Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                                அத்தியாயம் – 117

ஆர்யன் தனியாக படுக்கும் படுக்கையும் சலவைக்கு சென்றிருக்க, இவானையும் இன்றிரவு தங்களுடன் படுக்க ஆர்யன் தடை செய்திருக்க, அவன் ‘இன்று இரவு..’ என தொடங்கி பேசவும் ருஹானா வெலவெலத்துப் போனாள்.

“இன்னைக்கு இரவு விருந்துக்கு உன் அம்மாவையும் சகோதரனையும் நாம மாளிகைக்கு அழைக்கலாம். அது எங்களோட முறை” என்று ஆர்யன் சொல்ல, ருஹானாவின் திணறல் சந்தோசமாக மாறியது.

“விருந்தா?.. அப்படியா? பர்வீன் அம்மா ரொம்ப சந்தோசப்படுவாங்க. நான் இப்பவே அவங்களுக்கு போன் செய்றேன்!” என்று அவள் வேகமாக வெளியே செல்ல, அவள் பின்னே வந்தவன் “அப்புறம்.. எல்லாமே உன் விருப்பப்படி தான்” என்றான்.

இவன் தங்கள் உறவை பற்றி பேசுகிறானா அல்லது வேறு எதைப் பற்றி பேசுகிறான் என்று புரியாமல் அவள் “என்ன?” என கேட்க, “இரவு விருந்து! சாரா கிட்டே பேசு. நீ சொல்றதுலாம் அவங்க சமைப்பாங்க” என்று ஆர்யன் சொல்லவும், நிம்மதியானவள் நன்றி சொன்னாள்.

அங்கே கரீமா வர, ஆர்யன் அவளிடமும் “இன்னைக்கு இவளோட குடும்பம் விருந்துக்கு வராங்க. தன்னோட முதல் விருந்தாளிகளை வரவேற்கிறா. நீங்க கூட இருந்து உதவி செய்ங்க. எல்லாமே இவ ஆசைப்படி தான் நடக்கணும்” என்று சொல்ல, கரீமாவிற்கு உள்ளே புகைந்து வந்தாலும் முகத்தில் சிரிப்பைக் காட்டினாள்.

“சரி, ஆர்யன் டியர்! நான் பார்த்துக்கறேன்” என்ற கரீமா ருஹானாவிடம் “நான் என்ன செய்யணும் சொல்லு. உனக்காக நான் எதுவும் செய்வேன். நீ என்னோட தங்கை போல, ருஹானா டியர்” என்று பாசத்தை பொழிந்தாள்.

“என்னை நீங்க அப்படித்தான் நடத்துறீங்க! அதுல எனக்கு சந்தேகமே இல்ல. ஆனா இது நானே என் கையால செய்யணும்னு ஆசைப்படறேன்.”

“உன் விருப்பம், ருஹானா டியர்! என்னோட உதவி தேவைன்னா தயங்காம கூப்பிடு.”

———-

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தன்வீர் விட்டத்தை வெறித்து கனவு கண்டு கொண்டிருக்க, அவன் மேல் அவ்வப்போது பார்வையை திருப்பிய வாசிம் பக்கம் வந்தான். “தன்வீர்! என்ன நீ ருஹானா திருமணத்துக்கு போயிட்டு வந்ததுல இருந்து தூக்கத்திலயே இருக்கே?”

வாசிமை பார்த்து திடுக்கிட்டு எழுந்த தன்வீர், அவனுக்கு பதில் சொல்வதற்குள் அவன் அன்னை செல்பேசியில் அழைத்து ருஹானா தரும் விருந்து பற்றி சொன்னார்.

“அம்மா! நான் வரல. எனக்கு வேலை இருக்கு. நீங்க போயிட்டு வாங்க.”

“ருஹானா நம்ம ரெண்டு பேரையும் தான் கூப்பிட்டு இருக்கா. மறுத்தா மரியாதை இல்ல. நாம கண்டிப்பா போகணும். நீ சாயந்திரம் சீக்கிரம் கிளம்பி வா!”

———

ருஹானா சொல்படி கேட்டு விருந்து தயாரிக்கும்படி கரீமா சொல்ல, சாராவும் நஸ்ரியாவும் தலையாட்டினர். ருஹானாவும் சேர்ந்து சமைப்பதாக சொல்ல, அதை கரீமா தடுத்தாள். “நீ இப்போ இந்த மாளிகையோட எஜமானி! நீ சொல்லு, சாரா செய்வாங்க.”

“ஆமா ருஹானா மேம்! அதை என்கிட்டே கொடுங்க. நீங்க என்ன செய்யணும்னு சொல்லுங்க” என நஸ்ரியா கேட்க, ருஹானா “என்னோட அன்புக்குரியவங்களுக்கு நானே சமைக்கணும்னு ஆசைப்படறேன். முன்னாடி இருந்தது போலவே மாளிகைல எல்லாம் நடக்கட்டும். என்னஎன்ன செய்யணும்னு நீங்க எனக்கு சொல்லிக் கொடுங்க” என்று பணிவாக கரீமாவிடம் கேட்டாள்.

“கண்டிப்பா! நாம சேர்ந்தே எல்லாமே செய்யலாம்” என்ற கரீமா தன் கையில் சூடாக இருந்த காபி கோப்பையை அழுத்திக் கொண்டாள். அவள் மனதின் கொதிப்பை விட அந்த கோப்பையின் சூடு அவளுக்கு பெரிதாக தெரியவில்லை. மிஷால் கரீமாவின் அலைபேசியில் அழைக்க, அதை நிறுத்தியவள் அங்கிருந்து அகன்றாள்.

அவள் சென்றதும், சாரா “கரீமா மேம் பெரிய மனுஷி தான். தன்னோட அதிகாரத்தை எல்லாம் ருஹானாவுக்கு சுணங்காம விட்டுத் தராங்களே” என்று சொல்ல, நஸ்ரியா “ஆமா, உண்மையை சொல்லணும்னா நான் கூட அவங்க இந்த அளவுக்கு இறங்கி வருவாங்கன்னு நினைக்கல” என்று வியந்தாள்.

“அவங்க என்கிட்டே எப்பவும் பாசமாக தான் பழகுவாங்க. எனக்கும் அவங்களை ரொம்ப பிடிக்கும்” என்று கள்ளமில்லாமல் ருஹானா சொல்ல, “உங்களை யாருக்கு தான் பிடிக்காம போகும்?” என்று நஸ்ரியா அவளை கட்டிக்கொண்டாள்.

சாரா உள்ளே வரும் ஆர்யனை கண்ணால் காட்டி நஸ்ரியாவை வேலை செய்ய பணித்தார். “எதும் வேணுமா ஆர்யன் சார்?”

“காபி தாங்க சாரா” என்று சொன்ன ஆர்யன், ருஹானா நன்கு பார்வையில் விழும்படி நாற்காலியை சரி செய்துகொண்டு தனது சிறிய மடிக்கணினியுடன் அமர்ந்து கொண்டான்.

ஒரு காலத்தில் அவளை சமையலறையில் அமர்ந்து சாப்பிட பணித்தவன் இன்று அங்கேயே சுற்றி வருகிறான். மாளிகையின் அடுப்படி எங்கே இருக்கிறது என தெரியாமல் இருந்தவன் இப்போது அதை அலுவலக அறையாக மாற்றிக் கொள்கிறான்.

விருந்தின் ஏற்பாடுகள் மும்முரமாக நடக்க, ஆர்யனின் பார்வையோ ருஹானாவின் மீது தான். அவள் சமையல் செய்யும் லாவகத்தில், அவள் கண்களும் கைகளும் அசையும் அழகில், அவள் கூந்தலை பின்னே தள்ளிவிடும் சிலுப்பலில் தன்னை மறந்து லயித்திருந்தான்.

அவள் பார்வை அவனை சந்திக்க “சூப் செய்றியா?” என அவன் கேட்க, “ஆமா, யுவலாமா சூப்!” (வெள்ளாட்டு இறைச்சியுடன் அரிசி நொய் சேர்த்து செய்யப்படும் சூப்) என்று அவள் சொல்ல, “எனக்கு அது பிடிக்கும்!” என புன்னகையுடன் அவன் சொல்ல, அவளும் இலேசாக சிரித்து வைத்தாள்.

———

“ஹல்லோ அக்கா! என்ன செஞ்சிட்டு இருக்கே? உன் திட்டத்தை எல்லாம் கைவிட்டுட்டு அந்த சூனியக்காரிக்கு கூஜா தூக்கிட்டு இருக்கியா?”

“நீ எங்க இருக்கே சல்மா? எவ்வளவு நாள் தான் மாளிகைக்கு வராம இருப்பே?”

“வந்தா?… நீ சும்மா இருப்பியா? என்னால தான் எல்லாம்னு சொல்லுவே! நடந்தது நடந்துடுச்சி. இப்போ அடுத்தது அவங்களை பிரிக்கறதுக்கு என்ன செய்யப் போறே? அந்த பாம்பு ஆர்யன் கூட சேர்ந்து ஒரே அறையில இருக்கறத என்னால பார்க்க முடியாது.”

“நாம கொஞ்சம் காத்திருக்கத்தான் வேணும், சல்மா! நீ மாத்திரைலாம் ஒழுங்கா போடுறியா? எப்போ திரும்பி வருவே?”

“எதுக்கு வரணும்? அந்த கிராமத்துக்காரி அர்ஸ்லான் மாளிகையோட எஜமானியா சுத்தி வர்றதை பார்க்கறதுக்கா? நான் அவளை நேர்ல பார்த்தா கொன்னுடுவேன்! பரவாயில்லயா?”

“சல்மா! கொஞ்சம் நிதானமா…”

“ஏன்? உன்னோட இடம் அங்க பாதுகாப்பா இருக்குல? அதனால என்னை தடுத்து நிறுத்துறியா? அவ கால்ல விழுந்து கும்பிட்டு சலாம் போடு, போ!”

“முட்டாள்தனமா பேசாதே! நீ எங்க இருக்கே சொல்லு? நான் வந்து பார்க்கறேன்.”

“ஒன்னும் தேவையில்ல. நீ போனை வை!”

———

ஆர்யன் முன்னே இருந்த காபியையும் குடிக்காமல், திறந்திருந்த கணினியையும் பார்க்காமல் அவன்பாட்டுக்கு ருஹானாவை பார்த்துக்கொண்டே இருந்தான். சாரா சிரிப்பை மறைத்துக்கொண்டு வேலை செய்ய, அது போல எல்லாம் தயங்காத நஸ்ரியா “ஆர்யன் சார்! உங்க காபி ஆறிடுச்சே! நான் வேற கலந்து தரவா?” என கேட்டாள்.

“இல்ல” என்று சொன்ன ஆர்யன் மடமடவென்று காபியை குடித்து முடித்தான்.

“ருஹானா! உங்களை பார்த்துட்டே அவர் காபி குடிக்காம ஆற விட்டுட்டார்” என்று நஸ்ரியா, ருஹானாவின் காதில் கிசுகிசுப்பாக சொல்ல, “படுக்கை விரிப்பெல்லாம் வந்துடுச்சா?” என்று ருஹானா முணுமுணுப்பாக அவளை கேட்டாள்.

“அச்சோ! நான் மறந்தே போயிட்டேனே!” என நஸ்ரியாவும் மெல்லிய குரலில் சொல்ல, இரு பெண்களும் தன்னை பற்றி தான் பேசுகிறார்கள் என சங்கோஜப்பட்ட ஆர்யன் அவசரமாக எழுந்து வெளியே சென்றான்.

“நீங்களும் உப்பு ரெண்டு தடவை போட்டீங்க! ஆர்யன் சாரை போல தான் நீங்களும் இருக்கீங்க!” என நஸ்ரியா அடுத்து ருஹானாவை கிண்டல் செய்ய, சாரா வேறு வேலை கொடுத்து அவளை வெளியே அனுப்பி விட்டார்.

வரவேற்பறையில் அமர்ந்து ஆர்யன் வேலையில் கவனம் செலுத்த முயற்சி செய்ய, தன் முகத்தின் அருகே முகம் வைத்து தன் தோளின்மீது கைவைத்து தூங்கிய ருஹானா அவன் வேலைக்கு இடைஞ்சலாக கண்விழித்தாள். விழித்ததும் அவள் முகத்தில் ஏற்பட்ட பாவனைகளை நினைத்து ஆர்யன் இப்போது சிரித்துக்கொண்டான்.

ஆர்யன் சமையலறையின் மேசையில் விட்டுவந்த போனில் அழைப்பு வர அதை ருஹானா கொண்டுவந்து தர, அவன் அதை வாங்காமல் அவளின் முகத்தில் அந்த பாவனைகள் தெரிகிறதா என தேடினான்.

Advertisement