Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                               அத்தியாயம் – 118

இரவெல்லாம் அம்பெய்தி களைத்துப்போய் அதிகாலையில் அறைக்கு வந்த ஆர்யன் துயில் கொள்ளும் தன்னவளை விழியெடுக்காமல் விடியும்வரை பார்த்திருந்தான். அவள் கண்திறந்தபின் தன் இதயக்கதவை திறக்க விழைந்தவனை தடுத்த ருஹானா “இவான் நேத்து சரியாவே தூங்கல. நான் போய் அவனை பார்க்கறேன்” என்று சென்றுவிட்டாள்.

இவான் அறைக்கு போனவள் “கண்டிப்பா என்கிட்டே ஏதோ சொல்லப்போறார். நான் எத்தனை நாளைக்கு தான் இப்படி ஓடி ஒளிய முடியும்?” என தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். இவான் அழைக்கவும் அவனை உடல் சுத்தம் செய்யவைத்து உணவு உண்ண கீழே அழைத்து சென்றாள்.

அங்கே அங்காடிக்கு சென்ற நஸ்ரியா பணப்பையை திருட்டு கொடுத்து திரும்பி வந்தவள் சாராவிடம் அழுது கொண்டிருந்தாள். அவளை தேற்றிய ருஹானா தனது சகோதரனுக்கு அழைத்து வழிப்பறி பற்றி தெரிவித்தாள். தன்வீரை சென்று சந்திக்கும்படி நஸ்ரியாவையும் காவல் நிலையம் அனுப்பி வைத்தாள்.

———

“சல்மா! கதவை திற! நான் சொல்றதை கேளு!”

“கேட்க மாட்டேன். நான் இங்க தான் இருப்பேன். எங்கயும் போக மாட்டேன்!”

“ஆர்யன் விட மாட்டான். நீ இப்போ போ! அவன் கோபம் குறைஞ்சதும் நானே உன்னை கூப்பிடுறேன்.”

“முடியாது! அந்த பிசாசு இங்க இருப்பா. நான் மட்டும் போகணுமா? முடியாது!”

“சல்மா! நான் சொல்ற இடத்துல ஒரு வாரம் இரு. அதுக்குள்ள இங்க எல்லாம் சரியாகிடும்.”

“நிறுத்து! உன் குரலை கேட்க எனக்கு பிடிக்கல. உன்னையும் எனக்கு பிடிக்கல. இனிமே நீ எனக்கு வேணாம்.”

———-

ருஹானா இவானுக்கு உணவளித்து முடிக்கவும் ஜாஃபர் அவளிடம் ஒரு உறையை கொண்டுவந்து கொடுத்தான். “ருஹானா மேம்! இது உங்களுக்கும் ஆர்யன் சாருக்கும் வந்திருக்கு.”

அந்த உறையை எடுத்துக்கொண்டு ஆர்யன் அறைக்கு சென்ற ருஹானாவிற்கு அவன் சொல்லப்போவதை கேட்க ஆசை, கலக்கம் எல்லாம் கலந்து கட்டி வந்தது.

முன் அலுவல அறையில் வேலையாக இருந்த ஆர்யன் ருஹானாவை பார்த்ததும் ஆர்வமாக எழுந்து வந்தான். ருஹானா உறையை தரவும் அதை வாங்கி பிரித்தான். “என்ன இது?”

“இது நமக்காக வந்திருக்கு. நான் கவரை திறக்கல.”

“நம்மோட புது அடையாள அட்டை வந்திருக்கு” என மகிழ்ச்சியுடன் சொன்னவன் இரு அட்டைகளையும் அக்கம்பக்கம் வைத்து அழகு பார்த்தான். மென்மையாக அவள் பெயரை தடவி பார்த்தபின் அவளது அட்டையை அவளிடம் நீட்டினான்.

அதை வாங்கி படித்தவள் “ருஹானா…. அர்ஸ்லான்!” என்று மெல்ல சொல்ல, ஆர்யன் முகத்தில் பெருமித புன்னகை. “ஆமா, இப்போ நீயும் அர்ஸ்லான் குடும்பத்தின் அங்கம்” என்றவன் “எல்லாம் முறையா நடந்துடுச்சி. எல்லாமே உண்மையா இருக்கு, நம்மை போலவே” என அவள் கண்களை பார்த்து சொல்ல, அவள் தலைகுனிந்து கொண்டாள்.

அவர்களை தொந்தரவு செய்ய உள்ளே வந்த ரஷீத், முக்கிய வேலை என்று ஆர்யனை அலுவலகம் அழைத்தான். “கண்டிப்பா நான் வந்து தான் தீரவேண்டுமா?” என ஆர்யன் தயங்க, ரஷீத் அவனை வற்புறுத்தி அழைத்து சென்றான்.

அடையாள அட்டையுடன் இவான் அறைக்கு சென்ற ருஹானா அதை பார்த்துக்கொண்டே இருந்தாள். “ருஹானா அர்ஸ்லான்!” என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டாள்.

“என்ன சித்தி அது?” என்று இவான் கேட்க, “என்னோட புது அடையாள அட்டை அன்பே! உன் சித்தப்பாவை நிக்காஹ் செய்ததால என் பேர் மாத்தி வந்திருக்கு, ருஹானா அர்ஸ்லான்” என்றாள்.

“ஹையா! நாம இப்போ ஒரே குடும்பமாகிட்டோம். அப்பா அர்ஸ்லான்! அம்மா அர்ஸ்லான்! பையன் அர்ஸ்லான்!” என இவான் குதுகலிக்க, ருஹானாவும் பூரிப்படைந்தாள்.

———–

“என்னை வெளிய அனுப்பிட்டு நீ மட்டும் சந்தோசமா இங்க இருக்க திட்டம் போட்டுட்டே” என்று வம்பு செய்த சல்மாவை பிடித்து தள்ளாத குறையாக கரீமா காரில் அனுப்பி வைத்தாள்.

குறிப்பிட்ட நேரம் கடந்தும் சல்மாவிடமிருந்து சென்று சேர்ந்த தகவல் வராத காரணத்தால் பதட்டமான கரீமா தங்கைக்கு அழைப்பு விடுத்தாள். அது ஏற்கப்படாமல் போகவே குறுஞ்செய்தி அனுப்பி வைத்தாள். ‘ஏன் போனை எடுக்க மாட்றே, சல்மா? அங்க போய் சேர்ந்திட்டியா? எனக்கு டென்ஷனா இருக்கு. ஒரு மெசேஜ் மட்டுமாவது செய்.’

        ———-

அலுவலகத்தில் முக்கிய கூட்டத்தின் நடுவே ருஹானாவின் நினைப்பாகவே இருந்த ஆர்யன் வேலையை புறக்கணித்து அவனது மனைவியை செல்பேசியில் தொடர்பு கொண்டான். “சீக்கிரம் தயாராகு. நாம டின்னருக்கு வெளிய போறோம். நான் வந்து உன்னை கூட்டிட்டு போறேன்.”

“இவான்..” என்று அவள் ஆட்சேபம் தெரிவிக்க துவங்க, “ரெடியா இரு. நான் வரேன்” என்று அவன் பேச்சை முடிக்க, ருஹானாவும் ஆர்வமாகவே உடை மாற்றி அலங்கரித்து கொண்டாள்.

அவளை பார்த்த சாரா “அழகாக இருக்கே மகளே!” என்று பாராட்ட, ‘அதிகமா செய்திட்டேனோ?’ என ருஹானாவிற்கு சந்தேகம் எழுந்தது. என்றாலும் அதை மாற்றாமல் ஆர்யனுக்காக காத்திருந்தாள்.

ரஷீத்தை திகைப்பில் ஆழ்த்திவிட்டு “இதைவிட முக்கியமான வேலை எனக்கு இருக்கு” என்று ஆர்யனும் கிளம்பி ஓடோடி வந்துவிட்டான். ‘இன்னைக்கு என்னோட மனசுல இருக்கறதை சொல்லப் போறேன். அவளுக்கு எல்லாம் தெரியப்படுத்தணும்.’

———

“எனக்கு இந்த இடம் பிடிச்சிருக்கு. உணவும் நல்லா இருக்கு” எதிரே வடிவாய் அமர்ந்து உண்டு கொண்டிருந்த மனைவியை பார்த்து சொன்னான், ஆர்யன்.

“இப்போ இந்த டின்னர் அவசியமா? நம்ம திருமணமும் முடிஞ்சிடுச்சி. நம்மை சுத்தியும் யாரும் இல்ல. அப்புறம் ஏன்?” ருஹானா மெல்ல கேட்டாள்.

“நமக்கு பழக்கம் இல்லாத தருணங்களும் முக்கியம் தான். நாம.. அதாவது நீயும் நானும் கணவன் மனைவி இப்படி அடிக்கடி வர்றது சகஜம் தான். மீடியா முதற்கொண்டு நம்மளை பார்த்துட்டு தான் இருப்பாங்க.”

ருஹானா புரிந்தது என்பது போல தலையாட்ட, ஆர்யன் “நம்ம நிக்காஹ் உண்மையானதா ஆகணும்…” என சொல்லிக் கொண்டே போக ருஹானா இடைமறித்தாள். “உங்க சிக்கல் தீர்ந்ததா? அதான் நீங்க முடிவு எடுத்துட்டேன்னு சொன்னீங்களே!”

“அதை நாம சேர்ந்தே தீர்வு காணுவோம். அதுக்கு முன்ன நாம ஒரு விஷயம் பற்றி பேச வேண்டியிருக்கு. நான் பேசும்போதுலாம் எதாவது தடை வந்துட்டே இருக்கு.. இந்த நிக்காஹ் எனக்கு…” என அவன் சொல்லிவிட யத்தனிக்க, அந்த உணவுவிடுதியின் அதிபர் குறுக்கிட்டார்.

“மிஸ்டர் அண்ட் மிசஸ் ஆர்யன்! நீங்க முதல்முறை இங்க வந்து இருக்கீங்க. உங்களுக்காக தான் இந்த பாடலை இசைக்க சொன்னேன். உங்க மகிழ்ச்சியான திருமண வாழ்வுக்கு என்னோட வாழ்த்துக்கள்” என்று அவர் சொல்ல, அவர் அகலும்வரை பொறுத்திருந்த ஆர்யன் ருஹானாவின் கையைப் பிடித்து வெளியே அழைத்து சென்றுவிட்டான்.

——–

“நாம ஏன் இங்க வந்திருக்கோம்?”

“ஏன்னா உனக்கு கடலும் நட்சத்திரங்களும் பிடிக்கும் தானே? அது ரெண்டும் இங்க இருக்கு” என்று கைநீட்டி காட்டிய ஆர்யன் கடற்கரையோரம் அலைகளை பார்த்தபடி நின்ற ருஹானாவிடம்  “உட்கார்..” என்று சொல்லி தனது கோட்டை கழட்டி மண்ணில் விரித்தான். தானும் அவளை ஒட்டி அமர்ந்து கொண்டான்.

அவன் நெருக்கம் தந்த படபடப்பை மறைத்து கொள்ள ருஹானா அங்கே கிடந்த கூழாங்கற்களை எடுத்து கைகளில் சேகரித்தாள்.

ஆர்யன் “நான்…” என ஆரம்பித்தான்.

“நீங்க.. இவானுக்கு முன்மாதிரி! அவன் உங்களைத்தான் உதாரணமா எடுத்துக்கறான். அவனும் வேகமா வளர்றான்.”

“இன்ஷா அல்லாஹ்! அவன் என்னோட வழியை பின்பற்றக்கூடாதுன்னு நான் விரும்பறேன். உனக்கே தெரியும், நான் ஒரு கடினப் பாறை. வாழ்க்கை என்னை உருட்டி விட்டு உருவாக்கியிருக்கு. நானும் ஆசைப்பட்டோ இல்லாமலோ இது போல கல்லா உருமாறியிருக்கேன்” என்று சொன்னபடி அவள் விரல்களை பிரித்து கூழாங்கற்களை தொட்டுக் காட்டினான். “ஆனா இந்த சில மாசத்துல நான் நிறைய மாறியிருக்கேன், நீ என் வாழ்க்கையில வந்த பின்ன….”

அலைபேசி ஒலிக்க, அழைத்தது கரீமா என தெரிய ஆர்யன் அதை சட்டை செய்யவில்லை.

“போன் எடுங்களேன்” என்று ருஹானா சொல்ல, “இல்ல, நான் சொல்லப்போறது அதிக முக்கியமானது. நான் என்ன சொல்லிட்டு இருந்தேன்?” என்று ஆர்யன் கேட்டான்.

“கடந்த சில மாதங்களா…” என ருஹானா விரும்பியே எடுத்துக் கொடுக்க, “ஆமா, நான்.. நீ வந்த பின்னாடி..” என்று விடாது ஆரம்பிக்க, அவன் செல்பேசியில் ஒரு செய்தி வந்து விழுந்தது ஒலியுடன்.

‘ஆர்யன்! சல்மாவுக்கு விபத்து நடந்திருச்சி. அவளை ஆஸ்பிட்டல் கொண்டு போறோம்.’

———-

Advertisement