Advertisement

ஆர்யனின் கைப்பற்றி ருஹானா இறங்க, ரஷீத், அம்ஜத், கரீமா பின்தொடர இருவரும் நடக்க, மாளிகை வாசல் வந்தததும் அவள் முகம் நோக்கிய ஆர்யன் “நாம் ஆரம்பிக்கலாமா?” என கேட்க, ருஹானா இளநகை புரிந்தாள்.

“சித்தி! நீங்க இளவரசியை போல அழகா இருக்கீங்க” என இவான் ஓடிவந்து ருஹானாவைக் கட்டிக்கொள்ள “நீயும் ரொம்ப அழகா இருக்கே அன்பே!” என அவள் அவனின் நெற்றியில் முத்தமிட்டாள்.

“சித்தி! உள்ள வந்து பாருங்களேன்! அவ்வளவு அழகா இருக்கு” என இவான் ருஹானாவின் கையை பிடித்து அழைக்க, நஸ்ரியா ருஹானாவின் பின்னால் வந்து திருமண கவுனை தூக்கிப் பிடித்துக்கொண்டாள்.

மாளிகையின் உள்ளே நுழைந்த ருஹானா திக்பிரமை அடைந்து நின்றுவிட்டாள். லில்லிமலர்கள் கொத்துக்களாகவும், வளையங்களாகவும், பெரிய குவளைகளிலும் அடுக்கப்பட்டு இருக்க, வெண்பஞ்சு மேகக்கூட்டங்கள் வரவேற்பறையெங்கும் மிதக்க, குட்டி நட்சத்திரங்கள் கண்சிமிட்ட எல்லாவற்றுக்கும் நடுவில் பெரிய துருவநட்சத்திரம் அவளை வரவேற்றது.

இருபுறமும் அழகிய பூத்தொட்டிகளால் சூழப்பட்ட சிவப்பு கம்பளத்தில் கனவில் நடப்பது போல நடந்து வந்த ருஹானா பிரமிப்பில் கண்கள் அகல துருவநட்சத்திரத்தை தொட்டு “துருவநட்சத்திரம்!” என்றாள் முணுமுணுப்பாக.

அவள் விருப்பங்களை கண்ணும் கருத்துமாக மட்டுமின்றி கற்பனைக்கும் எட்டாத வகையில் அமைத்து தந்த ஆர்யனை அவள் மனம் தேட பின்னால் திரும்பி பார்த்தாள். இதுவரையில் அவள் பூரிப்பை மகிழ்ச்சியோடு பின்னால் நின்று பார்த்துக்கொண்டிருந்த ஆர்யன் அவளைப் பார்த்து அழகாக புன்னகை செய்தான்.

கண்ணில் நீர்த்திரையிட அவள் அவனை நன்றிப்பெருக்கோடு பார்க்க, அவளை நெருங்கிய ஆர்யன் “உனக்கு பிடிச்சிருக்கா?” என கேட்க, “பிடிக்கறதா? எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு ஆச்சரியமா இருக்கு. நான் இந்த அளவுக்கு எதிர்பார்க்கல” என்று உணர்வுபூர்வமாக பேசினாள்.

“இது எதும் உன்னைவிட அழகு இல்ல. இருட்டுல இருந்து நாம வெளிச்சத்துக்கு போகவேண்டிய சமயம் வந்து விட்டது“ என ஆர்யன் சொல்லும்போதே நூர்ஜஹான் அங்கே வந்தார், “போட்டோ எடுக்கணும் இப்போ. தோட்டத்துக்கு போலாமா?“ என்றபடி.

ருஹானா கேள்வியாக பார்க்க, நூர்ஜஹான் “இன்றையதினம் ஒரு நினைவா இருக்கணும். இல்லனா மக்கள் இதை ஒரு கனவுன்னே நினைப்பாங்க. உங்க பிள்ளைங்களும் அவங்க தாய், தந்தை எவ்வளவு அழகானவங்கன்னு பார்க்க வேண்டாமா?” என்று கேட்க, ருஹானா ஆர்யனை பயத்துடன் பார்த்தாள்.

ஆர்யன் அவளை சிரிப்புடன் பார்க்க, கரீமாவிற்கு உள்ளம் வெதும்பியது. ஆர்யன் திகைத்து நின்ற ருஹானாவின் கையை பற்றி வெளியே நடக்க, இவான், அம்ஜத், ரஷீத், ஜாஃபர், சாரா, நஸ்ரியா அவர்களை சந்தோசமாக பார்த்து நின்றனர்.

———

“சல்மா! ஆபீஸ்ல ஃபைலை மறந்துட்டேன்னு இப்போ சொல்றீயா நீ?“

“எனக்கு உறுதியா தெரியல அக்கா! அங்க இருக்கலாம்ன்னு தோணுது. எனக்கு தெரியல.” அழுது சிவந்த முகத்துடன் சல்மா சொல்ல, அவள் தோள்களை பற்றி குலுக்கிய கரீமா “என்னை பைத்தியமாக்காதே. என் காலடியில பூமி நழுவுது. தெளிவா சொல்லு” என்று கத்தினாள்.

அக்காவை பார்த்து பயந்த சல்மா “ஞாபகம் இருக்கு… ஞாபகம் இருக்கு… அது ஆபிஸ்ல தான் இருக்கணும்” என்று சொல்ல, “அப்போ ஃபைலைக் கண்டுபிடிச்சு இங்கே கொண்டுவா. சீக்கிரம் போ” என்று அவளை கரீமா வெளியே தள்ளிவிட்டாள்.

——–

“உங்களைப் பற்றி நூர்ஜஹான் என்னிடம் சொன்னார் தான். ஆனா நான் இவ்வளவு எதிர்பார்க்கல.  உங்களைப்போல கெமிஸ்ட்ரி இருக்கும் ஒரு ஜோடியை நான் பார்த்ததில்ல. உங்க புகைப்படங்கள் மிக அழகாக வரும். இன்னும் நெருங்கி, கொஞ்சம் நெருங்கி வாங்க. ஆனா அப்படி இல்ல. உங்க காதல் உணர்வுகள் உங்க உடல்மொழியில் கொஞ்சம் பிரதிபலிக்கட்டும். கையைப் பிடிச்சிக்கிட்டு ஒருவருக்கொருவர் காதலா பார்க்கலாமா?” புகைப்பட நிபுணர் பலகோணங்களில் விதவிதமாக அவர்களை நெருங்க வைத்து படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்.

படபடப்போடு கூடிய மகிழ்ச்சியும், பயத்துடன் கூடிய நாணத்துடன் இருந்தவளை “என் பக்கத்தில் வர மாட்டியா?” என்று ஆர்யன் மென்மையாக அழைக்க, ருஹானா நெருங்கி வந்தாள். “இதான் நான் கேட்டது” என்று சந்தோசமாக அவர் படங்களை எடுத்து தள்ள, அவர்களை சினத்துடன் பார்த்தபடியே சல்மா காரெடுத்து வெளியேறினாள்.

அவர்கள் ஒருவரையொருவர் விழுங்குவது போல பார்ப்பது, ருஹானா வெட்கத்தோடு குனிவது, அதை ஆர்யன் சிரிப்புடன் பார்ப்பது.. இந்த தருணங்களே அழகாக இருக்க எல்லாவற்றையும் விடாமல் படம் பிடித்தவர் “மிஸ்டர் ஆர்யன்! நீங்க இப்போ லேசா மணமகளின் பின்னால போய் அவங்க இடுப்பைக் கட்டிப்பிடியுங்க. மிஸ் ருஹானா! நீங்க மிஸ்டர் ஆர்யனை நிமிர்ந்து பாருங்க” என்றார்.

தயங்கிய ஆர்யன் “இது உனக்கு வேண்டாம்னா…“ என்று கேட்க, ருஹானா “பரவாயில்ல, பொதுவா திருமணப் படங்களுக்கு இப்படித்தான் போஸ் கொடுப்பாங்க” என்று சம்மதிக்கவும், ஆர்யனின் மகிழ்ச்சி கரைமீறி பொங்கிக் குதித்தது.

இரண்டு கைகளாலும் அவள் இடுப்பை அணைத்து பூங்கொத்தை ஏந்தியிருந்த அவள் கைகளை பிடித்துக்கொண்டு ஆர்யன் அவளை மிக நெருங்கி மயங்கி நிற்க, பின் புகைப்பட நிபுணருக்கு அறிவுறுத்தல்கள் சொல்லவேண்டிய தேவை இருக்கவில்லை. கேமிராவின் கிளிக் கிளிக் சத்தம் மட்டுமே அங்கே கேட்டது.

——–

“அது எங்கே போச்சி? கடைசியா இங்க தானே ஒலிப்பதிவுகளைக் கேட்டேன்? அது வேறு எங்கயும் போயிருக்க முடியாது. இங்க இருந்தது.  இப்போ இல்லை!” சல்மா தன் அலுவலக அறையை புரட்டிக் கொண்டிருந்தாள்.

———

ஆர்யனின் அலுவலக அறை சோபாவில் மணமக்கள் இருவரும் அமர்ந்திருக்க, புகைப்பட நேரம் தந்த கிறக்கத்தில் ஒருவரையொருவர் காண வெட்கப்பட்டுக்கொண்டு நிமிடத்தை கடத்தினர்.

ஒருவழியாக ஆர்யன் “உனக்கு பசிக்குதா? சாப்பிட ஏதாவது வேணுமா?” என கேட்க, ருஹானா “இல்ல, எனக்கு பசி இல்லை. உங்களுக்கு?” என்று கேட்க, அவனும் மறுத்தான்.

அப்போது உள்ளே வந்த ஜாஃபர் “திருமணப்பதிவாளர் வர்ற வழியில் போக்குவரத்து நெரிசலில் மாட்டியிருக்கறார். அவர் வந்ததும் நான் உங்களுக்கு சொல்றேன்” என்று சொல்லி சென்றான்.

ஆர்யன் விரல்களை தடவிக்கொண்டு இருக்க, ருஹானா கவுனின் மடிப்புகளை தடவிக்கொண்டு இருந்தாள். இருவருக்கும் என்ன பேச என்று தெரியவில்லை. ஆனாலும் ஒருவரின் அருகாமை மற்றவருக்கு பிடிக்கத்தான் செய்தது.

ஆர்யன் அவளின் அழகை ரசித்துக்கொண்டிருக்க, ருஹானா “இன்னும் நிறைய நேரம் நாம காத்திருக்கணுமா?” என்று கேட்க “ஏன்? உனக்கு போரடிக்குதா?” என ஆர்யன் கேட்க, ருஹானா வேகமாக தலையாட்டினாள்.

“இல்லல்ல..  எனக்கு போரடிக்கல” என்று சொன்ன ருஹானா, தான் கேட்டதை அவன் தவறாக எடுத்துக்கொண்டானோ என பயந்துவிட்டாள். சில வினாடிகள் கழித்து அவளே பேச்சை ஆரம்பித்தாள்.

“நான்.. இந்த நாளைப்பற்றி நிறைய யோசித்தேன்” என தொடங்க ஆர்யன் ஆர்வமானான். “இந்த நாள் எப்படி போகும்? நான் என்ன உணர்வேன்? ஒருவேளை உடம்பு சரியில்லாம போய்ட்டா? நான் பயந்து போய்ட்டா?…” என்ற அவளை ஆர்யன் கனிவாக பார்த்தான்.

“நான் கொஞ்சம் பதட்டமா இருப்பேன்னு நினைத்தேன். ஆனா இப்போ… மிகவும் உற்சாகமா இருக்கேன்.  அதனாலதான் எனக்கு அப்பப்போ மூச்சு விட சிரமமா இருக்கு” என்று சொல்லி முடித்தவள் “நீங்க எப்படி? என்ன உணர்றீங்க?” என்று கேட்டாள்.

கைகளை பிசைந்து கொண்ட ஆர்யன் “நான்.. என்னோட இடத்தை விட்டு வெளிய வந்தது போல உணர்றேன். எனக்கு தெரியாத புதிய பிரதேசத்துக்கு வந்துட்டது போல” என்றவன் “ஆனா அது எனக்கு வருத்தமாக இல்ல” என்று வேகமாக சொன்னான், ருஹானா கவலைப்படுவாளோ என்று.

“சில நேரம் நாம ஒரு இடத்தில் அதிக நேரம் தங்கும்போது, அது எந்த​ இடம்னு​​​ நாம மறந்துடுவோம். உனக்கு  தெரியும், நான் இருந்த இடம்… அது எத்தனை மாறுபட்டதுன்னு.. இப்போ இங்க வந்துட்டேன். இது நல்லா இருக்கு. வித்தியாசமா இருந்தாலும் எனக்கு பிடிச்சிருக்கு” என ஆர்யன் மெதுவாக சொல்ல, ருஹானாவிற்கு உருகிவிட்டது.

அன்பை தேடும் உயிரே! 

நான் தருகிறேன் அன்பே! 

அவள் கண்ணில் நீரை பார்த்த ஆர்யன் “நான் உன்னை கஷ்டப்படுத்திட்டேனா?” என்று கேட்க, அவள் இல்லையென தலையாட்டினாள்.

———-

சாராவிற்கு தனது சமையலறையில் மற்றவர்கள் வேலை செய்துக் கொண்டிருப்பது பொறுக்கவில்லை. தனது எஜமானரின் திருமணத்திற்கு தானே அருமையாக விருந்து தயாரித்திருக்கலாமே என மனது அடித்துக்கொண்டது. அவர் சமையலறையை எட்டி எட்டி பார்க்க ஜாஃபர் அவரை அமைதிப்படுத்தினான்.

“இன்னைக்கு நாம விருந்தாளி. அதை நினைவில் வைத்துக்கோங்க. அவங்க தொழில்முறை குழு. எல்லா வேலையும் நல்லா தான் நடக்குது. அங்க நஸ்ரியாவை பாருங்க, எவ்வளவு ஆனந்தமா சுத்துறா.”

நவீன உடை உடுத்தி அழகிய பட்டாம்பூச்சியாக சுற்றிவந்த நஸ்ரியா தன்வீரை மிகவும் கவர்ந்தாள். பர்வீனுடன் நின்றிருந்தாலும் அவன் அவள்மீதே பார்வையை வைத்திருந்தான்.

சதித்திட்டத்தின் உச்சமான கோப்புடன் தங்கை வருவாள் என கரீமா வாசலையே பார்த்திருக்க, அவளது அலைபேசியில் மிஷால் அழைத்தான். “போட்டோவை கொடுத்துட்டீங்களா? நிக்காவை நிறுத்திட்டீங்களா?” என்று அவன் கேட்க, கரீமா “கவலைப்பட ஒன்றுமில்ல. நாங்கள் இன்னும் சரியான சமயத்துக்கு காத்திருக்கோம், ஒரு பெரிய விளைவை ஏற்படுத்த” என்று சொல்ல, மிஷால் ஆத்திரமானான்.

“உங்களுக்கு பைத்தியமா என்ன? என்ன விளைவு? எதுக்காக காத்திருக்கீங்க? ரிஸ்க் எடுக்க இது நேரமா?”

“கவலைப்படாதே. எந்த ஆபத்தும் இல்ல. திறம்பட செயல்பட நாங்க கடுமையாக அடிக்க விரும்பறோம்” என்று மெல்ல பேசி செல்பேசியை வைத்த கரீமா, “இவன் வேற நமக்கு பிரச்சனையாக இருப்பான் போல” என்று புலம்பியபடி தங்கைக்கு அழைத்து அவசரப்படுத்தினாள்.

———

Advertisement