் அவளையும் பார்த்தான்.

‘உன்னால் எப்படி இப்படி செய்ய முடிந்தது? எப்படி?’

உள்ளே நுழையாமலே திரும்பி விட்டான்.

காரின் அருகே சென்றவன் கைமுஷ்டியால் காரின் முன்பகுதியில் ஓங்கி குத்தினான்.

தன் காரை மறைவாக நிறுத்தி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த சல்மா அவனை கவனித்துக் கொண்டிருந்தவள் ஆனந்தமாக புன்னகைத்தாள்.

விடுதியையும் காரையும் யோசனையோடு பார்த்த ஆர்யன் காட்டின் உள்ளே நடந்தான். செடி கொடிகளை ஆவேசமாக தள்ளிக்கொண்டு சென்றவன் காயம்படுவதையும் பொருட்படுத்தாமல் அடர்ந்த காட்டுக்குள் முன்னேறினான்.

அவர்கள் இருவரும் கைகோர்த்து ஏறிய மேடான பகுதியை அடைந்தவனுக்கு அந்த இனிய தருணத்தை மறக்கடித்து, ருஹானா தஸ்லீமிற்கு எழுதிய கடிதத்தின் வாசகம் அவனை இறுக்கமாக்கியது. ஓவென குரலெடுத்து கத்தினான், அந்த அத்துவான காட்டில்.

——–

நெடுநேரம் ஆர்யனுக்காக பொறுமையாக காத்திருந்த ருஹானா பணியாளை அழைத்து “நான் மிஸ்டர் ஆர்யனுக்காக காத்திருக்கேன். அவர் எங்க அறைக்கு போயிட்டாரா? நீங்க பார்த்தீங்களா?” என்று கேட்டாள்.

“மிஸ்டர் ஆர்யன் வெளியே போனாரே!”

“நன்றி!”

வெளியே வந்த ருஹானா, வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் “மிஸ்டர் ஆர்யனை தேடி ஒருத்தங்க வந்தாங்க. உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்க, அவள் “நான் பார்த்தேன் மேம்! அவங்க ஒரு பொண்ணு. ரெண்டு பேரும் சில நிமிடங்கள் தான் பேசினாங்க. அப்புறம் அந்த லேடி வெளிய போய்ட்டாங்க” என்று பதில் சொன்னாள்.

விடுதியை விட்டு வெளியே வந்த ருஹானா அங்கே இருந்த ஆர்யனின் காரை பார்த்து மேலும் குழப்பம் அடைந்தாள். போனை எடுத்து ஆர்யனுக்கு அழைத்தாள்.

இவானின் சித்தி என தன் அலைபேசியில் வந்த அழைப்பை பார்த்ததும் நட்டநடு காட்டில் கீழே அமர்ந்திருந்த ஆர்யன் ரௌத்திரமானான். அதையே முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தான்.

தனது அழைப்புக்கு பதில் வராத காரணத்தினால் பயந்து போன ருஹானா அர்ஸ்லான் மாளிகைக்கு அழைத்தாள். “ஜாஃபர் அண்ணா! அங்க எல்லாம் சரியா தானே இருக்கு? இவான் என்ன செய்றான்?”

“எல்லாம் ஓகே தான் மேம்! அம்ஜத் சார் கதை சொல்லி தூங்க வச்சிட்டார். நீங்க இங்க பற்றிய கவலையை விடுங்க” என்று சொல்லிவிட்டு மேலே ஜாஃபர் பேசியது எதுவும் அவளின் காதில் விழவில்லை. நன்றி சொல்லி போனை வைத்தாள். மாளிகையில் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை, ஆர்யனை பற்றி தகவலும் இல்லை எனவும் ஒன்றும் புரியாமல் நின்றாள்.

‘எங்க போனார்? அப்போ.. அவரோட எதிரிங்க யாராவது…? அல்லாஹ்! அவருக்கு எந்த துன்பமும் அணுகாம காப்பாத்துங்க!’ என இறைவனிடம் வேண்டியவளுக்கு, அடுத்து என்ன செய்வது என புரியவில்லை.

கண்கள் கலங்க திரும்பவும் ஆர்யனுக்கு அழைத்தாள். விரக்தியாக ஒரு மரத்தில் சாய்ந்து அமர்ந்திருந்த ஆர்யன் செல்பேசியை அடைத்துப் போட்டான்.

அவன் அலைபேசியின் இயக்கம் இல்லை என தெரிந்த பின்னும் அவள் விடாமல் பலமுறை அவன் எண்ணுக்கு முயன்று கொண்டே இருந்தாள். மிகவும் பதட்டமானவளுக்கு சட்டென யோசனை தோன்ற ரஷீத்திற்கு அழைத்தாள்.

“ரஷீத்! இவானோட சித்தப்பாவை தொடர்பு கொள்ள முடியல. நீங்க உதவி செய்ய முடியுமா?”

“எனக்கு புரியல. நீங்க ரெண்டு பேரும் ஒன்னா தானே இருந்தீங்க?”

“ஆமா, ஒன்னா தான் இருந்தோம். சேர்ந்து தான் சாப்பிட்டோம். அவரை தேடி யாரோ வந்தாங்க. அவங்களோட பேசிட்டே அவர் வெளிய போயிட்டார். அவரோட போனும் அணைத்திருக்கு. அவருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்குமோன்னு எனக்கு பயமா இருக்கு.”

“நீங்க பதட்டப்படாதீங்க, ருஹானா! ஆர்யனுக்கு ஏதாவது அவசர வேலை வந்திருக்கும். உங்ககிட்டே சொல்ல நேரம் இருந்திருக்காது. போன்ல சார்ஜ் போயிருக்கலாம். நீங்க விடுதியிலேயே இருங்க. நான் முயற்சி செய்றேன்.”

சோகமாக போனை வைத்த ருஹானா தோட்டத்தில் கிடந்த நாற்காலியில் சோர்வாக அமர்ந்துக்கொண்டாள்.

———

துள்ளலுடன் திரும்பி வந்த சல்மாவிடம் அங்கே நடந்தது என்ன என்று கரீமா ஆவலாக கேட்டு தெரிந்துக் கொண்டாள்.

“அக்கா! என் முன்னாடி ஆர்யன் ஃபைலை திறந்து பார்க்கல. ஆனா கொஞ்ச நேரத்துல வெறி கொண்ட காளையைப் போல வெளியே வந்தான். அவன் கையில ஃபைல் இருந்தது. விடுதிக்குள்ள போகாம வெளியே போய்ட்டான். நான் கிளம்பி வந்துட்டேன்.”

“ஆக நாம ஆவலா எதிர்பார்த்துட்டு இருந்த பேரழிவு நிகழ்ந்திருச்சா? இனி என்ன நடக்கப் போகுதுன்னு நாம கவனிப்போம், சல்மா!”

——–

அதிகாலை பறவைகளின் கீதத்தில் உணர்வு வரப்பெற்ற ஆர்யன் எழுந்து விடுதியை நோக்கி நடந்தான். சூறாவளி காற்றைப் போல நடந்து வந்தவன் கார்கதவை திறந்து ஏறப் போனான். பின் ஏதோ நினைத்துக் கொண்டவன் விடுதியின் கேட்டை தாண்டி உள்ளே வர, திறந்தவெளியில் நாற்காலியில் அமர்ந்தவண்ணம் தூங்கும் ருஹானாவை பார்த்துவிட்டு அப்படியே நின்றான்.

எந்த பிடிமானமும் இல்லாமல் தலை பின்னால் தொங்க தூங்கிக் கொண்டிருந்தவளின் கள்ளமற்ற முகத்தை பார்த்ததும் அவன் இறுக்கங்கள் வடிந்து அவனுள் இரக்கம் சுரந்தது.

அவளை நோக்கி அவன் வேகமாக எட்டு எடுத்து வைக்க, அவன் கையிலிருந்த புகைப்படங்கள் தவறி கீழே விழுந்தன. குனிந்து அதை எடுத்துப் பார்க்க, மிஷாலோடு அவள் இருக்க, உறங்கும் அவளை திரும்பியும் பாராமல் வந்து காரை எடுத்தான்.

அப்போது ரஷீத்தின் குறுஞ்செய்தி வந்தது. ‘என்ன நடந்தது ஆர்யன்? ஏன் போன் எடுக்கல? எங்க இருக்கீங்க? ருஹானா பயந்துபோய் எனக்கு கால் செய்தாங்க.’

‘ஏதாவது சொல்லி சமாளி, ரஷீத்” என்று பதில் அனுப்பியவன் வேகமாக காரோட்டி சென்றுவிட்டான்.

அவளுக்கு அவன் அவ்வளவு கெடுதல்கள் செய்த போதும், போலீஸ் அவனை கைது செய்து சிறையில் அடைத்தபோதும் அவன் தவறு செய்திருக்க மாட்டான் என அவள் நம்பினாள். அதை நிரூபிக்கவும் முயன்று வெற்றி கண்டாள்.

அவள் அவனை நல்வழியில் திருப்பிய போதும், அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் நன்மைகள் செய்த போதும், எதுவும் ஆராயாமல் அவனுக்கு அவள் மேல் சந்தேகம் வருமானால் என்ன பிறவி இவன்? அவளை வாழ்க்கை துணைவியாக அடையும் தகுதி இவனுக்கு ஏது?

———-

போனின் அழைப்பொலி கேட்டு படக்கென்று கண்விழித்த ருஹானா வேகமாக எழுந்து அழைப்பது ஆர்யனோ என்று ஆவலாக பார்த்தாள். ரஷீத்தின் பெயரை பார்த்து மிகுந்த ஏமாற்றம் அடைந்தாள்.

“ருஹானா! நான் சொன்னது போல தான். பிசினஸ்ல திடீர்ன்னு ஒரு பெரிய நெருக்கடி. அதனால தான் அவசரமா போயிருக்கார்”

“என்கிட்டே சொல்லிட்டு போயிருந்திருக்கலாமே! இல்லனா போன் செய்து சொல்லியிருக்கலாம் தானே?”

“அது எனக்கு தெரியல, ருஹானா! ஆர்யன் மீட்டிங்ல இருக்கார். அவர்ட்ட அதிகம் பேச முடியல” என்று ரஷீத் போனை வைக்க, ருஹானாவிற்கு அவன் சொன்னதை நம்ப முடியவில்லை.

‘இல்ல.. இது வேலை விஷயம் இல்ல.. கண்டிப்பா இல்ல… வேற ஏதோ இருக்கு. இல்லனா என்னை இப்படி தனியா விட்டுட்டு போயிருக்க மாட்டார்.’

தன்னந்தனியே நின்று கலங்கியவளின்

தேடலும் தவிப்பும் துடிப்பும் தொடர

அழகிய நாளின் இருண்ட பொழுது!

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம்…

இம்முறை அவள் பூமியில் வைத்த காலடி 

எரிமலையாய் வெடிக்குமோ?

———-

“ஆர்யன் அவளுக்கு என்ன தண்டனை கொடுத்தானோன்னு தெரிஞ்சிக்க எனக்கு ஆசையா இருக்கு, அக்கா! ஒருவேளை காட்டுல இருக்கற ஓநாய்களுக்கு உணவா அவளை போட்டுருப்பானா?”

“இருக்கும், சல்மா! ஆர்யனோட புகழ்பெற்ற பழைய கோபம் திரும்பி வரப் போகுது. நம்ம கிட்டேயும் அது பாயும். நீயும் கவனமா இரு.”

“அந்த சூனியக்காரி முகத்தை நான் பார்க்காம இருந்தாலே போதும். வேற எதையும் நான் தாங்கிப்பேன்.”

சிரித்தமுகமாக காபி அருந்திக்கொண்டிருந்த சகோதரிகள் இருவரும் ருஹானா பெட்டியோடு உள்ளே வருவதை பார்த்து அதிர்ந்தனர். சல்மாவிடம் சைகை செய்துவிட்டு கரீமா ருஹானாவிடம் விரைந்தாள்.

“ருஹானா டியர்! என்ன அதுக்குள்ள வந்துட்டே? ஆர்யன் எங்க?”

“அவருக்கு திடீர்ன்னு அவசர வேலை வந்திடுச்சி. அவர் வேகமா கிளம்பிட்டார். அதான் நானும் வந்திட்டேன்.”

“என்ன! தேனிலவில உன்னை விட்டுட்டு வேலைன்னு போய்ட்டானா? இது அநியாயம். பெருசா ஏதோ நடந்திருக்கு. இல்லனா உன்னை விட்டுட்டு போயிருக்க மாட்டான்.”

“எனக்கும் தெரியல, ரஷீத் தான் சொன்னார். அவர் வந்த பின்ன தான் விவரம் தெரியும். நான் இவானை பார்க்கப் போறேன்.”

“ஓகே டியர்!”

படிக்கட்டில் பெட்டியை தூக்கி செல்லும் ருஹானாவை சிரிப்புடன் பார்த்த கரீமா, திரும்பி சல்மாவை பார்க்க அவள் வாயை மூடிக்கொண்டு சிரித்தாள்.

——–

படுக்கையறைக்குள் வந்த ருஹானா பெட்டியை வைத்துவிட்டு அறையை சுற்றி பார்க்க, ஆர்யன் அங்கே வந்த தடம் தெரியாததால் கவலையோடு சோபாவில் அமர்ந்தாள். போனை எடுத்து ஆர்யனை மீண்டும் அழைக்க விழைந்தவள் அதை செய்யாது நிறுத்தினாள்.

காரில் அமர்ந்து ருஹானா மிஷாலிடம் காதல் சொல்வதை திரும்பவும் கேட்டு வெறியேறிக் கொண்டிருந்த ஆர்யன் கைகளை குத்திக்கொண்டான். அவன் போனில் ருஹானாவின் செய்தி வர, முகசுளிப்புடன் அதை எடுத்து படித்தான்.

‘நான் உங்களைப் பற்றி அதிக கவலையில் இருக்கேன். நீங்க நல்லா இருக்கேன்னு மட்டும் தகவல் சொல்லுங்க. எனக்கு அது போதும்.’

அதை படித்தவனுக்கு கோபம் பொங்க போனை உடைப்பது போல நெருக்கியவன் அதை காரினுள் வீசியடித்தான்.

———

Advertisement