Advertisement

“திருமணநாள்னா என்னன்னு யாராவது என்கிட்டே கேட்டா, அது பதட்டம், அவசரம்… இப்படி எதாவதுன்னு சொல்லியிருப்பேன். ஆனா இப்போ தான் புரியுது அது காத்திருப்பு.  மணமகனுக்கும் மணமகளுக்கும் மட்டுமாவது அது காத்திருப்பு தான்” என ஆர்யன் சொல்ல, ருஹானா புன்னகைத்தாள்.

“இருந்தாலும் நிக்கா எப்படி நடக்கும்னு பதட்டமாக தான் இருக்கு” என ருஹானா பெருமூச்சு விட, ஆர்யன் “அதுக்கு அப்புறம்?” என்று கேட்க, “அப்புறம் என்ன? திருமணம் முடிந்ததும் விருந்தினர்கள் விடைபெற்று போவாங்க.. அப்புறம்..” என யோசித்த ருஹானா திகைத்தாள்.

அவளின் திகைப்பை பார்த்ததும் தான் ஆர்யனுக்கு தான் கேட்டதின் வேறு பொருள் புரிந்தது. அவனும் சங்கடமாக பார்க்க ருஹானா வேகமாக எழுந்தாள். “எங்க போறே?” என அவன் கவலையாக கேட்க, ருஹானா “முகம் கழுவிட்டு வரேன்” என்று சொல்ல ஆர்யன் நிமமதியானான். ருஹானா சென்று படுக்கையறை கதவை திறந்தாள்.

திறந்தவள் விக்கித்து நின்றாள், படுக்கையறை அலங்காரம் பார்த்து. முகம் சூடாவதை உணர்ந்தவள் நிஜமாகவே முகம் கழுவ நினைத்து குளியலறை சென்று கண்ணாடியில் பார்க்கவும் அழகாக அலங்கரிக்கப்பட்ட அவள் முகம் தெரிந்தது. “இது ஃபார்மாலிட்டி மட்டுமே. இதில் எதுவுமே உண்மை இல்ல. நிதானமா இரு” என்று சொல்லிக்கொண்டாள்.

அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டிருந்த ஆர்யன், ருஹானா வெளியே வந்ததும் “நாம கீழே போகலாம். பதிவாளர் இன்னும் வரல. ஆனா விருந்தாளிகள் எல்லாம் வந்துட்டாங்க. நாம அவங்களை காக்க வைக்க வேண்டாம்” என்று சொல்ல, ருஹானா மேசையில் வைத்த பூங்கொத்தை கையில் எடுத்துக்கொண்டாள். “நான் தயார். போகலாம்.”

“போறதுக்கு முன்ன நாம செய்ய வேண்டியது ஒன்னு இருக்கு” என்ற ஆர்யன் அவளது வலதுகையை பிடித்து திருமண மோதிரத்தை கழட்டினான். ருஹானா அவனை பார்க்கவும், “திருமணத்துக்கு பின்ன இந்த மோதிரம் இடதுகை விரல்ல தான் இருக்கணும். ஏன்னா இதயம் இடதுபுறம் தானே இருக்கு?” என்று கேட்டபடி அவளது இடதுகை விரலில் இருந்த மோதிரத்தை கழட்டி கையில் வைத்துக்கொண்டு திருமண மோதிரத்தை ருஹானாவின் சிவந்திருந்த இடக்கை விரலில் மிருதுவாக மாட்டினான்.

பின் அவளது மற்ற மோதிரத்தை வலது கையில் மாட்டியவன், தன்னுடைய மோதிரத்தையும் கழட்டி இடது கையில் போட்டுக்கொண்டான். “இப்போ எல்லாம் சரி. நீ தயாரா?” என்று கேட்க, பேச்சிழந்து நின்ற ருஹானா “ஹூஹூம்!” என்று குரல் தந்தாள்.

ஆர்யன் கையை நீட்ட, ருஹானா அவன் கரத்தில் தன் கையை வைக்க அதை அழுத்தமாக பற்றியவன், மெல்ல அறையை விட்டு அவளை கூட்டிக்கொண்டு படிக்கட்டை நோக்கி நடந்தான்.

இருவரின் உணர்ச்சிகளும் அலைபாய்ந்து கொண்டிருக்க, எண்ணங்கள் எங்கெங்கோ ஓட, ஒருவரையொருவர் பார்த்தபடி மேல் படிக்கட்டுக்கு வரவும், ருஹானா ஆர்யனின் கையை அழுத்தமாக பிடித்தாள். அவள் முகத்தில் மிரட்சியை பார்த்த ஆர்யன் அவளுக்கு கண்ணால் தைரியம் அளித்தான்.

கீழே நின்று அவர்களுக்காக காத்திருந்த நூர்ஜஹான் தனது இசைக்குழுவை இயக்கி இனிய இசையை இசைக்கவிட்டார்.

நீ படி இறங்குவது 

மேலிருந்து கீழ் அல்ல

என் மன ஆழத்தில்!

அதன் விளைவாய்

கைகோர்த்து நாம் தொடரவிருக்கும்

நம் வாழ்க்கை பயணம்!

என் காதலி உலகின் சிறந்த அழகி எனும் பெருமிதத்துடன் ஆர்யன் ருஹானாவை பார்த்தபடி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட படிக்கட்டில் இறங்கி வர, சையத் பாபா, ரஷீத், ஜாஃபர், சாரா, நஸ்ரியா ஒருபக்கம் மற்ற விருந்தினரோடு நிற்க… இவான், அம்ஜத், கரீமா, பர்வீன், தன்வீர், தௌலத், வாகிதா, நூர்ஜஹான் மறுபக்கம் நிற்க.. சிவப்பு கம்பளத்தில் நடந்துவரும் காதல் பறவைகளை அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.

மலர்வளைவுகளிலும், நட்சத்திர கூட்டத்தின் இடையேயும் நடந்து வந்த மணமக்கள் நடுவில் ஒளி வெள்ளத்தில் நின்றனர். கரீமாவை தவிர அனைவர் முகங்களிலும் சந்தோஷம் பூரணமாக மிளிர்ந்தது. தன்வீர், பர்வீன், சாராவின் கண்களில் ஆனந்த கண்ணீர் வடிந்தது.

ஆர்யன் ருஹானாவின் புறம் திரும்ப, அவள் அங்கிருந்து நகரப் பார்த்தாள். அவளை கைபிடித்து தடுத்த ஆர்யன் அவள் இடக்கையை எடுத்து தன் தோள்மீது வைத்தான். அவளின் பின்தோளை ஒருகையால் பிடித்தவன் “பயப்படாதே! நான் உன்கூட இருக்கேன்” என்று சொல்ல, ருஹானாவின் மனக்கலக்கங்கள் அனைத்தும் மறைந்து அவள் முகம் மலர்ந்தது.

மலர்கொத்துடன் அவள் வலதுகையை பிடித்த ஆர்யன் அவள் கண்ணோடு கண் நோக்கி மெல்ல அசைந்து, அவளையும் அசைத்து நடனமாட, ருஹானா மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தாள்.

அவர்களை சுற்றி இருந்த மேசைகளில் அனைவரும் அமர்ந்து இவர்களது நடனத்தை ஆவலாக பார்க்க, மெழுகுவர்த்திகள் தவிர மற்ற விளக்குகள் அணைக்கப்பட்டு அவர்கள் மேல் மட்டும் ஒளிவட்டம் நிலைத்தது. நூர்ஜஹான் ஆர்யனின் காதல் பாடலை ஒலிக்கவிட்டார்.

என் இதயத்தின் காயம் ஆற்றும் மருந்து நீ

உன் கண்கள் என்னை அடையும்போது

என் இரணங்கள் குணமானது ஏராளம்

என்னுடைய மரபு கவிதை நீயே

அழியாது நெஞ்சில் படிந்த ஓவியமே

உனக்குப் பின் என் வாழ்வு 

நிலைக்குமென நினைக்காதே

வீசும் இந்த காற்றை கேள்

பொழியும் இம்மழையை கேள்

நான் உன்னை ஒருபோதும் கைவிடேன்

இது வெறும் ஆசையென்று மயங்காதே

இறந்தபின்னும் மாறாது எனதன்பு

உன் இதயத்தில் என்னை பதித்து

உன் வாழ்வில் எனக்கு இடங்கொடு!

எனக்காக இருப்பது உன் தூய அன்பு மட்டுமே!

———

சல்மா தனது காரியதரிசிக்கு போன் செய்து அவள் நேற்று வீட்டுக்கு கொண்டு சென்ற அனைத்து கோப்புகளையும் கொண்டுவர சொன்னாள், ஒருவேளை அதில் மாறிப் போயிருக்குமோ எனும் சந்தேகத்தில்.

“இந்த நிக்கா நடக்காது. நான் ஃபைலை கண்டுபிடிப்பேன்” என காரியதரிசி வரும்வரை சல்மா நகத்தை கடித்துக்கொண்டு காத்திருக்க, கரீமாவின் அழைப்புக்காக மிஷால் அங்கே காத்திருந்தான்.

———

பனித்துகள்களும், மலர் இதழ்களும் மணமக்கள் மேல் இதமாக தூவப்பட,  ஆடி முடித்தவர்கள் அசையாது நிற்க, விளக்குகள் ஒளிபெற, அனைவரின் கரவொலி கேட்டே இருவரும் கனவுலகிலிருந்து மீண்டு வந்தார்கள். இருவரும் மணமேடையை நோக்கி செல்ல, மற்றவர்களின் பாராட்டு குரல்கள் பெரிதாக எழுந்தன.

“மணப்பெண் என்னவொரு அழகு! ஆர்யன் அதிர்ஷ்டசாலி!”

“தேவதையைப் போல இருக்கா!”

“அருமையான ஜோடி! ரொம்ப பொருத்தமா இருக்காங்க!”

“அல்லாஹ் தீயவர்களின் கண்ணுல இருந்து இவங்களை காப்பாற்றட்டும்!”

அம்ஜத் கரீமாவை நடனமாட அழைக்க, அவள் வேண்டாவெறுப்பாக சென்றாள். இவானும் நஸ்ரியாவும் அழகாக ஆட தன்வீர் சிரிப்புடன் அவர்களை பார்த்தான். மற்ற ஜோடிகளும் இணைந்து நடனமாடினார்கள்.

ருஹானா பூங்கொத்தை பிடிப்பதும், மேசையை பிடிப்பதுமாக தவிப்புடன் இருக்க, ஆர்யன் தண்ணீர் பாட்டிலை திறந்து அவளிடம் நீட்டினான். தண்ணீர் குடித்தபின்னும் அவள் கைகளை தடவியபடி இருக்க, அவள் கையை பிடித்த ஆர்யன் “எல்லாம் சரியா நடக்கும்” என்றான்.

இவான் நஸ்ரியாவை விட்டு ஓடிவிட, அவள் தனியாக நிற்பதை பார்த்து தன்வீர் அவளை நோக்கி நடந்தவன் தயங்கி நிற்க, பர்வீன் போ என மகனை தள்ளிவிட்டார். தன்வீர் நஸ்ரியாவின் அனுமதி பெற்று நாகரிகமாக அவளை பிடித்து மகிழ்ச்சியோடு ஆடினான்.

இவான் ஆடிக்கொண்டிருந்த அம்ஜத்தை கையை பிடித்து இழுக்க அவன் இவானோடு சென்றான். விட்டால் போதும் என ஓரமாக ஒதுங்கிய கரீமா வாசலை பார்ப்பதும் தொலைபேசியை பார்ப்பதுமாக பரிதவித்தாள்.

திருமணப்பதிவாளர் நல்லபடியாக வந்து சேர அவர் வேகமாக நடைமுறைகளை செய்தார். அனைவரும் திருமணமேடையை சுற்றி கூடினர்.

“மிஸ் ருஹானா! நீங்கள் எந்தவித வற்புறுத்தலும் இன்றி உங்கள் சுயசிந்தனையோடு ஆர்யன் அர்ஸ்லானை உங்கள் கணவனாக ஏற்றுக்கொள்கிறீர்களா?”

ஆர்யன் முகத்தை பார்த்தபடி ருஹானா “ஆமாம்!” என்று சொல்ல, அனைவரும் கைதட்டினர். முகமெல்லாம் சிரிப்புடன் இவான் கைதட்டுவதை நிறுத்தவே இல்லை.

“மிஸ்டர் ஆர்யன் அர்ஸ்லான்! நீங்கள் எந்தவித வற்புறுத்தலும் இன்றி உங்கள் சுயசிந்தனையோடு மிஸ் ருஹானாவை உங்கள் மனைவியாக ஏற்றுக்கொள்கிறீர்களா?”

“ஆமாம்!” என்று அவனும் ருஹானாவை பார்த்தபடி சொல்ல, மீண்டும் கரவொலி.

“சாட்சிகளும் இந்த திருமணத்தை ஒத்துக் கொள்கிறீர்களா?”

சையத், ரஷீத்தும் ஆம் என்று சொல்ல, இவானும் சத்தமாக ஆம் என்றான்.

ஆர்யன் வில் பதித்த வெள்ளிபேனாவை திறந்து அதன் மூடியை பின்புறம் மாட்டி, கூர்முனையை தன்புறம் இருக்குமாறு திருப்பி ருஹானாவிடம் நீட்டினான். அனைவரும் வாழ்த்த, ருஹானா கையொப்பம் இட்டு ஆர்யனிடம் பேனாவை அவனிடம் தர, ஆர்யனும் கையெழுத்திட்டான்.

கரீமாவிற்கு போன் செய்த சல்மா “அக்கா! அக்கா! ஏதாவது செய் அக்கா! கல்யாணத்தை எப்படியாவது நிறுத்து” என்று அழுகையுடன் கதற, “எல்லாம் முடிந்தது! நாம தோத்துட்டோம். இப்போ ருஹானா ஆர்யனின் மனைவி. ருஹானா அர்ஸ்லான்!” என்று கரீமா வெளுத்த முகத்துடன் உணர்ச்சியற்று சொன்னாள்.

சையத்தும், ரஷீத்தும் கூட கையெழுத்து போட, பதிவாளர் “அல்லாஹ் பெயரால் சட்டத்தால் எனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி நீங்கள் இருவரும் தம்பதியினர் என நான் அறிவிக்கிறேன்” என்று சொல்லி ருஹானாவிடம் திருமண சான்றிதழை தந்தார்.

இன்றுமதிகமாய் இன்னுமதிகமாய் இனிக்கட்டும்

இவ்விருவரின் இனிய உறவு!

“நீங்கள் இப்போது மணமகளை முத்தமிடலாம்”

தனது வாழ்நாள் முழுவதும் இந்த நாளுக்காக தான் காத்திருந்தவன் போல ஆர்யன் ருஹானாவை நெருங்கி, அவள் தோள்களை தொட்டு இன்னும் நெருங்க, ருஹானா கண்களை மூடிக்கொண்டாள். ஆர்யனும் கண்களை மூடிக்கொண்டு அவள் பிறை நெற்றியில் மிக்க காதலோடு இதழ் பதித்து அசையாது இருந்தான்.

அனைவரும் கைகளை தட்ட, ஆர்யன் கண்களை திறந்து அவளது நீர்படலம் படிந்த பச்சை கண்களுடன் உறவாடியவன் அவளுக்கு மட்டும் கேட்கும்படி கூறினான்.

“இது உண்மை!”

(தொடரும்)

Advertisement