Advertisement

“இது பரபரப்பான வாரமா போய்டிச்சி. திருமண ஏற்பாடுகள்.. விருந்தாளிகள்… அப்புறம் இந்த விபத்து. எல்லாமே உங்களையும் ருஹானா மேடத்தையும் களைப்பாக்கியிருக்கும். இனி வர்றது உங்களுக்கு அமைதியான நாட்களா அமையட்டும்” என்று சொன்ன ஜாஃபரின் கூற்றை தலையாட்டி ஏற்றுக்கொண்ட ஆர்யன், அவன் கொண்டுவந்த காபியை குடித்தான்.

“நீங்க சொல்றது சரி தான்” என்றவன் மனதில் பளிச்சென்று ஒரு எண்ணம் உதயமானது. அதை உடனே செயல்படுத்த எண்ணி வேகமாக எழுந்தவன் ருஹானாவை தேடி சென்றான்.

திறந்திருந்த இவானின் அறையிலேயே அவளின் குரல் கேட்க அங்கே நின்றான். “நீ ரெடியாகு! நாம கிளம்புறோம்!”

“எங்க?”

“தேனிலவுக்கு!” பட்டென்று சொன்னவன் அதற்கு மேல் அங்கே நில்லாமல் திரும்ப அறைக்கு வந்துவிட்டான்.

“தேனிலவா? தேனிலவுன்னா அவர் சொன்னார்? தேனிலவு!” ஸ்தம்பித்த ருஹானா “நீ விளையாடு தேனே! நான் இப்போ வரேன்” என்று இவானிடம் சொல்லிவிட்டு, வெடிகுண்டை தூக்கி போட்டவனை தேடி ஓடினாள்.

“இது எங்க இருந்து வந்தது? அதான்… இந்த தேனிலவு.. இது ஃபார்மாலிட்டி நிக்காஹ் தானே? அதுக்கு எதுக்கு இது?”

“புதுசா கல்யாணம் ஆனவங்க கண்டிப்பா தேனிலவுக்கு போவாங்க. நாமளும் புதுமண தம்பதிகள் தானே?”

“எதாவது சாக்கு சொல்லி அதை தள்ளி போடலாமே! நீங்க வேலைல பிசி அப்படி சொல்லி.”

“இதெல்லாம் சொல்லி யாரையும் ஏமாற்ற முடியாது. எல்லாரும் நம்ம மேல ஒரு கண் வச்சிருக்காங்க, முக்கியமா சமூக சேவை நிறுவனம்” என்று சொன்ன ஆர்யன் அவளிடம் சில தாள்களை கொடுத்தான்.

“என்ன இது?”

“தங்கும் விடுதிகளோட பட்டியல். இதுல ஏதாவது ஒன்னை தேர்ந்தெடு. நாம நாளைக்கு போறோம்.”

“நாளைக்கா?” ருஹானா அதிர்ந்து நின்றாள்.

——–

“வா சல்மா! மெல்ல வா! இதோ நம்ம வீட்டுக்கு வந்துட்டோம்” கரீமா சல்மாவை கைத்தாங்கலாக அழைத்து வர “இனிமேல் இது நம்ம வீடு இல்ல” என்றாள் சல்மா வெறுப்பாக.

“கரீமா! நீ எங்க போயிட்டே? நான் நேத்து உன்னை தேடினேன்” என்று ஓடிவந்த அம்ஜத் சல்மாவின் தலைக்கட்டை பார்த்துவிட்டு “சல்மாக்கு என்ன ஆச்சு?” என்றான்.

“அவ சுவத்துல முட்டிக்கிட்டா, அம்ஜத் டியர்! இப்போ பரவாயில்ல. நீங்க உங்க பூக்களை போய் பாருங்க. நானும் பின்னாடியே வரேன். அப்படியே நாம சேர்ந்து காபி குடிக்கலாம்” என்று கரீமா அவனை அனுப்பி வைத்தாள்.

——–

சோபாவில் அமர்ந்து மடிக்கணினியில் வேலை செய்துக் கொண்டிருந்த ஆர்யன், ருஹானா உள்ளே வருவது கண்டு, கணினியைக் கீழே வைத்துவிட்டு ஆவலாக எழுந்தான். “எதை தேர்ந்தெடுத்தே?”

“எதும் இல்ல” என்று அவள் தயக்கத்துடன் சொன்னாள்.

மிகுந்த ஏமாற்றம் அவனுக்கு. “ஏன்?”

“நாம தேனிலவுக்கு போகப் போறது இல்ல” என இப்போது ருஹானா அணுகுண்டை தூக்கிப் போட ஆர்யன் முகம் கூம்பியது. ருஹானா “இந்த நிக்காஹ் உண்மைன்னு நம்ப வைக்க நாம எல்லாம் செஞ்சிட்டோம். தேனிலவுக்கு நாம போகலங்கறதுக்காகலாம் இவானை நம்மகிட்டே இருந்து கூட்டிட்டு போயிட மாட்டாங்க” என்றாள்.

“சரி தான், நானும் அப்படி தான் யோசித்தேன். ஆனா இது உன்னோட கருத்தோ என்னோட யோசனையோ இல்ல. அந்த நிறுவனம் சின்ன தகவலை கூட உன்னிப்பா கவனிக்கற நிறுவனம். நாம நிக்காஹ் செய்துட்டோம், ரெண்டு போட்டோவை இணையத்துல போட்டுட்டோம்ன்னா அவங்க நம்பிட்டு போக மாட்டாங்க. நம்மளை தொடர்ந்து கண்காணிப்பாங்க” என்று விளக்கிய ஆர்யன், ருஹானாவின் முகம் யோசனைக்கு போவது கண்டு குஷியானான்.

அவளை மேலும் பயமுறுத்தினான். “நாம் தேனிலவுக்கும் போயிட்டு வந்துட்டா நிம்மதியா இருக்கலாம். இல்லனா அவங்க இங்க விசாரணைக்கு வரும்போது தேனிலவுக்கு ஏன் நீங்க போகலன்னு கேட்டா நீ தான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.”

“வந்து… சரி! இதானே கடைசி செயல்?” என்று அவள் கேட்க ஆர்யனுக்கு அவளை பார்க்க பாவமாகத்தான் இருந்தது. “போலாம், இவானை பிரியக்கூடிய எந்த செயலையும் நான் செய்ய மாட்டேன்” என்று அவள் ஒப்புதல் கிடைக்கவும், ஆர்யன் துள்ளாட்டம் போட்ட மனதை அடக்கிக் கொண்டான்.

“விடுமுறைக்கு போற ஒரு ட்ரிப்பா இதை நீ நினைச்சிக்கோ. நீயும் களைப்பா இருக்கே! ஓய்வு எடுக்கறது உனக்கும் நல்லது தான்.”

“ஆனா நான் போக நினைக்கிற ட்ரிப் வேற மாதிரி இருக்கும். இதெல்லாம் குளிர்பிரதேசத்தில இருக்கற ஆடம்பர விடுதிகளா இருக்கு. வழக்கமான தேனிலவு இடங்கள்.”

“தேனிலவுன்னா என்ன சித்தி?” கேட்டுக்கொண்டே இவான் உள்ளே வந்தான்.

“தேனிலவு… கல்யாணத்துக்கு அப்புறம்…” என ருஹானா திணற, “கல்யாணமானவங்க போகிற விடுமுறை பயணம் தேனிலவு” என்று ஆர்யன் உதவிக்கு வந்தான்.

“பயணமா? அப்போ நானும் வரலாமா?” என இவான் ஆவலாக கேட்க, அவனை தன்னருகே இழுத்துக் கொண்ட ஆர்யன் “இல்ல, இது சின்னபசங்களுக்கு இல்ல” என்று வேகமாக மறுத்தான்.

“அவன் நம்மோட வந்தா என்ன? நம்ம நிக்காஹ் வித்தியாசமானது தானே?” என ருஹானா கேட்டுப் பார்க்க, அவளை நோக்கி கண்களை உருட்டினான்.

“இல்ல, நம்ம நிக்காஹ் வித்தியாசமானது இல்ல. நார்மல் நிக்காஹ் தான்! அதனால இவான் வர முடியாது” என்று சொன்ன ஆர்யன், இவானை மடியில் அமர்த்திக்கொண்டு “நாம் எல்லாரும் சீக்கிரமே ட்ரிப் போகலாம் சிங்கப்பையா” என்று சொல்ல, இவான் முகம் மலர்ந்தது.

“நீ கவலைப்படாதே, விடுதி விஷயம் நான் பார்த்துக்கறேன்” என்று ருஹானாவிடமும் முடிவாக அவன் சொல்லிவிட, இதிலிருந்து தப்பிக்க வழி இல்லை என அவளுக்கு புரிந்து போனது.

வார்த்தைகளின் தடுமாற்றம்

காதலை பறைசாற்ற முடியாது

தவிக்கின்றபோது கடலும் விண்மீனும்

உதவிக்கு ஓடிவருவது சாத்தியமா?

துணிவு வேண்டுமடி பெண்ணே 

உன்னிடம் காதலை சொல்ல !

தன்னிறைவாய் ஒரு தனிமை

தேனிலவிலின்றி வேறெங்கும் வாய்த்திடுமா 

புத்தம்புது மணவாளனுக்கு?

——–

“ஏன் கவலையா இருக்கே சல்மா? எல்லாம் சரியாகிடும்.”

“அந்த ஃபைலை மட்டும் நான் தொலைக்கலனா இப்படி ஒரு நிலைமை எனக்கு வந்திருக்குமா?”

“அதை விடு, சல்மா. உன் உடம்பை தேத்து. சீக்கிரமே ஒரு வழி கிடைக்கும். அவளுக்கு நாம நரகத்தை காட்டுவோம். அது வரை அவ சொர்க்கத்தில இருக்கறதா நினைச்சி ஆடட்டும், கொஞ்ச நாளைக்கு.”

சல்மா ஒன்றும் சொல்லாமல் அழுதாள்.

“அழாதே சல்மா! நான் போய் உனக்கு மூலிகை டீ போட சொல்றேன்” என்று தங்கையின் தோளை தட்டிக் கொடுத்து கரீமா வெளியேறினாள்.

——–

ஆர்யனின் தேனிலவு திட்டத்தை தெரிந்து கொண்ட நஸ்ரியா “நானே யோசித்திட்டு இருந்தேன். இவங்க ஏன் இன்னும் தேனிலவுக்கு போகலன்னு?” என்றபடி சமையலறையில் ஆர்வமாக பேசிக்கொண்டே போக, சாராவும் ஜாஃபரும் ருஹானாவின் முன்னே அவளை எதும் சொல்ல முடியாமல் முறைத்து பார்த்துக்கொண்டிருந்தனர்.

‘தேனிலவு செல்லாமல் இருப்பதை எல்லாரும் கவனிப்பார்கள் என ஆர்யன் சொன்னது சரிதான் போல’ என நினைத்த ருஹானா செல்பேசியை பார்ப்பது போல தலையை குனிந்து தேநீர் அருந்திக்கொண்டு இருந்தாள்.

அப்போது உள்ளே வந்த ஆர்யன் “நீ ஆசைப்பட்ட மாதிரி ஒரு அழகான விடுதியை கண்டுபிடிச்சிட்டேன். சின்னது தான். ஆனா இயற்கையான சூழல்ல அழகா இருக்கு” என்றான்.

ருஹானா கண்களை விரித்து அவனை பார்க்க “உனக்கு லிங்க் அனுப்பி இருக்கேன் பார்” என்றான். ருஹானா அவன் அனுப்பியதை சொடுக்கி அந்த தங்கும்விடுதியின் படுக்கையறையை பார்த்தாள்.

“இரட்டை படுக்கை மட்டும் தானே இருக்கு?” என அவள் பயத்துடன் முணுமுணுக்க, ஆர்யன் அவளை நெருங்கி “நீ எதாவது சொன்னியா?” என்று கேட்க, ருஹானா இல்லையென தலையாட்டினாள்.

அவர்கள் பேசுவது கேட்காவிட்டாலும் நஸ்ரியா “ரொமாண்டிக்!” என அகமகிழ்ந்து போனாள்.

——–

கரீமாவை தேடி சல்மாவின் அறைக்கு வந்த அம்ஜத் அங்கே சல்மா கைப்பையை கட்டிக்கொண்டு அழுவதை பார்த்தான். அந்த பையை பார்த்ததும் அவன் நினைவுகள் ஆர்யன் ருஹானா திருமண தினத்திற்கு சென்றது.

“என்னோட விதைகள் கரீமாவின் கைப்பையில தானே இருக்குன்னு சொன்னா? அவள் குளியறையில இருந்து வர்றதுக்குள்ள நானே தேடி எடுத்துடுறேன்” என்றபடி தோட்டத்திற்கு செல்ல படிக்கட்டில் இறங்கப் போனவன் திரும்பி வந்தான். வரும் வழியில் சல்மாவின் அறை திறந்து கிடப்பதையும் கட்டிலில் ஒரு கைப்பை இருப்பதையும் பார்த்தான்.

அது கரீமாவின் கைப்பை என நினைத்து அதை திறந்தான். “கரீமா பை இல்லயே இது! சல்மா பை ஆச்சே!”

“இதென்ன ருஹானா படம் இருக்கு?”

“இது ருஹானா எழுதினதா?”

“இருக்கவே இருக்காது. அவளால இப்படி செய்ய முடியாது. அவ நல்லவ. அவ இப்படி செய்ய மாட்டா. ருஹானா ஆர்யனை ஏமாத்த மாட்டா. மாட்டா! செய்ய மாட்டா!!”

(தொடரும்)

Advertisement