Advertisement

மாடித் தோட்டத்தில் அம்ஜத் செடிகளில் களைகளை அகற்றிக் கொண்டு இருக்க, காற்று வாங்க அங்கே வந்த கரீமா அவனை பார்த்ததும் திரும்பி உள்ளே நடந்தாள். அதற்குள் அவளை பார்த்துவிட்ட அம்ஜத் “வாயேன் கரீமா நாம பேசிட்டே காபி குடிக்கலாம். நமக்கும் அமைதி கிடைக்கும். அதிக நாட்களாகிடுச்சி, நாம சேர்ந்து பேசி!” என்று அழைத்தான்.

நஸ்ரியாவை சத்தமாக அழைத்து காபி கொண்டுவருமாறு சொல்லிவிட்டு வந்த கரீமா, அங்கே இருந்த நாற்காலியில் வேண்டாவெறுப்பாக அமர்ந்தாள். செடிகளை பாராமரித்துக்கொண்டே அம்ஜத் அவளிடம் பேசினான்.

“இங்க பாரேன் கரீமா! இந்த பூச்செடி தான் ஆர்யனும் ருஹானாவும் சேர்ந்து வச்சது. அழகான பசுஞ்செடி. நல்லவேளை அவங்க ரெண்டுபேரும் கல்யாணம் செய்துக்கிட்டாங்க. தேனிலவுக்கும் போயிருக்காங்க. ருஹானாவால ஆர்யனுக்கு அமைதி கிடைச்சது. ருஹானா ஆர்யனுக்கு அமைதி கொடுத்தா. அவ நல்ல பொண்ணு. அப்படித்தானே கரீமா?”

கரீமா பற்களை கடித்துக்கொண்டு “ஆமா, ரொம்ப நல்ல பொண்ணு!” என்றாள்.

——–

அந்தி சாய்ந்த நேரம். பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மெழுவர்த்திகள் ஏற்றப்பட்ட விடுதியின் பிரத்தியேக உணவு மேசை. திருமண மோதிரத்தை தடவியபடி ஆர்யன் மேசையில் எல்லாம் இருக்கிறதா என சரிப்பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது மோதிரம் தவறி கீழே விழ பதட்டமானவன் ருஹானா வருகிறாளா என்று பார்த்துவிட்டு அவசரமாக எடுத்து அணிந்து கொண்டான்.

தனது உடையும் சரிசெய்து கொண்டு அவன் வாசலை பார்க்க, கரும்பச்சை நிறத்தில் அழகான கவுனை அணிந்துகொண்டு அழகுப்பதுமையாக வந்து நின்ற ருஹானாவை பார்த்து மெய்மறந்தான்.

அவள் அருகில் வரவும் உணர்வு வரப்பெற்றவன், அவளுக்காக நாற்காலியை இழுத்து அவள் அமர வசதி செய்து கொடுத்தான். பதித்த கண்ணை எடுக்காமல் அவள் எதிரே வந்து அமர்ந்தான்.

வெப்பம் தரும் கணப்பிலிருந்து சுவரில் மாட்டியிருக்கும் ஓவியங்கள் வரை அறையின் அலங்காரங்களில் கண்களை சுழல விட்ட ருஹானா “ரொம்ப அழகா இருக்கு” என்று அதே வார்த்தைகளை சொல்ல, மகிழ்ச்சியடைந்த ஆர்யன் “உனக்கு பிடிச்சிருக்கா?” என்று அதே கேள்வியைக் கேட்டான்.

“ரொம்ப.. ஆனா ஒரே ஒரு குறை தான்” என்று அவள் சொல்ல, ஆர்யன் முகம் வருத்தத்தை காட்டியது. ருஹானா கைப்பையிலிருந்து மூன்று கூழாங்கற்களை எடுத்து மேசை மேல் வைத்தாள். “இது இல்லாம பூர்த்தி அடையாது.”

ஆர்யன் மலர்ந்து அவளை பார்த்தான்.

“எனக்கு தெரியும், நீங்க ஏதோ என்கிட்டே பேச போறீங்கன்னு. ஆனா அதுக்கு முன்ன நான் உங்ககிட்டே சிலது சொல்லிடறேன்” என்று அவள் சொல்ல, அவன் அவளை கூர்ந்து கவனித்தான்.

“நீங்க அப்போ பூமியையும் வானத்தையும் பத்தி சொன்னது சரி தான். ரெண்டுமே ஒன்னு சேர முடியாதுன்னு தான் நானும் நினைச்சிருந்தேன். ஆனா இவான் நம்ம ரெண்டுபேரையும் சேர்த்து வச்சி புது உலகத்தை உருவாக்கிட்டான்” என அவள் சிரித்துக்கொண்டே சொல்ல, ஆர்யன் கண்கள் மலர சிரித்தான்.

“நாம நிறைய சண்டை போட்டு இருக்கோம். மனம் வலிக்க பேசியிருக்கோம். அதையெல்லாம் கடந்து இவ்வளவு தூரம் வந்துட்டோம். ஆனா திரும்பி பார்க்கும்போது ஒன்னு நல்லா தெரியுது. நான் உங்க மேலே எப்பவும் நம்பிக்கை வச்சிருக்கேன். உங்களால நான் பாதுகாப்பா உணர்ந்திருக்கேன். உங்களுக்கு என் நன்றி” என்று அவள் உருக்கமாக சொல்ல, ஆர்யன் மனமும் வெல்லப்பாகாய் இளகியது.

“நான் என் குடும்பத்தை இழந்துட்டேன். என் அப்பா தான் எனக்கு பக்கபலமா இருந்திருக்கார். இப்போ எனக்கு புது குடும்பம் அமைந்திருக்கு. அதுல ஒரு அங்கமா நான் நிம்மதியா இருக்கேன், உங்களோட…” என்று அவள் முடிக்க, நெகிழ்ந்திருந்த ஆர்யனும் அவன் இதயத்தை திறந்து காட்ட தயாரானான்.

நிலமகள்மீது வீற்றிருக்கும் முட்செடி, புதைகுழிகளை 

கவனத்தில் கொண்டு கால்பதித்தவனும்

ஆகாயத்தின் தெளிவான வான்வெளி, விண்மீனை 

ரசிப்பவளும் இணைவது இயலுமா

கடல்நீரும் வானும் சேருவதுபோல் 

இரண்டையும் இணைக்கும் கோடாய் மகன்…

உறவின் முதல் தேடல் நம்பிக்கையே!

அது பரஸ்பரம் கிட்டிவிடின்

இணைந்த கரங்கள் துணைகொண்டு

பல எல்லைகள் பயணிக்கலாம்!

“நானும் உன்கிட்டே மனம் திறந்து பேசுறேன். சின்ன கல்லா இருந்த என்னை மலையிலிருந்து உருட்டிவிட்டு கடினமான கற்பாறையா மாத்தினாங்க. உன்னோட வருகைக்கு பின்னால அந்த பாறை உடைஞ்சி போச்சி. மறுபடியும் பளபளப்பான சின்ன கூழாங்கற்களா மாறிட்டேன். இனி நான் மூர்க்கன் இல்ல. என்னை மூடிட்டு இருந்த கடினமான ஓட்டை நீ தூக்கி போட்டுட்டே! இப்போ தான் என்னால எளிதா சுவாசிக்க முடியுது. இதெல்லாம் உன்னால தான் நடந்தது.”

ஆர்யன் பேசுவதை கேட்டு படபடப்பான ருஹானா தண்ணீரை எடுத்து குடித்தாள். ஒரு கூழாங்கல்லை கையில் எடுத்து உருட்டினாள்.

மேசையில் இருந்த இரு கூழாங்கற்களை தொட்டு காட்டிய ஆர்யன் “இது என்னோட சக்தி. இது என்னோட சிந்தனை. உன் கையில இருக்கறது என்னோட இதயமா இருக்கலாம். அதனால என் இதயத்தை திறந்து நான் சொல்றேன்” என்று சொல்லவும், ருஹானா மிகுந்த ஆவலோடு அவன் கண்களை நோக்கி எதிர்பார்த்தாள்.

“நாம்.. அதாவது நான்…. உன்னை…”

பணிப்பெண் வந்து குறுக்கிட்டாள். “மன்னிச்சிடுங்க ஆர்யன் சார்! உங்களை பார்க்க ஒருத்தங்க வந்துருக்காங்க. அவசரம், முக்கியமான விஷயம்னு வற்புறுத்துறாங்க.”

“நான் யாரையும்..” ஆர்யன் சீற்றமானான்.

“நான் சொல்லிட்டேன் சார்! ஆனா அவங்க இது வாழ்வுக்கும் சாவுக்கும் சம்பந்தப்பட்ட விஷயம், உங்களை கண்டிப்பா பார்த்தே ஆகணும்னு சொல்றாங்க. லாபியில காத்திருக்காங்க.”

———–

தூரத்தில் ஆர்யன் வருவதை பார்த்த சல்மா தன் கையில் இருக்கும் நீலநிற ஃபைலை சரிபார்த்துக்கொண்டாள். அது எப்படி வந்தது எனவும் சந்தோசமாக நினைத்து பார்த்துக்கொண்டாள்.

———-

அம்ஜத் “அப்படித்தானே கரீமா, நிஜமா ருஹானா நல்லவ, இல்லயா?” என்று திரும்பவும் கேட்டான்.

“ஆமா! ஆமா! ரொம்ப நல்லவள்!” கரீமாவின் நெஞ்சம் காந்தலெடுத்தது.

வேகமாக தலையை உலுக்கிக்கொண்ட அம்ஜத் “ஒரு கட்டத்துல இந்த கல்யாணம் நடக்காதோன்னு நான் பயந்திட்டேன். அவங்க ரொம்ப பொருத்தமா இருந்தாங்க. தீமை பார்வை அவங்களை துன்புறுத்துமோன்னு பயந்துட்டேன். ஆனா அவங்க சேர்ந்துட்டாங்க. நான் நிறைய துவா செய்தேன். இந்த செடியும் அதுக்கு உதவி செய்தது. இந்த பூ அவங்களை தீக்கண்ணிலிருந்து காப்பாத்துற ரட்சையாகிடுச்சி. இப்போ எல்லாருக்கும் சந்தோசம். ஆர்யனுக்கும் அமைதி! நமக்கும் அமைதி! அமைதியோ அமைதி! அப்படித்தானே கரீமா?” என்று சந்தோசமாக கேட்டவன் பாசமாக அந்த செடியை தடவிக் கொடுத்தான்.

“ஆமா, அம்ஜத் டியர்! சந்தோசமா இருக்கோம்.”

“நான் போய் உரம் கொண்டு வரேன். அது வரைக்கும் இந்த செடிக்கு தண்ணீ ஊத்துறியா கரீமா?”

“சரி, அம்ஜத் டியர்!”

“மெதுவா கவனமா செய்யணும். வேரை பார்த்து விடணும்” என்று திரும்பவும் சொல்லி அம்ஜத் உள்ளே சென்றான்.

எரிச்சலான கரீமா மண்கொத்தியை வைத்து ஆவேசமாக செடியின் பக்கத்தில் கொத்த, ஏதோ பிளாஸ்டிக் உறையின் நுனி தட்டுப்பட்டது. மண் கொத்தியை கீழே வைத்துவிட்டு சிறிய மண்வெட்டியை வைத்து மண்ணை தோண்டினாள். நீலவண்ணம் தெரியவும் கையால் பரபரப்பாக மண்ணை விலக்கினாள்.

———

சல்மாவை பார்த்த ஆர்யனின் கோபம் எல்லையை கடந்தது. “நீ இங்க என்ன செய்றே? உனக்கு என்ன தைரியம் என் முகத்தில முழிக்க?”

“உங்களுக்கு இந்த ஃபைலை கொண்டு வந்தேன்.” பக்கத்தில் இருந்த மேசையில் தூக்கிப் போட்டாள்.

“உலகமே தீப்பிடிச்சி எரிஞ்சாலும் எனக்கு அக்கறை இல்ல. உன் ஃபைலை தூக்கிட்டு இடத்தை காலி செய்!”

“இந்த ஃபைல் ருஹானாவோட உண்மை சொரூபத்தை  காட்டும்னு நான் சொன்னா? அப்பவும் நான் போகணுமா?” சல்மா மிதப்பாக கேட்டாள்.

“என்னோட மனைவியோட பேர் உன் வாய்ல வரக்கூடாது. வெளியே போ!” சத்தம் வராமல் கண்களில் நெருப்புப்பொறி பறக்க ஆர்யன் அழுத்தி சொன்னான்.

ஆர்யனின் கோபத்தில் சல்மா பயந்தாலும் சொல்ல வந்ததை வேகமாக சொல்லத் தொடங்கினாள்.

“சரியான ஆதாரம் இல்லாம நான் இவ்வளவு தூரம் வருவேனா? நீங்க என்னை நம்ப மாட்டீங்கன்னு தெரியும். அதுனால தான் நான் ஒரு துப்பறிவாளனை ஏற்பாடு செய்து அவளை பத்தி எல்லா விவரமும் சேகரிச்சேன். இதை நீங்க பார்த்தீங்கன்னா அவளோட வண்டவாளமும் தெரியும். எனக்கு நீங்க செய்த அநியாயமும் புரியும்.”

“எனக்கு எதும் பார்க்க வேண்டாம். நான் உன்னை வெளிய தள்ளறதுக்குள்ள நீயா போய்டு!”

“உங்க மனைவி மேலே அவ்வளவு நம்பிக்கை இருந்தா இதை பிரிச்சி தான் பாருங்களேன். அவ்வளவு பயம் உங்களுக்கு எதுக்கு?” என்று சவாலாக சொன்ன சல்மா அவனிடம் நின்று வாதாடாமல் திரும்பி பார்க்காமல் சென்று விட்டாள்.

அவள் செல்லவும் ஆர்யனும் உள்ளே போகத்தான் திரும்பினான். ஆனால்… அவனுள் இருக்கும் சைத்தானின் குரல் இலேசாக ஒலிக்க, நின்று அந்த ஃபைலை பார்த்தான்.

ருஹானாவை நாடி செல்லும் கால்களை வலுக்கட்டாயமாக திருப்பி மேசை அருகே வந்தான். ஃபைலின் கண்ணாடி உறையில் லேசாக தெரிந்த மிஷாலின் உருவம் அவனை வாவாவென அழைத்தது.

வேகமாக அதை அவன் உருவ அதில் ருஹானாவுடன் நெருக்கமாக மிஷால் இருந்தான். நெஞ்சில் நெருப்பு கனல் வீச ஒவ்வொரு புகைப்படமாக எடுத்து பார்த்தான். ருஹானாவின் கைப்பற்றிய மிஷால், அவளை அணைத்திருக்கும் மிஷால், அவளை முத்தமிடும் மிஷால்… என கொள்ளிக்கட்டைகள் தீயை கொழுந்துவிட்டு எரிய செய்தன.

அவற்றை கீழே போட்டுவிட்டு மற்றவற்றை ஆராய்ந்தான். பணப்பட்டுவாடா செய்த வங்கி ரசீது, அதிலிருந்த பெருந்தொகை, அனுப்பியவர், பெற்றவர் விவரங்களை பார்த்தவன், ருஹானா தஸ்லீமுக்கு எழுதிய கடிதங்களை கையில் எடுத்து படித்தான்.

‘அக்கா நீ செஞ்ச தப்பை நான் செய்ய மாட்டேன். நீ இந்த விளையாட்டை தப்பா விளையாடிட்டே. நீ செய்ததுலாம் உனக்கு எதிரா திரும்பி வந்து நீயும் மாட்டிக்கிட்டே. யாரும் உன்னை நம்பாம போயிட்டாங்க. இப்போ என்னோட முறை. நீ விட்டதை நான் நிறைவேற்றி காட்றேன். உன்னோட உடல்நலக்குறைவும், இவானோட தனிமையும் மாளிகையின் வாசலை எனக்காக திறக்க வைக்கும். இதுமூலமா நான் எல்லாம் சாதிப்பேன்.

நாம திட்டமிட்டது நிறைவேறினதும், எனக்கு மிஷால் கூட புது வாழ்க்கை ஆரம்பிக்கும். இந்த முறை நமக்கு அர்ஸ்லான் சொத்துக்களும் கிடைக்கும். இவானோட நாம அவங்க கிட்ட இருந்து எல்லாத்தையும் எடுத்துக்கலாம்.’

நீண்ட நேரமாக ஆர்யனுக்காக காத்திருந்த ருஹானா அவனை தேடி செல்வோமா எனும் குழப்பத்தில் இருந்தாள்.

அங்கே ஆர்யன் ஒலிப்பதிவு கருவியை இயக்கி கேட்டான்.

“நான் உன்னை காதலிக்கிறேன், மிஷால்!”

“நானும் தான் ருஹானா. இன்னும் ஒரேயொரு படிக்கட்டு தான் நாம கடக்க வேண்டியது.”

“அதுவரை நான் எப்படி நேரத்தை போக்குவேன்? ஒரு நிமிடம் கூட உன்னை பார்க்காம என்னால இருக்க முடியல. ஒவ்வொரு நொடியும் உன்னை நினைச்சி தவிக்கிறேன், மிஷால்!”

“நாம என்ன சத்தியம் செய்துக்கிட்டோம்? நம்ம எதிர்கால வாழ்க்கைக்கு அந்த பணம் தேவை தானே?”

ஆர்யனின் கண்கள் ரத்தமென சிவந்து இருந்தன.

(தொடரும்)

Advertisement