Advertisement

“போனை எடுக்கலயா?”

“அது ஒன்னும் முக்கியம் இல்ல” என ஆர்யன் சொல்ல, ருஹானா போனை கீழே வைத்து திரும்பினாள்.

“போகாதே!” என ஆர்யன் ஏக்கமாக கூப்பிட, அவள் கால்கள் அதற்கு மேல் நகரவில்லை.

திரும்பி அவனை பார்த்தவள் “ஏன்?” என்று கேட்க, ஆர்யன் அவன் மனதை மறைத்து “வாயேன், நாம ஒரு காபி குடிக்கலாம்” என்று அழைத்தான்.

“இப்போ தானே குடிச்சீங்க? நிறைய காபி உடம்புக்கு நல்லது இல்ல.”

“காபி முக்கியம் இல்ல. நாம சேர்ந்து இருக்கறது தான் தேவை. வந்து… மத்தவங்க முன்ன நாம அப்படி காட்டிக்கணும்.”

“நீங்க சொல்றது சரி தான். ஆனா எனக்கு இப்போ வேலை இருக்கு. நாம அப்புறம் குடிக்கலாம்” என்று சொல்லி சமையலறைக்கு வந்து மாவை எடுத்த ருஹானாவின் முகம் நாணத்தால் சிவந்திருந்தது.

“கல்யாணம் காதலை சாகடிச்சிடும்னு சொல்வாங்க. அது பொய். கல்யாணம் இங்க காதலை மின்ன வைக்குது” என்று நஸ்ரியா கிண்டல் செய்ய, ருஹானா பதட்டத்தில் தன் மேல் மாவை கொட்டி விட்டாள்.

“நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன்” என்று அவள் வெளியே செல்ல, சாரா நஸ்ரியாவை மீண்டும் கண்டித்தார். “நஸ்ரியா! இப்போ ருஹானா ஆர்யன் சாரோட மனைவி! நம்மோட எஜமானி! நீ முன்னாடி போலவே அவகிட்டே பேசுறே! ஆர்யன் சார் கேட்டா என்ன ஆகும்?”

ஆர்யனும் ருஹானாவும் ஒன்றாக அறைக்குள் செல்ல முயல, இருவரும் முட்டி மோதி நின்றனர். “நீ உள்ளே போ” என அவனும் “நீங்க போங்க” என அவளும் ஒரே நேரத்தில் சொல்ல, இருவர் முகத்திலும் இன்ப புன்முறுவல்.

அப்போது அங்கே வந்த இவான் “சித்தப்பா! உங்க போன் தாங்களேன்! நான் கேம் விளையாடிட்டு தரேன்” என்று கேட்க, போனை எடுத்து நீட்டிய ஆர்யன் “சரி, ஆனா ரொம்ப நேரம் இல்ல” என்று அவனிடம் சொல்லி “நான் சொல்றது சரிதானே?” என ருஹானாவின் பாராட்டை எதிர்பார்த்து அவளிடம் கேட்டான்.

ஆம் என ஆர்யனிடம் சிரிப்புடன் தலையாட்டிய ருஹானா “அதிக நேரம் போன் திரையை பார்க்கக்கூடாது. பத்து நிமிஷத்துல கொடுத்துடணும்” என்று இவானிடம் சொல்ல, ஆர்யனின் மனம் அவளின் சிரிப்பில் களிநடனம் புரிந்தது.

அலைபேசியை இயக்கிய இவான் அதில் திருமண உடையில் தெரிந்த ருஹானாவின் புகைப்படத்தை பார்த்து “வாவ்! சித்தி தேவதை போல இருக்காங்க” என்று சொல்ல, ருஹானா ஆர்யனின் செல்பேசி திரையை எட்டிப்பார்க்க அதில் அவள் புன்னகைத்தாள்.

ஆர்யனால் தன் மனதின் நேசத்தை அவளுக்கு தெரியாமல் ஒளித்து வைக்க இயலும். ஆனால் இவானுக்கு தெரியாமல் நிச்சயமாக மறைக்க முடியாது.

ஆர்யன் மாட்டிக்கொண்ட கள்வன் போல விழிக்க, இவான் “அப்படித்தானே, சித்தப்பா?” என கேட்டான். “உண்மை தான் சிங்கப்பையா!” என்று தயங்காமல் ஒத்துக்கொண்ட ஆர்யன், ருஹானாவிடம் “சோசியல் மீடியால போட படங்கள் தேடிட்டு இருந்தேன்” என்று சமாளித்தான்.

தலையாட்டிய ருஹானா உள்ளே சென்று கதவை அடைத்தவள் “அவர் என்னை போட்டோல பார்த்துட்டு இருந்திருக்கார்” என்று சொல்லி சந்தோசப்பட்டாள்.

“நான் அவ போட்டோவை வச்சிருக்கறதை அவ தெரிஞ்சிக்கிட்டா. என்ன செய்றேன் நான்?” என ஆர்யனும் வெட்கம் கொண்டான்.

———

“தன்வீர்! நான் எத்தனை தடவை சொன்னேன், வீட்டுக்கு வந்து உடை மாத்திட்டு வான்னு? நேரே ஆபீஸ்ல இருந்து வர்றே! இப்படியா விருந்துக்கு உடுப்பு போடுவே?”

“இருக்கட்டும்மா. எனக்கு ஏது நேரம்? யார் என்னை கவனிச்சு பார்க்க போறாங்க?”

அர்ஸ்லான் மாளிகை வாசலில் நின்று பர்வீனும், தன்வீரும் சண்டை போட்டுக் கொண்டிருக்க, நஸ்ரியா வாசற்கதவை திறந்தாள். “நல்வரவு!”

‘இது அவள்!’ என்று அதிசயமாக அவளை பார்த்த தன்வீர் ஆனந்தமானான். வேகமாக தன் உடையை சரிசெய்துகொண்டே “நீங்க இங்கயா வேலை செய்றீங்க?” என்றான்.

“ஆமா, நீங்க ருஹானா மேம் சகோதரர் தானே? நான் உங்களை பார்த்து இருக்கேனே!”

“ஆமா, ஆமா! ஆனா நான் உங்களை சந்தித்ததே இல்லயே! திருமணத்துல நடனம் ஆடும்போது தான் பார்த்தேன்.”

பர்வீன் புன்னகைக்க இருவரும் உள்ளே வந்தனர். ருஹானா ஓடிவந்து வரவேற்க, “மாப்பிள்ளை இல்லயா?” என பர்வீன் கேட்டார்.

“மன்னிச்சிடுங்க அம்மா! அவர் வெளிய போயிருக்கார். இப்போ வந்துடுவார்.”

——–

“டீ குடிக்கறியா, மகனே?”

“வேண்டாம் பாபா! வீட்டுக்கு விருந்தாளிகள் வராங்க.”

“ஒஹ்! அங்க உன் மனைவி உன்னை எதிர்பார்த்துட்டு இருப்பா. நீ இங்க வந்திருக்கே. அப்போ முக்கியமான விஷயம் தான்.”

“என்னை மீறி நான் நடந்துக்கறேன் பாபா. இது எனக்கு வழக்கமே இல்ல.”

“உன் இதயத்தை உன்னால கட்டுப்படுத்த முடியல, அப்படித்தானே? உன் வாயால பேச முடியாட்டாலும் உன் இதயம் பேசறதை உன்னால நிறுத்த முடியல, அதானே? உன் இதயம் சொல்றதை ருஹானாவை கேட்க விடு, மகனே! அப்போ தான் உங்க பயணம் இனிக்கும். உங்க இருவர் இதயங்களும் பேசிக் கொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது.”

——–

அம்ஜத், கரீமாவுடன் விருந்தினரை வரவேற்க அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்து திருமணம் நடந்த விதத்தைப் பற்றி பேசி மகிழ்ந்தனர்.

ஆர்யன் இல்லாததை மரியாதை குறைவாக எடுக்கும்படி கரீமா பர்வீனிடம் பேசி பார்த்தாள். “ஆர்யனுக்கு எப்பவும் வேலை தான் முக்கியம். திருமணம் முடிந்த ரெண்டாவது நாள் வெளியே போக என்ன அவசியம்?”

“இருக்கட்டும், கரீமா மேம்! இவ்வளவு பொறுப்பா மருமகன் இருக்கார்னு எனக்கு சந்தோசம்தான்” என பர்வீன் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஆர்யன் வேகமாக உள்ளே வந்தான். “நல்வரவு! ஸாரி!”

பரவாயில்லை என்று பர்வீனும், தன்வீரும் சொல்ல, அம்ஜத் அவர்களை உணவு உண்ண அழைத்தான். “ருஹானா எனக்கு பிடித்தது எல்லாம் செஞ்சி வச்சிருக்கா. வாங்க சாப்பிட போகலாம்.”

கரீமாவும் அவர்களுடன் செல்ல, ஆர்யனின் முகம் பார்த்த ருஹானா பின்தங்கினாள். “என்ன ஒரே யோசனையா இருக்கீங்க? எதும் சிக்கலா?”

“இல்ல, முக்கியமான ஒன்னை பற்றி முடிவு செய்ய வேண்டியிருக்கு.”

“இன்ஷா அல்லாஹ்! நீங்க நல்ல முடிவா எடுப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.”

ஆர்யன் முகம் மலர, அதை பார்த்து ருஹானாவும் புன்னகைத்தாள்.

———

மிஷால் கரீமாவின் செல்பேசிக்கு பலமுறை அழைப்பு விடுத்தவன் அது எடுக்கப்படாமல் போக ‘நீங்க போன் எடுக்கலனா நான் அர்ஸ்லான் மாளிகைக்கு வந்துட்டே இருக்கேன். கிளம்பிட்டேன்’ என்று குறுஞ்செய்தி அனுப்பி வைத்தான்.

உணவு மேசையில் அனைவரின் முன்னிலையில் அந்த செய்தி வந்த ஒலி கேட்க, அம்ஜத் “யார் கரீமா இந்த நேரத்துல தொல்லை செய்றது?” என கேட்க, கரீமா “தோழிகள் குரூப் தான். அவங்களுக்கு என்ன? எப்பவும் வெட்டியா அரட்டை அடிப்பாங்க” என்று அதை படிக்காமல் போனை மேசையில் கவிழ்த்து வைத்தாள்.

ஆர்யன் யோசனையாய் ருஹானாவின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருக்க, தன்வீர் ஓடியாடி பரிமாறும் நஸ்ரியாவை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அடிக்கடி நீங்க வாங்க! ருஹானாவோட ஸ்பெஷல் உணவு எங்களுக்கும் கிடைக்கும்” என்று அம்ஜத் சொல்ல அங்கே சிரிப்பொலி எழுந்தது. “உங்களுக்கு பிடிச்சதுல எனக்கு சந்தோசம் அம்ஜத் அண்ணா!” என்று ருஹானா சொல்ல, அனைவரும் அவள் சமையலை பாராட்டி ரசித்து உண்டனர்.

“எப்படி இருக்கே மகளே? புது வாழ்க்கையில பொருந்திட்டியா?” என பர்வீன் கேட்க, ருஹானா ஆர்யனை பார்த்தபடி தலையாட்டினாள்.

தன்வீர் “எல்லாம் வேகமாக நடக்கவும் நான் கூட பயந்துட்டு இருந்தேன். இப்போ உன்னோட சிரித்த முகத்தை பார்த்ததும் தான் எனக்கு நிம்மதியாச்சு” என்று தன்வீர் சொல்ல, ருஹானா சங்கடமாக சிரிக்க, ஆர்யன் அவளது கரத்தை பற்றினான்.

பர்வீன், தன்வீர், அம்ஜத் அதை சந்தோசமாக பார்க்க, கரீமாவின் கண்ணில் கார மிளகாய் தெறித்தது. அவள் போனிலும் மிஷாலின் செய்தி வந்து விழுந்தது. அதை படித்து பதறிப் போன கரீமா, முக்கிய அழைப்பொன்றை செய்ய வேண்டும் என சொல்லி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு வெளியே சென்றாள்.

குளிராடையை எடுத்து அணிந்து கொண்டவள் “அவன் இங்க வரும்முன்ன அவனை தடுக்கணும்” என்று சொல்லி கேட்டை தாண்டி கடுங்குளிரில் வெளியே நடந்தாள். தெரு முனையில் மிஷாலின் கார் வருவது தெரிய சாலையில் தலைதெறிக்க ஓடினாள்.

Advertisement