Advertisement

“ஆர்யன்! ஆர்யன்! அவ மோசமானவ! நான் சொல்றதை கேளுங்க! அவ தேவதை முகமூடி போட்ட பிசாசு. என்கிட்டே நிரூபணம் இருந்தது. ஆனா அதை நான் தொலைச்சிட்டேன்” என்று சல்மா பேசிக்கொண்டே போக, கரீமா அவளை நிறுத்த முயற்சி செய்ய எதுவும் பலனளிக்கவில்லை.

“நான் உங்களுக்கு விளக்கமா சொல்றேன், அந்த பாம்பை பத்தி” என்றவளின் பேச்சை தடுத்த ஆர்யன் “உனக்கு என்ன தைரியம்? உன் இடம் தெரிஞ்சி பேசு!” என மாளிகையே நடுங்கும்வண்ணம் இரைந்தான்.

கரீமாவிற்கே தூக்கிவாரிப்போட, சல்மா அடங்குவதாக இல்லை. “அவ உங்களை மயக்கி வச்சிருக்கா. உங்களுக்கு உண்மை தெரியல. நான் உதவி செய்றேன்.”

“நிறுத்து சல்மா!” என்று கரீமா அவள் கையை பிடித்து பின்னால் இழுக்க, “மாட்டேன்! ஆர்யனுக்கு எல்லாம் தெரியட்டும்!” என்று சல்மா இன்னும் பேச..

“இதுக்கு மேல நீ ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது. நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ! என் மனைவியை பத்தி தப்பா பேசின உனக்கு இங்க இடம் இல்ல. நாளைக்கு காலைல நீ மாளிகையை விட்டு வெளியே போயிருக்கணும். உன் முகத்தை இனி நான் பார்க்க கூடாது” என்று சொன்ன ஆர்யன் வெளியே நடக்க..

அவன் பின்னால் ஓடிவந்த கரீமா “ஆர்யன்! நான் அவளுக்கு எடுத்து சொல்றேன். இந்த ஒரு முறை அவளை மன்னிச்சிடு. அவளை வெளிய அனுப்பாதே” என கெஞ்சினாள்.

“நாளைக்கு அவ இங்க இருக்கக் கூடாது. அவ்வளவு தான்!”

“ப்ளீஸ் ஆர்யன்!”

“அவ கதை முடிந்தது. நான் சொன்னா சொன்னது தான்” என்ற ஆர்யன், அறைவாசலில் மிரண்டு போய் நின்றிருந்த ருஹானாவை கைபிடித்து உள்ளே கூட்டி சென்றான். கண்ணீருடன் நின்ற கரீமாவை இரக்கத்துடன் பார்த்தபடி ருஹானா அவனுடன் சென்றாள்.

கீழே நின்று இரைச்சலை கேட்டுகொண்டிருந்த சாராவிடம் நஸ்ரியா “பைத்தியக்காரத்தனமான காதல் பொறாமையால இந்த பாடுபடுத்துதே!” என்று சொல்ல, சாரா அவளை முறைத்தார். அவர் பேச வாயை திறக்க, தனது கையால் வாயை பொத்திக்கொண்ட நஸ்ரியா அங்கிருந்து நழுவி விட்டாள்.

——–

“சல்மா பேசினது தப்பு தான். எனக்கும் அது வருத்தம் தான். ஆனா அவ நார்மலா இல்ல. ஏதோ மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கா. உங்க தண்டனை ரொம்ப கடுமையானது.”

“என்ன கடுமையா? இதை விட பெருசா தண்டனை கொடுத்து இருக்கணும். என் மனைவியை அப்படி யாரும் பேசக் கூடாது” என்று ஆர்யன் வேகமாக சொல்ல, ருஹானாவின் மனவருத்தம் நொடியில் நீங்கி சில்லென குளிர்ந்து போனாள்.

“ஆனா இது ஃபார்மாலிட்டி தானே? இதுக்கு போய்…”

“ஃபார்மாலிட்டியோ நிஜமோ? நீ ஆர்யன் அர்ஸ்லான் மனைவி! என்னோட மனைவியை பற்றி பேச யாருக்கும் தகுதி இல்ல. பேசினா தண்டனை அனுபவிக்க வேண்டியதுதான்” என்று இறுக்கமாக சொன்னவனின் முகம், ருஹானாவின் குழந்தைமுகத்தை பார்த்து இளக்கமானது.

“நீ கவலைப்படாதே!” என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான்.

“சரி, உங்களுக்கு டீ வேணுமா?”

“இல்ல, நான் தோட்டத்துக்கு போறேன்” என்று சொல்லி வில்லையும் அம்புகளையும் எடுத்து  சென்றான்.

———

மேன்மாடத்திலிருந்து ஆர்யன் அம்பு விடுவதை பார்த்துக் கொண்டிருந்த ருஹானாவிற்கு உண்மையில் பெருமையாக தான் இருந்தது. சல்மாவின் அபாண்டமான பழிச்சொற்கள் அவளை துன்புறுத்தினாலும், ஆர்யன் அவளை உரிமையாய் காத்து நின்றது அவளை பெருமை கொள்ளவே செய்தது.

நெடுநேரம் சென்றும் ஆர்யன் நிறுத்தாதது கண்ட ருஹானா அவனுக்கு தேநீர் தயாரித்து எடுத்துக்கொண்டு சென்றவள் சற்று தூரத்தில் காத்திருந்தாள்.

சல்மாவின் பேச்சு தந்த ஆத்திரம் தணியாமல் அம்புகளை மாற்றி மாற்றி செலுத்திக்கொண்டிருந்த ஆர்யன் எதேச்சையாக ருஹானாவின் புறம் திரும்பினான். தனக்காக அவள் நிற்பது கண்டு உள்ளம் உவகை அடைய அவள் அருகே வந்தான்.

“எவ்வளவு நேரமா இங்க நிக்கிறே?”

“அதிக நேரம் இல்ல. உங்களுக்கு டீ” என்று அவள் நீட்ட, அதை வாங்கிய ஆர்யனின் கை அவளின் குளிர்ந்திருந்த கைமேல் பட “பனியில நடுங்கப் போறே நீ” என்றபடி தேநீரை பருகினான்.

“நான் இவானுக்கு பால் சூடு செய்தேன். அப்படியே உங்களுக்கு டீ. இது குளிருக்கு இதமா இருக்கும். உங்களை அமைதியாக்கும்” என்று கவலையாக ருஹானா சொல்ல, அது அவனுக்கு தேநீரை விட இதம் தந்தது.

தன் கழுத்தில் சுற்றியிருந்த ஸ்கார்ப்பை எடுத்த ஆர்யன் அதை ருஹானாவின் கழுத்தை சுற்றி போட்டான். ருஹானா வெட்கமாக குனிய, ஸ்கார்ப்பில் சிக்கியிருந்த அவள் இருபக்க கூந்தலை மென்மையாக எடுத்து பின்னால் தள்ளிவிட்டான். அவள் கூந்தலில் மேல் தனி மோகம் கொண்ட அவனுக்கு அதை தொட்டுத் தடவ வாய்ப்பு கிடைத்தால் விடுவானா?

“நான் ஓகே தான். இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா சரியாகிடுவேன்” என்று அவன் சொல்ல, “பனியில உறைந்து போய்டுவீங்க” என ருஹானா எச்சரிக்கை செய்தாள்.

“என்னை பற்றி கவலைப்படாதே! நீ உள்ள போ!” என்று அவன் சொல்ல, சற்று தூரம் சென்றவள், அவன் கரிசனையில் உள்ளம் நெகிழ்ந்து அவனை திரும்பிப் பார்த்து புன்னகை செய்தாள்.

அவள் முறுவலில் மதிமயங்கிய ஆர்யன் சிரிப்புடனே அம்பை எடுத்து அடிக்க, அது நட்டநடுவில் பாய்ந்து நின்றது.

——–

ஆர்யன் படுக்கையறைக்குள் நுழைய ருஹானா அசந்து தூங்கிக் கொண்டு இருந்தாள். அவளை நெருங்கிய ஆர்யன் அவள் தூங்கும் அழகை ரசித்து பார்த்தவன் பின் அது தவறென நினைத்து போர்வையால் அவளை மூடிவிட்டான்.

எதிரே வசதியாக சோபாவில் அமர்ந்து கொண்டவன் அவள் முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தான். ‘நீ இப்போது என்னுடையவள். நான் சாதித்து விட்டேன்’ எனும் பெருமிதம் அவன் முகத்தில் மலர்ச்சியை கொண்டுவந்தது.

நொடி தப்பாமல் அவளை நோக்கியிருந்தவன் அவளிடம் அசைவு தெரியவும் வேறு திக்கில் பார்வையை திருப்பிக் கொண்டான். கண்விழித்த ருஹானா எதிரே அமர்ந்திருந்த ஆர்யனை பார்த்ததும் வேகமாக எழுந்தாள்.

“நான் அப்படியே தூங்கிட்டேன். நீங்க வந்தது கூட பார்க்கல. நீங்க சரியாகிட்டீங்களா? காலை வரை பயிற்சி செய்துட்டு இருந்தீங்களா? உங்களுக்கு சூடா எதுவும் வேணுமா? நான் செய்து கொண்டு வரவா?” என படபடவென கேட்டாள்.

“இல்ல, வேணாம். உண்மையில நேத்து நீ வந்துட்டு போனதுமே நான் அதை கடந்து வந்துட்டேன்” என்று எழுந்து நின்ற அவன் சொல்ல, ருஹானா பெருமிதத்துடன் தலைகுனிந்து கொண்டாள்.

“நாம இருக்கற இடத்துல அமைதி நிலவுறது தான் முக்கியம்” என்ற ஆர்யன் அவளை நெருங்கி “நான் நேத்து சொல்ல வந்தது பாதியில நிக்குதே..” என்று திரும்பவும் ஆரம்பித்தான்.

மாற்றம் தடுமாற்றம் பெரும் மாற்றம் உணர்ந்து

தவிப்புகளுக்கு விடை கொடுக்க முயல்கிறேன்!

தவிர்ப்பது அவளது விடையானால்

என் மனதை எப்படி திறப்பேன்?

உள்ளக்காதலை எவ்விதம் உரைப்பேன்?

(தொடரும்)

Advertisement