Advertisement

அவன் காரின் முன்னே சென்று பிடித்துக்கொண்டவள் “உனக்கு என்ன பைத்தியமா?” என கத்தினாள். காரை நிறுத்தி இறங்கிய மிஷால் அவளை விட அதிகமாக சத்தமிட்டான்.

“என்ன நடக்குது? ஏன் போன் எடுக்க மாட்றீங்க?”

“எல்லாம் முடிஞ்சது மிஷால்! நாம தோத்துட்டோம்.”

“என்ன சொல்றீங்க?”

“கடைசி வினாடில அசம்பாவிதம் நடந்துடுச்சு. பைல் காணாம போய்டுச்சி.”

“என்ன? எப்படி?” என்று கேட்ட மிஷால் அதற்கு மேல் பேச பொறுமையின்றி மாளிகை நோக்கி நடந்தான். “நிக்காஹ் நடந்துட்டாலும் அவங்க ஒன்னா இருக்க கூடாது. நான் விட மாட்டேன்.”

அவனை இருகைகளாலும் பிடித்து இழுத்த கரீமா “நில்லு மிஷால்! என்ன செய்றே?” என்று அவனை நகர விடாமல் மறித்தாள்.

“நான் போய் என்னோட ருஹானாவை அவன்கிட்டே இருந்து விடுதலை செய்யப் போறேன்” என மிஷால் அவளிடமிருந்து திமிற, கரீமா நடுத்தெருவில் அவன் முன்னே மண்டியிட்டு கை கூப்பி கெஞ்சினாள். “நிலைமையை மோசமாக்காதே. மொத்தமா அவளை இழந்துடாதே. கொஞ்சம் பொறுமையா இரு. நான் எல்லாம் சரி செய்றேன்.”

அவளை அப்படியே தூக்கி அவன் வழியிலிருந்து அகற்றிய மிஷால் “உங்களை நம்பி நான் மோசம் போயிட்டேன்” என அவளை கீழே தள்ளிவிட்டான்.

“நான் சத்தியம் செய்றேன். கண்டிப்பா ருஹானாவை உன்கூட சேர்த்து வைக்கறேன்” என அவன் காலை பிடித்துக் கொண்டு கரீமா கண்ணீர் விட, “எனக்கு உங்க மேல நம்பிக்கை இல்ல. ஆரம்பத்துல இருந்து உங்களை நம்பி நான் மோசம் போயிட்டேன்” என்று வெறுப்புடன் சொன்ன மிஷால் திரும்பி அவன் காருக்கு நடந்தான்.

ஆடையில் படிந்த புழுதியையும், கண்ணீரையும் துடைத்துக் கொண்ட கரீமா மிடுக்குடன் மாளிகைக்கு நடந்தாள்.

———–

அம்ஜத் கரீமாவை தேடி செல்ல எழுந்து கொள்ள, ருஹானா அவனை தடுத்து நிறுத்தினாள். “உங்க டோல்மா (கறி உருண்டை) ஆறுதே, அம்ஜத் அண்ணா” என அவள் சொல்லவும், அம்ஜத் அமர்ந்து கொண்டான். “ஆமா நீ எவ்வளவு சிரமப்பட்டு செய்திருக்கே, அது வீணாகக் கூடாது.”

தன்வீர் எனக்கும் ஒன்று என கேட்டு வாங்கி சாப்பிட, உணவில் ஆர்வம் காட்டாத ஆர்யனிடம் ருஹானா கேட்டாள். “உங்களுக்கு எதுவும் பிடிக்கலயா?”

“அப்படி இல்ல. எல்லாமே நல்லா இருக்கு” என ஆர்யன் சொன்னாலும் அவன் ருஹானாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான், சையத் பாபா சொன்னதை நினைத்தபடி.

தன்வீர் சட்டையில் கறை பட அதை சுத்தம் செய்ய ருஹானா அவனை உள்ளே அனுப்பினாள். நஸ்ரியா தன்வீருடன் பேசியபடியே அவன் சட்டையில் படிந்த எண்ணெய் கறையை துணி கொண்டு துடைக்க, தன்வீருக்கு தன் சட்டை முழுவதும் எண்ணெயை தடவ ஆசை வந்தது.

பர்வீன் சீக்கிரமே தூங்கிவிட்ட இவானுக்கு ஒரு பரிசு பொட்டலத்தை தருமாறு ருஹானாவிடம் அளித்தார்.

அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்ட கரீமா “பரிசு என்றால் இவானுக்கு பிடிக்கும் இல்லையா, ஆர்யன் டியர்?” என தனது இல்லாத நேரத்தை இட்டு நிரப்ப ஆர்யனை பேச்சுக்கு இழுத்தாள்.

தன்னவளிடம் தனது காதலை தெரிவிக்கும் வழியை யோசித்திருந்த ஆர்யன் “என்ன சொன்னீங்க அண்ணி?” என வினவினான். ஆர்யனிடம் தனக்குள்ள நெருக்கத்தை பறை சாற்ற “அவன் இப்படித்தான் குறைவா பேசுவான். எப்பவும் வேலையை பத்தி தான் யோசிச்சிட்டு இருப்பான். ருஹானாவுக்கும் அது பழகிடுச்சி” என பெருமை பேசினாள்.

தலையை ஆட்டிய பர்வீன் “நானும் கவனிச்சி இருக்கேன். ஆனா கணவன் மனைவி மனம்விட்டு எல்லாம் பேசணும். அப்போ தான் உங்க உறவு பலப்படும்” என்று ஆர்யனுக்கு அறிவுரை சொல்ல, ஆர்யனும் “ஆமா, நீங்க சொல்றது சரி தான்” என ஏற்றுக்கொண்டான்.

சாப்பிட்டு முடித்து பர்வீனும் தன்வீரும் கிளம்ப “நீங்களும் எங்க வீட்டுக்கு சாப்பிட வரணும்” என ஆர்யனுக்கு பர்வீன் அழைப்பு விடுத்தார். “நிச்சயமா வருவோம்” என்று ஆர்யன் சொல்ல, ருஹானா இருவரையும் வழியனுப்ப வெளியே சென்றாள்.

“மகளே! ஆர்யன் உன்கிட்டே ஏதோ சொல்ல தவிச்சிட்டு இருக்கார்” என பர்வீன் ருஹானாவின் காதில் சொல்ல, ‘என்ன சொல்ல போறார்?’ என்று நினைத்து ருஹானா விழித்தாள்.

“இது ஃபார்மாலிட்டி நிக்காஹ் இல்லன்னு நான் முன்ன இருந்தே சொல்லிட்டு இருக்கேன். ஆர்யன் கண்ணை பார்த்தா அவர் மனசுல இருக்கறதை சொல்லப் போறார்னு எனக்கு தோணுது. அவர் அப்படி சொல்லும்போது நீயும் உண்மையை மறைக்காதே! உன் காதலையும் வெளிப்படையா அவருக்கு சொல்லு” என்று பர்வீன் சொல்லி தன்வீருடன் காரில் ஏறி சென்றார்.

ருஹானா வெளிவாசலிலேயே  நின்று யோசிக்க “நீ ஆசைப்பட்டது போல எல்லாம் நடந்ததா?” என்று ஆர்யனின் குரல் அவள் பின்னால் இருந்து வந்தது.

“ஆமா, எனக்கு மிக மகிழ்ச்சி. உங்களுக்கு என்னோட நன்றி. ஆனா நீங்க தான் வேற நினைவுல இருந்தீங்க! உங்களுக்கு போர் அடிச்சதா?”

“இல்லவே இல்ல. உண்மையில அப்போ என்னோட சிக்கலுக்கு தீர்வும் கண்டுபிடிச்சிட்டேன்” என்ற ஆர்யன் அவளிடம் நெருங்கி வர, “குளிரா இருக்கு. உள்ளே போகலாமா?” என ருஹானா உள்ளே செல்ல திரும்பினாள்.

“நான் உன்கிட்டே பேசணும்” என்று ஆர்யன் கேட்க, பயந்து போன ருஹானா “எனக்கு கிச்சன்ல வேலை இருக்கு. முடிச்சிட்டு வரட்டுமா?” என அதை தள்ளிப் போட்டாள்.

உள்ளே செல்லும் ருஹானாவை பார்த்திருந்த ஆர்யன் அவளிடம் எப்படி பேசுவது என்று மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டான்.

——–

சமையலறையில் உதவப் போன ருஹானாவை சாராவும் நஸ்ரியாவும் தடுத்து நிறுத்தினர். தேநீர் மட்டுமாவது தயாரிக்க விடுமாறு சொல்லி ருஹானா நேரத்தை கடத்த, ஆர்யன் அவளை அழைப்பதாக ஜாஃபர் வந்து சொன்னான். அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் ருஹானா மேலே அவர்களது அறைக்கு சென்றாள்.

முன்னறையில் உலாத்திக்கொண்டு இருந்த ஆர்யனை பார்த்தவள் “எதும் பிரச்சனையா?” என்று கேட்டாள். “இல்ல, நான் உன்கிட்டே ஒன்னு சொல்லணும்” என்று ஆர்யன் துவங்க, ருஹானாவின் பதட்டம் அதிகரித்தது.

“இது நம்ம வாழ்க்கையே மாற்றக் கூடியது. இதை நான் உன்கிட்டே முன்னமே சொல்லி இருக்கணும்” என்ற ஆர்யன் பீடிகையை தொடர, பர்வீனின் எச்சரிக்கையின் நினைவு வந்த ருஹானா “வேர்க்குது தானே? நான் ஜன்னலை திறக்கவா?” என்று நகர, அவளை ஆர்யன் பிடித்து நிறுத்தினான்.

வெளியே நின்றால் குளிர் என்கிறாள். உள்ளே பேசினால் வியர்வை என்கிறாள். இவளை வைத்துக்கொண்டு ஒரு காதல் கூட செய்ய முடியாது போலவே!

“அப்புறமா அதை செய். நான் சீக்கிரம் சொல்லி முடிச்சிடுறேன். நான்….”

“போதும்! முடியாது! ஏமாத்துற பாம்பு அவ! உடனே அவ வெளிய போகணும். நான் விட மாட்டேன்” என்ற சல்மாவின் குரல் அங்கே வரை கேட்டது. அதிர்ந்து போன ஆர்யன் கோபமாக வெளியே சென்றான்.

“சல்மா! நிறுத்து! யாராவது கேட்டுட போறாங்க” என்று கரீமா மெல்லிய குரலில் அவளை தடுக்க, “கேட்கட்டும்! அவ எப்படி ஆர்யனை முட்டாளாக்குறான்னு எல்லாரும் தெரிஞ்சிக்கட்டும்” என்று அதிகமாக சல்மா இரைந்தாள்.

“எல்லாத்தையும் கெடுக்காதே, சல்மா!”

“அவ பிறந்த சாக்கடைக்கு நான் அவளை அனுப்பிட்டு வரேன்” என சல்மா ஒப்பனை பொருட்களை எல்லாம் வீசி எறிந்தாள்.

“என்ன நடக்குது இங்கே?” என்று ஆர்யன் கத்திக்கொண்டே கதவை திறந்து உள்ளே வர, திகிலடைந்து நின்ற கரீமாவின் பிடியை உதறிய சல்மா அந்த களேபரத்திலும் ஆர்யனை பார்த்ததும் கலைந்திருந்த தனது முடியை சரிசெய்து கொண்டாள்.

Advertisement