Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                               அத்தியாயம் – 119

சமையலறைக்கு வந்து ஆர்யன் தேனிலவுக்கு தாங்கள் செல்லப்போகும் விடுதியை பற்றி விளக்கி சொல்ல, அங்கே ஒற்றை படுக்கை மட்டுமே கொண்ட அறைகள் இருப்பதை பார்த்து ருஹானா மலைத்து நின்றாள்.

யோசனையான அவள் முகத்தை பார்த்து “உனக்கு பிடிக்கலயா?” என ஆர்யன் கவலையோடு கேட்க, அவள் “இல்ல, அப்படி இல்ல, அழகா இருக்கு. அதிக பொருட்கள் இல்லாம எளிமையா இருக்கு. ஒரு அலமாரி, ஒரு மேசை, ஒரு கட்டில் மட்டும்…” என்றாள் மெல்ல.

“அங்க அமைப்பே அப்படித்தான். இயற்கை அழகோட ஒரு இடம், யாருக்கும் எளிதா எட்டாத தொலைவில. இது உனக்கு பிடிக்கும்னு தான் நான் ஏற்பாடு செய்தேன்.”

“அப்படினா.. நாம மட்டும் தனியா…” என அவள் வாய்க்குள் முனக, அவன் என்ன என கேட்டான்.

“அப்படினா.. இயற்கையை ரசிக்க வசதியா இருக்கும்னு சொன்னேன்.”

“எனக்கு அந்த அறை கூட ரொம்ப பிடிச்சது. டெய்சி.. அதான் அந்த அறையோட பேர். அலங்காரத்துக்கு ஏத்த மாதிரி ஒவ்வொரு பூவோட பெயரை வைப்பாங்க.”

“ஓஹ்!”

“சரி, நீ சூட்கேஸ்ல எல்லாம் எடுத்து வை. நாம நாளைக்கு காலைல கிளம்புறோம்” என்று சொல்லி ஆர்யன் வெளியே செல்ல, நஸ்ரியா ஓடிவந்து ருஹானாவின் அலைபேசியை வாங்கி அந்த விடுதியை பார்த்தாள்.

“ருஹானா! இது ரொம்ப அழகான இடம். ஒரு சீரியல் கூட இங்க எடுத்தாங்க. நீங்க அதிர்ஷ்டசாலி! ஆர்யன் சார் இணுக்கு இணுக்கா யோசித்து எல்லாம் செய்றார். இயற்கைக்கு நடுவே இரு காதலர்கள்…. கைகளை கோர்த்துக்கிட்டு… கண்ணோட கண் பார்த்துக்கிட்டு…”

“நஸ்ரியா!” என்று சாரா அதட்ட, “நீங்க சும்மா இருங்க பெரியம்மா! நான் பேசத்தான் செய்வேன். இந்த காலத்துல இவங்களைப் போல உண்மையான காதலர்கள் எங்க இருக்காங்க?” என்று நஸ்ரியா பேசிக்கொண்டே செல்ல, ருஹானா மிரள மிரள விழித்தாள்.

————-

“வெளியே வா, சல்மா! காற்றாட டீ குடிக்கலாம்” என்று கரீமா அழைக்க, அவளது ஆசை தங்கை மறுத்தாள். “நான் எங்கயும் வரல!”

“வாயேன், வெளிய யாரும் இல்ல” என்று கரீமா சல்மாவை கட்டாயப்படுத்தி மேல்மாடத்துக்கு அழைத்து சென்று அமர வைத்தாள். அப்போது கரீமா என சத்தமாக அழைத்தபடி அம்ஜத் ஓடிவர, கரீமா அவனை கடிந்துக் கொண்டாள்.

“ஷீவை கழுத்துல மாட்டிட்டு வந்து ஏன் இப்படி என்னை பயமுறுத்துறீங்க?”

“கரீமா! கரீமா! என்னோட ட்ராக் பேண்ட் பார்த்தியா? சைடுல கோடு போட்டு இருக்குமே!”

“உங்க துணி அலமாரியில தான் இருக்கும்.”

“நான் பார்த்துட்டேன், கரீமா! அங்க இல்ல. நீ வந்து எடுத்து கொடு.”

“இப்போ எதுக்கு அவசரமா உங்களுக்கு அது தேவை?”

“இவானோட நான் நாளைக்கு கால்பந்து விளையாடணும்.”

“கால்பந்தா?”

“ஆமா, ஓவியம் வரையணும், கதை சொல்லணும்.”

“நீங்க ஏன் அதெல்லாம் செய்யணும்?”

“ஏன்னா நான் தானே அவனை பார்த்துக்கப் போறேன்? ஆர்யனும் ருஹானாவும் நாளைக்கு தேனிலவுக்கு போறாங்க தானே!” என்று வெட்கமாக சிரித்த அம்ஜத், அவளை நச்சரித்தான். “வா கரீமா! எனக்கு எடுத்துக்கொடு!”

அதிர்ந்து போன கரீமா சல்மாவை பார்க்க, அவள் கண்களை மூடி கண்ணீரை சிந்தினாள். “நீங்க போங்க! நான் எடுத்துட்டு வரேன்.”

“சீக்கிரம் வா.. அது தொலையறதுக்குள்ள வந்து எடுத்து கொடு!” என்று அம்ஜத் உற்சாகமாக செல்ல, கரீமா சல்மாவை தேற்றினாள். “கஷ்டமா தான் இருக்கும், சல்மா! ஆனா நீ இப்போ தான் உறுதியா இருக்கணும்.”

“எந்த தைரியத்துல என்னை உறுதியா இருக்க சொல்றே நீ?” சல்மா இப்போதெல்லாம் அக்கா என்று அழைப்பதே இல்லை.

கண்ணீரை துடைத்த சல்மா “நான் செத்துட்டு இருக்கேன். அவ என் மண்டைல உட்காந்து சிலந்தி மாதிரி வலை பின்னிட்டு இருக்கா. நான் கஷ்டப்படுறது போல அவளும் பட்டாத்தான் எனக்கு ஆறுதலா இருக்கும்” என்று சொல்லி எழுந்து உள்ளே சென்றுவிட்டாள்.

——–

ருஹானா தனிமையில் ஆர்யனுடன் இருக்கப் போகும் தருணங்களை நினைத்து பயந்தவாறே துணிகளை பெட்டியில் அடுக்க, ஆர்யன் அவளை தேடி வந்தான். பெட்டியை பார்த்தவாறே “நம்ம ரெண்டு பேர் துணியையும் நீ ஒன்னா வச்சது நல்லது தான்” என்று அவன் மகிழ்வுடன் சொல்ல, ருஹானா அப்போது தான் குனிந்து பார்த்தாள்.

“யா அல்லாஹ்! நான் ஏதோ நினைவுல அடுக்கிட்டேன். இப்போ பிரிச்சி தனியா அடுக்கறேன்.”

அவள் கையை பிடித்து தடுத்த ஆர்யன் “இல்ல, வேணாம். இனிமேல் நாம ரெண்டு பேரும் நீ நான்னு பிரிச்சு இல்லாம நாம்னு எல்லா விஷயத்துலயும் சேர்ந்து இருக்க பழகணும். நம்மைப் போலவே நம்ம துணிகளும் சேர்ந்து இருக்கட்டும்” என்று புன்னகைக்க, ருஹானாவின் முகத்திலும் நாணம்.

“நீ கையில வச்சிருக்கற டிரஸ் மெலிசா இருக்கு. அங்க அதிக குளிரா இருக்கும். தடிமனான உடையா பார்த்து எடுத்து வை” என்று ஆர்யன் சொல்ல, ‘அச்சோ! இது வேறயா?’ என நினைத்த ருஹானாவிற்கு நஸ்ரியா வர்ணித்த காட்சி நினைவுக்கு வந்து திகிலை அதிகப்படுத்தியது.

———-

குளியறையில் தவறுதலாக ஆர்யனின் துண்டை எடுத்து முகம் துடைத்த ருஹானா அதில் வந்த வித்தியாசமான அவனின் வாசனையில் திடுக்கிட்டு கவனித்து பார்த்தாள். நான் நாமாக பழக சொன்ன அவனின் பேச்சில் அவளுக்கு இலேசாக சிரிப்பு வந்தது.

“நாம நாளைக்கு எத்தனை மணிக்கு கிளம்பணும்?” என கேட்டுக்கொண்டே வெளியே வந்தவள், ஆர்யன் சோபாவில் அசந்து தூங்குவது கண்டு சிரிப்பு பெரிதாக மலர அவன் அருகே வந்தாள்.

வெற்றிகரமாக தேனிலவு அமையப்போகும் திருப்தியில் நிம்மதியான உறக்கம் அவனுக்கு. ஒரு கையில் ஃபைலையும் மறுகையில் அவள் பரிசளித்த வில்பதித்த பேனாவையும் வைத்துக்கொண்டே உறங்கும் அவனை ஆசையுடன் பார்த்தவள் இன்னும் அவனை நெருங்கி வாசனை பிடித்தாள்.

 மெல்ல அவன் கையில் இருந்தவற்றை எடுத்தவள் அவனுக்கு நன்றாக போர்த்திவிட்டு கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டாள். அசந்து தூங்கும் அவனை அப்படியே ரசித்தபடி இருந்தாள்.

———

“நீ எப்போ வேணும்னாலும் எனக்கு கால் செய், செல்லம்!”

“அடுத்த ட்ரிப் நாம சேர்ந்து போகலாம், சிங்கப்பையா! இனி நாம அடிக்கடி பயணம் போகலாம். சரியா?”

இவானுக்கு ஆயிரம் பத்திரம் சொல்லி ருஹானாவும் ஆர்யனும் கிளம்பினர். இவான் சிரித்துக்கொண்டே கையசைத்தாலும் ருஹானாவிற்கு அவனை விட்டு செல்ல மனதே இல்லை.

“ஜாஃபர் அண்ணா! இவான்…”

“நீங்க கவலைப்படாதீங்க, ருஹானா மேம்! நான் எப்பவும் லிட்டில் சாரோட இருப்பேன்” என்று ஜாஃபர் உறுதி தர, ஆர்யன் காரை கிளப்பும் சமயம் அம்ஜத் வேகமாக ஓடிவந்தான். “ஆர்யன்! ஆர்யன்! ஆர்யன்!”

“மெதுவா வாங்க, அண்ணா!” என ஆர்யன் காரை விட்டு இறங்கினான்.

“நீ உன் பர்ஸ் மறந்திட்டே! அதான் எடுத்துட்டு வந்தேன். இது இல்லனா உனக்கு கஷ்டமாகியிருக்குமே!”

“நன்றி அண்ணா!”

“அண்ணன் இருக்கறது எதுக்காக? இப்படி உதவி செய்யத்தானே! நாம சகோதரர்கள் தானே? நாம எப்பவும் ஒருத்தரையொருத்தர் பார்த்துக்குவோம், இல்லயா?”

“ஆமா அண்ணா!”

“எப்பவும் நீ வருத்தமடைய நான் விட மாட்டேன். உன்னோட அமைதியை இழக்க விட மாட்டேன். எப்பவுமே…”

“அது எனக்கு தெரியும், அண்ணா! நீங்க எனக்கு அண்ணனா இருக்கறது எனக்கு மிக சந்தோசம்” என தம்பி மூத்தவனை கட்டிக்கொள்ள, “எனக்கும் அப்படித்தான் ஆர்யன்” என்ற அண்ணனின் கண்ணில் ஆனந்தக்கண்ணீர்.

———

சமவெளி பயணம் முடிந்து கார் மலை மேல் ஏறத் துவங்க, ஆர்யன் உற்சாகமாக ருஹானாவின் மேல் அடிக்கடி பார்வையை செலுத்தியபடி இலகுவாக வண்டியை செலுத்திக்கொண்டு இருந்தான்.

“நாம பக்கத்தில இருக்கற இடத்துக்கு போயிருக்கலாம். இவான், அம்ஜத் அண்ணாவை நினைச்சா எனக்கு கவலையா இருக்கு. பயமாவும் இருக்கு.”

“கவலைப்படாதே! எதுவும் கெடுதலா நடக்காது.”

“எனக்கு எப்பவுமே பயணம் கிளம்பிட்டா வீட்டைத்தான் மனசு சுத்தி வரும். சின்ன வயசுல கூட அப்படித்தான். வீட்டைவிட்டு வெகு தூரம் வந்துட்டோமேன்னு பயப்படுவேன். என்னை அமைதிப்படுத்த அப்பா கதை பேசிட்டே வருவார். புது இடத்துக்கு போகும்போது அதை பத்தி நமக்கு தெரியாததால ஒரு அச்சம் ஏற்படும்னு சொல்லுவார்.”

“உன் அப்பா சரியா தான் சொல்லியிருக்கார். புதிய பயணம் யாரையும் பயமுறுத்தத் தான் செய்யும். ஆனா நம்மோட பாதையில நாம ரொம்ப நாளா பயணம் செய்திட்டு தான் இருக்கோம். அதனால இனி நீ பயப்படாதே! அதோட நம்ம பாதையும் நீண்டது. நாம சேர்ந்து செய்ய வேண்டிய பயணங்கள் இன்னும் நிறைய இருக்கு.”

ஆர்யன் சொன்னதை கேட்டு ஆறுதல் அடைந்த ருஹானா, சிரித்தமுகமாகவே இயற்கையை ரசிக்க, அவனும் சிரிப்புடனே காரை இயக்க, மெல்லிய சாரல் பெய்தது.

“வேணும்னா சன்னலை திறந்து வச்சிக்கோ. இங்க மரத்தோட நறுமணம் நல்லா இருக்கும்.”

ஜன்னலை திறந்த ருஹானா கையை வெளியே நீட்டி மழைத் தண்ணீரை பிடித்தாள். “ஆமா, பிரமாதமா இருக்கு.”

“சுற்றி நிறைய பழ மரங்கள் இருக்குல! அதான்..”

“ஒரு மரத்தோட இதயம் பழத்துல தான் இருக்குன்னு சொல்வாங்க தானே! அது உண்மை தான். மரங்களோட சத்தமும் வாசனையும் அருமையா இருக்கு” என்றவள் ரசிப்பதை இவன் ரசித்தபடியே உல்லாசமாக காரை ஓட்டினான்.

ஓரிடத்தில் காரை நிறுத்தி ஆர்யன் இறங்க, ருஹானாவும் இறங்கி கீழே நின்றாள். சாலையோரத்தில் கூடையில் பழம் விற்பவரிடம் ஒரு ஆப்பிளை வாங்கிய ஆர்யன் முழு இருபது தினார் நோட்டை எடுத்து கொடுத்தான். சில்லறையை மறுத்து அவன் செல்ல, நான்கு கூடை பழங்களின் விலையை ஒரேயொரு ஆப்பிளுக்கு பெற்றுக்கொண்ட பழக்காரரின் ஆனந்தத்துக்கு அளவே இல்லை.

ருஹானாவிடம் அவன் பழத்தை நீட்ட, அதை வாங்கிய அவள் காரிலிருந்து ஒரு பேனாக்கத்தியை எடுத்து ஆப்பிளை சரிபாதியாக வெட்டினாள். “நாம் என்பதுக்கு நாம பழகறோமே, அப்போ பாதி உங்களுக்கு!” என அவள் சிரித்தபடியே தர, ஆர்யன் பழக்காரரை விட ஆயிரம் மடங்கு ஆனந்தத்தில் மிதந்தான்.

இருவர் முகங்களும் சூரிய ஒளியிலும், மிதமிஞ்சிய பூரிப்பிலும் ஜொலித்தன.

———

Advertisement