Advertisement

இருவரும் மருத்துவமனையில் கரீமாவை தேடி செல்ல, அவள் ஓடிவந்து ஆர்யனை கட்டிக்கொண்டு அழுதாள். “ஆர்யன்! ஏதாவது செய். சல்மாவை காப்பாத்து!”

“அமைதியா இருங்க, அண்ணி! என்ன நடந்ததுன்னு சொல்லுங்க!”

“நீ திட்டி அவளை வெளிய போக சொன்னதும் அவ மனசு உடைஞ்சி போய்ட்டா. கண்மண் தெரியாம கார் ஓட்டிட்டு போய் மோதிட்டா.”

“அழாதீங்க கரீமா மேம்! சல்மா தைரியமான பொண்ணு. மீண்டு வந்துடுவா.”

அங்கே வந்த மருத்துவர் “இப்போதைக்கு உயிருக்கு ஒண்ணும் ஆபத்து இல்ல. உள் ரத்த கசிவு இருக்கான்னு 48 மணி நேரம் கழிச்சி தான் தெரியும்” என்று சொல்லி சென்றார்.

“டாக்டர் சொன்னது கேட்டீங்க தானே? கவலைப்படாதீங்க!” என ஆர்யன் கரீமாவை தேற்ற, “தலையில ரத்த கசிவு இருந்தா என்ன செய்றது?” என அவள் பயந்தாள்.

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது” என்று ஆர்யன் சொல்ல, “சல்மா திறமையா கார் ஓட்டுவா தானே? அவ துக்கமா போனதால தான் இப்படி கவனம் பிசகியிருக்கு” என்று கரீமா அழ, “நான் போய் காபி வாங்கிட்டு வரேன்” என்று ஆர்யன் அங்கிருந்து சென்று விட்டான்.

கரீமாவை அமரவைத்த ருஹானா அவளுடன் அமர்ந்து “நீங்க தைரியமா இருங்க. சல்மாக்கு சரியாகிடும்” என்று ஆறுதலாக பேசினாள்.

———

ஆர்யனை தேடிவந்த ருஹானா அவன் வெளியே பெஞ்ச்சில் அமைதியாக அமர்ந்திருப்பதை பார்த்து அவனை நெருங்கினாள். அவன் புறங்கை சிவந்திருப்பதை கண்டவள் பதட்டமாக அவன் பக்கம் அமர்ந்தாள். “என்ன கையில?”

“காபி கொட்டிடுச்சி. பெருசா ஒன்னும் இல்ல. விடு” என வெடுக்கென்று சொன்ன ஆர்யன் ருஹானாவின் சுருங்கிய முகம் பார்த்து அவளிடம் கடுமையாக பேசியதற்கு வருத்தப்பட்டான். அதோடு ‘இனிமையாக திட்டமிட்ட அந்திவேளை இப்படியாகிவிட்டதே!’ எனும் வருத்தமும் சேர்ந்து கொண்டது.

ஆர்யன் மேல் வருத்தப்படாத ருஹானா அவனுக்காக வருத்தப்பட்டாள். சிறிது நேர மௌனத்திற்கு பின் அவனை மனநிலையை மாற்ற “நீங்க பேசினதால தான் இதெல்லாம் நடந்ததுன்னு நீங்க நினைக்காதீங்க” என்றாள்.

“என்னோட குடும்பத்தை பாதுகாக்க நான் செய்றது தப்பாகிடுது. நான் நினைக்கறதும் செய்ய முடியறது இல்ல.”

“நீங்க சொல்லறது தப்பு. உங்களால தான் நாங்க பாதுகாப்பா இருக்கோம். எல்லாருக்குமே தெரியும், உங்க குடும்பத்தை உங்க உயிரை பணயம் வச்சி நீங்க காப்பாத்துவீங்கன்னு” என்ற ருஹானாவின் வார்த்தைகள் அவனுக்கு இதம் தந்தன.

———-

“எனக்கு ஒரு உதவி வேணும், ருஹானா டியர்! நீ கொஞ்ச நாள் அம்ஜத்தை கவனிச்சிக்கிறீயா?”

“சரி தான், கரீமா மேம்! ஆனா ஏன்?”

“நான் சல்மா குணமாகற வரை அவளோட இருக்கணும். ஆர்யன் அவளை மாளிகையில சேர்க்க மாட்டான். அதான் உன்னை அம்ஜத்தை பார்த்துக்க சொல்லி கேட்கறேன்.”

“நான் இப்போ வரேன்” என்று கரீமாவிடம் சொன்ன ருஹானா, அவளின் கணவனை நாடி சென்றாள்.

“நீங்க சல்மா மேல கோபமா இருக்கீங்கன்னு எனக்கு தெரியும். ஆனா இப்போ அவளுக்கு நம்மோட ஆதரவு அவசியம். இல்லனா அவ மனதளவில ரொம்ப பாதிக்கப்படுவா. நாம அவளை தனிமையில விட முடியாது” என்று அவள் சொன்னதை கேட்டு அதிர்ந்த ஆர்யனுக்கு ஆச்சர்யமும் கோபமும் பொங்கியது.

“உன்னை அவ அவ்வளவு பேசினதை கேட்ட பின்னுமா நீ அவளுக்காக பரிந்து பேசறே?”

“அவ பேசினது முக்கியம் இல்ல. குடும்பம் தான் இங்க முன்ன நிக்கிது. அவளை நிராதரவா விட முடியாது. நீங்க என்ன சொல்றீங்க? சல்மாவை மாளிகையில சேர்ப்பீங்களா?”

‘இப்படிப்பட்ட குணவதி உலகில் இருக்க முடியுமா? அப்படிப்பட்ட பெண்ணை என் மனைவியாக நான் பெற்றது என்னுடைய நல்வினைப் பயன்!’ ஆர்யன் சிலையாக நின்றான், அவளை பார்த்தபடியே.

———-

“சல்மா! கண்ணை திறந்துட்டியா? அல்லாஹ் கருணைக்கு நன்றி!”

“நான் இறந்தே போயிருந்திருக்கலாம். எதுக்கு பிழைச்சேன்?”

“அந்த வார்த்தையை சொல்லாதே. நான் எப்படி பயந்து போனேன்னு உனக்கு தெரியுமா? இனிமேல் என் கண்பார்வையில தான் நீ இருக்கப் போறே! நீ மாளிகையில தங்க ஆர்யன் சம்மதம் தந்துட்டான்.”

திறந்திருந்த கதவின் வழியே வெளியே பார்த்த சல்மா, அங்கே ஆர்யனின் அருகே நின்று ருஹானா பேசிக் கொண்டிருப்பதை பார்த்தாள். “இதை தினமும் பார்த்து கஷ்டப்படத்தான் நான் அந்த மாளிகைக்கு வரணுமா?”

“ரஷீத் உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போவான்” என்று ஆர்யன் ருஹானாவிடம் சொல்ல, “இல்ல, நான் உங்களை இப்படி விட்டுட்டு போக மாட்டேன்” என்று அவள் மறுக்க, ரஷீத் சிரிப்பை அடக்கிக் கொண்டு வேறுபுறம் திரும்பிக் கொண்டான்.

ஆர்யன் அவளை கனிவாக பார்க்க, அவள் “வந்து… உங்களை… கரீமா மேமை… நீங்க களைப்பா இருக்கீங்க! என்னோட உதவி உங்களுக்கு தேவைப்படலாம்” என்று சமாளிப்பாக சொன்னாள்.

“இல்ல, இப்போ இவானுக்கு தான் நீ தேவை. நாம ரெண்டு பேர்ல ஒருத்தர் அவன்கூட இருக்கணும். நான் அண்ணியை பார்த்துட்டு சீக்கிரம் வந்துடறேன்” என்று ஆர்யன் அவளை ரஷீத்துடன் அனுப்பி வைத்தான்.

———-

நடுஇரவில் ஆர்யன் வீடு வர, படுக்கையில் சாய்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்த ருஹானா அவனை பார்த்ததும் எழுந்தாள். “சல்மா எப்படி இருக்கா?”

“நல்லா இருக்கா. நாளைக்கு காலைல அண்ணி கூட்டிட்டு வந்துடுவாங்க. நீ தூங்கவே இல்லயா?”

“நான் உங்களுக்காக காத்திருந்தேன்” என்று வேகமாக சொன்னவள் ஆர்யன் கூர்ந்து அவளை கவனிக்கவும் “வந்து.. நீங்க பசியோட வருவீங்க சாப்பிட செய்து தரலாம்னு. இப்போ என்ன வேணும் சாப்பிட?” என்றாள்.

“இல்ல, எனக்கு பசியில்ல” என்ற ஆர்யன் கோட்டை கழட்டி சோபாவில் சென்று அமர, அவன் கையை கவனித்த ருஹானா “உங்க கை இப்படி சிவந்திருக்கு, எதும் மருந்து போடலயா நீங்க?” என்று பக்கம் வந்தாள்.

“அங்க இருக்கும்” என ஆர்யன் காட்டித்தர, ருஹானா களிம்பை எடுத்துவந்து மென்மையாக தடவி விட்டாள்.

அவள் அருகாமை தந்த மயக்கத்தில் “நான்… உன்னை..” என்று தொடங்கிவிட்ட ஆர்யன் அவள் நிமிர்ந்து பார்க்கவும் நிறுத்திவிட்டான். ‘சிரமம், அந்த கண்களை பார்த்து பேசுறது மிக சிரமம்’ என நினைத்து தயங்கினான்.

‘என்கிட்டே ஏதோ சொல்லப் போறாரா?’ என ஆவலாகவும் வெட்கமாகவும் அவள் எதிர்பார்த்தாள்.

“நான்… உன்னை பார்க்கும்போது நீ சோர்வா தெரிஞ்சே. இப்போ கொஞ்ச நேரம் தூங்கு” என்று சொன்ன ஆர்யன் எழுந்து வெளியே செல்ல, “இதானா? இது மட்டும் தானா?” என ருஹானாவிற்கு ஒரே ஏமாற்றம். அவன் பேச வந்தபோதெல்லாம் முட்டுக்கட்டை போட்டவள் இப்போது துணிந்து எதிர்நோக்க, அவனுக்கு தயக்கம் மேலிட்டது.

வெளியே சென்று தோட்டத்தில் உலாத்திய ஆர்யன் ‘பாபா! இங்க வந்து என் நாக்கோட கட்டை அவிழ்த்து விடுங்களேன்’ என மனதில் சையத்துடன் பேசிக் கொண்டான்.

தைரியத்தை வரவழைக்க சிறிது நேரம் எடுத்துக்கொண்ட ஆர்யன் அறைக்கு திரும்பினான். கட்டிலில் படுத்திருந்த ருஹானாவின் அருகே வந்தான்.

“நான் உன்கிட்டே கொஞ்சம் பேசணும். நீ இந்தப்பக்கம் திரும்பாம கேளு. ஏன்னா உன் கண்ணை பார்த்து பேச என்னால முடியல. சையத் பாபா சொன்னது போல நான் உன்கிட்டே எல்லாத்தையும் சொல்லப்போறேன்..

நீ இந்த மாளிகைக்கு வந்ததும் இங்க எல்லாமே மாறி போச்சு. இவானோட சிரிப்பு சத்தம் கேட்டது. அவனுக்கு இதமான ஒரு வீட்டை நீ அமைத்து கொடுத்தே. என் அண்ணனும் வேகமா குணமாறார். அவங்க மட்டும் இல்ல. நீ என்னையும் மாற்றிட்டே! அதாவது என்னையும் நல்லவழிக்கு திருப்பிட்டே! எனக்கு இதெல்லாம் பேசி பழக்கம் இல்ல நான்..” என்று பேசிக்கொண்டே போன ஆர்யன், ருஹானாவிடம் இருந்து எந்த அசைவும் தெரியாததால் சந்தேகம் கொண்டு எட்டிப் பார்த்தான்.

அவள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள், அதிக களைப்பினால். ஏமாற்றத்துடன் தலையாட்டிக் கொண்ட ஆர்யன் அவளுக்கு போர்த்திவிட்டு தன்னிடத்தில் சென்று அமர்ந்து கொண்டான்.

——–

கடற்கரையில் எடுத்த கூழாங்கற்களை கைப்பையில் வைத்திருந்த ருஹானா அதை கையில் எடுத்து பார்க்க, அவளுக்கு ஆர்யனுடன் அங்கே செலவழித்த தருணம் நினைப்பிற்கு வந்து புன்னகையை தந்தது.

பல்துலக்கி வெளியே வந்த இவான் “உங்க கையில இருக்கறது என்ன கல் சித்தி?” என்றபடி அதில் ஒன்றை வாங்கிக் கொண்டான்.

“இது கூழாங்கல் அன்பே!”

“அப்படினா?”

“வலிமையான பெரிய கல் காற்றாலயும் மழையாலயும் அரிக்கப்பட்டு இப்படி சின்ன வழவழப்பான கல்லா மாறிடும்.”

“இது அழகா இருக்கு சித்தி!”

“ஆமா கண்ணே! அழகுதான்!” என்று சொன்ன ருஹானாவின் மனது ஆர்யனிடம் தான் நிலைப்பெற்றது.

——–

Advertisement