Advertisement

நீண்ட பயணத்திற்கு பின் அவர்கள் வரவேண்டிய இடத்துக்கு வந்து சேர, சிறுபிள்ளையாய் தூங்கும் ருஹானாவை ஆசைதீர ரசித்த ஆர்யன் கார் கதவை திறக்க, அந்த சத்தத்தில் அவள் கண்விழித்தாள். அவன் பின்னே சென்று பெட்டியை எடுக்க, இவள் அங்கே ரசித்துக்கொண்டு நின்றாள்.

“உனக்கு இந்த இடம் பிடிச்சிருக்கா?”

“ஆமா, மிகவும்.”

இருவரின் முகத்திலும் இன்பமுறுவல் மலர்ந்திருந்தது.

வரவேற்பில் அடையாள அட்டையை கேட்க, ருஹானா திருமண சான்றிதழும் சேர்த்து தர, “இது தேவை இல்லயே!” என்று அந்தப் பெண் திருப்பி தர, ருஹானாவிற்கு வெட்கமாகிவிட்டது. “தேவைப்படுமோன்னு கொண்டு வந்தேன்.”

எந்நேரமும் திருமண சான்றிதழை தன்னோடு வைத்திருக்கும் ருஹானாவின் செயலில் ஆர்யனுக்கு சிரிப்பு வந்தாலும், அதை மறைத்துக் கொண்டவன் “சரியா தான் செஞ்சிருக்கே!” என்று அவளை பாராட்டினான்.

அறைசாவியை வாங்கிக்கொண்டு இருவரும் நடக்க, ருஹானாவின் இலகுத்தன்மை மறைந்து பதற்றம் ஆரம்பித்தது. அவர்கள் சென்று நின்ற அறையின் கதவில் பெரிய டெய்சி பூ செருகப்பட்டிருப்பதை பார்த்ததும் அது இன்னும் அதிகரித்தது. “நான் போய் தண்ணீர் கொண்டு வரேன்” என்று நழுவப் பார்த்தாள். அதனால் என்ன பயன்?

“உள்ளயே இருக்குமே!” என்ற ஆர்யன் கதவை திறந்து உள்ளே செல்லுமாறு கைக்காட்ட, ருஹானாவிற்கு மூச்சடைத்தது.

அறை முழுவதும் டெய்சி பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்க, அங்கே இருந்த ஒரே கட்டிலிலும் அதே மலர்கள் குவிக்கப்பட்டு இருந்தது.

அவள் மூச்சுக்கு திணற, தொடர்ந்து இருமல் வந்தது. கதவை மூடிவிட்டு வந்த ஆர்யன் வேகமாக தண்ணீர் குடுவையை எடுத்து திறந்து கொடுத்தான். தண்ணீர் குடித்த பின்னும் அவள் இருமல் குறையாமல் இருக்க, அவள் தாடையை தூக்கிப்பிடித்து “மூச்சு இழுத்து விடு” என்றான்.

அவனின் தொடுகையில் இருமல் நின்று போக, பெருமூச்சை எடுத்துவிட்டாள். அவள் நிதானத்துக்கு வந்தபின் ஆர்யன் சற்று நகர்ந்து அறையை சுற்றி பார்த்தான்.

“எதுக்கு இதெல்லாம் செஞ்சீங்க? இங்க தான் நமக்கு தெரிஞ்சவங்க யாரும் இல்லயே!” என்று ருஹானா படபடப்பாக கேட்க, ஆர்யனிடமிருந்து வந்த பதில் அவளை வாயடைக்க வைத்தது. “ஏன்னா உனக்கு பிடிக்குமே!”

ருஹானா அவளுக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியை மறைத்துக் கொள்ளமுடியாமல் பெட்டியை எடுத்து திறக்க முயன்றாள். அவளின் திணறலில் அவளது மேல்சட்டையின் கைப்பகுதியின் நூல் பெட்டியின் ஜிப்பில் மாட்டிக் கொண்டது.

“நான் சரிசெய்றேன்” என்று ஆர்யன் மிக நெருங்கி வர, நூலோடு அவர்கள் கண்களும் சிக்கிக்கொண்டன. இருவரின் சுவாசமும் கலந்து நிற்க, நூலை பிரிப்பதை விட அவர்களை பிரிப்பது அவர்களுக்கே சிரமமாக இருந்தது.

ஒருவழியாக பெட்டியை திறந்து கொடுத்த ஆர்யன், அவள் ஆடை மாற்ற விரும்பலாம் என யூகித்து “நீ எல்லாத்தையும் எடுத்து வை. நான் வெளியே இருக்கேன்” என்று நகர்ந்தான்.

கதவு மூடப்பட்டதும் பூங்கொத்திலிருந்து இரண்டு டெய்சி பூக்களை எடுத்த ருஹானா அதை ஆழமுகர்ந்து அதன் வாசனையை அனுபவித்தாள். பின் சுற்றுமுற்றும் பார்த்தவள் அந்த மலர்களை அவளது கதைப்புத்தகத்தில் பத்திரப்படுத்தினாள். மலர்ந்த முகத்துடன் முணுமுணுப்பாக சொன்னாள்.

“ம்.. ஆக தேனிலவு தொடங்கி விட்டது. நானும் தயார்!”

———

மரத்தின் அடியில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்து காபி குடித்துக்கொண்டே ஆர்யன் ருஹானாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தான். விடுதியை சுற்றிப் பார்த்துவிட்டு வந்த ருஹானா கையில் இரு இலைகளை வாசனை பிடித்துக்கொண்டே வந்து ஆர்யனுக்கு எதிரே அமர்ந்தாள்.

“இந்த இடம் அதி அற்புதமா இருக்கு” என நெகிழ்ந்து அவள் சொல்ல, “உனக்கு பிடிக்கும்னு எனக்கு தெரியும்!” என பெருமையாக அவன் சொன்னான்.

“எங்கிருந்தாவது ஜோஹ்ரா அம்மா வருவாங்களோன்னு தோணுது. அந்த மலையடிவார கிராமம் மாதிரி ரம்மியமா இருக்கு. நல்ல மண்மணம்.”

“உன் கையில என்னது?” என ஆர்யன் கேட்க, அதை மீண்டும் முகர்ந்தவாறே “இது மலை புதினா இலை. இதோட வாசனை இவானுக்கு ரொம்ப பிடிக்கும். ஜோஹ்ரா அம்மா வீட்டு வாசல்ல நிறைய இருந்தது. ‘சித்தி இந்த வாசனையை நாம பிடிச்சி வச்சிக்கலாமா’ன்னு கேட்பான்” என்று சொன்னவளிடமிருந்து அதை வாங்கிய ஆர்யன் அவனும் அதன் வாசனை உள்ளிழுத்தான்.

“நாம மறுபடியும் இங்க வரலாமா? இவான், அம்ஜத் அண்ணா எல்லாரையும் கூட்டிட்டு வரலாம். அம்ஜத் அண்ணாக்கு ரொம்ப பிடிக்கும். வித்தியாசமான செடிகள்லாம் இங்க இருக்கு” என்று ஆர்வமாக சொன்னவளை ஆர்யன் வியப்பாக பார்த்தான்.

தான் மட்டும் அனுபவிக்காமல் அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்ற அவள் விரும்புவதையும் தன் அண்ணன் மேல் அவள் வைத்திருக்கும் பாசத்தையும் கண்டு பூரித்தவன் “கண்டிப்பா! உனக்கு பிடிச்சிருந்தா எல்லாரையும் கூட்டிட்டு மறுபடியும் வரலாம்” என்றான் சிரித்தபடி.

“பின்னாடி குளத்துல நிறைய வாத்து இருக்கு. அதை போட்டோ எடுத்து இவானுக்கு அனுப்பட்டுமா?” என்று கேட்டபடி அவள் எழுந்து கொள்ள, விடுதியின் பணியாள் காபி கொண்டுவந்து “காபி யாருக்கு சார்?” என கேட்டான்.

“என் மனைவிக்கு!” என ஆர்யன் சொல்ல, சொன்னவனுக்கும் கேட்டவளுக்கும் அந்த உரிமைச்சொல் இனித்தது. இனிமை மயக்கத்தில் தடுமாறிய ருஹானா தன் அலைபேசியை காட்டி போட்டோ என நகர, அதை தவறாக புரிந்து கொண்ட பணியாள் “போட்டோவா மேம்? நான் எடுத்து தரட்டுமா?” என்று அவள் கையிலிருந்த செல்பேசியை வாங்கினான்.

ஆர்யனும் சந்தோசமாக சம்மதித்து நாற்காலியை நகர்த்திப் போட்டு அவள் பக்கம் வந்து அமர “இன்னும் கொஞ்சம் பக்கம் வாங்க. அழகாக இருக்கு” என்று எடுத்து தந்து அவனும் சென்றான்.

“இதை சோசியல் மீடியால பதிவேற்றலாம். ‘தேனிலவின் முதல் படம்!’ இப்படி போட்டா நல்லா இருக்கும்ல” என்று போட்டோவை பார்த்தபடி ஆர்யன் சொல்ல, ருஹானா பொம்மை போல தலையாட்டினாள்.

“காபி குடி! ஆறிடப்போகுது!”

———-

“பெரியம்மா! இந்த போட்டோ பாருங்க. ரெண்டு பேரும் எவ்வளவு அழகாக இருக்காங்க. முதல் லைக் நான் போடுறேன். சுத்தியுள்ள இடமும் எத்தனை அழகு! ‘பூலோகத்தின் சொர்க்கம்’னு சும்மாவா அந்த விடுதிக்கு பேர் வச்சிருக்காங்க?” என்று நஸ்ரியா சாராவிடம் காட்டினாள்.

“துஷ்ட பார்வை அவங்க மேல படாம இருக்கட்டும்” என்று சாரா சொல்லும்போதே அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே கரீமா உள்ளே வந்தாள். “எங்க நஸ்ரியா அதை காட்டு!”

கையில் வாங்கிப் பார்த்த கரீமாவிற்கு நெஞ்சு வெடித்துவிடும் போல இருந்தது. என்றாலும் உணர்ச்சிகளை மறைத்தவள் “ஆமா, நிஜமா ரொம்ப அழகா இருக்கு!” என்று அதை பார்த்துக்கொண்டே இருந்தாள்.

நஸ்ரியாவின் போனில் தன்வீர் அழைக்க, அதை அவளிடம் தந்து கரீமா வெளியேறினாள். நஸ்ரியாவின் கைப்பை கிடைத்துவிட்டது, அதை நேரில் கொண்டுவந்து தருவதாக தன்வீர் சொல்ல, அவள் அவனுக்கு பலமுறை நன்றி சொன்னாள். அப்படியே அவனும் சந்தர்ப்பங்களை சாதகமாக்கி கொள்வானா?

———-

“நாம காட்டுல இரவு தங்கினோமே, அது மாதிரி இருக்கு, இந்த இடம்.” ஆர்யனும் ருஹானாவும் காட்டுப்பகுதியில் தனியாக நடந்துக் கொண்டிருக்க, அவனுக்கு பழைய நினைவுகள்.

“அது நடந்து ரொம்ப காலம் ஆன மாதிரி இருக்கு. ஆனா நான் பயந்து போனது எனக்கு இன்னும் மறக்கல. அன்னைக்கு காலைல நான் தூங்கி எழுந்து பார்த்தா உங்க ரெண்டு பேரையும் காணல. நீங்க இவானை வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டீங்கன்னு எனக்கு பதட்டமாகிடுச்சி. ஆனா நீங்க போகல. திரும்பி வந்துட்டீங்க.”

“நீயும் தான் போகல. ரிஸ்க் எடுத்து திரும்பி வந்தே! அந்த கடினமான நாட்கள்லாம் கடந்து போய்டுச்சி. ஆனா அந்த நாட்கள் தான் நம்மை இவ்வளவு தூரம் கூட்டிகிட்டு வந்திருக்கு. நான் இப்போ நாமாகிட்டோம். இவானும் நம்மோட இருக்கான். நாம சேர்ந்து இருக்கோம்.”

“ஆமா, அல்லாஹ்க்கு நன்றி!”

“இனிமேல் பயப்பட ஒன்னும் இல்ல. இவானுக்காக நாம எல்லாவிதமான கஷ்டங்களும் அனுபவிச்சோம். இனி நம்மால தீர்க்கப்படாத பிரச்சனைன்னு எதுவும் இல்ல.”

“நாம திரும்பி போகலாமா?” என்று சுற்றுப்புற தனிமைக்கு பயந்து ருஹானா கேட்க, ஆர்யன் அதை மறுத்து ஒரு மேட்டின் மீது ஏறினான். அவள் கையையும் பிடித்துக்கொண்டு கூட்டி சென்றான். ஒரு நாய் குலைத்துக்கொண்டே ஓடிவர, மிரண்டு போன ருஹானா இரு கைகளாலும் அவன் கையை இறுக்க பற்றிக் கொண்டு அவன் முதுகை ஒட்டி மறைந்து நின்றாள்.

“பயப்படாதே! உனக்கு புருனோ நினைவு வந்திருக்கும். அதான் பயப்படறே” என்று ஆர்யன் குற்ற உணர்வுடன் சொல்ல, தன்னை நாயை விட்டு மிரட்டியவனா இவன் என்று ருஹானா அதை நினைத்து பார்த்தாள்.

“அதெல்லாம் முடிந்து போனவை” என்று அவன் சொல்ல, அவளும் புன்னகையுடன் தலையாட்டினாள்.

“காட்டோட நடுப்பகுதிக்கு நாம வந்துட்டோம்னு நினைக்கறேன். அழகாக இருக்கு. ஆனா பயமாவும் இருக்கு.”

“ஏன் உனக்கு இந்த நடுக்கம்?”

“திரும்பி போகற வழி தெரியலன்னா… சகதிக்குள்ள நடந்து போக முடியாதே.. எப்படி நாம..”

“என்னை நீ நம்புறியா?”

“ஆமா!” என்று அவள் சொல்லவும், அவன் கையை நீட்ட, ருஹானா அவனோடு கைகோர்த்துக் கொண்டாள்.

“பூமி வானத்தை போல கிடையாது. நீ எனக்கு துருவநட்சத்திரத்தை காட்டினே! நான் உனக்கு பூமியை பத்தி சொல்றேன்” என்று பேசிக்கொண்டே ஆர்யன் அவளை கூட்டிச் சென்றான்.

ருஹானா தடுமாறி ஒரு குழியில் விழப் பார்க்க, அவளை தாங்கிக் கொண்ட ஆர்யன் “நிலத்துல நம்ம காலடித்தடத்தை எங்க பதிக்கிறோம்னு கவனமா இருக்கணும். மலையோட உச்சில நின்னு நீ ஒரு அடி வச்சாலும் அபாயம் தான். தரையில முள், புதர்ன்னு மண்டி கிடக்கும். அதே நேரம் நீ பூமி சொல்றதை கேட்டினா, உனக்கு என்ன தேவையோ அதை தப்பாம கொடுக்கும்” என்று சொல்லி அவளை கைவளைவிலேயே அழைத்து போனான்.

ஏரிக்கரையில் அவளை படகு சவாரிக்கு கூட்டிச் சென்ற ஆர்யன் தானே துடுப்பு துழாவி ஏரியை சுற்றி வந்தான். ருஹானா குனிந்து நீரில் அளைந்து விளையாட, அவளை ரசித்தபடியே வந்தவனுக்கு அந்த படகுப்பயணம் ஏகாந்தமாக இருந்தது.

——–

Advertisement